படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள் இறைநூலை!

in 2021 நவம்பர்

படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள் இறைநூலை!

சரஹ் அலி

உங்கள்  மீதும்  உங்கள்  குடும்பத்தினர் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும். படைத்த ஒரே இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்.

படைத்த ஏக இறைவன்  பெயரால்….

அறிந்தவரும் அறியாதவரும் சமமா?

(நபியே!) “அறிந்தவரும் அறியாதவரும் சமமாவார்களா?”  என்று  நீர்  கேட்பீராக,  அறிவுடையோர்தான்  படிப்பினை  பெறுபவர். (இறைநூல்: 39:9)

உங்களை மறந்துவிட்டு…

உங்களை மறந்துவிட்டு, நன்மை செய்யுமாறு மக்களை ஏவுகிறீர்களா? நீங்கள் புரிந்து கொள்ள வேண்டாமா? (இறைநூல்: 2:44)

மறுமை நாளில் ஒருவர் அழைத்துவரப்பட்டு நரகத்தில் வீசப்படுவார். அப்போது அவருடைய குடல்கள் வேகமாக வெளியேறி விடும். கழுதை தனது திரிகையைச் சுற்றி வருவதைப் போன்று அவர் நரகத்தில் தம் குடல்களைச் சுமந்து கொண்டு வருவார்.

அப்போது நரகவாசிகள் அவரை வட்டமாகச் சூழ்ந்துகொண்டு, “இன்ன மனிதரே! உமக்கு என்ன நேர்ந்தது? உலகில் நற்செயல் புரியுமாறு எங்களுக்கு நீர் ஏவி வந்தீர் அல்லவா? தீமையை விட்டும் எங்களைத் தடுத்தீர் அல்லவா?” என்று அவரிடம் கேட்பார்கள்.

அதற்கு அவர், “உங்களுக்கு நான் நற்செயலை ஏவினேன். ஆனால், நான் நற்செயலைச் செய்தேனில்லை; தீமையை விட்டும் உங்களை நான் தடுத்தேன். ஆனால், நான் தீமையும் கைவிட்டேனில்லை” என்று கூறுவார் என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள். நபிமொழி தகவலாளர். அபூவாயில்(ரழி), நபிமொழி ஆய்வாளர், முஸ்னத் அஹ்மத்: 4982, முஸ்லிம், புகாரீ : 3267,7098.

இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களிடம் ஒருவர் வந்து “நான் நன்மையை ஏவி தீமையைத் தடுத்திடும் பணியில் ஈடுபட விரும்புகிறேன்”  என்றார்.

அதற்கு இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் “நீ அந்தத் தகுதியை அடைந்து விட்டீரா?” எனக் கேட்டார்கள். அவரிடம், “தகுதி பெற்று விட்டதாகவே எண்ணுகிறேன்” என்றார் அம்மனிதர். அதற்கு அவர்கள் “அல்லாஹ்வின் குர்ஆனில் உள்ள மூன்று வசனங்கள் மூலம் நீர் இழிவடைவது பற்றி அஞ்சவில்லை என்றால் அப்பணியில் நீர் ஈடுபடலாம்” என்று கூறினார்கள். “எவை அந்த வசனங்கள்?” எனக் கேட்டார் அவர்.

இப்னு அப்பாஸ்(ரழி) கூறினார்கள்: “உங்களை மறந்து விட்டு மக்களை நன்மை செய்யும்படி ஏவுகிறீர்களா?” (2:44) என்பது முதல் வசனம் “இதை நன்றாகப் புரிந்து கொண்டீரா?” என்று கேட்டார்கள். “இல்லை’ என்று கூறிவிட்டு “இரண்டாம் வசனம் எது?’  என்று கேட்டார்.”

இப்னு அப்பாஸ்(ரழி) கூறினார்கள்: “நீங்கள் செய்யாதவற்றை எல்லாம் ஏன் சொல்கிறீர்கள். நீங்கள் செய்யாதவற்றை சொல்வது அல்லாஹ்விடம் பெரும் கோபத்துக்குரியதாகும் (61:2,3) எனும் வசனம். இதை நன்றாகப் புரிந்து கொண்டீரா?” என்று கேட்டார்கள். அப்போது “இல்லை’ என்று கூறிவிட்டு மூன்றாவது வசனம் எது? என்று கேட்டார்.

அதற்கு இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் ஷிஐப் நபி(அலை) அவர்கள் தம் சமுதாய மக்களிடம் கூறிய “உங்களுக்கு எதை செய்யக் கூடாதென நான் தடுத்தேனோ அதை நானே செய்து உங்களிடமிருந்து வேறுபட விரும்பவில்லை” (11:88) என்ற வசனத்தைக் கூறி “இதை நன்றாகப் புரிந்து கொண்டீரா?” எனக் கேட்டார்கள். அப்போது “இல்லை’  என்று  அவர் கூறினார்.

“அப்படியானால் நன்மையை  ஏவி தீமையைத் தடுக்கும் பணியை உன்னிடமிருந்து தொடங்கு”  என்று இப்னு அப்பாஸ்(ரழி) சொன்னார்கள்.  நூல்: இப்னு கதீர்.

Previous post:

Next post: