புரியாத புதிரா குர்ஆன்?

in 2022 பிப்ரவரி

புரியாத புதிரா குர்ஆன்?

  1. அலி,  கல்லிடைக்குறிச்சி

சூப்பர் முஸ்லிம் என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் முஸ்தபா என்பவர் மிக சமீபத்தில் (நவம்பர் 20ம் தேதிக்குப்பின்) வெளியிட்ட தப்ஸீர் இல்லாமல் குர்ஆன் புரியாதா? என்ற வீடியோவில் ததப்புருல் குர்ஆன் என்ற தப்ஸீதை அறிமுகம் செய்துவிட்டு குர்ஆனை புரிந்து கொள்வதற்கு Arabic Basic அவசியம். அரபி மொழி இலக்கண அறிவு அவசியம். அதே போன்று ததப்புருல் குர்ஆன் தப்ஸீரும் அவசியம் என்கிறார் இது இல்லாமல் அவரவர் தாய் மொழியிலுள்ள மொழிப் பெயர்ப்புகளைப் படித்தாலும் ஒருசில வசனங்கள் மட்டும் தான் விளங்கும் என்கிறார். அதற்கு உதாரணமாக தனக்கு ஏற்பட்ட அனுபவமாக ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார். அதாவது 2003ம் ஆண்டிலிருந்து 2016,2017ம் ஆண்டு வரை அந்நஜாத் ஆசிரியர் அபூ அப்தில்லாஹ் அவர்களின் குர்ஆனை நேரடியாக விளங்கிக் கொள்ளும் குர்ஆன் வகுப்புகளில் தான் கலந்து கொண்டதாகவும் எனி னும் குர்ஆனை முழுமையாக புரிய முடியவில்லை.

குர்ஆன் ஏதோ ஒரு வி­யத்தை உணர்த்துகிறது அதை நம்மால் முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை என்ற எண்ணமே தனக்குள் மேலோங்கி இருந்ததாகக் குறிப்பிடுகிறார். இந்நிலையில்தான் Peace TVயில் ததப்புருல் குர்ஆன் தப்ஸீர் நிகழ்ச்சியை தான் பார்த்ததாகவும் அப்பொழுது தான் குர்ஆன் முழுமையாக புரிந்தது என்கிறார். அப்படி அவர் புரிந்து கொண்டு கொடுத்த சில விளக்கங்களை இப்பொழுது பார்ப்போம். முதலாவதாக இந்த வீடியோவில் குர்ஆனின் 54:17, 22,32,40 ஆகிய வசனங்களில் குர்ஆனை நிச்சயமாக நாம் மிக எளிதாக்கி வைத்திருக்கிறோம். இதைக் கொண்டு படிப்பினைப் பெறுபவர் உண்டா? என்று அல்லாஹ் கேட்கிறான். இதற்கு விளக்கம் சொல்ல வேண்டுமே என்ற கட்டாயத்தில் ஒரு விளக்கம் கொடுத்தார். அதாவது அந்த வசனங்கள் காஃபிர்களுக்கு உரியதாம். அதன் முன் பின் வசனங்கள் முந்தைய சமுதாயங்களை அழித்தது குறித்து பேசுவதால் அதே போன்ற அடி உங்களுக்கும் விழும்.

ஆகவே படிப்பினை பெறுங்கள் என்று சொல்கிறது. மற்றபடி குர்ஆன் புரிவதற்கு எளிதானது என்று சொல்லவில்லை என்கிறார். அதாவது காஃபிர்களுக்கே புரிந்தாலும் முஸ்லிம்களுக்குப் புரியாது என்கிறார். அவரின் இந்த விளக்கத்தை அளவுகோளாகக் கொண்டு அவர் அறிமுகம் செய்த ததப்புருல் குர்ஆன் என்ற தப்ஸீரை உரசிப் பார்ப்போம். அதாவது இந்த தப்ஸீருக்கு ததப்புருல் குர்ஆன் என்று பெயர் வருவதற்கு காரணம் 47:24ல் இக்குர்ஆனை சிந்திக்க வேண்டாமா? அவர்களுடைய உள்ளங்களில் பூட்டுப் போடப்பட்டுள்ளனவா? என்று அல்லாஹ் கேட்கிறான். இந்த வசனத்தில் வரும் “ததப்புருல் குர்ஆன்” என்ற அரபி வார்த்தையையே இந்த தப்ஸீருக்கு பெயராக வைத்து விட்டார்கள். அதாவது ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய குர்ஆன் என்ற பொருள் கூறினார். இப்பொழுது அவரின் 54:17,22,32,40. இந்த விளக்கத்தை அப்படியே 47:24க்கு பொருத்திப் பார்ப்போம். 47:24ன் முன், பின் வசனங்களைக் கவனித்துப் பார்த்தால். அது முஸ்லிம்களை நோக்கி பேசவில்லை. மாறாக நம்பிக்கைக் கொண்டோம் என்று நாவால் மட்டும் கூறிய நயவஞ்சகர்களை நோக்கி பேசுகிறது. இந்த வசனம் அவர்களுக்குத்தான் பொருந்தும்.

மற்றபடி உண்மையான முஸ்லிம்கள் குர்ஆனை ஆழ்ந்து சிந்திக்க முடியும் என்று கூறவில்லை. இந்த வசனம் முஸ்லிம்களை சிந்திக்க தூண்டவில்லை, நயவஞ்சகர்களையே குர்ஆனை ஆழ்ந்து சிந்தித்து குர்ஆன் உண்மையாக நம்பிக்கைக் கொள் ளுங்கள் என்று கூறுகிறது. மற்றபடி முஸ்லிம் களால் குர்ஆனை எப்படி எளிதாக புரிய முடியாதோ அதே விளக்கத்தின் அடிப்படையில் முஸ்லிம்களால் குர்ஆனை ஆழ்ந்து சிந்திக்கவும் முடியாது. எனவே ததப்புருல் குர்ஆன் என்ற தப்ஸீரைக் கொண்டும் குர்ஆனை ஆழ்ந்து சிந்திக்க முடியாது. தப்ஸீர் எழுதியவரும் குர்ஆனை ஆழ்ந்து சிந்திக்க முடியாது என்று முஸ்தபா வுக்கு அவருடைய பாணியில் விளக்கம் கொடுத்தால் மறுக்க முடியுமா? அப்படி என்றால் குர்ஆன் என்ன புரியாத புதிரா? உண்மை என்ன?

குர்ஆனும் ஷைத்தானும் :

இரண்டு வருடங்களுக்கு முன்னர் மேற்கண்ட தலைப்பில் முஸ்தபா ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதன் ஆரம்பத்தில் இந்த விஷயம் மிகவும் முக்கியமான விஷயம் இது சரியாகிவிட்டால் எல்லாம் சரியாகி விடும். இது ஒருவருக்கு புரிந்து விட்டால் அவர் பாக்கியசாலி, இதை ஒருவர் புரியாவிட்டால் அவ்வளவுதான் Game Over என்று பேச்சை ஆரம்பித்து என்ன பேசினார் தெரியுமா? குர்ஆனை புரிந்து கொள்வதைத் தான். ஆம்! குர்ஆனை புரிந்து கொள்வதற்கு சில தகுதிகளைக் கூறினார்.

(பார்க்க 2:2, 29:69, 50:37, 8:21,22,23, 92:5,6,7,8) இன்றைக்கு இதே தகுதிகளைத் தான் நல்ல தப்ஸீர்களை தேர்வு செய்வதற்கு அவசியம் என்கிறார். அது மட்டுமல்ல அந்த வீடியோவின் 57வது நிமிடத்திலிருந்து 58வது நிமிடத்திற்குள் குர்ஆனை சரியாக புரிந்து விட்டால் எது வந்தாலும் பிரச்சனையில்லை, எந்த தப்ஸீரும் தேவை இல்லை என்று தெளிவாக பேசியவர்தான் இன்றைக்கு அதற்கு நேர் மாற்றமாக தப்ஸீர் இல்லாமல் குர்ஆன் புரியாது என்கிறார். இதிலிருந்து அவரே இந்த குர்ஆனும், ஷைத்தானும் என்ற விஷயத்தை சரியாக புரியாமல் இருப்பது தெளிவாகிறது. அதனால்தான் பல ஆண்டுகள் குர்ஆனை நேரடியாக புரிய முயற்சித்தவருக்கு விளங்காத குர்ஆன் ஒரு சில டி.வி. நிகழ்ச்சியில் புரிந்துவிட்டது என்கிறார். இது தக்லீத் இல்லாமல் வேறென்ன? இதில் இன்னொரு உண்மையும் வெளிப்பட்டு இருக்கிறது.

பல ஆண்டுகள் அந்நஜாத்தோடும், அபூ அப்தில்லாஹ்வோடும் பயணித்தவருக்கு அங்கு தக்லீத் செய்ய வாய்ப்பில்லாமல் போய்விட்டது. காரணம் தக்லீதுக்கு எதிராக அந்நஜாத் செய்த உறுதியான பிரச்சாரம். எனினும் ஷைத்தானின் ஊசலாட்டத்திலிருந்து அவரால் தப்பமுடியவில்லை. அதாவது குர்ஆன் ஏதோ ஒரு விஷயத்தை உணர்த்துகிறது அதை நம்மால் முழுமையாக புரிய முடியவில்லை என்ற எண்ணமே தனக்குள் இருந்ததாக சொல்கிறார் அல்லவா? அதுதான் ஷைத்தான் ஏற்படுத்தும் “வஸ்வாஸ்’ சந்தேகம்/ஊசலாட்டம் (பார்க்க : 7:20, 20:120) குர்ஆனும், ஷைத்தானும் என்ற தலைப்பில் பேசும்போது குர்ஆன் ஓதுவதற்கு முன் “அவூது” ரொம்பவும் Must என்கிறார். அது குறித்து அவர் விரிவாக பேசவில்லை. அதை சரியாக உணர்ந்திருந்தால் இதுபோன்ற நிலை ஏற்பட்டிருக்காது. அதை அல்குர்ஆன் கோணத்தில் சரியாக உணர்த்துவோம்.  இன்ஷா அல்லாஹ்.

அல்குர்ஆனின் பார்வையில் ஷைத்தான்:

ஆதி மனிதராகிய நம்முடைய தந்தை ஆதத்திலிருந்தே ஷைத்தான் ஒரு யுத்தியை (Formula) பயன்படுத்தி வருகிறான். நம்முடைய தந்தை ஆதமுக்கு அல்லாஹ்வால் இடப்பட்டிருந்த நேரடிக் கட்டளையை உள்ளது உள்ளபடி உறுதியாக பின்பற்றவிடாமல் ஊசலாட்டத்தை உண்டுபண்ணி (பார்க்க 7:20, 20:120) சரியாக புரிய வைக்கிறேன் என்று (7:20) சத்தியம் செய்து (7:21) நிரந்தரமாக அவரது வாழ்வை நிரந்தரமற்ற வாழ்வாகக் காட்டி சொற்பமான சோதனை வாழ்க்கைக்கு தள்ளி ஏமாற்றி விட்டான் ஷைத்தான். (பார்க்க : 7:22,23,24) இன்றைக்கும் ஆதத்தின் சந்ததிகளில் பெரும்பாலானோரை நிரந்தரமற்ற இவ்வுலக வாழ்க்கையை நிரந்தரமான வாழ்வு போன்று காட்டி ஏமாற்றி வருகிறான். (பார்க்க 35:5, 31:33)

அதாவது உண்மையில்லாததை உண்மையாகவும், உண்மையை உண்மையில்லாததாகவும் காட்டுவான். புரோகித பாஷையில் சொல்வதாக இருந்தால் மார்க்கமாக கடைப்பிடிக்க வேண்டியவற்றை மார்க்கம் இல்லை என்பார்கள். மார்க்கமில்லாததை மார்க்கமாக ஆக்குவார்கள். இதே பாணியில் தான் மிக எளிதாக புரியக்கூடிய குர்ஆனை (பார்க்க : 54:17,22,32,40) குர்ஆன் உங்களுக்குப் புரியாது அவசியம். தப்ஸீர் அவசியம், மார்க்கம் உங்களுக்கு விளங்காது, மார்க்கத்தை விளக்க புரோகித ஆலிம்கள் அவசியம் என்று தன்னுடைய நேரடி ஏஜன்ட்களான புரோகிதர்கள் மூலம் ஓயாது உரக்க கூவுகிறான் ஷைத்தான். இதை நம்பி ஏமாந்து முஸ்லிம் சமூகமும் குர்ஆனை விட்டும் தூரமாக சென்று கொண்டிருக்கிறது (பார்க்க:25:20,30) (மேலும் பார்க்க: 7:20, 20:120, 23:91, 35:5,6, 16:98, 7:175, 7:200, 43:36, 22:4, 2:202) அதனால் தான் அல்லாஹ் உங்களுடைய தந்தைக்கு ஏற்பட்ட நிலை உங்களுக்கும் ஏற்பட வேண்டாம் என்று எச்சரிக்கிறான். (7:27)

ஆம்! நம்முடைய தந்தையை எப்படி அல்லாஹ்வின் நேரடிக் கட்டளைக்கு மேல் விளக்கம், சுயவிளக்கம், காரணம், காரியம் கற்பித்து திசை திருப்புதல் (பார்க்க: 7:20,21, 22,23,24) ஆகியவற்றைக் கொண்டு அல்லாஹ்வுக்கு மாறு செய்ய வைத்தானோ அதே போன்று ஆதமுடைய சந்ததிகளாகிய நம்மையும், அவனுடைய மேல்விளக்கம், சுயவிளக்கம், காரண காரியம் கற்பித்து, திசை திருப்புதல் ஆகியவற்றைக் கொண்டு அல்லாஹ்வின் நேரடிக் கட்டளைகளைக் கொண்ட ஒரே பொருளைத் தரக்கூடிய முஹ்க்கமாத் வசனங்களை அடிப்படையாகக் கொண்ட (பார்க்க 3:7) அல்குர்ஆனை உள்ளது உள்ளபடி உறுதியாக பின்பற்ற விடாமல் தடுத்துவிட வேண்டாம் என்பதற்காகத்தான் அல்குர்ஆனை படிக்க ஆரம்பிக்கும்போது முதலாவதாக விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் பாதுகாவல் தேடச் சொல்கிறான் ஏகன் அல்லாஹ். (பார்க்க 16:98)

இதை முஸ்லிம் சமூகம் சரியாக புரிந்து கொண்டால் இம்மை, மறுமை இரண்டிலும் வெற்றி பெறலாம். இன்ஷா அல்லாஹ். இதை புரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான் ஷைத்தான் நரித்தந்திரமாக அல்குர்ஆனை படிக்க ஆரம்பித்தால் தானே நம்மை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடி உள்ளது உள்ளபடி உறுதியாக பின்பற்ற முயற்சி செய்வார்கள். அல்குர்ஆனை விட்டே தூரமாக்கி விட்டால் என்ன (பார்க்க 3:30, 25:29,30) என்று கங்கணம் கட்டிக்கொண்டு தன்னுடைய புரோகித ஏஜெண்டுகள் மூலமாக குர்ஆன் உங்களுக்குப் புரியாது என்று ஓயாது உறக்கக் கூவுகிறான். இதை புரிந்து கொள்ள வேண்டியது முஸ்லிம் உம்மத்தின் மீது கடமையாகும். இது மிக மிக அவசர அவசியம்! இல்லையேல் வீழ்ச்சி மட்டுமே! நமக்கு சொந்தமாகி விடும் ஜாக்கிரதை! அல்லாஹ் விளங்குவதற்கு எளிதாக்கிய குர்ஆனை, அல்லாஹ்வை விட அறிஞர்கள் சிறப்பாக விளக்குவார்கள் என்ற நம்பிக்கை விளக்குவதில் அல்லாஹ்வை விட அறிஞர்கள் சிறந்தவர்கள் என்ற இணை வைப்பு நிலையில் நம்மை விட்டுவிடும். அல்லாஹ் பாதுகாப்பானாக!

பயான்களை கேட்டு மார்க்கத்தை விளங்க முயற்சிக்காமல், தினமும் சிறிது நேரம் ஒதுக்கி குர்ஆனை நேரடியாக படித்து இறைவன் கூறுவதை நேரடியாக சிந்தித்து விளங்க முயற்சிப்போம்! இன்ஷா அல்லாஹ்.

அல்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம்! படிப்பினை பெறுவோர் உண்டா?  (அல்குர்ஆன் : 54:17,22,32,40)

Previous post:

Next post: