ஈமான் கொண்டவர்களே! ஈமான் கொள்ளுங்கள்!!

in 2022 பிப்ரவரி

 ஈமான் கொண்டவர்களே! ஈமான் கொள்ளுங்கள்!!

 முஹம்மத் ரஃபி

நாம் பாலர் பாட இஸ்லாமிய கல்வியில் ஈமான் என்றால் என்ன? என்ற வினா தொடுத்து சொல்லித்தரப்பட்ட “ஈமான்’ பற்றிய பாடத்தில் அதற்கு விடையாக,

 1. அல்லாஹ்வை நம்புவது,
  2.   அவனது மலக்குமார்களை நம்புவது,
  3.   அவனது இறைநெறி நூல்களை நம்புவது,
  4.   அவனது தூதர்களை நம்புவது,
  5.   இறுதி நாளை நம்புவது,
  6.   விதியை நன்மை, தீமை பற்றி நம்புவது

என்ற ஆறு அம்சங்களையும் படித்து பசுமரத்து ஆணி போல் நம் உள்ளங்களில் பதியச் செய்திருப்போம். நாம் இங்கே இந்த ஆறு அம்சங்களை உள்ளடக்கிய ஈமானின் படித்தரங்களை பற்றி குர்ஆன், சுன்னாவின் வழியில் காணப் போகிறோம்.

ஈமான் என்ற சொல்லுக்கு “உண்மை என நம்புதல்’ என அகராதியில் பொருள் காணப்படுகிறது. ஆனால் “உள்ளத்தால் உறுதி கொண்டு நாவால் விண்ணப்பித்து உடலுறுப்புகளால் செயல் வடிவம் பெறுவதே ஈமான்’ என பெரும்பான்மையான அறிஞர்கள் கூறுகிறார்கள்.

எனவே சொல் மற்றும் செயல்களை பொறுத்து ஈமான் கூடலாம் அல்லது குறையலாம்; அதாவது ஒருவரது ஈமான் அவர் புரியும் நற்செயல்களால் அதிகமாகும். அதே போன்று நற்செயல்கள் குறைவதால் ஈமானும் குறையும். பின்வரும் வசனங்கள் இதற்கு ஆதாரமாக அறிஞர்களால் காட்டப்படுகிறது.

“தமது ஈமானுடன் அவர்கள் (மேலும்) அதிகமாக்குவதற்காக’.  அல்குர்ஆன் 48:4

“ஈமான் கொண்டவர்கள் தமது ஈமானை (மேலும்) அதிகமாக்கிக் கொள்வதற்காக’. அல்குர்ஆன் 74:31

“அது அவர்களின் ஈமானையும் அர்ப்பணிப்பையும் தவிர வேறெதையும் அதிக மாக்கவில்லை’. அல்குர்ஆன் 33:22   பார்க்க. தப்ஸீர் இப்னு கஸீர் அல்பகரா

இன்னும் நபி(ஸல்) அவர்களின் சொல்படி “நல்லொழுக்கமும், நம்பிக்கை யும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவைகளாகும்; ஒன்றை விட்டுவிடுபவன் அடுத்ததையும் விட்டுவிட வேண்டியது வரும். மேலும் அல்குர்ஆனில் அதிகமான இடங்களில் ஈமானை பற்றிச் சொல்லி தொடர்ந்தாற் போல் நற்செயல்களை குறிப்பிடுவதையும் காணலாம்.

“இன்னல்லதீன ஆமனு வ அமிலுஸ்ஸாலி ஹாத்தி…”

ஆக ஒரு முஃமின் தனது ஈமானை அதிகமாக்க, தக்கவைத்துக் கொள்ள நற்செயல்களில் அதிக ஆர்வம் கொண்டவனாகவும் அதில் ஈடுபாடு காட்டக் கூடியவனாகவும் இருக்க வேண்டும். இதே பார்வையை நாம் எதிர் திசை நோக்கி பார்ப்போமேயானால், அதாவது ஒரு முஃமின் தனது நற்செயல்களை அதிகமாக்குவதால் ஈமானை அதிகமாக்குகிறான் என்றால், பிரிதொரு (முஃமின்) தனது தீமையான செயல்களால் தனது ஈமானை எந்நிலையில் வைத்திருப்பான்?

இறைவன் விழித்து கூறுவதைக் கேளுங்கள் :

“நியாயத் தீர்ப்பை பொய்யாக்குகின்ற ஒருவனை நீர் பார்த்தீரா? அவன் அநாதையை விரட்டுகிறவன்.”   குர்ஆன் 107:1,2

இவ்வுலகியல் பார்வையில் அநாதை என்பவன் ஆதரவற்று இருப்பவன் ஆவான். ஆனால் முஃமினின் பார்வையில் ஆதரவற்றவர்களுக்கெல்லாம் ஆதரவாளனாய் அந்த ரப்புல் ஆலமீனான அல்லாஹ் இருக்கின்றான்; அவர்களை குறித்து நியாயத் தீர்ப்பு நாளில் நாம் பதில் சொல்ல வேண்டி வரும் என்ற அச்சத்தில் கண்டிப்பாய் இவ்வுலகில் இன்னும் சர்வசாதாரணமான இவ்வாறான தீமைகளில் ஈடுபட்டு “ஈமான்’ கொள்ள வேண்டிய நியாயத் தீர்ப்பு நாளை பொய்ப்பிக்க மாட்டான். இதனையும் மீறி இவ்வாறான தீமைகளில் ஈடுபடும் ஒரு முஃமினிடம் நியாயத் தீர்ப்பு நாள் குறித்த வி­யத்தில் அதன் மீதான ஈமானின் நிலை!? பொய்ப்பிப்பதை தவிர என்னவாக இருக்கும்?

ஒருவன் தனது தீய செயல்களால் ஈமான் கொள்ள வேண்டியதை பொய்ப்பிப்பது போல், ஒரு முஃமின் தீய செயல்களில் ஈடுபடும்பொழுது அவனது ஈமான் வெளியேறி விடுகின்றது என நபி(ஸல்) அவர்கள் எச்சரிக்கின்றார்கள்.

“ஒரு நபர் விபச்சாரத்தில் ஈடுபடும் பொழுது இறை நம்பிக்கை அவரிடமிருந்து வெளியேறி அவருடைய தலைக்கு மேல் குடை போன்று நின்று விடுகின்றது; அவன் அந்த வேலையைச் செய்து முடித்ததும் இறை நம்பிக்கையும் மீண்டும் அவனிடம் திரும்புகிறது”. அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி), நூல்: அபூதாவூத்.

ஈமான் கொண்ட ஒருவன் தீமையில் ஈடுபடும் பொழுது, ஈமான் அவனிடம் குடியிறாது எனும் பொழுது, தன்னை ஒரு முஃமின் என அறிவித்து கொண்டு சர்வசதா காலமும் இதுபோன்ற தீமையில் உழன்று கொண்டிருக்கும் ஒருவனிடம் ஈமான் எங்கே குடியிருக்கும்!? அவனை அந்நிலையில் (அதாவது ஈமான் வெளியேறி இருக்கும் தீமையில் ஈடுபடும் காலம்) மரணம் தழுவுமேயானால் அவன் ஈமான் கொண்ட நிலையில் மரணம் அடைந்தான் எனச் சொல்ல இயலுமா? நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது.

யா அல்லாஹ்! எங்களை ஈமான் கொண்ட முஸ்லிமாக மரணிக்கச் செய்வாயாக.

ஈமான் பற்றி நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றும் இதுவரை நோக்கிய பார்வையில் இருந்து வேறுபட்ட கோணத்தில் பார்க்க வேண்டிய ஒரு ஹதீதை காண்போம். நபி(ஸல்) அவர்கள் கூற தாம் கேட்டதாக அபூ ஸயீத் அல்குத்ரீ(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

“உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அதை தமது கரத்தால் தடுக்கட்டும்; முடியாவிட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்); அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (வெறுக்கட்டும்) இந்த இறுதி நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமான நிலையாகும்”.   நூல்: முஸ்லிம்

ஆக நாம் மேற்குறிப்பிட்ட ஹதீதின்படி தீமையை வெறுத்தாலும் அது நம் ஈமானின் பலவீனமான நிலை எனும் போது, தன்னை ஒரு முஃமின் என எண்ணிக் கொண்டு தீமையில் ஈடுபடும் ஒருவனின் ஈமானின் நிலை எத்தரத்தில் இருக்கும்? தீமையை கரங்களாலும், நாவாலும், எதிர்க்க இயலாமல் மனதால் வெறுத்து நிற்கும் ஒரு முஃமினின் ஈமானே இறுதி நிலையில் உள்ள ஈமான் என்றிருக்க, அத்தீமைகளில் ஈடுபடுபவன் எதிர் நிலையில் ஈமான் இழந்த நிலையில் அல்லவா நிற்பான். அல்லாஹ் நம்மை காப்பானாக.

புற அழகை மதிப்பிட கண்ணாடியை பயன்படுத்துவது போல், நம் அகத்தில் உள்ள ஈமானை நபி(ஸல்) அவர்களின் அமுத மொழியால் அளவிடலாம். நபி(ஸல்) அவர்களிடம் ஒரு தோழர் வந்து கேட்கின்றார். “ஈமான் என்றால் என்ன?” என்று அப்பொழுது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு நற்செயல் உனக்கு மகிழ்ச்சி அளித்தால், தீய செயல் உன்னை துக்கத்தில் ஆழ்த்தினால் அப்பொழுது நீ ஈமான் உடையவன் ஆவாய்”. அறிவிப்பவர்: அபூ உமாமா(ரழி), நூல்கள்: அஹ்மத்.

ஒரு மனிதன் என்றும் துன்பத்தை வரவழைக்க கூடியவனாகவோ விரும்பக் கூடிய வனாகவோ இருக்க மாட்டான். அவன் என்றும் இன்பத்தையும், மகிழ்ச்சி யையுமே விரும்புவான். அதிலும் ஈமான் கொண்ட நாம் இம்மை, மறுமை வாழ்க்கையை நற்செயல்களால் மகிழ்ச்சிகரமானதாகவும், அலங்காரமானதாகவும் ஆக்க வேண்டும். தீய செயல்களில் ஈடுபட்டு துக்கத்தில் ஆழ்வதிலிருந்தும், நாளை மறுமையில் கை சேதப்படக் கூடியவர்களாக ஆவதிலிருந்தும் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதுவே ஈமானிற்குரிய இலக்கணமாகவும் இருக்கும்.

“நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு, பிறகு நிராகரித்து பிறகு ஈமான் கொண்டு, பிறகு நிராகரித்து, பிறகும் குஃப்ரை அதிகப்படுத்திக் கொண்டார்களோ, அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் மன்னிக்கின்றவனாகவும் இல்லை; இன்னும் நேர்வழியில் அவர்களை வழிநடத்துபவனாகவும் இல்லை”. அல்குர்ஆன் 4:137

“(யா அல்லாஹ்!) எங்களை நீ நேர்வழியில் நடத்துவாயாக! எவர்களின் மீது நீ அருள் புரிந்தாயோ அத்தகையோரின் வழியில்”.

Previous post:

Next post: