இணை வைக்கும் முஸ்லிம்கள்!

in 2022 பிப்ரவரி

இணை வைக்கும் முஸ்லிம்கள்!

(தொடர் – 2)

அபூ ஹனிபா,  புளியங்குடி

கடந்த பதிவில் இணை வைப்பு என்றால் என்ன? இணை வைத்தால் என்ன நடக்கும்? என்பதை பார்த்தோம். இன்றைய பதிவில் இணை வைத்த முதல் முஸ்லிம் யார்? என்பதை பார்ப்போம்.

“இணை வைத்த  முதல் முஸ்லிம்” :

ஆதம் நபியை படைப்பதற்கு முன்னால் அல்லாஹ் வானவர்களை படைத்திருந்தான். வானவர்கள் அல்லாஹ்வுக்கு முற்றிலும் கட்டுப்பட்ட முஸ்லிம்களாகவே இருந்தார்கள். (அல்குர்ஆன் 7:34) ஆதம் நபியின் மூலம் அல்லாஹ் வானவர்களை சோதிக்க நாடினான். ஆதம் நபியை படைத்தான். பின்னர் அல்லாஹ் ஆதமுக்கு ஸூஜூது செய்யுமாறு வானவர்களுக்குக் கட்டளையிட்டான். இப்லீஸ்ஸைத் தவிர மற்றவர்கள் ஸூஜூது செய்தார்கள். இப்லீஸ் மறுத்தான்; ஆணவம் கொண்டான்; நிராகரிப்பாளர்களில் ஒருவனாக ஆகிவிட்டான்.  படிக்க அல்குர்ஆன் 7:12,14,16,34, 15:33,36, 39, 17:62, 18:50, 34:20, 38:76 etc.,

அல்லாஹ் ஒன்றை கட்டளையிட்டிருக்க, அதற்கு கட்டுப்படாமல் மாறு செய்ததின் காரணமாக ஜின் இனத்தை சார்ந்த இப்லீஸ் முஸ்லிம் என்ற நிலையில் இருந்து காஃபிராக மாறினான். அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு கட்டுப்படுதல் என்பது எவ்வளவு முக்கியம் என்பது இப்போது புரிகிறதா? மேலும் களிமண்ணால் படைக்கப்பட்ட ஒருவருக்கா? நான் ஸூஜூது செய்வது? நான் நெருப்பினால் படைக்கப்பட்டவன்; அவரோ களிமண்ணால் படைக்கப்பட்டவர் என்று தன்னுடைய செயலை நியாயப்படுத்தினான். மேலும் ஆணவப் பேச்சாலும், பெருமை அடித்ததின் காரணமாகவும், அல்லாஹ்வின் வல்லமையை கண்கூடாக பார்த்தபோதும் கடைசி வரைக்கும் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கோரவில்லை என்பதினாலும் இப்லீஸ் சபிக்கப்பட்டான், நிரந்தர நரகவாதியாக ஆனான்.

இப்லீஸின் செயலைப் பின்பற்றித் தான் மனிதர்களில் பலரும் முன்னர் அல்லாஹ்விற்கு இணைகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள். சத்தியம் இன்னது என்று தெளிவாக தெரிந்த பின்னரும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை கண்டபோதும் ஆணவம் மற்றும் பொறாமையின் காரணமாக அல்லாஹ்விற்கு மாறு செய்திருக்கிறார்கள். இன்னும் இறைத் தூதர்களை பொய்ப்பித்திருக்கிறார்கள். தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கல்வி செல்வம் போன்றவற்றை காரணம் காட்டி அதைவிட குறைந்த நிலையில் இருக்கும் ஒருவர் எங்களுக்கு எப்படி தூதராக வரமுடியும் என்று தூதர்களை வசைபாடினார்கள், ஆணவம் கொண்டார்கள், பெருமை அடித்தார்கள், தூதர்களின் சொல்லுக்கு மாறு செய்தார்கள், அதனால் தான் அந்த மக்கள் இப்லீஸைப் போன்று சபிக்கப்பட்டார்கள், கூண்டோடு அழிக்கப்பட்டார்கள்.

இன்றைக்கும் அதே நிலையில்தான் மனிதர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோம் என்று சொல்லக்கூடிய முஸ்லிம்கள் கூட அப்படித்தான் இருக்கிறார்கள். ஆணவம் மற்றும் பெருமையின் காரணமாக சத்தியத்தை ஏற்க மறுக்கிறார்கள். அரபி படிக்காத ஒருவர் சத்தியத்தை குர்ஆன், ஹதீத் ஆதாரத்தோடு எடுத்துச் சொன்னால் ஏற்பது இல்லை? ஆனால் ஒரு ஆலிம் அரபி படித்த பண்டிதர் எந்த ஆதாரமும் இல்லாமல் சுயவிளக்கம் கொடுத்தால் ஏற்கிறார்கள். கேட்டால் உனக்கு அரபி தெரியுமா? எங்களை விட நீ அரபி தெரிந்தவனா? மார்க்கத்தை அரபியில் கற்றவனா? நீ எப்படி மார்க்கத்தை போதிக்கலாம்? என்று அரபி படித்த ஆணவத்தின் காரணமாக சத்தியத்தை ஏற்க மறுக்கிறார்கள். அல்லாஹ் கொடுத்த கல்வி ஞானத்தின் காரணமாக அதைவிட குறைந்த கல்வியை பெற்ற ஒருவர் சத்தியத்தை ஆதாரத்தோடு எடுத்து வைக்கும் போது இப்லீஸின் செயலை பின்பற்றி அல் லாஹ்விற்கு மாறு செய்கிறார்கள். குறிப் பாக ஆலிம்கள் என்று சொல்லக்கூடிய அரபி படித்த பண்டிதர்களில் பெரும் பான்மையானவர்கள் இதில் அதி தீவிரமாக இருக்கிறார்கள். இப்லீஸிடம் முஸ்லிம்களுக்கு படிப்பினை இருக்கிறது.

இணை (ஷிர்க்)  வைத்த  ஆதம் நபி :

வானவர்களை சோதித்த அல்லாஹ் ஆதம் நபியையும், ஹவ்வா(அலை) அவர்களையும் சோதிக்க நாடினான். முதலில் அல்லாஹ் இப்லீஸை பற்றி ஆதம் நபிக்கு எச்சரிக்கை செய்தான். (இன்றைக்கு இறை கட்டளையான அல்குர்ஆன் புத்தகமாக இருப்பது போன்று அன்றைக்கு நல்லது கெட்டதை நேரடியாக அல்லாஹ் உபதேசித்தான்) பின்னர் சொர்க்கத்தில் உள்ள ஒரு மரத்தின் கனியை தவிர அனைத்தையும் அனுபவிக்குமாறு கட்டளையிட்டான். இருந்தபோதும் ஷைத்தான் அவர்களை வழிகெடுத்தான். அல்லாஹ் தடுத்த கனியை இப்லீஸ் உண்ணக் கட்டளையிட்டான். அல்லாஹ் தடுத்ததற்கு காரணத்தை சுய விளக்கம் கொடுத்தான். அந்த கனியை நீங்கள் இருவரும் உண்டால் மலக்குகள் ஆகிவிடுவீர்கள் அல்லது இந்த சொர்க்கத்தில் என்றென்றும் தங்கிவிடுவீர்கள் என்பதற்காகவே அல்லாஹ் உங்களை தடுத்திருக்கிறான் என்று கூறினான். (அல்குர்ஆன் 7:20) தன்னை நல்லுபதேசம் செய்பவனாகவே காட்டினான்.

அதனால் மனதில் ஊசலாட்டம் ஏற்பட்டு அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்து அல்லாஹ் தடுத்த கனியை உண்டார்கள். ஆதம் நபி அவர்கள் அல்லாஹ்விற்கு மாறு செய்தார்கள். அதனால், அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானார்கள். தன்னுடைய தவறை உணர்ந்த ஆதம் நபி அவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரினார்கள். அல்லாஹ் அவர்கள் செய்த தவறை மன்னித்தான். இருந்தபோதிலும் அல்லாஹ் ஆதம் நபியை சோதிக்க நாடினான். இந்த பூமியில் வசிக்க செய்தான். சோதனைகளை கொடுத்தான், நேர்வழிகாட்டியான உபதேசத்தையும் கொடுத்தான். அதனை பின்பற்றி ஆதம்(அலை) அவர்கள் இந்த உலக வாழ்க்கையில் வெற்றி பெற்றார்கள்.

அல்லாஹ் ஒன்றை கட்டளையிட்டிருக்க அதனை புறக்கணித்துவிட்டு இப்லீஸின் சொல்லை கேட்டு தவறு செய்த ஆதம் நபி அவர்கள் அல்லாஹ்விற்கு இணையாக இப்லீஸை ஆக்கினார்கள். இன்றைக்கு ஆதம் நபியின் வாரிசுகளான நம்மில் பெரும் பான்மை மனிதர்கள் குறிப்பாக பெரும்பான்மை முஸ்லிம்கள், அதே செயலைத் தான் செய்து கொண்டு இருக்கிறார்கள். தலைவர்கள், ஆலிம்கள், உலமாக்கள் கொடுக்கும் சுயவிளக்கத்தை நம்பி படைத்த இறைவனான அல்லாஹ்விற்கு இணைகளை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இப்லீஸின் ஆணவப் போக்கை பின்பற்றக்கூடிய பெரும்பான்மை முஸ்லிம்கள் குறிப்பாக ஆலிம்கள், உலமாக்கள், தலைவர்கள் சத்தியம் இன்னது என்று தெளிவாக தெரிந்த பின்னரும் தங்களின் ஆணவம் மற்றும் பொறாமையின் காரணமாக சத்தியத்தை ஏற்பதை விட்டும் விலகி வழிகேட்டை நேர்வழியாக ஆக்கிக் கொள்கிறார்கள்.

இன்றைக்கு முஸ்லிம்கள் என்ன என்ன இணைவைக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதை இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் பார்ப்போம்.

Previous post:

Next post: