நான் அவரை விட மேலானவன் என்ற பெருமை!
S.H. அதுர்ரஹ்மான்
“உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்”.
“(படைத்த) அந்த ஒரே இறைவன் உங் களுக்கு அருள் புரியட்டும்”.
சொர்க்கத்தில் சிறந்த அறிவாளியாக கருதப்பட்டு வந்த இப்லீஸ், அல்லாஹ்வின் கட்டளைக்கு செவி சாய்க்காத காரணத் தால் அவன் மூலம் வெளிப்பட்டது தான் பெருமை என்ற பண்பு. அதை குர்ஆன் விவரிக்கும்போது; “நிச்சயமாக நாம் உங்களை படைக்க(க் கருதி) உங்களை (அதாவது உங்கள் முதல் தந்தையாகிய ஆதமை) உருப்படுத்தினோம். பின்னர் நாம் வானவர்களை நோக்கி “ஆதமுக்கு(சிரம்) பணியுங்கள்’ எனக் கட்டளையிட்டோம். இப்லீஸைத் தவிர (மற்ற வானவர்கள் அனைவரும் அவருக்குப்) பணிந்தார்கள். அவன் பணியவில்லை’. (7:11)
“(ஆகவே இறைவன் இப்லீஸை நோக்கி) நான் உனக்குக் கட்டளையிட்ட சமயத்தில், நீ (சிரம்) பணியாதிருக்கும்படி உன்னைத் தடை செய்தது எது? என்று கேட்க, (அதற்கு இப்லீஸ்) நான் அவரைவிட மேலானவன். (ஏனென்றால்) நீ என்னை நெருப்பால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்திருக்கின்றாய், (களி மண்ணை விட நெருப்பு உயர்ந்தது) என்று (பெருமையுடன்) கூறினான். (7:12)
இப்படி பெருமை என்ற பண்பு எப்படி உருப்பெற்றது என்பதை மிக தெளிவாக எடுத்துரைக்கிறது இறைநூல். அதுபோல “பெருமை கொண்டு திரிபவர்களை இறைவன் நேசிப்பதில்லை’ என்பதையும் எச்சரிக்கிறது. (பெருமை கொண்டு) உன் முகத்தை மனிதர்களை விட்டுத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையடித்துக் கொண்டு நடக்காதே! நிச்சயமாக கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (31:18)
பெருமை என்ற பாவம் அணு அளவேனும் நம்மில் வந்து விடாமல் காத்து கொள்வதே நமக்கு ஈடேற்றத்தைப் பெற்றுத் தரும். அன்றியும் அல்லாஹ்வின் மீது பொய் யுரைத்தார்களே! அவர்களுடைய முகங்கள் கியாம நாளில் கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர்! பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் நரகத்தில் இருக்கிறதல்லவா? (இறைநூல் 39:60)
அல்லாஹ் தனது இறைநூலில் மிகத் தெளிவாக சொல்லிவிட்டான். பெருமை கொண்டவர்கள் செல்லுமிடம் நரகம் தான் என்று. இன்று முஸ்லிம்களில் பலரும் தாங்கள் நேர்வழியில் இருப்பதாக நினைத்துக் கொண்டு மற்ற முஸ்லிம்களை விட தான் சரியான பாதையில் இருப்பதாகவும், அதனால் தான் உயர்ந்த முஸ்லிம் மற்றவர்கள் தாழ்ந்த நிலையில் உள்ள முஸ்லிம்களாக கருதுகின்றனர். யார் சரியான பாதையில் உள்ளவர் என்பதை இறைவனே அறிவான். இதை இறைநூல் தெளிவாக்குகிறது.
மூஸா, “என் இரட்சகன், தன்னிடமிருந்து நேர்வழியைக் கொண்டு வந்தவர் யார்? என்பதையும், இறுதி(யில் சுவன) வீடு யாருக்குக் கிடைக்கும் என்பதையும் அறிவான். நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றி பெறமாட்டார்கள் என்று கூறினார். (இறைநூல் : 28:37)
இன்னும் சிலர் தாங்கள்தான் தூய்மையான ஏகத்துவவாதிகள் எனக் கருதி கொண்டு மற்ற கலிமா சொல்லிய முஸ்லிம்களை இறை நிராகரிப்பாளர்களாகவும், இவர்களை விட தாழ்ந்தவர்களாகவும் நினைக்கின்றனர். ஆனால் இறைவன் தன் இறை நூலில் எச்சரிப்பது இதுதான்.
(நன்மை செய்வோர் யார் எனின்) எவர்கள் (அறியாமல் ஏற்பட்டுவிடும்) சிறு பிழைகளைத் தவிர பெரும் பாவங்களையும், மானக்கேடானவற்றையும் தவிர்த்துக் கொள்கிறார்களோ அவர்கள்; நிச்சயமாக உம்முடைய இறைவன் மன்னிப்பதில் தாராளமானவன்; அவன் உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கிய போது, நீங்கள் உங்கள் அன்னையரின் வயிறுகளில் சிசுக்களாக இருந்த போதும், உங்களை நன்கு அறிந்தவன். எனவே, நீங்களே உங்களைப் பரிசுத்தமானவர்கள் என்று புகழ்ந்து கொள்ளாதீர்கள். யார் பயபக்தியுள்ளவர் என்பதை அவன் நன்கறிவான். (இறைநூல் : 53:32)
இன்னும் சில படித்த மேதைகள் தாங்கள் நிரம்ப படித்து உயர்ந்த நிலையில் இருப்பதாகவும், மற்றவர்கள் படிப்பின்றி தாழ்ந்த நிலையில் இருப்பதாகவும் எண்ணுகின்றனர். ஆனால் இறைவன் தன் இறைநூலில் யாருக்காக தூதர் அனுப்பப்பட்டார் என்று தெளிவாக கூறுகின்றான்.
அவன்தான், எழுத்தறிவில்லாத மக்களிடம் அவனுடைய வசனங்களை படித்து காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு இறைநூலையும், ஞானத்தையும் கற்பிக்கும்படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான். அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர். (இறைநூல்: 62:2)
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என்று மக்கள் (சான்று) கூறும் வரை அவர்களோடு போராட வேண்டுமென்று நான் ஏவப்பட்டுள்ளேன். அந்த (லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற) கலிமாவை அவர்கள் கூறி, நம்முடைய தொழுகையைத் தொழுது நம்முடைய கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுப்பது போல் அறுத்து வருவார்களானால், தக்க காரணமின்றி அவர்களின் உயிர், பொருளுக்குச் சேதம் ஏற்படுத்துவது நமக்கு விலக்கப்பட்டுள்ளது. அவர்களின் விசாரணை அல்லாஹ்வின் நாட்டத்தைப் பொறுத்ததாகும் என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரழி) அறிவித்தார். புகாரி: 392, அத்தியாயம்:8, தொழுகை
கலிமா சொன்னவர்களின் தீர்ப்பு அல்லாஹ்வின் நாட்டத்தை பொருத்து என்று இறைதூதர் சொன்ன பிறகும் சக முஸ்லிமை கபர் முட்டி என்பதும், காஃபிர் என்பதும், ஸலாம் சொல்வதை தவிர்ப்பதும், சேர்ந்து தொழுவதை தடுப்பதும் சரியான செயலா? தன்னை உயர்ந்தவனாக நினைக்கும் சாத்தானின் செயலா? என்று சிந்திக்க வேண்டும்.
பெருமை கொண்டவர்கள் இவ்வுலகிலும் கண்ணியம் குறைக்கப்பட்டு அழிவை தேடிக் கொள்வார்கள். மறுமையிலும் நரகத்தில் புகுத்தப்படுவார்கள் என்பது நிச்சயம்.
“பெருமையை களைவோம், யாரையும் மட்டமாகவும், தாழ்வாகவும் நினைக்க வேண்டாம். கருணை கொண்டு பிறரோடு சேர்ந்து அன்புடன் வாழ்வோம்.
இறைவன் அத்தகைய இறையச்சம் நிறைந்த வாழ்க்கையை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக.