நல்லது இருந்தால் அதனை எடுத்துக்கொள்ளலாம்!

in 2022 பிப்ரவரி

நல்லது இருந்தால் அதனை எடுத்துக்கொள்ளலாம்!

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர்,   இலங்கை.

ஜனவரி 2022 தொடர்ச்சி…

“அல்லாஹ்தான் அனைத்துப் பொருட் களையும் படைத்தவன் (அவற்றுக்குப் பெயரிட்டவன்) ஆவான்”

அல்லாஹ்(தான்) அனைத்துப் பொருட்களையும் படைத்தவன் (அவற்றுக்குப் பெயரிட்டவன்) ஆவான். அவனே அனைத்துப் பொருட்களுக்கும் பொறுப்பாளனும் ஆவான். (39:62) என்று சொல்லி விட்டு, வானங்கள் மற்றும் பூமியின் (அனைத்துக் கருவூலங்களின்) திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. (39:63) என்று சொல்கின்றான். மேலும் (அவற்றின்) அனைத்துப் பெயர்களையும் (இறைவன் மனிதர்களின் மூல பிதாவான) ஆதமுக்குக் கற்றுக்கொடுத்தான் (2:102) என்று சொன்ன அல்லாஹ்தான், மேலே உள்ள 63ஆவது வசனத்தில் “வானங்கள் மற்றும் பூமியின் “திறவு கோல்கள்” (மகாலீத்) அவனிடமே உள்ளன என்று சொல்கின்றான்.

இங்கே “திறவுகோல்கள்” என்பதைக் குறிக்க “மகாலீத்” எனும் சொல் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது. இச்சொல்லுக்குப் பாரசீக மொழியில் “திறவுகோல்கள்” என்றுபொருள் என முஜாஹித்(ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (தஃப்சீர் இப்னு கஸீர் 7:952,953) ஆக எல்லாவற்றையும் அறிந்தோனாகிய அல்லாஹ் இங்கே குர்ஆனில் பாரசீகர்களின் மொழி வழக்கிலுள்ள “மகா லீத்” – திறவுகோல்கள் எனும் சொல்லையே மூலத்தில் கையாண்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் சொற்களை உபதேசங்களாகச் செவியேற்று அவற்றில் சிறந்ததையே பின்பற்றுவார்கள் :

(நபியே!) என் அடியார்களுக்கு நற்செய்தி கூறுவீராக. அவர்கள் உபதேசங்களைச் செவியுற்று அவற்றில் சிறந்ததையே பின்பற்றுவார்கள் அவர்களையே அல்லாஹ் நல்வழியில் செலுத்தினான் அவர்களே அறிவுடையோர் ஆவர் (39:17,18) என்றும் மற்றுமொரு வசனத்தில் “எனவே அவற்றைப் பலமாகப் பற்றிப்பிடித்துக் கொள்வீராக; அவற்றிலுள்ள சிறந்த கருத்துகளை எடுத்துக் கொள்ளுமாறு உம்முடைய சமுதாயத்தாருக்குக் கட்டளையிடுவீராக” (7:145) என்ற இந்த இறைக் கட்டளைப்படி ஒருவரின் உபதேசத்தைக் கேட்டு அல்லது ஒருவரின் எழுத்தைப் பார்த்து அதில் அழகானதை அதாவது குர்ஆன் ஹதீஃதுக்குப் பொருத்தமான வற்றை, முரணில்லாதவற்றை, எடுத்துக் கொள்ளலாம் என்றும் மற்றுமொரு வசனத்தில்,

“குற்றம் புரியும் பாவியயாருவன் கொண்டு வரும் செய்தி உண்மையானால் அதனையும் எடுக்கவேண்டும் என்றும்”

இறை நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் (ஒருவன்) உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கிழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள் (49:6) என்று சொல்வதற்கு ஏற்பவே நபி (ஸல்) அவர்களும், நல்லது எங்கே இருந்தாலும், எவரிடத்தில் இருந்தாலும், தீர விசாரித்து அவற்றை எடுத்து நடக்கும் பழக்கமுடையவர்களாக இருந்துள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் “இரு குழுக்களுக்கிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான சிறந்த ஒப்பந்தத்திற்கு முன்மாதிரியாகக் குறை´யர்களின் சம்பவத்தை எடுத்துக்கொண்டார்கள்”

நபித்துவத்திற்கு முன்னர் போர் செய்வதற்குத் தடை செய்யப்பட்ட புனிதமான மாதத்தில் “உக்காள்” என்னும் சந்தையில் “குறை´யரும்” “அய்லான்’ குலத்தவரும் மோதிக்கொண்டு போர் செய்த பிறகு அதனை வெறுத்த குறை´யர்கள் பச்சாபதாபப்பட்டு “அப்துல்லாஹ் இப்னு ஜத்ஆன் அத்தைம” என்பவரது வீட்டில் போர் நிறுத்த சிறப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டிருந்தார்கள். அவ்வுடன்படிக்கையில் தாம் கலந்து கொண்டது பற்றி நபித்துவம் கிடைத்த பிறகும் அதனை ஞாபகப்படுத்திப் புகழ்ந்து கூறும்போது,

“அப்துல்லாஹ் இப்னு ஜத்ஆன்” என்பவரது வீட்டில் நடந்த யுத்த நிறுத்த சமாதானத்துக்கான ஒப்பந்தத்தில் நான் கலந்து கொண்டேன். அது எனக்கு செந்நிற அதி உயர்ரக ஒட்டகைகள் கிடைப்பதை விட அந்த ஒப்பந்தத்தில் கலந்து கொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று சொன்னவர்கள் “இன்றைய இஸ்லாமிய வருகைக்குப் பின்னரும் எனக்கு அது போன்ற சிறப்பு சமாதான ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டால் அதனை நான் ஒப்புக்கொள்வேன் என்று இறைதூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு ஹிஷாம், ரஹூக் அல் மக்தூம் 80)

மேலும், அறியாமைக் காலத்தில் நபி (ஸல்) அவர்களின் ஆறு தலைமுறைகளுக்கு முன்னர் வந்த அவர்களது கொள்ளுப் பாட்டனார் “குஸய்” என்பவரால் கஃபா வின்வளாகத்தில் வடக்குப் பகுதியில் புனித கஃபாவை முன்னோக்கியதாக வாசலை வைத்து “தாருல் நத்வா” என்னும் உயர் சபையை நிறுவி அதற்கு தலைவராகவும் விளங்கினார். எனினும் இஸ்லாத்தின் வருகைக்குப் பிறகு மனிதர்களிலே ஏற்றத் தாழ்வுக்குத் துணை போகும் அந்த உயர் சமுதாயக் கட்டமைப்பை வேரோடும் வேரடி மண்ணோடும் இறை தூதர்(ஸல்) அவர்கள் இல்லாமலாக்கினார்கள்.

ஆனாலும், அறியாமைக்காலத்தில் அந்தத் “தாருந் நத்வா’வில் செய்துகொண்ட சில சிறந்த ஒப்பந்தங்களை இஸ்லாம் வலுப்படுத்தாமல் இருக்காது. எனக்கு விலை உயர்ந்த அதி உயர்ரக சிவப்பு ஒட்டகங்கள் கிடைத்தாலும் அந்த சிறப்பு ஒப்பந்தங்களை உடைப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்காது என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு அப்பாஸ் (ரழி), சயீத் பின் ஜுபைர்(ரழி) புகாரி: 2294, 6083, முஸ்லிம், அபூதாவூத், முஸ்னத் அஹ்மத், ரஹூக் 42,43, தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், இப்னு கஸீர் 2:500, 4:79,80)

அதனையே அறியாமைக் காலத்தில் நடைமுறைக்கு வந்த நல்ல விசயங்களுக்கான நட்புறவு ஒப்பந்தங்கள் இஸ்லாத்திற்குப் பிறகும் இன்னும் கூடுதல் பலம் பெறும் என்று நபி(ஸல்) அவர்கள் உறுதிப்படுத்தினார்கள். (ஜுபைர் பின் முத்இம்(ரழி) முஸ்லிம் 4952, முஸ்னத் அஹ்மத், பத்ஹுல் பாரீ உம்ததுல் காரீ, தஃப்ஸீர் இப்னு கஸீர் : 5:106)

“புனித கஃபாவிற்குப் புதிய திரை போடுவதிலும் சுன்னத்தான நோன்பு நோற்பதிலும் யூதர்களினதும் குறைஷியர்களினதும் வழிமுறையை அங்கீகரித்த நபி(ஸல்) அவர்கள்”
ரமழான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷிரா (முஹர்ரம் 10ம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அதுதான் அறியாமைக் காலத்தில் குறை´யர்களும், யூதர்களும், நோன்பு நோற்கின்ற நாளாக இருந்து வந்தது. அன்று தான் அவர்கள் “கஃபாவுக்குப்’ புதிய திரை போடப்படும் நாளாகவும் இருந்தது. அல்லாஹ் ரமழானுடைய நோன்பைக் கடமையாக்கியபோது (ஆஷிராவுடைய) நோன்பு நோற்க விரும்புகிறவர் அதை நோற்றுக் கொள்ளட்டும்! அதை விட்டுவிட விரும்புகிறவர் அதை விட்டுவிடட்டும்! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி) இப்னு உமர் (ரழி) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரழி) முஆவியா(ரழி) ஆயிஷா(ரழி) புகாரி 1592, 1892, 1893, 2001-2007, 3397, 3831, 3942, 3943, 4501-4504, 4680)

“அறியாமைக்கால” “முளர்” குலத்தினர் பேணி வந்த “ரஜப்” மாதத்தினை அங்கீகரித்த நபி(ஸல்) அவர்கள்”

புனித மாதங்களில் ஒன்றாகிய “ரஜப்’ மாதத்தின் கண்ணியத்தை அன்றைய அறியாமைக்கால அரபிகளில் “மூளர்” குலத்தினர்கள்தான்” அதிகமாகப் பேணி வந்தார்கள் என்பதால்தான் “ரஜபு முளர்” என்று அம்மாதத்திற்கு பெயர் வரலாயிற்று. அதனையே அங்கீகரித்து புனித மாதங்களைப் பற்றி அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்கள் கூறும்போது… துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், மற்றும் ஜமாதுல் ஆகிர்-க்கும் ஷஃபானுக்கும் இடையிலுள்ள முளர் குலத்து “ரஜப்” மாதமாகும் என்று கூறினார்கள். (அபூபக்ரா (ரழி) புகாரி: 3197, 4662, 5550, 7447)

“சிறந்த வழிகாட்டி என்பதற்காக காஃபிராக இருந்தபோதிலும் அவரைத் துணையாகக் கூட்டிச் சென்ற நபி(ஸல்) அவர்கள்”

(மக்காவைத் துறந்து, ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்குச் சென்றபோது) நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரழி) அவர்களும் பனூ அப்து இப்னு அதீ குலத்தைச் சேர்ந்த ஒருவரை (வழிகாட்டியாகக்) கூலிக்கு அமர்த்தினார்கள். அவர் தேர்ந்த வழிகாட்டியாக இருந்தார். அம்மனிதர் ஆஸ்பின் வாயிலின் குடும்பத்தாரிடம் உடன்படிக்கை செய்திருந்தார். மேலும் அவர் குறைகளில் இறை மறுப்பாளர்களின் மார்க்கத்தில் இருந்தார். நபி(ஸல்) அவர்களும் அபூ பக்கர்(ரழி) அவர்களும் அவரை நம்பித் தமது ஒட்டகங்களை அவரிடம் ஒப்படைத்து, மூன்று நாட்கள் கழித்து ஸவ்ர் குகையில் வந்து சேரும்படி கூறினார்கள். அம்மனிதர் மூன்றாம் நாள் காலையில் ஒட்டகங்களுடன் அவர்களிடம் வந்தார். உடனே, நபி(ஸல்) அவர்களும் அபூ பக்கர் (ரழி) அவர்களும் (மதீனாவை நோக்கிப்) புறப்பட்டார்கள். அவர்களுடன் ஆமிர் இப்னு ஃபுஹைரா என்பாரும் சேர்ந்து கொண்டார். பனூதீல் கூட்டத்தைச் சேர்ந்த அந்த வழிகாட்டி அம்மூவரையும் மக்காவிற்குக் கீழே கடற்கரை வழியாக அழைத்துச் சென்றார். (ஆயிஷா(ரழி), புகாரி, 2263, 2264,2297,2439,3905, ஃபத்ஹுல் பாரீ, உம்ததுல் காரீ)

“ஒட்டகத்தில் பயணம் செய்த அரபுப் பெண்களிலேயே சிறந்தவர்கள் குறைஷிப் பெண்கள் முன்மாதிரி என்றார்கள்”

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் “ஒட்டகத்தில் பயணம் செய்த (அரபுப்) பெண்மணிகளிலேயே சிறந்தவர்கள் நல்ல குறைஷிக் குலப் பெண்களேயாவார்கள் என்றார்கள். (அபூ ஹுரைரா(ரழி) இப்னு அப்பாஸ்(ரழி) முஆவியா(ரழி) புகாரி: 5365, 5082, 3434)

“குழந்தைகளின் மீது அதிகப் பாசமுடையவர்களில் குறைஷிக் குலப் பெண்கள் சிறந்த முன்மாதிரி என்றார்கள்”

இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்; குழந்தைகளின் மீது அதிகப் பாசம் கொண்டவர்களில் நல்ல(முன்மாதிரியான)வர்கள் நல்ல குறைஷிக் குலப் பெண்களாவார்கள் என்றார்கள். (அபூ ஹுரைரா(ரழி) இப்னு அப்பாஸ்(ரழி) முஆவியா(ரழி) புகாரி : 5365, 5082, 3434)

“தமது கணவரின் செல்வத்தைப் பேணிக் காப்பதில் சிறந்தவர்கள் குறைஷிக் குலப் பெண்கள் என்றார்கள்”

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். தமது கணவனின் செல்வத்தை அதிகமாகப் பேணிக் காப்பவர்களில் சிறந்த முன்மாதிரியானவர்கள் நல்ல குறைஷிக் குலப் பெண்களாவார்கள் என்றார்கள்.   (அபூ ஹுரைரா(ரழி), இப்னு அப்பாஸ்(ரழி) முஆவியா(ரழி) புகாரி: 5365, 5082, 3434)

Previous post:

Next post: