தப்லீக்  ஜமாஅத்தினரின்  தஃலீம்  தொகுப்பு நூல்…

in 2021 டிசம்பர்

தப்லீக்  ஜமாஅத்தினரின்  தஃலீம்  தொகுப்பு நூல்…

அமல்களின் சிறப்புகள்…

ஒரு திறனாய்வு !

  1. அப்துல் ஹமீத்

தொடர் : 76

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் :

புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம்  (1154 பக்கங்கள்)

தலைப்பு : திக்ரின் சிறப்புகள்

குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள்.

தமிழாக்கமும், வெளியிட்டோரும் :  பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட்,  திண்டுக்கல்.

பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு பக்கத்திலும் இப்புத்தகம் எத்தனையாவது பதிப்பு என்பது குறிப்பிடப்படவில்லை.

சென்ற இதழில் ….!

அமல்களின் சிறப்புகள் (அசி) புத்தகத்தின் பக்கம் 413ல் முதல் பாராவில் 36ம் எண்ணில், “திக்ரினால் ஏற்படும் ஒளி உலக வாழ்விலும், கப்ரிலும் உடனிருக்கும். சிராத்துல் முஸ்தகீம் பாலத்தின் மீதும் முன்னால் சென்று கொண்டிருக்கும்” என்று எழுதப்பட்டிருந்ததை சென்ற இதழில் ஆய்வு செய்யப் புகுந்தோம்.

அதற்காக ஒளியைப் பற்றி தெரிந்து கொள்ள முயன்றதில், அல்லாஹ்வின் பேரொளியைப் பற்றியும், அல்லாஹ்வால் அருளப்பட்ட புனித நூல்கள், மற்றும் நபிமார்கள், நல்ல மனிதர்கள், அனைத்து வஸ்துக்கள் ஆகியவைகளுக்கு ஒளியை அல்லாஹ் அவனது நாட்டத்திலிருந்து வழங்குகிறான் என்பதையும் தெரிந்து கொண்டோம்.

மேலும் முறையாக உளூ செய்வதன் மூலம் கிடைக்கும் பலன்களாக அந்தந்த உறுப்புகள் பிரகாசிக்கும் என்பதனையும், துஆவின் மூலமாக அல்லாஹ்விடம் நமது ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஒளி கிடைக்க பிரார்த்திக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டோம். இவைகளின் மூல மாகத்தான் ஒளி ஏற்படுமேயல்லாமல், அசி புத்தகம் தெரிவித்துள்ள திக்ர் செய்வதால் ஒளி ஏற்படும் என்ற முதல் செய்திக்கு புனித குர்ஆனிலும், ஹதீதிலும் எந்த விதமான ஆதாரமும் இல்லை என்பதையும் சென்ற இதழில் தெரிந்து கொண்டோம்.

இந்த இதழில்….!

அசி புத்தகம் தெரிவித்துள்ள திக்ரினால் ஏற்படும் ஒளி உலக வாழ்விலும், கப்ரிலும் உடனிருக்கும் என்ற இரண்டாவது செய்தியைப் பற்றியும், சிராத்துல் முஸ்தகீம் பாலத்தை கடக்கும் சமயத்தில் அந்த ஒளி கடப்பவர்களின் முன்னால் சென்று கொண்டிருக்கும் என்ற மூன்றாவது செய்தியைப் பற்றியும் இன்ஷா அல்லாஹ் இந்த இதழில் ஆய்வு செய்வோம்.

எமது ஆய்வு!

அசி புத்தகத்தில் கூறப்பட்டுள்ளவாறு, திக்ரினால் ஏற்பட்ட ஒளியானது உலக வாழ்விலும், கப்ரிலும் உடனிருக்கும் என்ற இரண்டாவது செய்தியை இப்போது ஆய்வு செய்வோம். முதலில் திக்ரினால் ஏற்பட்ட ஒளி உலக வாழ்வில் திக்ரு செய்தவருடன் இருக்குமா? என்பதை கவனிப்போம். திக்ரினால் ஒளி ஏற்பட்டதாக குர்ஆனிலும், ஹதீதிலும் எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்பதை சென்ற இதழிலேயே கண்டு கொண்டோம். அதாவது அசி புத்தகம் தவறான செய்தியை சொல்லி இருக்கையில், ஒளி உலக வாழ்வில் உடன் இருக்குமா? மண்ணறையில் உடன் இருக்குமா? மறுமை யில் பாலத்தைக் கடக்கும்போது உடன் இருக்குமா? என்றெல்லாம் ஆய்வு செய்வது அவசியம் இல்லாதது என்று தோன்றுகிறது.

இருப்பினும் ஒளி இருக்கிறது என்று தெரிந்த பின்பு அது உலகில், கப்ரில், பாலத்தைக் கடக்கும்போது உடன் இருக்குமா என்பதையும் தெரிந்து கொள்வதில் தவறில்லை எனத் தெரிகிறது!

இந்த ஒளி மனிதர்களுடனேயே எப்போதும் இருக்குமா என்பதை கவனிக்க முற்படும்போது, புனித குர்ஆனின் 66:8வது இறை வசனம் “ஆம்’ என்று தெள்ளத் தெளிவாக வழிகாட்டுவதையும், சில நிபந்தனைகளை நாசுக்காக அறிவுரையாக அல்லாஹ் தெரிவிப்பதையும் படித்து மகிழுங்கள்!

“…நபியையும் அவர்களை ஈமான் கொண்டவர்களையும் அந்நாளில் இழிவுபடுத்த மாட்டான். அவர்களுடைய பிரகாசம் அவர்களுக்கு முன்னும் அவர்களுடைய வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும். “”எங்கள் இறைவா! எங்களுக்கு எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்” என்று கூறிக் கொண்டிருப்பார்கள்”  (அல்குர்ஆன் 66:8)

நாசுக்காக என்ன அறிவுரை இந்த ஆயத்தில் கூறப்பட்டிருக்கிறது என்று தேடுகிறீர்களா?

அவர்களுக்கு முன்னும் அவர்களுடைய வலப்புறத்திலும் (ஒளி) பிரகாசமாக விரைந்து கொண்டிருக்கும் என்று படைத்தவன் தமது விருப்பத்தை தெரிவித்து விட்டு, அந்த விருப்பத்தை அடியான் நிறைவு செய்கிறானா என்று எதிர்பார்த்து, அந்த எதிர்பார்ப்பை அடியான் நிறைவு செய்து விட்டான் என்பதை எவ்வளவு மகிழ்ச்சியுடன் ஆயத்தில் தொடர்ந்து தெரிவிக்கிறான் பாருங்கள். அல்ஹம்துலில்லாஹ்! “எங்கள் இறைவா! எங்களுக்கு எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்’ என்று கூறிக் கொண்டிருப்பார்கள்.

அந்த அடியார்கள் அவனிடமே பிரார்த்திக்கிறார்களாம்!

அவனிடமே பாவமன்னிப்பு தேடுகிறார்களாம்!

அவனையே புகழ்ந்து துதி பாடுகிறார்களாம்!

இந்த ஆயத்தை மனதில் உள்வாங்கி, அனுபவித்து படியுங்கள்! நிச்சயமாக இன்ப மாக இருக்கும்!! இந்த உலகில் நமது ஒளி நம்முடன் இருக்குமாம். அப்படியானால் எல்லா மனிதர்களின் ஒளியும் அப்படி இருக் குமா என்று ஆராய முற்பட்டால் கீழே யுள்ள இறைவசனம் “”இல்லை” என்கிறது.

அல்லாஹ் அவனது நாட்டத்திலிருந்து ஒளியை வழங்குகிறான் என்றாலும்,

“….எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற் படுத்தவில்லையோ, அவனுக்கு எந்த ஒளி யும் இல்லை” என்று கூறப்பட்டுள்ள குர்ஆன் (24:40) வசனத்திலிருந்து, ஒளியானது மனி தர்கள் அனைவருக்கும் கிடைப்பது இல்லை என்ற உண்மையையும் தெரிந்து கொள்ள முடிகிறது.

ஒளி யாருக்கு இருக்கிறதோ, அவருக்குக் கிடைத்த ஒளியை அவர் பார்க்க முடியுமா? என்றால், அவரே அவரது ஒளியை பார்க்க முடியாது என்பதையும், அவரின் ஒளியை அல்லாஹ்வின் நல்லடியார்கள் பார்க்க முடியும் என்பதை சென்ற இதழில் காட்டியிருந்த ஹதீதிலிருந்து அறிய முடிகிறது. வாசகர்களின் சிரமத்தைத் தவிர்ப்பதற்காக அந்த ஹதீத் இதோ இப்போதும் தரப்பட்டிருக்கிறது.

நபித் தோழர்களில் இரண்டு மனிதர்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து இருள் சூழ்ந்த இரவில் புறப்பட்டார்கள். இவ்விருவருக்கும் முன்னால், இரண்டு விளக்குகள் போன்று எதுவோ ஒளி வீசிக் கொண்டிருந்தது. (அவ்விருவரும் அவரவர் வழியில் பிரிந்து சென்றபோது) ஒவ்வொருவருடனும் விளக்கு போன்ற ஒன்று அவர்கள் தம் வீடுகளை அடையும் வரை ஒளி வீசிக் கொண்டிருந்தது. (அறிவிப்பாளர்: அனஸ் (ரழி), புகாரி, ஹதீத் எண்கள்: 465,3639, 3805)

ஒளியின் மூலம் வழி தெரிந்ததால், தமக்கு ஒளி இருப்பதாக இருவரும் உணர்ந்து இருக்கலாம் என்று யூகிக்க முடிகிறது. இது யூகம்தான்! உண்மையில், இருளில் அந்த இருவரும் தமக்கு முன்னால் இருந்த விளக்கு போன்ற ஒன்றிலிருந்து ஒளி வீசிக் கொண்டிருந்ததைப் பார்த்ததாக தகவல் எதுவும் ஹதீதில் இல்லை. அது மட்டுமில்லாமல் அவரவர் பிரிந்து சென்றபோது ஒளியும் பிரிந்து அவரவருடன் சென்றதை ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டதாகவும், ஹதீதில் இல்லை. எனவே, ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டதாகவும் ஹதீதில் இல்லை. அவரவரின் ஒளியைப் பார்க்க முடியும் என்று யூகிப்பதை விட பார்க்க முடியாது என்ற முடிவுக்கு சுலபமாக வர ஹதீதில் மேலே காட்டிய தடயங்கள் கிடைக்கின்றன.

ஆனால், அதே சமயத்தில் இந்த இருவருக்கும் இரண்டு விளக்குகள் போன்ற ஒன்றிலிருந்து ஒளி வீசியது என்றும், இருவரும் அவரவர் பிரிந்து சென்றபோதும் ஒளியும் பிரிந்து அவரவருடன் சென்றதாக அனஸ்(ரழி) அவர்கள் தாம் பார்த்ததை இந்த ஹதீதில் பதிவிட்டிருப்பதால், அல்லாஹ்வின் நல்லடியார் ஒருவரின் ஒளியை, பிற நல்லடியார் பார்க்க முடியும் என்பது தெள்ளத் தெளிவாகிறது. இது திக்ரினால் ஏற்பட்ட ஒளி அல்ல என்பதையும், அல்லாஹ்விடமிருந்துதான் யாருக்கும் ஒளி கிடைக்கும் என்பதையும் மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.

அல்லாஹ்வையும், அல்லாஹ்வின் ஒளி யையும் இவ்வுலகில் எவரும் பார்க்க முடி யாது என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஹதீத்கள் கூறுகின்றன.

அபூதர்(ரழி) அவர்கள் “நான் அல்லாஹ் வின் தூதர்(ஸல்) அவர்களிடம் நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்தீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஒளியா யிற்றே! நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்?” என்று கேட்டார்கள். (அபூதர் (ரழி), முஸ்லிம், ஹதீத் எண். 291)

“ஒளியே அவனது திரையாகும்! அத் திரையை அவன் விலக்கி விட்டால் அவனது பார்வை எட்டும் தூரம் வரையுள்ள அவனது படைப்பினங்களை அவனது ஒளிச்சுடர் சுட்டெரித்து விடும்” என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் அருளி னார்கள். (ஹதீதின் சுருக்கம்) (அறிவிப்பாளர்: அபூமூஸா(ரழி), முஸ்லிம், ஹதீத் எண்: 293)
அசி புத்தகத்தின் அடுத்த கூற்று! மண் ணறையில் ஒளி உடனிருக்கும் என்பது சரியா? இதற்கான பதிலை, கீழே காட்டப் பட்டிருக்கும் ஹதீத் பதிலளித்திருப்பதை கவனியுங்கள்.

உம்மு சலமா(ரழி) அவர்கள் கூறியதாவது:

என் கணவர் அபூசலமாவின் பார்வை நிலைகுத்தி நின்றபோது, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் வந்து, அவருடைய கண்களை மூடிவிட்டார்கள். பிறகு, “”உயிர் கைப்பற்றப்படும்போது பார்வை அதைப் பின் தொடர்கிறது என்று கூறினார்கள். அப்போது அபூ சலமாவின் குடும்பத்தார் சப்தமிட்டு (புலம்பி) அழுதனர். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், “உங்களுக்காக நீங்கள் நல்லதைத் தவிர வேறெதையும் வேண்டாதீர்கள். ஏனெனில், நீங்கள் சொல்வதற்கு வானவர்கள் “”ஆமீன்” கூறுகின்றனர் என்று கூறினார்கள். மேலும், இறைவா! அபூ சலமாவை மன்னிப்பாயாக! நல்வழி பெற் றவர்களிடையே அவரது தகுதியை உயர்த்து வாயாக! அவருக்குப் பிறகு எஞ்சியிருப் போருக்கு அவரை விட சிறந்த துணையை வழங்குவாயாக! அகிலத்தின் அதிபதியே! எங்களுக்கும் அவருக்கும் மன்னிப்பு அருள்வாயாக! அவரது மண்ணறையை விசால மாக்குவாயாக! அதில் அவருக்கு வெளிச் சத்தை (ஒளியை) ஏற்படுத்துவாயாக! என்று பிரார்த்தித்தார்கள். (அறிவிப்பாளர்: உம்மு சலமா (ரழி) முஸ்லிம் எண்:1678)

நபி(ஸல்) அவர்கள், “”மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் அவருக்கு வெளிச்சத்தை (ஒளியை) ஏற்படுத்துவாயாக!” என்று துஆ செய்ததிலிருந்து, அசி புத்தகம் கூறுவது போல ஒளி கப்ரில் உடன் இருக்கும் என்பது அசி புத்தக ஆசிரியரின் பச்சைப் பொய் என்று நிருபிக்கப்பட்டு விட்டது என்பதும் கப்ரில் ஒளியை ஏற்படுத்துபவன் அல்லாஹ்தான் என்பதும் தெளிவாகி விட்டது.

சிராத்துல் முஸ்தகீம் பாலத்தை கடக்கும் சமயத்தில் அந்த ஒளி கடப்பவர்களின் முன் னால் சென்று கொண்டிருக்கும் என்ற மூன் றாவது செய்தியும் பச்சைப் பொய் என்பதை கீழுள்ள ஹதீத்கள் நிருபிக்கின்றதைப் பாருங்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நீண்ட ஹதீதின் சுருக்கம்: பாலத்தைப் பற்றி மட்டும்) “”…நரகத்தின் மேற்பரப்பில் பாலம் ஒன்று ஏற்படுத்தப்படும். நபிமார்கள் தத்தம் சமுதாயத்தினருடன் அதைக் கடப்பார்கள். அவ்வாறு கடந்து செல்பவர்களில் நானே முதல் நபராக இருப்பேன். அன்றைய தினத்தில் இறைத் தூதர்களைத் தவிர வேறு எவ ரும் பேசமாட்டார்கள். “”இறைவா காப் பாற்று! இறைவா காப்பாற்று! என்பதே அன்றைய தினம் இறைத் தூதர்களின் பேச் சாக இருக்கும்…” (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரழி), புகாரி எண். 806)

“நரகத்தின் மீது பாலம் அமைக்கப்படும். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நானே கடப்பவர்களில் முதல் ஆளாக இருப்பேன். அப்போதைய நிலையில் இறைத்தூதர்கள் அனைவரின் பிரார்த்தனையும் “”அல்லாஹ்வே காப்பாற்று! காப்பாற்று” என்பதாகவே இருக்கும். அந் தப் பாலத்தில் கொக்கிகள் மாட்டப்பட்டி ருக்கும். அவை கருவேல மரத்தின் முட்களைப் போன்று இருக்கும். “கருவேல மர முள்ளை நீங்கள் பார்த்ததில்லையா?’ என்று கேட்டார்கள். மக்கள், “ஆம்! இறைத்தூதர் அவர்களே!’ என்று பதிலளித்தார்கள். அந்தக் கொக்கிகள் கருவேல மரத்தின் முள் ளைப் போன்று இருக்கும். ஆயினும் அதன் பருமனை அல்லாஹ்வைத் தவிர வேறெ வரும் அறியமாட்டார்கள். அப்போது அந்தக் கொக்கிகள் மக்களை அவர்களின் செயல்களுக்கேற்ப கவ்விப் பிடிக்கும் அவர்களில் தன் செயல்களால் அழிந்து போன வரும் இருப்பார். (இன்னும் சிலர் நரகத்தில் விழுந்து விடுவார்கள் (7437). மற்ற சிலர் மூர்ச்சையாகிப் பிறகு பிழைத்துக் கொள்ப வரும் இருப்பார்….” (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரழி), புகாரி எண். 6573, 7437)

“…அப்போது இறைவனிடம் இறைத் தூதர்களைத் தவிர வேறு எவரும் பேச மாட்டார்கள். அப்போது ஒருவர், (அல்லாஹ்வாகிய) அவனை இனம் கண்டு கொள்ள உங்களுக்கும், அவனுக்கும் இடையே ஏதும் அடையாளம் உண்டா?” என்று கேட்பார். அதற்கு இறை நம்பிக்கை யாளர்கள், “(இறைவனின்) கால் (பாதம்) தான்’ என்று கூறுவார்கள். (பார்க்க இறை வசனம் 68:42) உடனே அல்லாஹ் தன்னுடைய காலை வெளிப்படுத்துவான். இறை நம்பிக்கையாளர்கள் அனைவரும் அவனை சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ் துதிக்காகவும், பாராட்டுக்காகவும் அல்லாஹ்வுக்கு சிரம் பணிந்து (தொழுது) கொண்டிருந்தவர்கள் மட்டுமே அப்போது எஞ்சி இருப்பார்கள். அவர்கள் சிர வணக்கம் செய்ய முற்படுவார்கள். ஆனால் அவர்களின் முதுகு (குனிய முடியாதவாறு) ஒரு பலகையைப் போன்று இருக்கும். (சிர வணக்கம் செய்ய முடியாது) பிறகு பாலம் கொண்டுவரப்பட்டு நரகத்தின் மேலே கொண்டு வைக்கப்படும். “”இறைத்தூதர் அவர்களே! அது என்ன பாலம்? என்று நாங் கள் கேட்டோம்.

நபி(ஸல்) அவர்கள், அது வழுக்கும் இடம், (கால்கள்) சறுக்கும் இடம், அதன் மீது இரும்பு கொக்கிகளும், அகன்ற நீண்ட முட்களும் இருக்கும். அந்த முட்கள் வளைந்தும் இருக்கும், “நஜ்து’ பகுதியில் முளைக்கும் அவை “கருவேலமர முட்கள்’ எனப்படும் என்றார்கள். (மேலும்) இறை நம்பிக்கையாளர் அந்தப் பாலத்தை கண் சிமிட்டலைப் போன்றும், காற்றைப் போன்றும், பந்தயக் குதிரைகள் மற்றும் ஒட்டகங்களைப் போன்றும் கடந்து விடுவார். எந்தக் காயமுமின்றி தப்பி விடுவோரும் உண்டு, காயத்துடன் தப்பி விடுவோ ரும் உண்டு, மூர்ச்சையாகி நரக நெருப்பில் விழுவோரும் உண்டு, இறுதியில் அவர்களில் கடைசி ஆள் கடுமையாக இழுத்துச் செல்லப்படுவார். பிறகு நாம் தப்பித்து விட்டோம் என்று இறை நம்பிக்கையாளர் கள் காணும்போது தம் சகோதரர்களுக்காக சர்வ அதிகாரமும் படைத்தவனிடம் அன்று அவர்கள் கடுமையாக மன்றாடுவார்கள். அந்த அளவிற்கு (இம்மையில்) உங்களுக்குத் தெளிவாகிவிட்ட உரிமைக்காகக் கூட நீங்கள் என்னிடம் வலியுறுத்திக் கேட்டிருக்க மாட்டீர்கள். அப்போது அவர்கள், எங்கள் இறைவா! எங்களுடன் தொழுது கொண்டிருந்தார்கள். நோன்பு நோற்றார்கள்; எங்களுடன் நல்லறங்கள் புரிந்து கொண்டிருந்தார்கள்” என்று வேண்டுவார்கள். (அறிவிப் பாளர், அபூஸயீதுல் குத்ரி(ரழி), புகாரி எண். 7439)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார் கள்: “”….இறை நம்பிக்கையாளர்கள் நரகத்தி லிருந்து தப்பி வரும்போது, சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையிலுள்ள ஒரு பாலத்தில் தடுத்து நிறுத்தப்படுவார்கள். உலகில் அவர்களுக்கு இடையே நடந்த அநீதி களுக்கு அந்தப் பாலத்திலேயே ஒருவருக்கொருவர் கணக்குத் தீர்த்துக் கொள்வார் கள். இறுதியில், அவர்கள் பாவங்களிலிருந்து நீங்கித் தூய்மையாகி விடும்போது சொர்க்கத்தில் நுழைய அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். முஹம்மதின் உயிரை கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! அவர்கள் சொர்க்கத்தில் உள்ள தம் வசிப் பிடத்தை உலகில் அவர்களுக்கு இருந்த வீட்டை விட எளிதாகக் கண்டு கொள்வார் கள். (அறிவிப்பாளர்: அபூ ஸயீதுல் குத்ரி(ரழி), புகாரி எண். 2440)

“…நபியையும் அவர்களை ஈமான் கொண்டவர்களையும் அந்நாளில் இழிவுபடுத்த மாட்டான். அவர்களுடைய பிரகாசம் அவர்களுக்கு முன்னும் அவர்களுடைய வலப்புறத்திலும் விரைந்து கொண்டி ருக்கும்: “எங்கள் இறைவா! எங்களுக்கு எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்” என்று கூறிக் கொண்டிருப்பார்கள் என்று இறக்கியருளப்பட்ட 66:8 இறை வசனத்தை மனதில் வைத்துக் கொண்டுதான், சிராத்துல் முஸ்தகீம் பாலத்தை கடக்கும் சமயத்தில் அந்த ஒளி கடப்பவர்களின் முன்னால் சென்று கொண்டிருக்கும் என்ற அசி புத்த கத்தின் மூன்றாவது பொய்ச் செய்தி புனைந்து பரப்பப்பட்டு வருகிறது.

ஆக, அசி புத்தக ஆசிரியர் அல்லாஹ்வின் அச்சம் சிறிது கூட இல்லாமல், புனித குர்ஆனில் உள்ள வசனங்களை வைத்து, அந்த வசனங்களுக்கு எதிராக பொய்யை புனைந்து அந்த பொய்களை குர்ஆனில் இருப்பது போலவும், ஹதீத்களில் இருப்பது போலவும் காட்டி வருகிறார். ஓரளவு குர்ஆன் மற்றும் ஹதீத்களுடன் தொடர்புள் ளவர்கள் கூட அசி புத்தகம் கூறுவதைப் படித்து விட்டு, அவர்கள் குர்ஆன் மற்றும் ஹதீத்களில் படித்து இருப்பதாக எண்ணிக் கொள்கிறார்கள்.

உதாரணத்திற்கு குர்ஆனின் 66:8வது வசனம், நபிமார்களுக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும் அவர்களுக்கு முன்னாலும் அவர்களுடைய வலப்புறத்திலும் ஒளி விரைந்து கொண்டிருக்கும் என்று எழுதப்பட்டிருப்பது ஒரு செய்தி, நரகத்தின் மேல் வைக்கப்பட்ட பாலத்தைக் கடப்பதில் பல சிரமங்கள் இருப்பதாக ஹதீஸில் கூறப்பட் டிருப்பது வேறு ஒரு செய்தி.

இந்த இரண்டு செய்திகளையும், அசி புத்தகம் ஒன்றாக்கி பாலத்தைக் கடக்கும் போது ஒளி உடன் இருப்பதாக, குர்ஆன் மற்றும் ஹதீத்கள் கூறாத ஒன்றை அதாவது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை, இருப்ப தாகக் காட்டி கேடுகெட்ட பிழைப்பை நடத்தி வருகிறது.

மற்றோர் உதாரணம்! காலை மாலை திக்ர் செய்ய வேண்டும் என்பது குர்ஆன் கூறும் ஒரு செய்தி. அல்லாஹ்விடமிருந்து நல்லவர்களுக்கு ஒளி கிடைக்கிறது என்பது இறைவன் கூறிய வேறொரு செய்தி. அபூசலாமாவிற்கு (நபித் தோழருக்கு) கப்ரில் ஒளியை ஏற்படுத்துவாயாக என்று நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது மற்றுமொரு செய்தி.

அசி புத்தகம் இந்த மூன்று செய்திகளையும் ஒன்றிணைத்து (1) திக்ர் செய்வதால் ஒளி ஏற்படும் என்று பொய் சொல்கிறது. (2) திக்ர் செய்தவர்களுடன் ஒளி இருப்பதாக இரண்டாவது பொய்யை சொல்கிறது (3) பாலத்தைக் கடக்கும்போது ஒளி உடனிருக்கும் என்று மூன்றாவது பொய்யை சொல்கிறது.

Previous post:

Next post: