நல்லது இருந்தால் அதனை எடுத்துக்கொள்ளலாம்!

in 2021 டிசம்பர்

நல்லது இருந்தால் அதனை எடுத்துக்கொள்ளலாம்!

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.

நவம்பர் மாத தொடர்ச்சி….

“யூதர்களின் கடின உள்ளத்திற்கு ஓர் உதாரணம்”

இதன் பின்னர் உங்கள் உள்ளங்கள் பாறையைப் போன்று அல்லது அதை விடக் கடுமையாக இறுகி விட்டன. ஏனெனில் சில பாறைகளில் ஆறுகள் பொங்கி வழிவதுண்டு. சில பாறைகள் பிளந்து அதில் தண்ணீர் வருவதுண்டு. அல்லாஹ்வின் அச்சத்தால் (உருண்டு) விழும் பாறைகளும் உள்ளன. நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக் காதவனாக இல்லை. (2:74)

“புறம் பேசுவதை மனித இறைச்சியைச் சாப்பிடுவதற்கு ஒப்பிடுதல்”

இறை நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவானா? அதை வெறுப்பீர்கள், அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (49:12)

“நபி ஈஸா(அலை) அவர்களை நபி ஆதம் (அலை) அவர்களுக்கு ஒப்பிடுதல்”

அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம் ஆதமின் உதாரணத்தைப் போன்றதே. அவரை (ஆதமை) மண்ணிலிருந்தே அவன் படைத்தான். பின்பு அவரை நோக்கி “ஆகுக” என்ரான். உடனே அவர் ஆகிவிட்டார். (3:59) ஆதம்(அலை) அவர்களை ஆண் மற்றும் பெண்ணின் துணையின்றி இறை வன் படைத்தான். அவருடைய துணைவியார் ஹவ்வா(அலை) அவர்களைப் பெண்ணின் துணையின்றி ஓர் ஆணிலிருந்து மட்டுமே படைத்தான். ஈசா(அலை) அவர்களை ஆணின் துணையின்றி ஒரு பெண்ணிலிருந்து மட்டுமே படைத்தான்.

“இவ்வுலக அற்ப வாழ்க்கைக்கு உதாரணமானது”

இவ்வுலக (அற்ப) வாழ்க்கைக்கு உதாரணம், வானத்திலிருந்து நாம் இறக்கிய தண்ணீரைப் போன்றது. மனிதர்களும், கால் நடைகளும் உண்ணுகிற பூமியின் தாவரங்க ளுடன் அத்தண்ணீர் கலக்கிறது. முடிவில் பூமி அலங்காரம் பெற்று கவர்ச்சியாக ஆகிறது. அதன் உரிமையாளர்கள் அதன் மீது தமக்குச் சக்தி இருப்பதாக நினைக்கும் போது நமது கட்டளை இரவிலோ, பகலிலோ அதற்கு (பூமிக்கு) கிடைக்கிறது. உடனே நேற்று அவ்விடத்தில் இல்லாதிருந் தது போல் அறுக்கப்பட்டதாக அதை ஆக்கி விடுகிறோம். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இவ்வாறே சான்றுகளைத் தெளிவுபடுத்து கிறோம். (10:24)

தண்ணீரை வானத்திலிருந்து நாம் இறக்கினோம். அது பூமியின் தாவரங்களுடன் இரண்டறக் கலந்தது. (பின்னர் காய்ந்து) அவை சருகுகளாக மாறின. அவற்றைக் காற்று அடித்துச் சென்றது. இதை இவ்வுலக வாழ்வுக்கு உதாரணமாகக் கூறுவீராக! அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். (18:45)

“விளையாட்டும், வீணும், கவர்ச்சியும் உங்களுக்கிடையே பெருமையடித்தலும், பொருட்செல்வத்தையும், மக்கட் செல்வத் தையும் அதிகமாக்கிக் கொள்வதும் ஆகிய வையே இவ்வுலக வாழ்க்கை” என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (இவ்வுலகின் நிலை) மழையைப் போன்றது. அதன் (காரணமாக முளைத்த) பயிர்கள் (ஏக இறைவனை) மறுப்போருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. பின்னர் அது காய்ந்து விடுகிறது. அது மஞ்சள் நிறமாக மாறுவதைக் காண்பீர். பின்னர் கூளமாக ஆகிறது. மறுமையில் (தீயோருக்குக்) கடும் வேதனையும், (நல்லோருக்கு) அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பும், திருப்தியும் உண்டு. இவ்வுலக வாழ்வு ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை. (57:20, 6:32, 29:64, 47:36)

“படைக்கும் வி­யத்திலும் பறிக்கும் விஷயத்திலும் அல்லாஹ் அல்லாதவைகளுக்கு உதாரண மாக அல்லாஹ் கூறுவது”

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைக் கவனமாகக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனை வரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. (ஏனெனில்) தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமானவர் களாக இருக்கிறார்கள். (22:73)

“இறந்தவர்களை மறுமையில் எழுப்புவதற்கு உதாரணம்”

தனது அருளுக்கு முன்னால் நற்செய்தி யாக அவனே காற்றை அனுப்புகிறான். அது கனமான மேகத்தைச் சுமக்கும் போது இறந்துபோன ஊருக்கு அதை ஒட்டிச் செல்கிறோம். அதிலிருந்து தண்ணீரை இறக்கி, அதன் மூலம் எல்லாப் பலன்களையும் வெளிப்படுத்துகிறோம். இவ்வாறே இறந்தவர்களையும் வெளிப்படுத்துவோம். (இதன் மூலம்) நீங்கள் படிப்பினை பெறக்கூடும்.  (7:57)

“கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் ஆடை போன்றவர்கள்”

நோன்பின் இரவில் உங்கள் மனைவிய ரிடம் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடை நீங்கள் அவர்களுக்கு ஆடை, உங்களுக்கு நீங்கள் துரோகம் செய்து கொண்டிருந்தது அல்லாஹ்வுக்குத் தெரியும். எனவே உங்கள் மன்னிப்பை ஏற்று உங்களைப் பிழை பொறுத்தான். இப்போது (முதல்) அவர்களுடன் கூடுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை (சந்ததியை)த் தேடுங்கள்! பள்ளி வாசல்களில் இஃதிகாஃப் இருக்கும்போது மனைவியருடன் கூடாதீர்கள்! இவை அல்லஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை நெருங்காதீர்கள்! (தன்னை) அஞ்சுவதற்காகத் தனது வசனங்களை அல்லாஹ் மக்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்.
(2:187)

“பொழுது புலரும் அதிகாலை வேளையை” வெள்ளைக் கயிறு என்றும் இரவை கறுப்புக் கயிறு என்றும் உதாரணம்.

நோன்பின் இரவில் உங்கள் மனைவிய ரிடம் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடை நீங்கள் அவர்களுக்கு ஆடை, உங்களுக்கு நீங்கள் துரோகம் செய்து கொண்டிருந்தது அல்லாஹ்வுக்குத் தெரியும். எனவே உங்கள் மன்னிப்பை ஏற்று உங்களைப் பிழை பொறுத்தான். இப்போது (முதல்) அவர்களுடன் கூடுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை(சந்ததியை)த் தேடுங்கள்! வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்)கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்! பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்! பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருக்கும் போது மனைவியருடன் கூடாதீர்கள்! இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை நெருங்காதீர்கள்! (தன்னை) அஞ்சுவதற்காகத் தனது வசனங்களை அல்லாஹ் மக்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான். (2:187)

“உண்மைக்கும் பொய்க்கும் உதாரணம்”

வானத்திலிருந்து அவன் தண்ணீரை இறக்கினான். அது வாய்க்கால்களின் அளவுக்கேற்ப ஓடுகிறது. மிதக்கும் நுரைகளை வெள்ளம் சுமக்கிறது. நகை அல்லது தளவாடம் செய்வதற்காக நெருப்பில் அவர்கள் உருக்குவதிலும் இதுபோன்ற நுரை ஏற்படுகிறது. இவ்வாறே உண்மைக்கும், பொய்க்கும் அல்லாஹ் உதாரணம் காட்டுகிறான். நுரையோ மறைந்து விடுகின்றது. மனிதர்களுக்குப் பயன் தருவது நிலத்தில் தங்கி விடுகிறது. அல்லாஹ் இவ்வாறே உதாரணங்களைக் கூறுகிறான். (13:17)

“அழைப்புப் பணிக்கும் தகவல் பரிமாற்றத் திற்கும் உதாரணமாக “”ஹூத்” “”ஹூத்” எனும் கொண்டைலாந்திப் பறவையை!”

பறவைகளை அவர் ஆய்வு செய்தார், “ஹூத் ஹூத்’ பறவையை நான் காணவில்லையே! அது ஓடி ஒளிந்து விட்டதா? என்றார்”. “”அதைக் கடுமையான முறையில் தண்டிப்பேன்; அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது அது என்னிடம் தெளிவான சான்றைக் கொண்டு வரவேண்டும்” (என்றும் கூறினார் அப்பறவை) சிறிது நேரமே தாமதித்தது. “”உமக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்து, ஸபா எனும் ஊரிலிருந்து உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு வந்துள்ளேன்” என்று கூறியது. “”நான் ஒரு பெண்ணைக் கண்டேன்.

அவள் அவர்களை ஆட்சி செய்கிறாள். அவளுக்கு ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது. அவளுக்கு மகத்தான சிம்மாசனமும் உள்ளது “”அவளும், அவளது சமுதாயமும் அல்லாஹ்வையன்றி சூரிய னுக்கு ஸஜ்தா செய்யக் கண்டேன். அவர்களின் செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டி, அவர்களை (நல்) வழியை விட்டும் தடுத்துள்ளான். எனவே அவர்கள் நேர்வழி பெற மாட்டார்கள்” (என்றும் கூறியது) “”நீ உண்மை சொல்கிறாயா? பொய்யர்களில் ஆகிவிட்டாயா? என ஆராய்வோம்” என்று அவர் கூறினார். “”எனது இந்தக் கடிதத்தை நீ கொண்டு சென்று அவர்களிடம் இதைப் போடு! பின்னர் அவர்களை விட்டும் விலகி என்ன பதில் தருகிறார்கள் என்று கவனி!” (என்றும் கூறி னார்) (27:20-28)

“இறை நம்பிக்கையைப் பாதுகாப்பதற்காக இடம் பெயர்ந்து குகையில் தஞ்சம் புகுந்த இளைஞர்களின் முன்மாதிரி”

சில இளைஞர்கள் குகையில் ஒதுங்கிய போது “”எங்கள் இறைவா! உன் அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் பணியை எங்களுக்குச் சீராக்குவாயாக!” என்றனர். எனவே அக்குகையில் பல வருடங்கள் அவர்களை உறங்கச் செய்தோம். அவர்கள் தங்கிய காலத்தை இரு சாராரில் நன்கறிந்தவர் யார் என்பதை அறிவிப்பதற்காகப் பின்னர் அவர்களை எழுப்பினோம். அவர்களது உண்மை வரலாறை நாம் உமக்குக் கூறுகிறோம். அவர்கள் இளைஞர்கள், அவர்கள் தமது இறைவனை நம்பினார்கள், அவர்க ளுக்கு நேர்வழியை அதிகமாக்கினோம். (18:9-21)\

“தமது இறை நம்பிக்கையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அல்லாஹ்வின் பாதையில் இடம் பெயர்ந்து சென்றவர்களுக்குப் பாதுகாவலாக இருந்த நாயைக் குறித்தும்” சொல்லும்போது,

அவர்கள் விழித்துக் கொண்டிருப்பதாக நீர் நினைப்பீர்!(ஆனால்) அவர்கள் உறங்கிக் கொண்டுள்ளனர். அவர்களை வலப்புறமும், இடப்புறமுமாகப் புரட்டுகிறோம். “அவர்களின் நாய்” தனது முன் கால்களை விரித்து வாசலில் உள்ளது. அவர்களை நீர் எட்டிப் பார்த்திருந்தால் அவர்களை விட்டு வெருண்டு ஓடியிருப்பீர்! அவர்களால் அதிகம் அச்சமடைந்திருப்பீர்! (18:18)

“வணங்குவதற்காகத் தனிமையை விரும்பி “”ஹிரா” என்னும் மலைக் குகைக்குச் சென்ற அப்துல் முத்தலிப்”

முதன் முதலாக அப்துல் முத்தலிப் மக்காவிலிருந்து இரண்டு மைல் தொலைவிலுள்ள “ஜபலின் நூர்” என்று சொல்லக் கூடிய “ஹிரா” குகைக்கு தனிமையையும் அமைதியையும் விரும்பிப் புனித ரமழான் மாதத்தில் அங்கு சென்று தங்குவார். (அந்நாட்களில்) ஏழை எளியோருக்கு உணவளிப்பார். (தஃப்ஸீர் இப்னு கஸீர், ரஹீக்89)

தமது “பாட்டனாரின் அந்தப் பழக்கத்தைக் கருத்தில் கொண்ட நபி(ஸல்) அவர்களும் ஹிரா குகைக்குள் சென்றார்கள்”

நபித்துவத்திற்கு முன்பே நாற்பது வயதை நெருங்கியபோது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ரமழானில் தனிமையை விரும்பி சத்துமாவையும் தண்ணீரையும் எடுத்துக்கொண்டு தூர் மலையின் ஹிரா குகைக்குச் செல்வார்கள். (ஆயிஷா (ரழி) புகாரி, பாகம் 01, பக்கம் 3, பாடம் 3, ஹதீத் எண் 3, தாரிக் இப்னு ஹிஷாம், ரக் அல்மக்தூம் 89)

Previous post:

Next post: