ஃபாஸிஸ்ட்களின் தந்திரம்!

in 2022 பிப்ரவரி

தலையங்கம்!

ஃபாஸிஸ்ட்களின் தந்திரம்!

அல்லாஹ்வின் மார்க்கத்தை ஊதி அணைக்கும் முயற்சியில் இடைவிடாது இணைந்து உழைக்கும் பல்வேறு உலக மற்றும் அமைப்பு தலைவர்களும், இஸ்லாமியர் மீது மிகுந்த வெறுப்பு கொண்டு அவர்களை இழிவுபடுத்தி அழித்தொழிக்க நினைக்கும் அவர்களின் தொண்டர்களான கைக்கூலிகளும், மாதர்களுக்கான அநீதிக்கு எதிராகப் போராடும் பெண் விடுதலை கட்சி சமூக ஆர்வலர் சகோதரி சபரிமாலா அவர்கள் சமீபத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்பது தெரிந்து அவர் மீது அவதூறு பரப்பி அவரை விமர்சனம் செய்வதை நாம் சமூக ஊடகங்கள் வாயிலாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

நாங்கள் நடுநிலைவாதிகள், பகுத்தறிவு பெற்றவர்கள் என்று தாங்களே அடையாளப்படுத்திக் கொள்ளும் பெரியார்வாதிகளான சகோதரர் ஜீவா மற்றும் சகோதரி சுந்தரவள்ளி போன்றவர்கள் சபரிமாலாவை நோக்கி பிழைப்பதற்கு இதுதான் வழியா? என்றும், யார் Assignment ஆக கொடுத்து அனுப்பியது? என்றும் பல்வேறு விமர்சனங்களை அவர் மீது வைத்திருக்கிறார்கள்.

இந்த விமர்சனங்களுக்கு சகோதரர்  ஷம்ஸுதீன் காசிமி அவர்கள் இஸ்லாமியராக அளித்த பதிலை இங்கே தந்திருக்கிறோம்.

முதலில் விமர்சனத்தில் இருக்கும் தவறுகளை பார்ப்போம் :

சங்கி என்றாலே BJP என்ற RSS அமைப்பை சார்ந்தவர்களையும், அக்கொள்கைகளுடைய ஃபாஸிஸ்ட்களையும், பாஜகவினரையும்தான் குறிக்கும். ஆனால் பெரும்பாலான மக்களால் இழி சொல்லாக பயன்படுத்தப்படும் அந்த வார்த்தையை அழகாக மடைமாற்றி தன் எதிரிகளுக்கு பயன்படுத்தியிருப்பது அவர்கள் தந்திரம். அது ஃபாஸிஸ்ட்களின் தனித் திறமை.

பெரியாரிஸ்ட்களை கருப்பு சங்கி என்பதும் இஸ்லாத்தை ஏற்ற சகோதரி சபரிமாலாவை பச்சை சங்கி என்பதும் தவறான சொல்லாடல். சிந்தனையாளர்களான ஜீவாவும், சகோதரி சுந்தரவள்ளி அவர்களும் இந்த சூழ்ச்சியில் சிக்குண்டார்கள் என்பது வருத்தத்திற்குரியது. அதை அவர்கள் திருத்திக் கொள்ளவேண்டும்.

இப்போது “விமர்சனத்திற்கு வருவோம்” சகோதரர் ஜீவா கேட்டது போல அவரை நோக்கி “உங்களுக்கு இஸ்லாத்தை அடிக்கடி பேசு பொருளாக்கி இஸ்லாமியர்களை விமர்சனம் செய்வதை யார் Assignment ஆக கொடுத்து அனுப்பியது?’ என எங்களாலும் கேள்வி கேட்க முடியும். ஆனால் நாங்கள் அதை செய்ய மாட்டோம்.

சகோதரி சுந்தரவள்ளி கேட்டது போல் “பிழைப்பதற்கு ஆயிரம் வழிகள் இருக்கின்றன. இருந்தாலும் சில சமயங்களில் இஸ்லாத்திற்கு ஆதரவாக பேசுவது போல, ஃபாஸிஸ்ட்களையும், பாஜகவினரையும் எதிர்த்து பேசித்தான் பிழைப்பு நடத்த வேண்டுமா?” என்று கேட்க முடியும். ஆனால் நாங்கள் அதை செய்ய மாட்டோம். இஸ்லாமிய மார்க்கம் பிறரைப் பற்றி அவதூறு பரப்பவோ, பிறரது மனதைக் காயப்படுத்தவோ எங்களுக்கு கட்டளை இடவில்லை.

நாங்கள் சகோதரர் ஜீவா, சகோதரி சுந்தரவள்ளி அவர்கள் மற்றும் அவர்களைப் போன்றவர்கள், சகோதரி சபரிமாலாவை போன்று தனக்கு கிடைத்த அறிவைப் பயன்படுத்தாததால், “எது சரி? எது உண்மை?’ என்ற ஞானம் கிடைக்கப் பெறாமல், அறியாமை எனும் நிழலில் நிற்கிறார்களே என்று வருந்துகிறோம்.

தான் அறியாமையில்தான் இருக்கிறோம் என்பதை கூட உணரமுடியாத நிலைதான் மிக மோசமான அறியாமை. விமர்சித்தவர்கள் அப்படிப்பட்ட நிலையில் தான் இருக்கிறார்கள்.

எப்படி சகோதரி சபரிமாலா அவர்கள் நடுநிலையாக, திறந்த மனதுடன் தான் தேடிய பெண் புரட்சியும், பெண் விடுதலையும், பெண் பாதுகாப்பும் இங்கே தான் இருக்கிறது என்ற உண்மையை உணர்ந்தவுடன் இஸ்லாத்தை பகிரங்கமாக ஏற்றுக் கொண்டார்களோ, அதேபோன்ற தேடலுடன் சகோதரி சபரிமாலா பயணித்த அதே பாதையில் காய்தல் உவத்தலின்றி பயணித்தால், சகோதரி சபரிமாலாவிற்கு கிடைத்த ஒரே நிரந்தர தீர்வு அவர்களையும் ஆட்கொள்ளும் (இறைவன் நாடினால்) என்பதில் அணுவளவும் ஐயமில்லை.

தம் வாய்களைக் கொண்டேஅல்லாஹ்வின் ஒளியை (ஊதி)அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள். ஆனால் நிராகரிப்பாளர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்கமாட்டான். (அல்குர்ஆன் 9:32)

Previous post:

Next post: