செல்வந்தர்களே! உங்களைத்தான்!!

in 2022 ஜனவரி

செல்வந்தர்களே! உங்களைத்தான்!!

இப்னு ஹத்தாது

பேராசை பெரும் ஆபத்தே!

v  காசேதான் கடவுளப்பா! கடவுளுக்கும் இது தெரியுமப்பா!!

v  பணம் பந்தியிலே! குணம் குப்பையிலே!!

இப்படி வீணர்களானபொய்யர்களான கவிஞர்களும் கவிபாடும் அளவுக்கு மக்கள் பணப் பைத்தியம் பிடித்தவர்களாக அலைகின்றனர். மனிதனைப் படைத்துப் பரிபாலிக்கும் ஏகன் இறைவனும், மனிதனின் பணப் பித்தை இவ்வாறு விவரிக்கிறான்.

1.    பணத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (இறைவனை விட்டும்) பராக்காக்கி விட்டது.
2.   
நீங்கள் புதை குழிகளைச் சந்திக்கும் வரை.
3.   
அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
4.   
பின்னரும் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
5.   
அவ்வாறல்லமெய்யான அறிவைக் கொண்டு அறிந்திருப்பீர்களானால் (அந்தப் பண ஆசை உங்களைப் பராக்காக்காது).
6.   
நிச்சயமாக (அப்பண ஆசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள்.
7.   
பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள்.
8.   
பின்னர் அந்நாளில் (இவ்வுலகில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த பண) அருட்கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.
அல்குர்ஆன்: பேராசை:102:1-8

பாமரனும் அல்குர்ஆனை விளங்க  முடியும்!

புரோகித முல்லாக்களின் வசீகர வலையில் சிக்கி, அல்குர்ஆன் நமக்கு விளங்காது என்ற அவநம்பிக்கையில் மூழ்கி இருப்பவர்கள் மட்டுமே பணத்தாசை பிடித்து அலைய முடியும். மற்றபடி இறைவனது இறுதி நெறி நூல்மக்களுக்கு விளங்கும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் அல்குர்ஆனின் தமிழ் ஆக்கத்தில் மேலே எழுதியுள்ள எட்டு இறைவாக்கு களையும் மீண்டும் மீண்டும் படித்துத் தங்கள் மனதில் பதிய வைத்துக் கொள்கிறவர்கள் பணத்தாசை பிடித்து அலைய மாட்டார்கள். கோடிக்கணக்கில், லட்சக்கணக்கில் பணத்தைச் சேர்த்து கட்டிடங்களாகவும், நிலங்களாகவும், ரொக்கமாகவும் வைத்துக் கொண்டு வருடா வருடம் முறைப்படி ஜகாத் கணக்கிட்டு, ஏழைகளுக்குரிய பங்கைக் கொடுக்காமல் மோசம் செய்ய மாட்டார்கள். தாங்கள் சேர்த்து வைத்துள்ள செல்வங்களைக் கொண்டு பெருமை பேச மாட்டார்கள். ஆணவம் கொள்ள மாட்டார்கள். மார்க்கத்தையும், இவ்வுலகின் அற்பமான நிலை யையும் அழிந்துபடும் நிலையையும், அழிவோ, எல்லையோ இல்லாத நீடித்து நிலையாக இருக்கக்கூடிய மறு உலக நித்திய வாழ்க்கையின் நிலையையும் முறையாக அறிந்தவர்கள் பணத்தாசை பிடித்து அலைய மாட்டார்கள். கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வருடா வருடம் ஜகாத் கொடுக்காமல் ஏழைகளின் பங்கை மோசம் செய்யமாட்டார்கள்.

மறுமையை மறந்தவர்கள்!

இறைவனைப் பற்றியும், மறுமையைப் பற்றியும் உறுதியான நம்பிக்கை அற்றவர்களே பணத்தாசை பிடித்து அலைவார்கள். வருடா வருடம் ஜகாத் கொடுக்காமல் ஏழைகளின் பங்கை மோசடி செய்வார்கள். பணத்தைச் சேர்த்து வைத்துக்கொண்டு பெருமை பாராட்டுவார்கள். பெருமை உள்ளம் படைத்தவர்களே முறை தவறி பணத்தைக் கோடி கோடியாகச் சேர்த்துக் குவிப்பார்கள் என்பதில் அணுவளவும் ஐயம் இல்லை.

இதோ அதற்குரிய ஆதாரங்களை வரிசையாகப் பாருங்கள். பொதுவாகப் பணம் என்னென்ன வகைக்காக மனிதனுக்குத் தேவைப் படுகிறது? பணத்தேவை ஏன்?

உணவு, உடை இருப்பிடம், வாகனம், மனைவி போன்ற ஆகுமான, நியாயமான தேவைகளுக்கே பணம் தேவைப்படுகிறது.

1. உணவு அவசியம் ஆனால்!!

உணவைப் பொறுத்தமட்டிலும், எப்படி சுவாசிக்கும் காற்றை மனிதர்கள் அனைவருக்கும் இறைவன் இலவசமாக ஆக்கித் தந்திருக்கிறானோ, அடுத்த நிலையில் நீரை இலவசமாக ஆக்கித் தந்திருக்கிறானோ, அதற்கு அடுத்த நிலையில் உணவு வகைகளையும் ஆக்கித் தந்திருக்கிறான். மனிதனின் ஆரோக்கியத்திற்கும், உடல் வலிமைக்கும் உரிய சத்தை ஏகன் இறைவன் கீரை வகைகளிலும், காய் கனிகளிலுமே வைத்திருக்கின்றான். இவை ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் குறைந்த விலையில் கிடைக்கின்றன.

கீரை வகைகள், காய்கனிகள் ஏழைகளின் உணவு, பணக்காரர்களாகிய நாம் அவற்றைச் சாப்பிடுவதா? என்ற பெருமை எண்ணத்துடன் தினசரி கறி, மீன் என்று சாப்பிடுகிறவர் கள் பணம் கொடுத்து நோய்களை விலைக்கு வாங்குகின்றனர். பலவித நோய்களுக்கு ஆளாகின்றனர். அதன் முடிவு வாழ்வின் எஞ்சியுள்ள பகுதியை பெரும் பத்தியங்களில் கழிக்கும் பரிதாப நிலையே ஏற்படுகிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் பணக்காரர்களைவிட ஏழைகளே உடல் ஆரோக்கியமுள் ளவர்களாகவும், ஆகுமான உணவுகளை நன்கு அனுபவிப்பவர்களாகவும், தாம்பத்திய உறவை நன்கு அனுபவிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். பணம் படைத்தவர்களில் பெரும்பான்மையினர் அப்பணத்தைக் கொண்டு பெருமையடிக்கிறார்களே அல்லாமல் அவற்றை அனுபவிக்கும் பாக்கியத்தை இழந்து விடுகிறார்கள்.

2.  உடை அவசியம்! ஆனால்!!

இரண்டாவது தேவையான உடை வியத்திலும், எல்லாம் வல்ல ஏகன் இறை வன் குறைந்த விலையில் எளிதாகக் கிடைக் கும் பருத்தி, கதர் ஆடைகளிலேயே உடல் ஆரோக்கியத்தை வைத்துள்ளான்.

விலை உயர்ந்த நவீன தயாரிப்புகளினால் ஆன ஆடைகள் பெரும்பாலும் பெருமைக்காக அணியப்படுகின்றனவே அல்லாமல் அவை உடலுக்கு கேடுகளை விளைவிக்கின்றன. பரம ஏழை போல், கஞ்சனைப் போல் இல்லாமல் இறைவன் தனக்குக் கொடுத்துள்ள செல்வத்தை வெளிக்குக் காட்டும் வகையில் நடுத்தரமான, வசதியான ஆடைகளை அணிவதில் தவறு இல்லை. அதை விட்டு வீண் ஆடம்பரத்திற்காகப் படாடோபமாக ஆடைகளை அணிவது கொண்டு பணக்காரர்கள் பெருமையடிப்பதோடு தங்களின் உடம்புக்கு கேட்டையும் விலை கொடுத்து வாங்குகிறார்கள். அதனாலும் பலவித நோய்களுக்கு ஆளாகிறார்கள். உடை வியத்திலும் சாதாரண நடுத்தர மனிதனுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமும், அதனால் ஏற்படும் மனநிறைவும் பணம் படைத்தவனுக்குக் கிடைப்பதில்லை. வீண் பெருமையே கண்ட பலன்.

3.   உறைவிடம் அவசியம்ஆனால்!!

மனிதனுக்குக் குடியிருக்க ஒரு வீடு தேவைதான். நல்ல காற்றோட்டமான வசதியான ஒரு வீடு அவசியம்தான். சில லட்சங்களில் அதை அமைத்துக் கொள்ள முடியும். ஆனால் பணம் படைத்தவர்களின் வீடுகளை நோட்டமிட்டுப் பாருங்கள். பல லட்சங்களில், ஏன் கோடிக்கணக்கில் செலவிட்டு வெகு ஆடம்பரமாக படாடோபமாக வீடு களைக் கட்டுகிறார்கள். கட்டிட முகப்புத் தோற்றம் என்ற பெயரிலேயே பெருமைக்காக லட்சக்கணக்கில் வாரி இறைக்கின்றனர். அந்த வீடுகளின் அமைப்புகளைப் பார்த்தால் அங்கு மனிதனின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான இயற்கைக் காற்று வீட்டினுள் நுழைவதற்கு அனுமதி கேட்கும் வகையிலேயே அமைந்திருக்கும். அது மட்டுமல்ல, ஒரு வீட்டுக்குப் பதிலாக பல வீடுகளை இவ்வாறு பெரும் பணச் செலவில் கட்டி யிருப்பார்கள். இங்கும் அவர்களின் வீண் பெருமையும், ஆடம்பரமும் வெளிப்படுகிறதே அல்லாமல், அமைதியையும், நிம்மதியையும் காணமுடியாது. அனைத்து செயற்கை முறை வசதிகள் அந்த வீடுகளிலும், படுக்கை அறைகளிலும் நிறைந்து காணப்பட்டாலும், இரவில் அத்தியாவசியமான தூக்கம் அந்தச் செல்வந்தனுக்கு வராது. தூக்க மாத்திரைகள் போட்டே தூங்கும் நிர்பந்த நிலையி லேயே அவன் இருப்பான். வெட்ட வெளியில் பாதையோரமாக படுத்து நிம்மதியாகத் தூங்கும் ஒரு பிச்சைக்காரனைப் பார்த்து, இந்த பெருங்கொண்ட பணம் படைத்த செல்வந்தன் பொறாமைப்படுவான். அந்த அளவு அவனது உள்ளம் நிம்மதி இல்லாமல் இரைந்து கொண்டிருக்கும்.

4. வாகனம் அவசியம்! ஆனால்!!

மனிதனுக்கு பயணங்களுக்காக ஒரு வாகனம் தேவைதான். அதற்காக பத்திரமாக, பாதுகாப்பாகக் கொண்டு சேர்க்கும் ஒரு நடுத்தர வாகனம் போதும். இதைச் சாதாரணமாக 4 லட்சம் அல்லது 5 லட்சத்தில் அமைத்துக் கொள்ள முடியும். இங்கும் செல்வந்தர்கள் இது கொண்டு மன நிறைவு அடையமாட்டார்கள். மற்றவர்கள் தங்களைப் பற்றி பெருமையாகப் பேச வேண்டும் என்ற மேல் எண்ணத்தில் 10 லட்சம், 25 லட்சம், 80 லட்சம் என பெரும் செலவில் ஆடம்பரமான வாகனங் களைத் தேடிப் பிடிப்பார்கள். ஓரிரு வாகனங்களுக்குப் பகரமாக பல வாகனங்களை தேவைக்காக அல்ல, பெருமைக்காக வைத்துக் கொள்வார்கள். இங்கும் அவர்களின் பெருமையும், ஆணவமும் வெளிப்படுகிறதே அல்லாமல் நியாயமான தேவை வெளிப்படவில்லை.

5.  மனைவி அவசியம்! ஆனால்!!

ஐந்தாவதாக ஒரு மனிதனுக்கு மன நிம்மதிக்கும், அமைதிக்கும், உடல் சுகத்திற் கும் மனைவி தேவைப்படுகிறாள். இவற்றை நிறைவாக அடைய ஒரு நற்குணமுள்ள, மார்க்க அறிவு நிறைந்த ஒரு பெண் தேவை. ஆனால் பணம் படைத்த பெருமை நிறைந்த ஒரு செல்வந்தனின் மன நிலை அப்படி இருக்காது. தன்னைவிட பணம் படைத்த குடும்பத் தில் லட்சக்கணக்கில் ரொக்கமாக வரதட்சணை, கார், பங்களா மற்றும் சீர்வரிசைகள் இப்படி நிறைவாகக் கிடைக்கும் வீடாகப் பார்த்து பெண் முடிப்பான். பெருமைக்காக பெரும் பணத்தை எதிர்பார்த்தானே அல்லாமல் மார்க்கப்பற்று, நல்லொழுக்கம், கணவனை மதித்து நடக்கும் பண்பாடுள்ள பெண்ணைத் தேர்ந்தெடுக்கவில்லை. விளைவு, அவன் ஆவலுடன் எதிர்பார்த்த மன நிம்மதி, அமைதி, உடல் சுகம் இவற்றிற்குப் பகரமாக ஓயாத சண்டை, சச்சரவு, மன உளைச்சல், கோபதாபம், தூக்கமின்மை என அவதிக்குள்ளாவான். அவனிடம் இல்லாத நற் குணங்களை அவன் தன் மனைவியிடம் எதிர்பார்ப்பது மடமைதானே! இவனை விட செல்வச் செழிப்பில் வளர்ந்த அந்தப் பெண் தனக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என இவன் எதிர்பார்ப்பது முட்டாள்தனம் தானே? செல்வத்தில் மனைவி கணவனை விட மிகைத்திருப்பதால், பெரும்பாலும் கணவன் தனக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று அவள் எதிர்பார்ப்பது அவ ளளவில் நியாயம்தானே! அவளால் வரதட் சனை என்ற பெயரால் விலை கொடுத்து வாங்கப்பட்ட கணவன் மனைவிக்கு அடிமைப்பட்டு நடக்க வேண்டும் என்பது நியதிதானே! வினை விதைத்து தினை எதிர்பார்க்க முடியுமா?

இப்படி நியாயமான வருமானத்திற்குப் பதிலாக பேராசை கொண்டு கோடி கோடியாக தேடுபவர்களின் நிலை இப்படி பரிதாபத்திற்குரியதாகவே அமைந்து விடுகிறது.
பெரும் பணம் படைத்தவர்கள் அதிகமாக அனுபவிக்க முடியுமா?

பெரும் பணம் இருக்கிறது என்பதற்காக மூன்று வயிறுகளில் சாப்பிட முடியுமா? ஒரே நேரத்தில் ஏழு சட்டைகளை அணிந்து கொள்ள முடியுமா? ஒரே நேரத்தில் மூன்று வீடுகளில் குடியிருக்க முடியுமா? பெரிய பங்களா முழுவதும் படுத்து உருள முடியுமா? ஒரே நேரத்தில் மூன்று வாகனங்களில் போக முடியுமா? நிச்சயமாக முடியாது? அப்படியா னால் பணம் படைத்தவர்களுக்கு ஏன் இந்த பேராசை? உலகையே வளைத்துப் போட ஏன் படாதபாடு படுகிறார்கள்.

வறுமை ஏற்படுமே என்ற அச்சமா?

இப்போதிருப்பது போல் எப்போதும் இருக்குமா? திடீரென்று வியாபாரம் தொழில் நொடிந்து வறுமை வந்துவிட்டால் அப்போது உதவுவதற்கு கொஞ்சமாவது சேமிப்பு வேண் டாமா? தங்களுக்குப் பின் தங்கள் வாரிசுகள் வறுமையில் வாடாமல், நிம்மதியாக வாழ வேண்டாமா? என்று தங்களின் செயலை நியாயப்படுத்துவார்கள். நியாயம்தான்! எதிர் கால நலனைக் கருதி சேமிப்பு அவசியம்தான். அதற்காக 10 தலைமுறை 100 தலைமுறை என சொத்தை மலையாகக் குவிக்க வேண்டுமா?

வாரிசுகளை வளர்ப்பது எப்படி?

தங்கள் வாரிசுகளை நல்லவர்களாக, வல்லவர்களாக, ஒழுக்க சீலர்களாக வளர்த்து பக்குவப்படுத்தி விட்டால், இவர்கள் உழைத்துப் பொருள் ஈட்டுவது போல், அவர்களும் பொருள் ஈட்ட முடியாதா? உழைக்க முடியாத, தெரியாத தற்குறிகளையா அவர்கள் விட்டுச் செல்கிறார்கள். அவர்கள் சேர்த்து குவித்து வைத்துள்ள கோடிக்கணக்கான சொத்துக்கள் அவர்களின் வாரிசுகளால் மது, மாது, சூது என பாவகரமான செயல்கள் மூலம் கரைக்கப்படாது என்பது என்ன நிச்சயம்?
கோடி கோடியாக சேர்த்தவரின் பேரன் பிச்சை எடுத்த அவலம்?

கால் அணாவுக்கு படி அரிசி (ரூபாய்க்கு 64 படி) விற்ற அந்தக் காலத்தில், இங்கிலாந்து ராணிக்கு ரூபாய் 2.5 லட்சத்தில் வைர நெக்லஸ் பரிசு அளித்த ஒரு பெரும் கோடீஸ்வரரின் பேரன் அனைத்துச் செல்வங்களையும் இழந்து விட்டு, தனது மகள் திருமணத்திற் காக ஊர் ஊராகப் போய் யாசகம் கேட்டுத் திரிந்த வரலாறும் நமக்குத் தெரியும். வாரிசுகளுக்கென்று அளவுக்கு அதிகமாக அதுவும் வருடா வருடம் ஏழைகளுக்குரிய பங்கான ஜகாத்தைக் கொடுக்காமல், சொத்து சேர்த்து வைத்து விட்டுச் செல்வதன் மூலம் தன்னுடைய வாரிசுகளுக்கு அநீதி இழைப்பவனை விடக் கொடியவன் வேறு யாரும் இருக்க முடியாது என்றே சொல்ல முடியும்.

எனவே இந்தச் செல்வந்தர்கள் கூறும் இப்படிப்பட்ட காரணங்களும் பொய்யான வையே. அப்படியானால் உண்மைக் காரணம் என்ன? ஆம்! அவர்களின் ஆழ்மனதில் ஊரிக் கிடக்கும் அகந்தையும், பெருமையும்தான். மக்கள் தன்னைப் பெரும் செல்வந்தனாக மதிக்க வேண்டும், போற்ற வேண்டும், கூழைக் கும்பிடு போட்டுத் துதிக்க வேண்டும் என்ற மேல் எண்ணமேஅகம்பாவ சிந்தனையே உண்மைக் காரணமாகும். மக்களும் பணம் படைத்தவர்களை கண், காது, மூக்குத் தெரியாமல் மதிக்கத்தான் செய்கிறார்கள்.

பணம் படைத்த பரம அயோக்கியனும் மக்க ளால் மதிக்கப்படுகிறான்!

சாராயம் காய்ச்சி விற்று, விபச்சார விடுதி நடத்தி, வட்டிக்கு மேல் வட்டி வாங்கி பல தில்லுமுல்லுகள் செய்து கோடி கோடியாக, மக்கள் பணத்தை தவறான வழிகளில் ஈட்டி சொத்து சேர்த்துள்ள கயவர்களையும், மக்கள் மதித்துப் போற்றத்தான் செய்கிறார்கள். அதனால்தான் பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே என கவிஞன் பாடினான். எனவே எப்படியும் எப்படிப்பட்ட அநியாயங்கள் செய்தும், கொடூரங்கள் இழைத்தும் பணம் பண்ணினால் போதும், மக்களிடம் மதிப்பு, மரியாதை, கூழைக் கும்பிடு அனைத் தும் கிடைத்து விடும் என்ற அபார நம்பிக்கையில் துணிந்து சொத்து சேர்க்க முற்பட்டு விடுகிறார்கள்.

கோடி சொத்து தேவைக்காக அல்ல!

ஆக மனிதன் மிதமிஞ்சிய சொத்து சேர்ப்பது அவனது நியாயமான அத்தியாவசிய தேவைகளுக்காக அல்ல, வரட்டு கெளரவத்திற்கும், வீண் பெருமைக்கும், மக்களிடம் அகம்பாவத்துடனும், ஆணவத்துடனும் நடந்து கொள்ளத்தான். இறுதியில் இவை அனைத்தும் அவனை நரகில் கொண்டு தான் சேர்க்கும். இதைத்தான் ஏகனான எல்லாம் வல்ல இறைவன்நிச்சயமாக (அப்பண ஆசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள்”. “பின்னும், நீங்கள் அதை (நரகத்தை) உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள்என்று உறுதிபடுத்திக் கூறுகிறான்.

அதுமட்டுமல்ல, அப்படிச் சேர்த்த செல்வங்கள் அனைத்திற்கும் முறையான, நெறி யான, நீதியான விசாரணை உண்டு எனவும் எச்சரிக்கிறான். உலகில் பணப்பித்துப் பிடித்து நாயாய் அலைந்தவன் நாளை அந்த விசாரணையிலிருந்து தப்ப முடியுமா? ஒருபோதும் முடியாது. இறுதியில் இறைவன் கூறுவது போல் நரகமே அதற்குரிய கூலியாகும்.

செல்வந்தர்களின் பேராசைக்கு ஏற்ற  ஃபத்வா!

முஸ்லிம் செல்வந்தர்களின் பேராசைக் கேற்றவாறு, நீங்கள் கோடி கோடியாக சொத்து சேர்த்து வைத்திருந்தாலும், அவற்றிற்கு ஒருமுறை ஏழை பங்குஜகாத் கொடுத்தால் போதும். வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை என்று கூறும் நவீன இமாம்களும் தோன்றி இருக்கிறார்கள். அன்று மன்னர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று, அதன்மூலம் அவர்களிடமிருந்து அன்பளிப்புகளைப் பெறும் தீய நோக்கத்துடன், அன்றைய புரோகித முல்லாக்கள்மன்னர் விபச்சாரம் செய்தால் அதற்கு தண்டனை இல்லைஎன அவர்கள் மனம் போன போக்கில் சட்டம் சொன்னார்கள். அதே போல் இன்றைய கோடீஸ்வரர்களின் அன்பையும், ஆதரவையும் பெற்று, அதன்மூலம் அவர்களிடமிருந்து அன்பளிப்புகளைப் பெறும் தீய நோக்கத்துடன் இன்றைய கால புரோகிதரோநீங்கள் சம்பாதித்து கோடி, கோடியாகச் சேர்த்து வைக்கும் சொத்துக்களுக்கு ஒருமுறை ஜகாத் கொடுத்தால் போதும், வருடா வருடம் கொடுக்க வேண்டியதில்லைஎன அவர் மனம்போன போக்கில் சட்டம் சொல்கிறார்.

வருடா வருடம் ஜகாத், நேரடி ஹதீஃத்!

ஆதாரபூர்வமான ஹதீஃதோ தெள்ளத் தெளிவாகதமது செல்வத்தின் ஜகாத்தை பரிசுத்த எண்ணத்துடனும் உளப்பூர்வமாகவும் வருடா வருடம் கொடுப்பவர் இறைவிசு வாசத்தின் ருசியை சுவைத்துக் கொள்வார்என்கிறது. நூல் : அபூதாவூத், 1349

தமது செல்வங்களுக்கு வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும், ஒருமுறை கொடுத்தால் மட்டும் போதாது என்று தெள்ளத் தெளிவாக நேரடியாகக் கூறும் இந்த ஹதீஃதுக்கு தவ்ஹீத் புரோகித முல்லா கொடுக்கும் சொந்த விளக்கம் (வழிகேடு) என்ன தெரியுமா?

\வருடா வருடம் ஈட்டும் சொத்துக்கு ஜகாத் கொடுக்க வேண்டும் என்று இந்த ஹதீஃத் சொல்கிறதே அல்லாமல் ஜகாத் கொடுத்த சொத்துக்கு மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று சொல்லப்படவில்லையே என்று கூறி செல்வந்தர்களின் பேராசைக்கு எண்ணெய் வார்க்கின்றார். செல்வந் தர்களுக்கும் தங்களின் சொத்தின் மீதுள்ள பேராசையால் இந்த சுயவிளக்கம் சரியாகவே படுகிறது. நடுநிலையோடு சிந்தித்தால் அல்லவா உண்மையை உணரப் போகிறார்கள்.

தமது செல்வம்என்றால் பொருள் என்ன?

ஹதீஃதில் எப்படி வந்திருக்கிறது? “தமது செல்வங்களுக்குஎன்று நேரடியாக தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதிலி ருந்து என்ன தெரிகிறது? சென்ற வருடம் ஜகாத் கொடுத்து விட்ட சொத்து இந்த வருடம் அவரின் செல்வமா? அல்லது வேறு ஒருவருடைய செல்வமா? அவரது செல்வம் தானே? “தமது செல்வங்களுக்குஎன்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுக் கூறியுள்ள செல் வங்களில் சென்ற வருடம் ஜகாத் கொடுத்த செல்வமும் அடங்குமா? அடங்காதா? “அடங்காது, சென்ற வருடம் ஜகாத் கொடுத்த செல்வம் அவரது செல்வம் இல்லைஎன்று கூறும் அடிமுட்டாள் யாரும் இருக்கிறார்களா? அப்படியானால்தமது செல்வங்கள்என்பது பல்லாண்டுகளாக ஜகாத் கொடுத்த பின்னர், சேர்த்து வைத்திருக்கும் அனைத்து செல்வங்களையும் உள்ளடக்கியதே! அப்படி யானால் சென்ற வருடம் ஜகாத் கொடுத்த செல்வம் இந்த வருடம் ஜகாத் கொடுப்பதி லிருந்து எப்படி விடுபட முடியும்?

பொடி வைத்துப் பேசுவது நபி(ஸல்) அவர்களல்லர்!

எதையும் நேரடியாக தெளிவாகச் சந்தேகத்திற்கு இடமில்லாமல் கூறும் நபி(ஸல்) அவர்கள், சென்ற வருடம் ஜகாத் கொடுத்த செல்வங்களுக்கு இந்த வருடம் ஜகாத் இல்லை என்றால் எப்படிச் சொல்லி இருப்பார்கள்? “ஏற்கனவே ஜகாத் கொடுத்த செல்வங்கள் நீங்கலாக, ஏனைய செல்வங் களுக்குஎன்று தெளிவாக நேரடியாகக் கூறி இருப்பார்களே! இந்தப் புரோகித முல்லாக்களைப் போல் பொடி வைத்துப் பேசும் பழக்கம் நபி(ஸல்) அவர்களிடம் ஒருபோதும் இருந்ததில்லையே. எனவே இந்த ஹதீஃதில்தமது செல்வங்கள்என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருப்பதில் ஏற்கனவே ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களும் அடங்கும்.

ஜகாத் வறுமையை ஏற்படுத்துமா?

அல்லாஹ்வை மறந்த இன்னொரு பேச்சையும் இந்த தவ்ஹீத் புரோகித முல்லா எடுத்து வைத்து வருகிறார். “ஒரு பொருளுக்கு வருடா வருடம் ஜகாத் கொடுத்து வந்தால், அது கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து இறுதியில் இல்லாமல் போய்விடுமேஎன்ற ஷைத்தானின் போதனையையும் எடுத்துச் சொல்லி செல்வந்தர்களின் பேராசைக்கு மேலும் வலு வூட்டுகிறார். வறுமை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறார். அதனால் அவர்களும் இந்தப் பேச்சைக் கேட்டவுடன் தங்களின் செல்வங்கள் ஜகாத் கொடுத்தே கரைந்து விடுமோ என்ற அச்சத்தில் ஜகாத் கொடுக்காமல் தடுத்து வைத்துக் கொள்கிறார் கள். ஆனால் ஜகாத் கொடுப்பது கொண்டு செல்வம் பெருகும் என்று அல்லாஹ் வாக்களிக்கிறான்.

மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை, ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ (அது அல்லாஹ் விடம் பெருகும்); அவ்வாறு கொடுப்போர் தாம் இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களா வார்கள்.”   அல்குர்ஆன் : 30:39

செல்வத்தைக் கொடுத்தது யார்?

ஜகாத் விதியாகும் அளவுக்கு இந்தச் செல்வத்தைக் கொடுத்தது யார்? அதே இறைவன் இன்னும் மேலதிகமாகக் கொடுப்பதை யார் தடுக்க முடியும்? அப்படியானால்ஜகாத் கொடுப்பதால் செல்வம் பெருகும்என்ற இறைவனின் வாக்குறுதிக்கு மாறாக ஜகாத் கொடுப்பதால் செல்வம் கரையும்குறையும் என்று பயமுறுத்தி ஜகாத்தைக் கொடுக்காமல் தடுத்து அதன் மூலம் இறைவன் அல்குர்ஆன் 9:34,35ல் கூறியிருப்பது போல் கடும் நரக வேதனையை பெற்றுத்தருபவர்கள் ஷைத் தானின் தோழர்களா? இல்லையா? சிந்தியுங்கள்.

ஷைத்தானின்  துர்போதனைதானே?

மேலும் அவரின் வாதப்படியே செல்வம் குறைந்து கொண்டே வந்தாலும் குறிப்பிட்ட நிஸாபைஅளவை அடைந்து விட்டால் அதன் பின்னர் ஜகாத் கடமை இல்லையே? பின்னர் எப்படி அச்செல்வம் கரைந்து இல்லாமல் போகும்? அப்படியானால் இது ஷைத்தானின் துர்போதனைதானே?

இப்படி ஷைத்தான் செல்வந்தர்களை வழிகெடுப்பான் என்றுதான், தமது செல்வத்தின் ஜகாத்தை பரிசுத்த எண்ணத்துடனும், உளப்பூர்வமாகவும் வருடா வருடம் கொடுப்பவர்அதாவது ஷைத்தானின் வலையில் சிக்காமல் மனம் விரும்பியே வருடா வருடம் ஜகாத் கொடுப்பவர்கள் இறை விசுவாசத்தின் ருசியைச் சுவைக்க முடியும் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த புரோகித முல்லாவின் அபத்தமான ஃபத்வாவை ஏற்று வருடா வருடம் ஜகாத் கொடுக்காமல், பேராசை கொண்டு சொத்து சேர்ப்பவர்கள், இறை விசுவாசத்தின் சுவையை எங்கே ருசிக்கப் போகிறார்கள்?

எத்தனையோ பரம ஏழைகள் கால் வயிறு கஞ்சிக்கும் வழி இல்லாமல் வறுமையில் வாடும்போது, இறைவன் நமக்கு இந்த அளவு வசதி வாய்ப்புகளைத் தந்திருக்கிறானே என்று அவனுக்கு நன்றி செலுத்துவதோடு, அதில் ஒரு சிறிய பகுதியை அந்த ஏழைகளுக்கு வருடா வருடம் கொடுத்து உதவுவதில் என்ன இழப்பு ஏற்பட்டு விடப்போகிறதாக ஷைத்தான் இந்தச் செல்வந்தர்களைப் பயமுறுத்து கிறானோ? அதற்கு இந்த தவ்ஹீத் மவ்லவியும் ஏன்தான் துணை போகிறாரோ?
ஒரு வருடம் கழித்த பின்னர் ஜகாத் கடமையாவது ஏன்?

சேமித்து வைக்கும் செல்வத்திற்கு ஒரு முறை ஜகாத் கொடுத்தால் போதும் என்றால், அதற்காக ஒரு வருடம் ஏன் காத்திருக்க வேண்டும் என்பதையாவது இவர்கள் சிந்திக்க வேண்டாமா? பொருள் கைக்குக் கிடைத்தவுடன் அதற்கு ஜகாத் கொடுத்து விடலாமே? காத்திருக்க வேண்டிய அவசிய மில்லையே? மக்களுக்கு உணவளிக்கும் தானியங்களைப் பயிரிடுகிறவர்கள் அறுவடையானவுடன் ஒரு வருடம் காத்திராமல்அந்த ஒரு வருடத்தில் அந்தத் தானியங்கள் செலவாகி விட்டால் அவற்றிற்கு ஜகாத் கடமை இல்லை என்ற விதி இல்லாமல், அறு வடையானவுடன் உடனடியாக ஜகாத் கொடுக்க வேண்டும். அதுவும் பத்தில் ஒன்று என்று அதிகமாகக் கொடுக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறதே ஏன்?

அதே சமயம் இவர்களின் சுயநலத்திற் காக, பெருமைக்காக சேர்த்து வைக்கும் செல் வத்திற்கு உடனடியாக ஜகாத் கொடுக்காமல், ஒரு வருடம் காத்திருந்து, அந்த ஒரு வருடத் தில் அந்தச் செல்வம் அனைத்தும் செலவழிந்து விட்டால் அதற்கு ஜகாத் இல்லை. செலவழிக் காமல் எஞ்சியிருக்கும் செல்வத்திற்கு மட்டுமே ஜகாத் உண்டு, அதுவும் நாற்பதில் ஒன்று என்று குறைந்த அளவே கொடுக்க வேண்டும் என்றும் அதன் பொருள் என்ன? தானியம் விளைந்தவுடன் ஜகாத் கொடுப்பது போல், செல்வத்தை ஈட்டியவுடன் ஜகாத் கொடுக்காமல், ஒரு வருடத்திற்குள் செல வழிந்து விடுகிறதா என்று காத்திருந்து பார்த்த பின்னர், அப்படி செலவழிக்கப்படாமல், தடுத்து வைக்கப்பட்டிருக்கும் செல்வத்திற்கு மட்டும், அதுவும் பத்தில் ஒன்று ஜகாத் என்றில்லாமல் நாற்பதில் ஒன்று என்று மிகமிகக் குறைந்த அளவு நிர்ணயிக்கப்பட் டிருப்பதில் நோக்கம் என்ன?

பாமரன் விளங்குவதை பண்டிதன் விளங்காதது ஏன்?

நான்காம் வகுப்பு படித்த சாதாராண அறிவு படைத்தவனும் விளங்க முடியுமே? அதாவது செல்வத்தை ஈட்டியதற்காக ஜகாத் கொடுக்கப்படவில்லை, அந்தச் செல்வத்தைச் செலவழிக்காமல் ஒரு வருடத்திற்கும் மேலாக சேமித்து வைத்திருப்பதற்கே ஜகாத் கொடுக்கப்படுகிறது என்ற சாதாரண அறிவு படைத்தவனும் விளங்க முடிந்ததை, இந்த தவ்ஹீத் மவ்லவியும், அவரது சுய கற்பனையை வேத வாக்காக எடுத்து நடக்கும் செல்வந்தர்களும் விளங்க முடியவில்லையா? அப்படியானால் அந்தச் செல்வம் செலவிடப்பாடமல் எத்தனை வருடங்களுக்கு தடுத்து நிறுத்தி வைக்கப்படுகிறதோ அத்தனை வருடங்களுக் கும் வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பது குன்றிலிட்ட தீபம் போல் விளங்குகிறதே? ஏனிந்த தடுமாற்றம்? மாய்மாலம்?

அபத்தமான ஃபத்வா?

எனவே ஒரு பொருளுக்கு ஒரு வருடம் கழித்து ஒருமுறை ஜகாத் கொடுத்தால் போதும், அதன் பின்னர் அந்தப் பொருள் எத்தனை வருடங்கள் செலவிடப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்தாலும், அதற்கு ஜகாத் கடமை இல்லை என்ற தவ்ஹீத் மவ்லவியின் வாதம் எந்த அளவு அறிவீனமானது? அபத்தமானது? என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

வாரிசு அடிப்படையில் வந்த சொத்து, அதில் வரும் சொற்ப வருவாயைக் கொண்டு, அவர்கள் குடும்பம் நடத்துவதே பெரும் பாடாக இருக்கிறது. இந்த நிலையில் வருடா வருடம் ஜகாத் கொடுக்க அவர்கள் எங்கே போவார்கள்? சொத்தை விற்றா ஜகாத் கொடுக்க முடியும்? அப்படி அந்த சொத்தை விற்றுவிட்டால் அவர்கள் நடுத்தெருவில் நிற்க வேண்டி வருமே? சோத்துக்கு லாட்டரி அடிக்க வேண்டி வருமே? இப்படியா மார்க் கச் சட்டம் சொல்லும் என்று சில செல்வந்தர் கள் வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற மார்க்கச் சட்டத்தை புறக்கணிக்க முற்படுகின்றனர்.

விதிவிலக்கு சட்டமாகுமா?

முதலில், விதிவிலக்கான ஒரு நிலையைக் காட்டி அதன்மூலம் மார்க்கச் சட்டத்தை விமர்சிக்கும் போக்கு தவறாகும். இப்படி ஒரு நிலை ஒரு குடும்பத்திற்கு ஏற்பட்டால், அது அவர்களுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் உள்ள ஒரு விவகாரமே அல்லாமல், இதைக் கொண்டு பொது விதியை அதாவது வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற சட்டத்தை மாற்ற முடியாது. இவர்கள் ஒரு விதிவிலக்கான குடும்பத்தைக் காட்டி, வருடா வருடம் ஜகாத் கொடுப்பதை மறுப்பதால், எண்ணற்ற ஏழைகளுக்கு கிடைக்க வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய்கள் தடுக்கப்படுவதால், அந்த ஏழைகள் அத்தனை பெரும் சோத்துக்கு லாட்டரி அடிக்கும் அபாயம் ஏற்படுகிறதே? இது ஏன் அந்த புரோகிதர்கள், செல்வந்தர்களின் சிந்தனை யில் படுவதில்லை?

பணத்தாசை படுத்தும் பாடு!

பணத்தின் மீதுள்ள பேராசையில், தங்களின் மனோ இச்சைக்கு ஏற்றவாறு, இப்படிப் பட்ட வாதங்களை எடுத்து வைக்கிறார்கள் என்பது புரிகிறதா? ஆயிரம், இரண்டாயிரம், அல்லது ஐயாயிரம், பத்தாயிரம் என்று ஜகாத் அளவுக்குரிய சொத்து இருந்தால், அதற்குரிய ஜகாத்தை கொடுக்க முன் வருபவர்கள், அந்த ஜகாத்தே லட்சம், கோடி என்று வரும்போது பதை பதைக்கிறார்கள். 40 கோடி சொத்துள்ளவர் 1 கோடி ஜகாத் கொடுக்க வேண்டும். 100 கோடி சொத்துள்ளவர் 25 கோடி ஜகாத் கொடுக்க வேண்டும். இப்போது இந்த செல் வந்தர்கள் பேராசையால் அப்படியே வாயைப் பிளந்து விடுகின்றார்கள். ஒரு கோடி ஜகாத் கொடுப்பதா? அதற்கு மாதம் ஒரு லட்சம் வருமானம் வரும் ஒரு புதிய சொத்தை வாங்கி விடுவேனே என மனக் கணக்குப் போடுகிறார்கள். ஒரு கோடி ஜகாத் கொடுப்பதை விட அப்படி ஜகாத் கொடுக்காமல் இருக்க ஃபத்வா கொடுக்கும் மவ்லவிக்கு ஓரிரு லட்சம் அன்பளிப்பு கொடுப்பது இந்த செல்வந்தர்களுக்கு எளிதாகத் தெரிகிறது. ஆனால் நாளை மறுமையில் உன்னாலே நான் கெட்டேன், என்னாலே நீ கெட்டாய் என்று அவலக்குரல் எழுப்பி நரகம் புக நேரிடும் என் பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து இருக்க வேண்டும். இல்லை என்றால் நாளை ஆபத்தே!

நரகமே சேரும் இடம்! செல்வந்தர்களே எச்சரிக்கை!!

ஆக செல்வந்தர்கள் கோடி கோடியாக சொத்து சேர்ப்பது தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கோ, அல்லது தங்களின் வாரிசுகள் நடுத்தெருவில் நிற்கக்கூடாது, அவர்களை நல்ல முறையில் விட்டுச் செல்லவேண்டும் என்ற நல்லெண்ணத்துடனோ அல்ல. அந்த வகைகளுக்கு ஒரு சில லட்சங்கள் போதும், கோடி கோடியாக 10, 100 தலைமுறைகளுக்குத் தேவை இல்லை, உண்மையில் இந்த செல்வந்தர்கள் மிதமிஞ்சி கோடி கோடியாக சொத்து சேர்ப்பது இவ்வுலகில் மக்களிடையே பெரும் பணக்காரன், கோடீஸ்வரன் என்ற பெத்தப் பேர் எடுத்தப்பதற்கும், பந்தாவான ஆடம்பரமான, பெருமை மிக்க ஆணவ மிக்க வாழ்க்கை வாழ்வதற்கும், மக்களிடமிருந்து போலி மரியாதைகளையும், கூழைக் கும்பிடுகளையும் எதிர்பார்த்தே என்பதே உண்மையாகும். அதன் காரணமாகவே ஏழைகளின் பங்கான ஏழை வரிஜகாத்தை முறையாகக் கணக்கிட்டுக் கொடுப்பதில் பின்வாங் குகிறார்கள்.

ஏழைகளின் பங்கை மோசடி செய்கிறார்கள். இறுதியில் ஏமாறப் போகிறார்கள். இதை நாம் சொல்லவில்லை. இறைவனின் இறுதி நெறிநூல் அல்குர்ஆன் உங்களுக்கு நேர்வழி காட்டும் என்ற உறுதியான நம்பிக்கையோடு, இந்த எட்டு இறைவாக்குகளையும் மீண்டும், மீண்டும், மீண்டும் படித்துப் படித்து சிந்தித்து சிந்தித்து உங்கள் உள்ளங்களில் பதிய வைப்பது கொண்டு படிப்பினை பெற்று பேராசையை விட்டுத் தொலையுங்கள். ஏழைகளின் பங்கான ஜகாத்தை வருடா வருடம் முழுமையாகக் கணக்கிட்டுக் கொடுத்து நாளை மறுமையின் மிகக் கடுமையான வேதனையை விட்டும் தப்பிக்க முயலுங்கள். (பார்க்க : 9:34,35) முயற்சிப்பவர்களின் முயற்சிகளை அல்லாஹ் ஒருபோதும் விணாக்க மாட்டான். ஏகன் அல்லாஹ் போதுமானவன்.

Previous post:

Next post: