நல்லது இருந்தால் அதனை எடுத்துக்கொள்ளலாம்!

in 2022 மார்ச்

நல்லதுஇருந்தால்அதனைஎடுத்துக்கொள்ளலாம்!

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர்.

பிப்ரவரி 2022 தொடர்ச்சி

“மதீனா வாழ்வின் ஆரம்ப காலத்தில் யூதர்களின் கிப்லாவை முன்னோக்கிய அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்கள்”

இறைத் தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த ஆரம்பத்தில் அவர்களின் பாட்டனார்களி(ன் வம்சா வழியினரி)டம் அல்லது அன்சாரிகளைச் சேர்ந்த அவர்களின் மாமன்மார்களி(ன் வம்சா வழியினரி)டம் தங்கியிருந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கியே தொழுது வந்தார்கள். (இருப்பினும்) தொழுகையில் தாம் முன்னோக்கித் தொழும் திசை (மக்காவிலுள்ள) கஅபா ஆலயமாக இருக்கவேண்டும் என்பதே அவர்களின் விருப்ப மாக இருந்தது. (கஅபாவை நோக்கி) இறைத் தூதர்(ஸல்) அவர்கள் தொழுத முதல் தொழுகை அஸர் தொழுகையாகும். அவர்களுடன் மற்றவர்களும் தொழுதார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் சேர்ந்து தொழுதவர்களில் ஒருவர் அங்கிருந்து புறப்பட்டு வேறு ஒரு பள்ளிவாசலுக்கருகே சென்றார். அங்கே பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுது கொண்டிருந்தவர்களிடம், “நான் இறைவன் மீது ஆணையாக மக்காவை (கஅபாவை) முன்னோக்கி இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் சேர்ந்து தொழுதுவிட்டு வருகிறேன்” என்று கூறினார்.

உடனே மக்கள் (தொழுகையில்) அப்போதிருந்த நிலையிலிருந்தபடியே கஅபாவை நோக்கித் திரும்பினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுது வந்தது யூதர்களுக்கும் ஏனைய வேதக்காரர்களுக்கும் மகிழ்ச்சியாகவே இருந்து வந்தது. (தொழுகையில்) தமது முகத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கஅபா நோக்கித் திரும்பினார்கள். (தொழுகையில்) தமது முகத்தை நபி(ஸல்) அவர்கள் கஅபா நோக்கித் திருப்பிக் கொள்ள ஆரம்பித்ததும் அவர்கள் அதை வெறுக்க ஆரம்பித்தார்கள்.

மற்றோர் அறிவிப்பில், தொழுகையில் முன்னோக்கித் தொழும் திசையான கிப்லா மாற்றப்படுவதற்கு முன்னர் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுத காலத்திலேயே சிலர் இறந்துவிட்டனர். சிலர் கொல்லப்பட்டுவிட்டனர். நாங்கள் அவர்களைப் பற்றி என்ன கூறுவது? என்று அறியா தவர்களாயிருந்தோம். அப்போது, “உங்கள் நம்பிக்கையை அல்லாஹ் வீணாக்கமாட்டான்’ என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான்) (பராஉ பின் ஆஸிப்(ரழி) இப்னு உமர் (ரழி) அனஸ்(ரழி) புகாரி:40,399,403,4486, 4488, 4490, 4494, 7251, 7252)\

“முஹர்ரம் மாத “ஆஷிரா” நோன்பிற்கு முன்மாதிரியாக நபி(ஸல்) அவர்கள் எடுத்தது யூதர்களின் முன்மாதிரியை”

நபி(ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்தபோது யூதர்கள் முஹர்ரம் பத்தாவது நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். இதுபற்றி யூதர்களிடம் கேட்கப்பட்ட போது இந்த நாள்தான் ஃபிர்அவ்னுக்கு எதிராக மூஸா(அலை) அவர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் அல்லாஹ் வெற்றியளித்த நாள். ஆகவே நாங்கள் மூஸா(அலை) அவர் களைக் கண்ணியப்படுத்தும் விதத்தில் அந்த நாளாகிய முஹர்ரம் பத்தாவது நாளில் நோன்பை நோற்கின்றோம் என்று சொன்னார்கள் இதனைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், மூஸா(அலை) அவர்களை கண்ணியப்படுத்துவதில் உங்களை விட நாங்களே அதிக உரிமையுடையவர்கள் என்று சொல்லிவிட்டு அந்நாளில் தாமும் நோன்பு நோற்று சக முஸ்லிம்களுக்கும் நோன்பு நோற்கும்படி உத்தரவிட்டார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி) புகாரி: 1592, 1893, 2000-2007, 3397, 3831, 3942, 3943, 4680, 4737, முஸ்லிம்: 2082, 2083)

“மண்ணறை வாழ்வு குறித்த யூதர்களின் கூற்றை உண்மைப்படுத்திய அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்கள்”

மதீனா யூத மூதாட்டிகளில் இருவர் என்னிடம் வந்து (பேசிக் கொண்டிருந்த போது) “மண்ணறைவாசிகள் மண்ணறைகளில் வேதனை செய்யப்படுகின்றனர்’ என்று கூறினர். அவர்கள் கூறியதை நம்புவது எனக்குச் சரியாகப்படவில்லை. பிறகு அவர்கள் இருவரும் வெளியேறிவிட்டனர். நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான், “இறைத்தூதர் அவர்களே! இரண்டு மூதாட்டிகள் (என்னிடம் வந்து இப்படி இப்படிச் சொன்னார்கள்) என்று அவர்களிடம் தெரிவித்தேன்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், “அவ்விருவரும் உண்மையே சொன்னார்கள், (மண்ணறையிலிருக்கும் பாவிகள்) கடுமையாக வேதனை செய்யப்படுகின்றார்கள். அந்த வேதனை(யால் அவதியுறும் அவர்களின் அலறல்)களை எல்லா மிருகங்களும் செவியேற்கின்றன’ என்றார்கள். அதற்குப் பின் நபி(ஸல்) அவர்கள் எல்லாத் தொழுகைகளிலும் மண்ண றையின் வேதனையிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோராமல் இருந்ததில்லை. (ஆயிஷா(ரழி), புகாரி 6366, 1049, 1050, 1055, 1056, 1372, அத்தியாயம் 80, பிரார்த்தனைகள்)

“சுவர்க்க உணவு குறித்த யூதர்களின் கூற்றை உண்மைப்படுத்திய அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள்”

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரழி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் “மறுமை நாளில் இந்த பூமி (அடுப்பில் இருக்கும்) ஒரு ரொட்டியைப் போன்று(சமதளமாக) மாறிவிடும். பயணத்திலுள்ள உங்களில் ஒருவர் தம் ரொட்டியை (அடுப்பிலிருந்து எடுத்துக் கையில் வைத்து)ப் புரட்டுவதைப் போன்று, சர்வ வல்லமை படைத்த (இறை)வன் பூமியைத் தன்னுடைய கரத்தால் புரட்டிப் போடுவான். (அதையே) சொர்க்கவாசிகளுக்கு விருந்தாக்குவான்’ என்று கூறினார்கள்.

அப்போது யூதர்களில் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, “அபுல் காசிமே! அளவற்ற அருளாளன் உங்களுக்கு சுபிட்சம் அளிக்கட்டும், மறுமை நாளில் சொர்க்கவாசிகளின் விருந்துணவு என்னவென்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா?’ என்று கேட்டார்.

நபி(ஸல்) அவர்கள் “சரி’ என்றார்கள். அவர் நபி(ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே “மறுமை நாளில் இந்த பூமி ஒரே ஒரு ரொட்டியைப் போன்று இருக்கும்’ என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுத் தமது கடைவாய்ப்பற்கள் தெரிய சிரித்தார்கள். பிறகு “உங்களுக்கு சொர்க்கவாசிகளின் குழம்பு எது எனத் தெரிவிக்கட்டுமா?’ என்று அந்த யூதர் கேட்டுவிட்டு அவர்களின் குழம்பு ‘பாலாம்’ மற்றும் “நூன்’ என்றார். மக்கள் இது என்ன? என்று கேட்டார்கள். அந்த யூதர்(அவை) காளைமாடும் மீனும் ஆகும். அந்த இரண்டின் ஈரல்களுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் தனித் துண்டை (மட்டுமே சொர்க்கவாசிகளில்) எழுபதாயிரம் பேர் புசிப்பார்கள்’ என்று கூறினார். (புகாரி : 6520)

“மறுமையில் அல்லாஹ்வுடைய நிலை குறித்த யூத அறிஞரின் கூற்றை உண்மைப்படுத்திய நபி(ஸல்) அவர்கள்”

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரழி) அறிவித்தார். யூத மத அறிஞர்களில் ஒருவர் இறைத் தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, “முஹம்மதே! அல்லாஹ், வானங்களை ஒரு விரல் மீதும், பூமிகளை ஒரு விரல் மீதும், இதரப் படைப்பினங்களை ஒரு விரல் மீதும் வைத்துக்கொண்டு, “நானே (ஏகாதிபத்தியம் உள்ள) அரசன் என்று சொல்வான் என நாங்கள் (எங்களின் வேத நூலான தவ்ராத்தில்) கண்டோம்’ என்று கூறினார். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் அந்த அறிஞரின் கருத்தை உண்மையயன ஆமோதிக்கும் விதத்தில் தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்தார்கள். பிறகு, அவர்கள் அல்லாஹ்வை எவ்வாறு மதிக்க வேண்டுமோ, அவ்வாறு மதிக்கவில்லை. மறுமை நாளில் பூமி முழுவதும் அவன் கைப்பிடியில் இருக்கும் வானங்கள் அவனுடைய வலக்கரத்தில் சுருட்டப்பட்டிருக்கும். அவர்கள் இணை வைப்பவற்றிலிருந்து அவன் தூயவன், உயர்ந்த வன், எனும் (திருக்குர்ஆன் 39:67வது) வசனத்தை ஓதினார்கள்.  (புகாரி: 4811, 4812, 6519-6522, 7412,7414,7451,7513)

“யூதர்கள் சுட்டிக்காட்டிய தவறையும் அடக்கத்துடன் ஏற்றுக்கொண்ட இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள்”

ஒருமுறை யூதர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து நீங்களும் இணை வைக்கின்றீர்கள் என்று கூறினார்கள் எவ்வாறு என்று முஸ்லிம்கள் கேட்டபோது நீங்கள் “அல்லாஹ் நாடினான் நீங்களும் நாடினீர்கள்” என்று இருவரையும் சேர்த்தே கூறுகிறீர்கள்.

மேலும் “கஅபாவின் மீது சத்தியம்” என்றும் கூறுகிறீர்கள் என்றார்கள். அதற்கு(ப் பிறகு) நபி(ஸல்) அவர்கள் நீங்கள் (இனிமேல்) சத்தியம் செய்ய நாடினால் “கஅபாவின் இறைவனின் மீது சத்தியமாக” “குர்ஆனின் இறைவன் மீது சத்தியமாக” என்று கூறுங்கள் (மேலும்) அல்லாஹ் நாடினான் பின்னர் நீங்கள் நாடினீர்கள் என்று கூறுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் (தமது தோழர்களுக்குக்) கட்டளையிட்டார்கள். (குதைலத் பின்ந் ஸைபி (ரழி) நஸயீ, இப்னு மாஜா)

“முடிவாருவதில் வேதக்காரர்களின் வழிமுறையைப் பின்பற்றிய நபி(ஸல்) அவர்கள்”

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி) அறிவித்தார்:

நபி(ஸல்) அவர்கள் தமது (முன் தலை) முடியைத் (தமது நெற்றியின் மீது) தொங்கவிட்டு வந்தார்கள். இணை வைப்பவர்கள் தங்கள் தலை(முடி)களைப் பிடித்து (நெற்றியில் விழவிடாமல் இரண்டு பக்கமும் தொங்கவிட்டு) வந்தார்கள். வேதக்காரர்கள் தங்கள் தலை(முடி)களைக் (தமது நெற்றிகளின் மீது) தொங்கவிட்டு வந்தார்கள். எந்த வியங்களில் (இறைக்) கட்டளை எதுவும் இடப்படவில்லையோ அந்த வியங்களில் வேதக்காரர்களுடன் ஒத்துப்போவதை நபி(ஸல்) அவர்கள் விரும்பி வந்தார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தமது தலை(முடி)யை (இரண்டு பக்கங்களி லும்) பிரித்து (வகிடெடுத்து)க் கொண்டார்கள். புகாரி : 3944, 3558, 5917)

“பனூ இஸ்ராயீல்களின் செய்திகளையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றுரைத்த நபி(ஸல்) அவர்கள்”

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்; என்னிடமிருந்து ஒரேயயாரு(சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்து ரையுங்கள். பனூ இஸ்ராயீல்களின் வாயிலாகக் கிடைத்த செய்திகளையும் அறிவியுங்கள். அதனால் குற்றமில்லை, எவன் என்மீது (நான் சொன்னதாக) வேண்டுமென்றே பொய்யுரைக் கிறானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும். (இப்னு அம்ர்(ரழி), புகாரி: 3461)

“சுத்தம் செய்யும் வியத்தில் யூதர்களைப் பின்பற்றியவர்களை புகழ்ந்து பேசிய அல்லாஹ்வும் அவனது தூதரும்”

ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அங்குதான் தூய்மையாக இருக்க விரும்புகின்ற மக்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான். (9:108)

ஒருமுறை நாங்கள் “குபா’ பள்ளிவாசலில் இருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து “உயர்ந்தோன் அல்லாஹ் உங்களது “குபா’ பள்ளிவாசல் தொடர்பாகக் குறிப்பிடுகையில், தூய்மை வியத்தில் உங்களைப் பாராட்டியுள்ளான். அப்படி நீங்கள் கடைப்பிடிக்கின்ற அந்தத் தூய்மை என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு “குபா’வாசிகள்.

“அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எங்களுக்கு எதுவும் தெரியாது இருப்பினும் எங்களுக்கு யூதர்களின் அண்டை வீட்டினர் சிலர் உள்ளனர் அவர்கள் மலம் கழித்த பின்னர் தமது ஆசன வாயைத் தண்ணீரால் கழுவித் தூய்மை செய்வார்கள். அவர்கள் கழுவியதைப் போன்றே நாங்களும் கழுவினோம். (அவ்வளவுதான்) என்று கூறினார்கள். (உவைம் பின் சாஇதா அல்அன்சாரீ(ரழி) முஸ்னத் அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர்: 4:395-404)   (இன்ஷாஅல்லாஹ்தொடரும்)

Previous post:

Next post: