ஹிஜாப் என்ற பெயரில் முகம் மறைத்தல்!

in 2022 மார்ச்

ஹிஜாப்என்றபெயரில்முகம்மறைத்தல்!

அபூஹனிபா,  புளியங்குடி

முகத்திரைஎங்கள்உரிமை :

ஹிஜாப் என்ற பெயரில் முஸ்லிம் பெண்கள் தங்கள் ஹிஜாப்புடன் தங்கள் முகத்தையும் சேர்த்து மறைத்து கொண்டு பொது இடங்களுக்கு வருகிறார்கள்.

அவர்கள் தங்கள் ஹிஜாப்புடன் தங்கள் முகத்தையும் மறைத்துக் கொண்டு உணவ கங்கள் மற்றும் பொது இடங்களுக்கு செல்கி றார்கள். அவ்வாறு செல்லும் பெண்களை, பிற மக்கள் புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது. சாப்பிடக்கூட முடியாத அளவிற்கு அவர்களின் முகத்தையும் சேர்த்து மறைக்கச் சொல்கிறது. இது அறிவுப்பூர்வமான மார்க்கமா? முகத்தை மூடிக்கொண்டால் எப்படி சாப்பிட முடியும்?

இந்த அறிவு கூட இவர்களுக்கு இல்லையா? என்று கேலியும், கிண்டலும் செய்கிறார்கள். முகத்தை மூடுவது மார்க்க சட்டம், கடமையான ஒன்று என்று இருந்திருந்தால் இவர்கள் கேலியும் கிண்டலும் செய்வது தவறு. பரவாயில்லை மார்க்கம் தெரியாதவர்கள் செய்கிறார்கள் என்று விட்டுவிடலாம். ஆனால் முகத்தை மூடுவது மார்க்க சட்டம் இல்லை என்று இருந்தபோதிலும் அதனை வேண்டும் என்றே அணிந்து முஸ்லிம் சமுதாயத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறார்கள் முஸ்லிம் பெண்கள்.

மேலும் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்துக்கொண்டு வருவதால் சமூக சீர்கேடுகளும் ஏற்படுகிறது. ஹிஜாப் என்ற பெயரில் உடல், முகம், கை, கண்களை தவிர மற்ற அனைத்தையும் மறைத்துக் கொண்டு வருவதால் யார் வருகிறார்? யார் போகிறார்? என்ற அடையாளப் பிரச்சனைகளும் ஏற்படுகிறது.

இஸ்லாமிய பெண்களில் சிலர் இப்படிப்பட்ட உடைகளை அணிந்து தவறான செயல்களில் ஈடுபட்ட சம்பவங்களும் சமீப காலங்களில் நிகழ்ந்திருக்கிறது.

இன்னும் முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத ஆண்களும், பெண்களும் இதுபோன்ற உடைகளை அணிந்து கொண்டு தவறான செயல்களில் ஈடுபடும் சம்பவங்களும் கடந்த காலங்களில் நடந்திருக்கின்றன.

மேலும் சில முஸ்லிம் பெண்கள் தங்கள் முகங்களை மறைப்பது இஸ்லாமிய மார்க்க கடமை. ஹிஜாப்புடன் முகத்தை மறைப்பது எங்கள் உரிமை, எங்கள் உரிமை. எங்கள் உரிமையை மறுப்பதற்கு உங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்று போராட்டங்களில் ஈடுபடக்கூடிய சம்பவங்கள் கடந்த காலங்களில் நடந்திருக்கிறது.

மேலும் அடையாள அட்டைகள், (ஆதார்கார்டு) எடுப்பதற்கு தங்கள் முகங்களை காட்ட மறுத்து பிரச்சனைகள் செய்த சம்பவங்களும் கடந்த காலங்களில் நிகழ்ந்திருக்கிறது.

இன்னும் கல்லூரிகள், பள்ளிகளில் இது போன்ற முத்திரையுடன் கூடிய ஹிஜாப் அணிந்து வந்துதேர்வுகள் எழுத முற்பட்டு அது பிரச்சனையாக மாறி நீதிமன்றம் வரை சென்று பின்னர் அடையாளம் என்பது மிக அவசியமான ஒன்று உங்கள் முகத்தை வைத் துத்தான் உங்களை அடையாளம் அறிந்து கொள்ள முடியும் என்பதை ஆக்கப்பூர்வ மாகவும், அறிவுப்பூர்வமாகவும் எடுத்துச் சொல்லி வழி அனுப்பி வைத்திருக்கின்றன நீதிமன்றங்கள்.

உலகத்திற்கே நேர்வழியையும், உண்மையான அறிவையும் போதிக்கக் கூடிய இஸ்லாத்தில் இருந்து கொண்டு முஸ்லிம் பெண்கள் அறிவிலிகள் போல் நடந்து கொண்டு நீதிமன்றங்களில் அவமானப்படக்கூடிய பல சம்பவங்கள் கடந்த காலங்களில் நடந்திருக்கிறது, நடந்து கொண்டும் இருக்கிறது.

நீதிமன்றங்கள் அறிவுரை சொல்லும் அளவிற்கு முஸ்லிம் பெண்கள் நடந்து கொள்வது அவமானம் இல்லையா? இதை விட ஒரு அவமானம் இந்த முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏற்படுமா? முஸ்லிம் பெண்கள் இவ்வாறு நடந்து கொள்ள காரணம் யார்? ஹிஜாப் சம்மந்தமாக இஸ்லாம் காட்டித் தரும் வழிமுறைகள் என்ன? போன்றவற்றை இந்த பதிவில் பார்ப்போம்.

நம்பிக்கைகொண்டபெண்களுக்குபடைத்தவனின்கட்டளை:

இன்னும், முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக. அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக்கொள்ள வேண்டும். தங்கள் அலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக்காட்டலாகாது. இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும். (அல்குர்ஆன் : 24:31)

24:31 வசனத்தில் நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு அல்லாஹ் சொல்கிறான். அவர்கள் தங்கள் அலங்காரத்தை அதனின்றும் தெரியக்கூடியதை தவிர மற்றவற்றை வெளிக்காட்டலாகாது என்று முஃமினான பெண்கள் தங்கள் உடலில் சில பாகங்களை மறைக்க வேண்டும். சில பாகங்களை வெளிக்காட்ட வேண்டும் என்று குறிப்பிடு கிறான். அந்த பாகங்கள் என்ன என்பது சம்மந்தமாக பல சர்ச்சைகள் இந்த சமுதாயத் தில் நிகழ்ந்தாலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு தெளிவாக விளங்கித் தந்துள்ளார்கள். அவை என்ன என்பதை ஹதீத்களில் இருந்து நாம் பார்ப்போம்.

முகத்திரை, கையுறைஅணியதடை:

புகாரி 1838 ஹதீதில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

இஹ்ராம் அணிந்த பெண் முகத்திரை அணியக் கூடாது அவள் கையுறைகளையும் அணியக் கூடாது.

இந்த ஹதீதின் மூலமாக ஒரு முஃமினான பெண் எந்த பாகத்தை வெளிக்காட்ட வேண்டும், எந்த பாகத்தை மறைக்க வேண்டும் என்பது தெளிவாக விளங்குகிறது. அல்லாஹ் பெண்கள் தங்கள் அலங்காரத்தில் இருந்து சில பகுதிகளை வெளிக்காட்ட சொல்கிறான். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அது எந்த பாகம் என்பதை ஹஜ் உடைய காலத்தில் தெளிவுபடுத்துகிறார்கள். அதாவது ஒரு பெண் ஹிஜாப் அணியும்போது முகம் மற்றும் கை ஆகியவற்றை வெளிக்காட்ட வேண்டும். மற்ற பாகங்களை மறைக்க வேண்டும்.

இதுதான் ஹிஜாப்புக்கான மறைக்க வேண்டிய பாகங்கள் வெளிப்படுத்த வேண்டிய பாகங்கள். ஆக ஒரு பெண் ஹிஜாப் பேணுகிறார் என்றால் அவர் தனது முகம் மற்றும் கையை தவிர மற்ற பாகங்களை கட்டாயம் மறைக்க வேண்டும். அதுதான் அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித்தரும் அழகிய நடைமுறை. இப்படி இருக்க இன்றைக்கு முஸ்லிம் பெண்கள் தங்கள் ஹிஜாப்புடன் தங்கள் முகத்தையும் சேர்த்து மறைத்துக் கொண்டு வருகிறார்கள். அப்படி என்றால் இவர்கள் யாரை பின்பற்றுகிறார்கள்? இவர்களை வழிகெடுப்பது யார்?

வழிகெடுக்கும்தலைவர்கள் :

இஹ்ராம் அணிந்து பெண் முகத்திரை அணியக்கூடாது, அவள் கையுறைகளையும் அணியக்கூடாது. என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னது இஹ்ராம் அணிந்த நிலையைத் தான் குறிக்கும். மற்ற இடங்களில் அவர்கள் விருப்பப்பட்டால் தங்கள் முகங்களை மறைத்துக் கொள்ளலாம். அது அவர்களின் உரிமை, நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்கள் கூட வெட்கத்தால் சில இடங்களில் தங்கள் முகத்தை மறைத்திருக்கிறார்கள். ஹஜ்ஜுடைய நாளில் இஹ்ராம் அணிந்த நிலையில் தங்கள் முகத்தை வெட்கத்தால் மறைத்துள்ளார்கள். அதனால் பெண்கள் தங்கள் முகங்களை மறைக்கலாம், மறைக்காமலும் இருக்கலாம். அது அவர்களின் விருப்பம் என்று சில ஆலிம்கள், உலமாக்கள் சுயவிளக்கம் கொடுக்கிறார்கள்.

இன்னும் சில அறிஞர்கள் பெண்கள் அந்நிய ஆண்களுக்கு தங்கள் முகத்தை கட்டாயம் காட்டக்கூடாது என்று பத்வா கொடுக்கிறார்கள். சில மதரஸாக்களில் முஸ்லிம் பெண்கள் முகத்திரை கட்டாயம் அணிய வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. முகத்திரை அணிவது என்பது மார்க்க கடமைகளில் ஒன்று என்பது போன்ற மாய தோற்றத்தை ஆலிம்கள் உலமாக்கள் போன்றோர் உருவாக்கிக் கொண்டு வருகிறார்கள். இதில் எது உண்மை? நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த நடைமுறை என்ன?

நபி(ஸல்) அவர்கள் ஹிஜாப் அணியும் பெண்கள் எதை மறைக்க வேண்டும் எதை மறைக்கக்கூடாது என்பதை பற்றி தான் ஹஜ் உடைய நாளில் சொன்னதாக இருக்கிறதே அல்லாமல் இஹ்ராமை கலைந்த பின்னால் நீங்கள் முகத்தை மறைத்துக் கொள்ளலாம் என்று சொன்ன எந்த ஆதாரமும் குர்ஆனிலோ, ஹதீத்களிலோ இல்லை.

மேலும் சாதாரணமாக இருக்கும்போது உங்கள் முகத்தை மூடிக்கொள்ளலாம் என்று சொன்னதாக எந்த ஆதாரமும் இல்லை. ஒரு பலகீனமாக ஹதீத் கூட கிடையாது. அப்படி இருக்க ஒரு பெண் ஹிஜாப் அணிகிறார் என்றால் அவர் எதை மறைக்க வேண்டும்? எதை மறைக்கக் கூடாது? என்பதை அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் மிகத் தெளிவாக நமக்கு வழிகாட்டி இருக்கும்போது இஹ்ராம் அணிந்த நிலையில் மட்டும் தான் முகம் திறந்திருக்க வேண்டும். மற்ற இடங்களில் மூடிக்கொள்ள அனுமதி இருக்கிறது என்று சொல்வார்கள் என்றால் இவர்கள் யாரைப் பின்பற்றுகிறார்கள்?

அதற்கான நேரடி ஆதாரங்களை அல்லவா காட்ட வேண்டும். ஆதாரங்களை காட்டாமல் நபிமார்களின் மனைவிமார்கள் தங்கள் முகத்தை வெட்கத்தால் மூடினார்கள் என்று சொல்வது ஆதாரமாகுமா?

மார்க்க சட்டங்களை உருவாக்க தகுதி உடையவர்கள் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மட்டுமே அவர்களிடத்தில் அல்லவா சட்டங்களை பார்க்க வேண்டும். நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் செய்தார்கள், அந்த பெண் செய்தார், இந்த பெண் செய்தார் என்று பிறருடைய செயல்களை பார்த்து மார்க்க சட்டங்களை எடுத்ததன் விளைவு தான் இந்த முஸ்லிம் சமுதாய பெண்கள் ஹிஜாப்பே அணியக்கூடாது என்று பிற மக்கள் சட்டம் இயற்றக்கூடிய நிலைக்கு சென்றிருக்கிறது.

ஒரு பெண் ஹிஜாப்புடன் முகத்திரை விரும்பி அணிவதும் அல்லாஹ்வின் கட்டளையும் ஒன்றா? முஃமினான பெண்களுக்கு அல்லாஹ் உத்தரவிடுகிறான் உங்கள் முகத்தையும், கைகளையும் வெளிக்காட்டுங்கள் என்று (அல்குர்ஆன் 24:31, புகாரி 1838) இந்த இடத்தில் பெண்கள் விரும்பினால் மறைத்துக்கொள்ளலாம், விரும்பினால் அணிந்து கொள்ளலாம் என்று எப்படி சொல்ல முடியும்? இப்படி சொல்வது எப்படி மார்க்க சட்டமாக ஆகும். நீங்கள் விரும்பினால் மறைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் விரும்பினால் அணிந்து கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அல்லவா சொல்ல வேண்டும்?

அல்லாஹ் உங்கள் முகத்தையும், கையையும் வெளிக்காட்டுங்கள் என்று உத்தரவிட்டிருக்க அதற்கு மாறு செய்து தங்கள் விருப்பப்படி தங்கள் முகத்தை முஸ்லிம் பெண்கள் மறைப்பதற்கு அவர்களுக்கே உரிமை இல்லை. அவர்கள் எதை மறைக்க வேண்டும், எதை மறைக்கக் கூடாது என்பதை உத்தரவு போட தகுதியானவர்கள் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் தான். அப்படி இருக்க பெண்கள் முகத்தை மூடுவதும், வெளிக்காட்டுவதும் அவர்களின் உரிமை என்று வாதிடுவார்கள் என்றால் அவர்கள் யாரை பின்பற்றுகிறார்கள்? அவர்கள் இப்படி நடந்து கொண்டால் அவர்களின் நிலை என்ன?

அல்குர்ஆன் 33:36 மேலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே, அல்லாஹ்வுக்கும், அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஹிஜாப் சம்மந்தமாக கட்டளையிட்டதை மட்டும் முஸ்லிம் பெண்கள் பின்பற்றி இருந்தால் ஹிஜாப்பே அணியக்கூடாது என்று சட்டம் இயற்ற அவர்கள் முனைந்திருப்பார்களா? ஹிஜாப்புக்கு தடைபோடக் கூடியவர்கள் முன் வைக்கும் வாதங்களில் ஒன்று முஸ்லிம் பெண்கள் தங்கள் முகத்தையும் சேர்த்து மறைத்து வருவதால், எங்களுக்கு அடையாளப் பிரச்சனை ஏற்படுகிறது. அதனால் தான் நாங்கள் அதை தடை செய்கிறோம் என்று உண்மையில் அவர்களின் நோக்கம் ஹிஜாப்பை முற்றிலும் தடை செய்வதுதான். அதில் நமக்கும் மாற்றுக் கருத்து இல்லை, இருந்தபோதும் அதற்கு முகம் மறைப்பையும் ஒரு முக்கிய காரணமாக காட்டுகிறார்கள்.

முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதை தடை செய்ய பிறருக்கு எந்த காரணமும் இருக்க கூடாது என்பதற்காகத்தான் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மிக தெளிவான சட்டதிட்டங்களை கொடுத்திருக்கிறார்கள். அதாவது ஹிஜாப் அணியும் ஒரு பெண் பொது இடங்களுக்கு வரும்போது தனது முகம் மற்றும் கையை வெளிகாட்ட வேண்டும். அதுதான் அல்லாஹ்வின் சட்டம். ஆனால் அதை பின்பற்றாமல் பிற முஸ்லிம் பெண்களின் செயல்களை முன் உதாரணமாக காட்டி மார்க்க சட்டங்களுக்கு விளக்கம் கொடுத்த முஸ்லிம் அறிஞர்களினால் ஏற்பட்ட விளைவு தான் ஹிஜாப்புக்கான தடை.

ஹிஜாப்பை தடை செய்ய முக்கிய காரணமாக இருக்கும் முகத்திரை அணிவதை முஸ்லிம் பெண்கள் முற்றிலும் தவிர்த்துக் கொண்டால் ஹிஜாப் அணிவதை தடை செய்ய எவராலும் முடியாது. மேலும் ஹிஜாப் அணிவது முஸ்லிம் பெண்களின் உரிமை என்பதை சட்டப்பூர்வமாக போராடி நமது உரிமையை பெற அதிக வாய்ப்பாகவும் இருக்கிறது. இல்லை என்றால் அடையாள பிரச்சனை இருக்கிறது. அது இந்திய இறையாண்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது. தீவிரவாதிகள் இந்த உடையில் ஊடுருவ வாய்ப்புகள் இருக்கிறது. சமுதாய சீர்கேடுகள் நடைபெற அந்த ஆடை துணைபுரிகிறது என்று முகத்திரையை காரணம் காட்டியே ஹிஜாப் அணிவது நிரந்தரமாக தடை செய்யப்படவும் வாய்ப்புகள் இருக்கிறது.

முகம், கைவெளியில்தெரிவதுகட்டாயக்கடமை :

ஒரு பெண்ணின் கண்ணியத்தை பாது காக்கக்கூடிய ஹிஜாப் சில அறிஞர்களின் சுயவிளக்கத்தால் பிரச்சனைகளுக்கு உள்ளாகி முஃமினான பெண்களும் தங்களின் ஆடை அலங்காரங்களை மற்றவர்களுக்கு காட்டக்கூடிய நிலைக்கு வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இது முஃமினான பெண்களுக்கு ஏற்பட்டுள்ள அல்லாஹ்வின் புறத்தில் இருந்து வந்த சோதனை. தவறு செய்பவர்களுக்கு அல்லாஹ் வேதனையை இறக்கும்போது அதில் நல்லவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பது அல்லாஹ்வின் வாக்கு. அந்த வாக்கின் அடிப்படையில் இன்றைக்கு சில முஸ்லிம்கள் செய்யக்கூடிய செயல்களுக்காக ஒட்டுமொத்த முஸ்லிம் பெண்களும் பாதிக்கப்படுகிறார்கள். ஒவ்வொருவரின் மனதில் உள்ளதை அல்லாஹ் மிக அறிந்தவன் உங்களின் மனதில் உள்ள வேதனையையும், அல்லாஹ் மிக அறிந்தவன்.

எனவே முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் அணிவதற்கான தங்களின் உரிமையை மீட்க முகத்திரை அணியும் பெண்களுக்கு அல்லாஹ்வின் சட்டங்களை எடுத்துச் சொல்லி அவர்களை முகத்திரை அணிவதில் இருந்து முற்றிலும் தடுத்து முகம் மற்றும் கை மட்டும் வெளியே தெரியுமாறு ஹிஜாப் அணியச் செய்ய வேண்டும். இதனை அனைத்து முஸ்லிம் அறிஞர்களும் ஒரு மனதார ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி ஏற்றுக் கொண்டால் ஹிஜாப் சட்டம் இயற்றும் நபர்கள் முகத்திரையை ஒரு காரணமாக காட்ட இயலாது. அதன் மூலம் நாம் நமது உரிமையை பெறுவது எளிதாகும்.

மேலும் ஹிஜாப்புடன் முகத்தையும் மூடிக்கொண்டு தவறான செயல்களில் ஈடுபடும் நபர்களை உடனுக்குடன் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் அது உறுதுணையாக இருக்கும். நமது பெண்களும் துணிந்து தவறான செயல்களில் ஈடுபட முயற்சிக்கும் செயல்களும் தடுக்கப்படும். ஆக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டித்தந்த முறையில் முஸ்லிம் பெண்கள் தங்கள் முகம் கை ஆகிய பாகங்களை வெளிக்காட்டுவது கட்டாய கடமை. தங்களுடைய கடமைகளை முஸ்லிம் பெண்கள் நிறைவேற்ற வேண்டும் என்பது நமது நோக்கம். எவருடைய முன்னாலும் எம் முஸ்லிம் பெண்கள் அவமானப்படுவது நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகவே சத்தியத்தை ஆதாரங்களோடு எந்த சுயவிளக்கமும் இன்றி எடுத்து வைத்திருக்கிறோம். எங்களின் பதிவில் தவறு இருந்தால் ஆதாரங்களுடனும், எந்த சுயவிளக்கம் இன்றியும் சுட்டிகாட்டினால் திருத்திக் கொள்ள தயாராக இருக்கிறோம். இன்ஷா அல்லாஹ்.

அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டுவானாக. அவனுடைய சட்டதிட்டங்களை முழுமையாக பின்பற்றும் மக்களாக நம்மை ஆக்கி அருள்புரிவானாக.

Previous post:

Next post: