கோணல் வழிகளை போதிப்பவர்கள் யார்?

in 2021 நவம்பர்

கோணல் வழிகளை போதிப்பவர்கள் யார்?

எஸ். முஹம்மது ஸலீம்,  ஈரோடு

(நம்பிக்கையாளர்களே!) உங்களில் ஒரு சமுதாயம் (மக்களை) நன்மையின் பக்கம் அழைத்து, நன்மையைச் செய்யும்படி ஏவி, தீமையிலிருந்து அவர்களை விலக்கிக் கொண்டும் இருக்கட்டும். இத்தகையவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள்.   (குர்ஆன் 3:104)

மறுமையில் வெற்றி பெறவேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொருவரும் நன்மையை ஏவி, தீமைகளை தடுக்கும் பணியை கட்டாயமாக செய்தாக வேண்டும் என்று மேற்கண்ட வசனத்தின் வாயிலாக அறிய முடிகிறது.

நன்மை என்றால் என்ன? தாமும் தொழுது, பிற மக்களையும் தொழுகையின் பக்கம் அழைப்பது, தாமும் நோன்பு வைத்து பிற முஸ்லிம்களையும் நோன்பு வைக்க தூண்டுவது, தர்மம் செய்ய வலியுறுத்துவது, ஹஜ்ஜின் பக்கம் அழைப்பது, நீதியை நிலை நாட்டுவது, குர்ஆனின் பக்கம் மக்களின் கவனத்தை திருப்புவது, உறவினர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்வது, மனிதர்களிடம் மென்மையாக நடப்பது, உண்மையை பேசுவது, வாக்குறுதிகளை நிறை வேற்றுவது… இன்னும் இதுபோன்ற ஏராளமான நன்மைகள் உள்ளன. இதன் பக்கம் மக்களை அழைப்பது நன்மையான காரியம். இதை போன்றே தீமை என்றால் என்ன? அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, வட்டி வாங்குவது, மோசடி செய்வது, பிறர் சொத்தை அபகரிப்பது, பெற்றோரை புண்படுத்துவது, பிறர் மீது அவதூறு சுமத்துவது, கொலை செய்வது, பெருமையடிப்பது, மோசடி செய்வது, பொறாமை கொள்வது… இன்னும் இதுபோன்ற ஏராளமான தீமைகள் உள்ளன. இந்த தீமைகளின் பட்டியலில் உள்ளதுதான் அல்லாஹ் அருளிய நேர்வழியை கோணல் வழியாக மாற்றுவது, மறுமை வாழ்வை நாசமாக்கும் இந்த தீமையை செய்பவர்கள் யார்? இவர்களின் பண்பு என்ன? என்பதை பார்ப்போம்.

முதலிடம் பிடிக்கும் யூதர்கள் :

புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியதே! அவன்தான் தன் அடியார் மீது இந்த புத்தகத்தை இறக்கி வைத்தான். அதில் அவன் எத்தகைய கோணலையும் வைக்கவில்லை. (குர்ஆன் 18:1)

அவர்கள் இறையச்சம் உடையவர்களாக ஆவதற்காக கோணலற்ற இக்குர்ஆனை அரபி மொழியில் இறக்கி வைத்தோம். (குர்ஆன் 39:28)

இந்தக் குர்ஆனில் எவ்விதமான கோணலும் இல்லை என்று அல்லாஹ் தெள்ளத் தெளிவாக கூறியிருக்க கோணல் வழிகளை உருவாக்குபவர்கள் யார்? இதோ குர்ஆன் பேசுவதை பாருங்கள். புத்தகம் கொடுக்கப்பட்டவர்களே! நம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ்வின் பாதையை விட்டும் ஏன் தடுக்கின்றீர்கள்? அறிந்து கொண்டே அதை கோணலாக சித்தரிக்கின்றீர்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை என்றும் (நபியே நீர்) கூறுவீராக. (குர்ஆன் 3:99)

அல்லாஹ் அருளியதன் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதை ஒத்துக்கொண்ட மார்க்கத்தை அறிந்த இந்த நபி உண்மையாளர்தான் என்பதையும் விளங்கி வைத்திருந்த ஒரு குழுவினர்தான் அல்லாஹ்வின் வழிகளை கோணல் வழிகளாக மாற்றினார்கள். இவர்கள் இப்படி செய்வதற்கு காரணமென்ன? “அவர்கள் மறுமையை விட இவ்வுலக வாழ்வை விரும்புகின்றனர். அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களை) தடுக்கின்றனர். அதை கோணலாக சித்தரிக்கின்றனர். அவர்கள் வெகு தூரமான வழிகேட்டில்  உள்ளனர். (குர்ஆன் 14:3)

அவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களை) தடுக்கின்றனர். அதை கோணலாகக் காட்டுகின்றனர். அவர்களே மறுமையை மறுப்பவர்கள்.  (குர்ஆன் 11:19, 7:45)

உண்மைகளை அறிந்திருந்தாலும் உலக ஆசை மற்றும் மறுமையை மறுப்பது என்ற இந்த இரண்டு பண்புகள் இருப்பவர்கள் தான் அல்லாஹ்வின் வழியை கோணலாக்கி மறுமையில் இழப்பை சந்திக்க இருப்பவர்கள்.

யூதர்களின் வழியில் ஆலிம்கள் :

அல்லாஹ்வின் நேர்வழியை யூதர்கள் கோணல் வழியாக எப்படி சித்தரித்தார்கள். இது குறித்து குர்ஆன் கூறுவதை கேளுங்கள். யூதர்களில் சிலர் (அல்லாஹ்வின்) வார்த்தை களை அதற்குரிய இடங்களிலிருந்து மாற்றுகின்றனர்.  (குர்ஆன் 4:46, 5:13)

அல்லாஹ் ஒரு கருத்தில் வசனத்தை அருளியிருக்க அதற்கு தங்களது மனம் போன போக்கில் யூதர்கள் எப்படியயல்லாம் விளக்கம் என்ற பெயரில் கோணல் வழியை உருவாக்கினார்கள் என்பதற்கு உதாரணமாக ஒரு வசனத்தை குறிப்பிடலாம். அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுப்பவர் யார்? அதை அவன் அவர்களுக்கு பன்மடங்கு அதிகரிக்கும்படி செய்வான். (குர்ஆன் 2:245)

இந்த வசனத்தில் ஏழை எளிய மக்களுக்கு செய்யக்கூடிய உதவிகளை, தான் வாங்கிய கடனாக ஏற்றுக் கொண்டு அல்லாஹ் அதற்குரிய பிரதிபலனை வழங்குவதையே குறிக்கிறது. ஆனால் யூதர்கள் அல்லாஹ்வின் கருத்தை மாற்றி அதை கோண லாக்கும் விதமாக என்ன கூறினார்கள்? யார் கடன் கேட்பார்கள். ஏழைதானே கடன் கேட்பான். அல்லாஹ் கடன் கேட்கிறான் என்று சொன்னால் அல்லாஹ் ஏழையாகி விட்டான் என்று தர்க்க ரீதியாக பேசி மக்களை வழிகெடுத்தார்கள். இவர்களின் இந்த கருத்தை கண்டிக்கும் விதமாக அல்லாஹ் கூறுவதை பாருங்கள். “நிச்சயமாக அல்லாஹ் ஏழை. நாங்கள் தான் செல்வந்தர்கள் என்று கூறினார்களே, அத்தகையவர் களுடைய சொல்லை நிச்சயமாக அல்லாஹ் செவியேற்றுவிட்டான். (இவ்வாறு) அவர்கள் கூறியதையும், நியாயமின்றி நபிமார்களை கொலை செய்ததையும் நாம் பதிவு செய்து வைத்துள்ளோம். மேலும் (மறுமையில் அவர்களிடம்) எரிக்கும் வேதனையை நீங்கள் சுவைத்துப் பாருங்கள் என்று நாம் கூறுவோம்.  (குர்ஆன் 3:181)

அல்லாஹ்வின் வார்த்தைகளை மாற்றி மக்களை வழிகெடுத்த யூதர்களின் வேலையை மதரஸாவில் படித்து அரபி கற்று மெளலவி பட்டம் வாங்கிய நாங்கள் மட்டும்தான் மார்க்கம் சொல்வோம் என்று கூறக்கூடிய ஆலிம்களும் கணக்கச்சிதமாக செய்து வருகிறார்கள். எப்படி என்பதை பாருங்கள்.

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள் என்று நீர் நிச்சயமாக எண்ணவேண்டாம். எனினும் அவர்களுடைய இறைவனிடம் உயிருள்ள வர்களாகவே இருக்கின்றனர். (அவனால்) அவர்கள் உணவு வழங்கப்படுகின்றனர்.  (குர்ஆன் 3:169, 2:154)

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை நினைத்து அவர்களது வாரிசுகள், மனைவிமார்கள் மற்றும் இறை நம்பிக்கையாளர்கள் கவலையடைந்தார்கள். இவர்களின் கவலையை போக்கும் விதமாக அல்லாஹ்வின் பாதையில் உயிர் துறந்த இந்த நல்லடியார்கள் மகத்தான சொர்க்கத்தில் இருக்கிறார்கள் என்ற கருத்தில் அல்லாஹ் கூறியிருக்க, அதற்கு நேர் மாற்றமாக ஆலிம்களில் ஒரு சாரார் என்ன சொல்கிறார்கள். கப்ரில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இந்த அவ்லியா 3:169 வசனத்தின்படி உயிரோடு இருக்கிறார். ஆகவே உங்களது தேவைகளை இந்த அவ்லியாக்களிடம் கேளுங்கள் என்று கூறி மக்களுக்கு கோணல் வழியை காட்டுகிறார்கள். 3:169வது வசனத்திற்கு நபி(ஸல்) அவர்கள் கூறிய விளக்கத்தை சற்றும் மதிக்காமல் சுயவிளக்கம் கொடுத்து மக்களை வழிகெடுக்கிறார்கள். 3:169வது வசனத்திற்கு நபி(ஸல்) கொடுத்த விளக்கம் என்ன?

மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரழி) அவர்களிடம் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள் என்று நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம். எனினும் அவர்களுடைய இறைவனிடம் உயிருள்ளவர்களாகவே இருக்கின்றனர். (அவனால்) அவர்கள் உணவு வழங்கப்படுகின்றனர். (3:169) எனும் இந்த வசனம் குறித்து வினவப்பட்டது. அதற்கு அவர்கள் கூறினார்கள் தெரிந்து கொள்க! இந்த வசனம் குறித்து முன்பே நாங்கள் (நபி(ஸல்) அவர்களிடம்) கேட்டுவிட்டோம். அப்போது எங்களுக்கு (நபியவர்களால்) அறிவிக்கப்பட்டது. நிச்சயமாக அவர்களின் உயிர்கள் பச்சை நிறப் பறவைக(ளின் வயிறுக)ளில் செலுத்தப்பட்டு இருக்கும். அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துவிட்டு அவற்றுக்கென அர்ஷின் கீழ் மாட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டுக்குள் வந்தடையும்.

அப்போது அல்லாஹ் அவர்களிடம் ஒரு முறை தோன்றி நீங்கள் எதையேனும் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறீர்களா? உங்களுக்கு (அவற்றை) அதிகமாக்கித் தருகி றேன் என்று கேட்பான். அதற்கு அவர்கள் எங்களுடைய ரப்பே! நாங்கள் அதிகமாக எதிர்பார்ப்பதற்கு என்ன இருக்கிறது. நாங்கள் தாம் சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துக் கொண்டிருக்கிறோமே என்று கூறுவர். மீண்டும் இரண்டாவதாக அவர்களுக்கு முன் தோன்றி எதையும் மேலும் அதிகமாக, எதிர்பார்க்கிறீர்களா? உங்களுக்கு அவற்றை அதிகாக்கித் தருகிறேன் என்று கூறுவான். நாம் எதையேனும் கேட்காமல் விடப்படமாட்டோம் என்பதை உணரும்போது (இறைவா) எங்கள் உயிர்களை எங்கள் உடல்களுக்குள் திரும்பவும் செலுத்துவாயாக! நாங்கள் உலகிற்கு மீண்டும் சென்று உனது பாதையில் மீண்டும் ஒரு முறை கொல்லப்பட வேண்டும் என்று கூறுவர். அவர்களுக்கு (இதைத் தவிர) வேறெந்தத் தேவையும் இல்லையயன்பதை இறைவன் காணும்போது அவர்கள் (அதே நிலையில்) விடப்படுவார்கள்.  ஆதார நூல்கள்: முஸ்லிம் 3834, திர்மிதி 2927

அல்லாஹ்வின் வசனங்களை திரித்து, அதை கோணலாக்கி, அல்லாஹ்வின் தூதரின் விளக்கத்தை ஏற்க மறுத்து தங்களை மிகப் பெரிய மேதைகளாக நினைத்துக் கொண்டு சமுதாயத்தில் உலா வரும் இவர்களா நேர்வழியை போதிக்கப் போகிறார்கள்?

நிச்சயமாக அல்லாஹ்வும், அவனுடைய மலக்குகளும், நபியின் மீது ஸலவாத்து (அருள் மற்றும் பிரார்த்தனை)ச் செய்கிறார்கள். (ஆகவே) நம்பிக்கையாளர்களே! நீங்கள் அவர் மீது ஸலவாத்துச் சொல்லுங்கள் ஸலாமும் கூறுங்கள்.  (குர்ஆன் 33:56)

அல்லாஹ் இந்த நபியின் மீது அருள் புரிகிறான். மலக்குகள் இந்த நபிக்காக துஆ செய்கின்றார்கள். முஃமின்களாகிய நீங்கள் இந்த நபிக்காக துஆ செய்யுங்கள். ஸலாமும் கூறுங்கள். இதுதான் இந்த வசனத்தின் சரியான கருத்தாகும். இந்த வசனத்தை ஆலிம்களில் ஒரு சாரார் கோணலாக்கி வருகிறார்கள். நமது நபி எப்பேற்பட்ட நபி தெரியுமா? இவர் மீது அல்லாஹ்வே ஸலவாத்து சொல்கிறான். அல்லாஹ் செய்யக்கூடிய ஒரே இபாதத் இது மட்டும்தான். நாம் சொல்வதைப் போன்று அல்லாஹ்வும் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் என்று கூறுகிறான் என்று நபியை புகழ்கிறோம் என்ற பெயரில் அல்லாஹ்வை மட்டப்படுத்தி உரை நிகழ்த்தும் ஆலிம்களையும் நாம் பார்த்து வருகிறோம்.

அல்லாஹ்வை அடிமை நிலைக்கு கீழாக்கி நபியை அல்லாஹ்வின் அந்தஸ்துக்கு உயர்த்தும் இவர்களா சொர்க்கத்து பாதைக்கு வழிகாட்டப் போகிறார்கள். இது போன்று ஏராளமான வசனங்களுக்கு சுய கருத்தை கூறி அல்லாஹ்வின் நேர்வழியை கோணலாக்கும் வேலையை ஆலிம்களில் ஒரு சாரார் செய்து கொண்டிருக்கிறார்கள். நாம் உதாரணத்திற்கு இரண்டு வசனங்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளோம். இத்தகைய தவறான ஆலிம்களை அடையாளம் காட்டுவது கட்டாயமான பணியாகும். முஸ்லிம்களே! அரபி மொழி கற்ற நாங்கள் மார்க்கத்தை விளக்கி சொல்கிறோம் என்று கூறிக்கொண்டு பயான் என்ற பெயரில் மணிக்கணக்கில் பேசி தனது சுய கருத்துக்களை திணிக்கும் தவறான ஆலிம்களிடமிருந்து விலகியிருந்து, குர்ஆனை முறையாகப் பற்றிப் பிடித்து அதை நமது வாழ்வியல் நெறியாக நடைமுறைப்படுத்தி மறுமையில் வெற்றி பெறும் மக்களாக நாம் மாறவேண்டும். அதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!

Previous post:

Next post: