இறுதி இறைத்தூதர்(ஸல்) அவர்களின் அரஃபா தினம் வெள்ளிக்கிழமையே!

in 2022 நவம்பர்

இறுதி இறைத்தூதர்(ஸல்) அவர்களின் அரஃபா தினம் வெள்ளிக்கிழமையே!

எம்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை

துல்கஃதா மாதத்தில் ஐந்து நாட்கள் எஞ்சியிருந்தபோது மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள் :

ஆயிஷா(ரழி) அறிவித்தார்: நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் துல்கஃதா மாதத்தில் ஐந்து நாட்கள் எஞ்சியிருந் தபோது (துல்கஃதா பிறை 25ல்) புறப்பட்டோம். அப்போது நாங்கள் ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்ற எண்ணியிருந்தோம். மக்காவை நாங்கள் நெருங்கியபோது இறைத் தூதர் (ஸல்) அவர்கள், குர்பானிப் பிராணியைத் தம்முடன் கொண்டு வராதவர்கள் கஃபாவை வலம் வந்து ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடி முடித்ததும் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விடும்படி உத்தரவிட்டார்கள். தாமும் இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள். பிறகு (ஹஜ்ஜுக்காக மற்றொரு இஹ்ராம் அணிந்து கொண்டார்கள்) பிறகு, நஹ்ருடைய (துல்ஹஜ் 10ம்) நாளில் எங்களிடம் மாட்டிறைச்சி கொண்டுவரப்பட்டது. நான், “இது என்ன?’ என்று கேட்டேன். மக்கள், “இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தமது மனைவியின் சார்பாக (தியாகப் பிராணியை) அறுத்து பலியிட்டார்கள்’ என்று பதிலளித்தார்கள். புகாரி:2952,1709,1720,1638, அத்தியாயம்: 56, அறப்போரும் அதன் வழிமுறைகளும், அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி) புகாரி : 1545, அத்தியாயம்:25, ஹஜ்.

துல்ஹஜ் பிறை ஐந்தாம் நாள் மக்காவை சென்றடைந்தார்கள். உம்ராவையும் நிறைவேற்றினார்கள் :

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள் எண்ணெய் தடவித் தலைசீவி வேட்டியும், துண்டும் அணிந்து தம் தோழர்களோடு மதீனாவிலிருந்து (இறுதி ஹஜ்ஜுக்குப்) புறப்பட்டார்கள். உடல் மீது ஒட்டிக்கொள்ளும் அளவு குங்குமப்பூ தோய்க்கப்பட்ட ஆடையைத் தடை செய்தார்களேயன்றி வேட்டி, துண்டு அணிவதைத் தடுக்கவில்லை. துல்ஹுதைஃபாவிற்குக் காலை நேரத்தில் வந்தடைந்தார்கள். பிறகு தமது வாகனத்தில் ஏறி யமர்ந்து பய்தா எனும் (குன்றுப்) பகுதியின் சமதளத்தை அடைந்ததும் அவர்களும் அவர்களின் தோழர்களும் இஹ்ராம் அணிந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தில் அடையாளமாகச் சிலவற்றைத் தொங்கவிட்டார்கள். இந்நிகழ்ச்சி துல்கஃதாவில் ஐந்து நாட்கள் மீதமிருக்கும்போது நடந்தது.

துல்ஹஜ் ஐந்தாம் நாள் மக்கா சென்றடைந்தபோது கஃபாவை வலம் வந்து ஸஃபா மர்வாவிற்கு மத்தியில் ஓடினார்கள். (உம்ராவை முடித்தாலும்) அவர்கள் குர்பானியின் ஒட்டகத்தைத் தம்மோடு கொண்டு வந்ததனால், (தலைமுடி களைந்து) இஹ்ரா மிலிருந்து விடுபடவில்லை. பிறகு ஹஜ்ஜுக்கு இஹ்ராம் அணிந்த நிலையில் மக்காவின் மேற்பகுதி ஹஜுன் எனும் மலையில் இறங்கினார்கள். மக்கா வந்ததும் கஃபாவை வலம் வந்தவர்கள் அரஃபாவிலிருந்து திரும்பிய பின்னரே மீண்டும் கஃபாவிற்கு வந்தார் கள். இதற்கு இடையில் கஃபாவை நெருங்கவில்லை. தம் தோழர்களுக்குக் கஃபாவை வலம் வரவும் ஸஃபா, மர்வாவில் ஓடவும், பிறகு தலைமுடியைக் குறைக்கவும் இஹ்ரா மிலிருந்து விடுபடவும் கட்டளையிட்டார்கள். இது தம்மோடு குர்பானிக்கான ஒட்டகங்களைக் கொண்டு வராதவர்களுக்குச் சொல்லப்பட்டதாகும். இவர்களில் மனைவி யோடு வந்தவர்கள் உடலுறவு கொள்வது, நறுமணங்கள், (வண்ண) ஆடைகள் அணிவது ஹலாலாகும். புகாரி: 1545. அத்தியாயம் 25, ஹஜ்.
துல்ஹஜ் பிறை எட்டில் மறுபடி இஹ்ராம் அணிந்து மினா சென்றார்கள் :

நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் பிறை எட்டில் இஹ்ராம் அணிந்து தமது வாகனத்தில் ஏறி மினா சென்று லுஹர், அஸர், மஃரிப், இஷா, ஃபஜ்ர் என ஐந்து நேரத் தொழுகைகளை அங்கு தொழுதார்கள். (அனஸ்பின் மாலிக்(ரழி), ஜாபிர்(ரழி), இப்னு உமர்(ரழி), அதாஃ(ரஹ்), அபுல் ஸுபைர்(ரஹ்), உபைத் பின் ஜுரைஜ்(ரஹ்) அப்துல் அஸீஸ் பின் ருஃபை(ரஹ்), புகாரி: பாகம் 2, பக்கம்:379, பாடம் 82, பக்கம் 380, பாடம் 83, 1763, 1764, 1653, 1654)

துல்ஹஜ் பிறை ஒன்பதில் அரஃபா சென்றார்கள்:

நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் பிறை எட்டில் இஹ்ராம் அணிந்து தமது வாகனத்தில் ஏறி மினா சென்று லுஹர், அஸர், மஃரிப், இஷா, ஃபஜ்ர் என ஐந்து நேரத் தொழுகைகளை அங்கு தொழுதார்கள். ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்னர் சூரியன் உதயமாகி சிறிது நேரத்திற்குப் பின்னர், (துல்ஹஜ் பிறை ஒன்பதாவது நாள்) அரஃபா நோக்கிப் பயணமானார்கள். (அனஸ்பின் மாலிக்(ரழி), ஜாபிர்(ரழி), இப்னு உமர்(ரழி), அதாஃஹ்(ரஹ்), அபுல் ஸுபைர்(ரஹ்), உபைத் பின் ஜுரைஜ்(ரஹ்), அப்துல் அஸீஸ் பின் ருஃபை(ரஹ்), புகாரி:பாகம்2, பக்கம் 379, பாடம் 82, பக்கம் 380, பாடம் 83, 1763, 1764,1653,1654)

நடுப்பகல் நேரம் தாண்டியதும் தனது கஸ்வா ஒட்டகத்தில் அமர்ந்தார்கள்:

நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் பிறை எட்டில் இஹ்ராம் அணிந்து தமது வாகனத்தில் ஏறி மினா சென்று லுஹர், அஸர், மஃரிப், இஷா, ஃபஜ்ர் என ஐந்து நேரத் தொழுகைகளை அங்கு தொழுதார்கள். ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்னர் சூரியன் உதயமாகி சிறிது நேரத்திற்குப் பின்னர் (துல்ஹத் பிறை ஒன்பதாவது நாள்) அரஃபா நோக்கிப் பயணமானார்கள். அரஃபாவில் “நமிரா’ என்ற இடத்தில் அவர்களுக்காகக் கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அக்கூடாரத்தில் சூரியன் நடுப்பகலைத் தாண்டும் வரை தாமதித்திருந்தார்கள். நடுப்பகல் நேரம் தாண்டியவுடன் தனது கஸ்வா ஒட்டகத்தைத் தயார்படுத்தச் செய்து அதில் ஏறி பயணித்து “பத்னுல் வாதி’ என்ற இடத்திற்கு வந்தார்கள்.

அங்கு நபி(ஸல்) அவர்களைச் சுற்றி ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் அல்லது ஒரு இலட்சத்து நாற்பத்தி நான்காயிரம் நபித்தோழர்கள் ஒன்று கூடியிருந்தார்கள். அவர்களுக்கு மத்தியில் நின்றுகொண்டு உரையாற்றத் தயாரானார்கள். (அனஸ்பின் மாலிக்(ரழி), ஜாபிர்(ரழி), இப்னு உமர்(ரழி), அதாஃ(ரஹ்), அபுல் ஸுபைர்(ரஹ்), உபைத் பின் ஜுரைஜ்(ரஹ்), அப்துல் அஸீஸ் பின் ருஃபை(ரஹ்), புகாரி பாகம் 2, பக்கம் 379, பாடம் 82, பக்கம் 380, பாடம் 83, 1763,1764,1653,1654, அர்ரஹீக் அல்மக்தூம், 558-564) பேருரையின் இறுதியில்:

இதோ! இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு நான் சொன்ன கட்டளைகளை அறி வித்துவிடுங்கள். ஏனெனில், இச்செய்தி எவரிடம் தெரிவிக்கப்படுகிறதோ அவர், தாம் யாரிடமிருந்து இதைக் கேட்டாரோ அவரைவிட அதாவது தமக்கு இதைச் சொன்னவரை விட நன்கு புரிந்து விளக்கமுடையவர்களாக பாதுகாப்பவர்களாக, எத்திவைப்பவர்களாக இருக்கலாம் என்றார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் இப்னு சீரீன்(ரஹ்) இதை அறிவிக்கும்போது, முஹம்மத்(ஸல்) அவர்கள் உண்மை கூறினார்கள் என்று கூறுவார் கள். பிறகு, நபி(ஸல்) அவர்கள், நான் உங்களிடம் (இறைச் செய்திகள் அனைத்தையும்) சேர்த்துவிட்டேனா? என்று இரண்டு முறை கேட்டார்கள். கூடியிருந்தோர் “நிச்சயமாக நீங்கள் எடுத்துரைத்தீர்கள், நிறைவேற்றினீர்கள், நன்மையை நாடினீர்கள், என நாங்கள் சாட்சி கூறுவோம்’ என்றார்கள். அப்போது நபியவர்கள் தங்களது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்திய பின்பு மக்களை நோக்கித் திரும்பி “அல்லாஹ் இதற்கு நீயே சாட்சி’ என்று மூன்று முறை கூறினார்கள். (புகாரி: 67,1741,4406, 4409,3197,4662,5550,7447,1834,3189,4313, முஸ்லிம்: 3467,3468,2632, திர்மிதி, முஸ்னது அஹ்மத், தஃப்ஸீர் தபரீ, தஃப்ஸீர் இப்னு மர்த வைஹி, இப்னு ஜரீர், இப்னு ஹிஷாம், இப்னு கஸீர் 4:261-269.3:10,11, அர்ரஹீக் அல்மக்தூம் : பக். 558-564) அப்போதுதான்,

“இன்று உங்களது மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கிவிட்டேன் எனது அருட்கொடையையும உங்கள் மீது நான் நிறைவுசெய்துவிட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை உங்களது மார்க்கமாக ஏற்றுக் கொண்டுவிட்டேன்’ அல்குர்ஆன்5:3 எனும் வசனம் அருளப்பெற்றது. அதாவது, ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மேற்கொண்ட விடைபெறும் ஹஜ்ஜின்போது “அரஃபா தினம்’ எனப்படும் துல்ஹஜ் ஒன்பதாம் நாள் (வெள்ளிக்கிழமை) “அரஃபாப் பெருவெளியில் நபியவர்கள் தங்கியிருந்த வேளையில் தான் இத்திருவசனம்(5:3) அருளப்பெற்றது என்பதாகப் பலமான அறிவிப்புகள் பல வந்துள்ளன. (புகாரி: 4606ன் சிறு குறிப்பு: மூன்றாவது, ஃபத்ஹூல் பாரீ) மேலும்,

யூதர்களும் அறிந்த பிரபல்யமான விஷயம் தான்:

தாரிக் இப்னு யுஹாப்(ரஹ்) அவர்கள் அறிவித்ததாவது, யூதர்கள் உமர்(ரழி) அவர்களிடம், “நீங்கள் ஓர் இறைவசனத்தை ஓது கின்றீர்கள், அந்த வசனம் மட்டும் எங்களி டையே இறங்கியிருந்தால் அந்த நாளை நாங்கள் பண்டிகை நாளாக ஆக்கிக் கொண்டிருப்போம்’ என்று கூறினர். அப்போது உமர்(ரழி) அவர்கள், “அது எப்போது இறங் கியது? எங்கே இறங்கியது? அது இறங்கிய வேளையில் அரஃபா (துல்ஹஜ் 9ஆம்) நாளில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்கேயிருந்தார்கள் என்பதையயல்லாம் அறி வேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அப்போது அரஃபாவில் இருந்தோம். (இதன் மூன்றாம்) அறிவிப்பாளர் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ(ரஹ்) கூறுகிறார்கள். “இன்று உங்களின் மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கிவிட்டேன்’ எனும் (திருக்குர்ஆன் 5:3வது) வசனம் அருளப்பட்ட நாள் (சிலரின் அறிவிப்பிலுள்ளது போல்) வெள்ளிக்கிழமையாக இருந்ததா? அல்லது (வெள்ளிக்கிழமையாக) இல்லையா? என்று நான் (தீர்மானிக்க முடியாமல்) சந்தேகப்படுகிறேன் என்றார்கள். (புகாரி: 4606,4607) அத்தியாயம்:65, திருக்குர்ஆன் விளக்கவுரை. மேலும் அது ஓர் வெள்ளிக்கிழமை தான் என மற்றுமோர் ஆதாரப்பூர்வமான புகாரியின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அது பின்வருமாறு:

யூதர்களில் ஒருவர் உமர்(ரழி) அவர்களிடம், அமீருல் மூஃமினீன் அவர்களே! நீங்கள் உங்கள் வேதத்தில் ஓதிக் கொண்டிருக்கும் ஒரு வசனம் யூதர்களாகிய எங்களின் மீது இறங்கியிருந்தால் அந்த நாளை நாங்கள் ஒரு பெருநாளாக ஆக்கிக் கொண்டிருப்போம்’ என்றார். அதற்கு உமர்(ரழி) அவர்கள் “அது எந்த வசனம்?’ எனக் கேட்டார்கள். அதற்கவர் கூறினார். “இன்றைய தினம் உங்களின் மார்க்கத்தை உங்களுக்கு நிறைவு படுத்திவிட்டேன். உங்களின் மீது என்னுடைய அருள்கொடையை முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தையே உங்களுக்கான மார்க்கமாகத் திருப்தி(யுடன் அங்கீகரித்துக்) கொண்டேன்’ (எனும் திருக்குர்ஆனின் (5:3) இந்தத் திருவசனம்தான் அது என்றார்). அதற்கு உமர்(ரழி) அவர்கள் “அவ்வசனம் எந்த நாளில் எந்த இடத்தில் வைத்து நபி(ஸல்) அவர்களின் மீது இறங்கியது என்பதை நாங்கள் அறிவோம். “அரஃபா பெருவெளியில் ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் நபி(ஸல்) அவர்கள் நின்று கொண் டிருக்கும்போதுதான் (அவ்வசனம் அருளப்பட்டது என்றார்கள்) என தாரிக் இப்னு ´ஹாப்(ரழி) அறிவித்தார். புகாரி 45.

மற்றோர் அறிவிப்பில் வந்துள்ளதா வது: கஃஅப்(ரழி) அவர்கள், ஒருமுறை “இந்த வசனம் மட்டும் வேறொரு சமுதாயத்தாருக்கு அருளப்பெற்றிருந்தால் எந்த நாளில் அது அருளப்பெற்றதோ அதைக் கவனத்தில் கொண்டு அதைக் கூடி மகிழும் பண்டிகை நாளாக ஆக்கிக் கொண்டிருப்பார்கள்’ என்று கூறினார்கள். அப்போது உமர்(ரழி) அவர்கள், “கஃஅபே! அது எந்த வசனம்?’ என்று கேட்டார்கள். உடனே அவர், “இன்று உங்களது மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன் எனது அருட்கொடையையும் உங்கள் மீது நான் நிறைவு செய்துவிட்டேன் இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை உங்களது மார்க்கமாக ஏற்றுக் கொண்டுவிட்டேன்’ எனும் வசனம் என்றார். அப்போது உமர்(ரழி) அவர்கள், “அந்த வசனம் அருளப்பெற்ற நாளையும், அது அருளப்பெற்ற இடத்தையும், நான் நிச்சயமாக அறிந்துள்ளேன். துல் ஹிஜ்ஜா ஒன்பதாவது, அரஃபாவுடைய நாள் வெள்ளிக்கிழமை அருளப்பெற்றது. அல்லாஹ் புகழுக்குரியவன், அரஃபாவுடைய நாளும் வெள்ளிக்கிழமை நாளும் ஆகிய அவ்விரு நாட்களுமே நமக்குப் பண்டிகை நாட்கள்தான்’ என்றார்கள். (தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு கஸீர்: 3:19-47)

நியாயமான காரணங்கள் :

“உண்மையில் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் தோன்றிய இஸ்லாம் எனும் இறை மார்க்கம் எல்லா எதிர்ப்புகளையும் சமாளித்து முழுமை அடைந்துவிட்டதாக இறைவனே அறிவித்த நாள் ஒரு பெருநாளாகவே இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. தங்களுக்கும் இப்படியயாரு வசனம் அருளப் பெற்றிருக்குமானால் அது அருளப்பெற்ற நாளை ஒரு பெருநாளாகக் கொண்டாடியிருப்போம் என யூதர்கள் தெரிவித்தபோதுதான் இந்த வசனம் எந்த இடத்தில், எந்த நாளில், எந்தச் சூழ்நிலையில் அருளப் பெற்றது என்பது தமக்கு நன்றாகவே தெரியும் என்று உமர்(ரழி)அவர்கள் பதிலளித்தார்கள். அதாவது இவ்வசனம் அருளப்பெற்ற அரஃபாவுடைய “வெள்ளிக்கிழமை’ நாளே பெருநாள்தான் என்பதையே இந்த பதில் மூலம் உமர்(ரழி) அவர்கள் யூதர்களுக்கு சுட்டிக்காட்டினார்கள் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் ஹஜ் பயணிகளுக்கு துல்ஹஜ் மாதம் அரஃபாவுடைய ஒன்பதாம் நாள்தான் பெருநாள் ஆகும். அன்று வெள்ளிக்கிழமையாகவும் இருந்தது என்பது புகாரி: 45ஆவது ஹதீதின் அறிவிப்பாகும். (புகாரி: 4606இன் சிறு குறிப்பு, மூன்றாவது ஃபத்ஹுல் பாரீ) மேலும் பார்க்க: புகாரி: 4606,4407,45,7268) ஆகவே! ஸஹீஹான அறிவிப்புகளான இவை தவிர அரஃபாவுடைய நாள் தொடர்பாக வரும் மற்ற அனைத்து அறிவிப்புகளும், நேரடி ஆதாரமற்றதாகவும், பலவீனமான, சந்தேகமான அறிவிப்புகளாகவுமே இருக்கின்றன. எனவே!

சந்தேகமானவற்றை பின்பற்றக்கூடாது :

சந்தேகம் என்பதற்குத் தூய இஸ்லாத்தில் துளிகூட இடமில்லை. (49:1) அது போன்ற சந்தேகங்களின் பிறப்பிடமாகக் கருதப்படும். அனுமானம், யூகம், தோராயமானது, குத்துமதிப்பு போன்றவற்றுக்கும் தூய இஸ்லாத்தில் துளிகூட இடமில்லை என்பதனை பரிசுத்த அல்குர்ஆன் இவ்வாறு பேசுகின்றது.

உமக்குத் திட்டவட்டமான அறிவு இல்லாத விஷயங்களை நீர் பின்பற்ற வேண்டாம். (17:36)

பாவி ஒருவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டுவந்தால் அதைத் தீர்க்கமாக விசாரித்து அறிந்துகொள்ளுங்கள். (49:6)

இன்னும் அவர்கள் தங்களது இறைவ னுடைய (வேத) வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால் செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது (சென்று) விழமாட்டார்கள். (25:73)

(மனிதர்களில் சிலர்) இவர்களுடன் இல்லை, அவர்களுடனும் இல்லை, இரு பிரிவினர்களுக்கிடையே தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். (4:143)

அவர்களுடைய இருதயங்கள் சந்தேகத்திலேயே இருக்கின்றன. ஆகவே அவர்கள் தமது சந்தேகங்களினால் (இங்குமங்குமாக) உழலுகின்றார்கள். (9:45)

அவர்கள் ஒரு காலை முன்னெடுத்து வைத்தால் மறு காலைப் பின்னோக்கி வைக்கின்றார்கள். அவர்களுக்கு எதிலும் ஓர் உறுதியான நிலைப்பாடு கிடையாது. அவர்கள் தடுமாற்றத்திற்கும் அழிவுக்கும் ஆளான மக்கள் ஆவர். அவர்கள் இவர்களுடனும் இல்லை, அவர்களுடனும் இல்லை.  (தஃப்ஸீர் இப்னு கஸீர் : 4, பக்கம் 289, 290)

மேலும் மனிதர்களில் சிலர் இருக்கின்றார்கள். அவர்கள் (அந்தப் பக்கமும் இல்லாமல், இந்தப் பக்கமும் இல்லாமல் மதில்மேல் பூனை போன்று) விளிம்பில் நின்றுகொண்டு அல்லாஹ்வை வணங்குகின்றனர். அவர்கள் இம்மையும் இழந்து விட்டார்கள். மறுமையையும் இழந்து விட்டார்கள். இதுதான் பகிரங்கமான நஷ்டமாகும். (22:11)

அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். அனுமானம், யூகம், சந்தேகமானவற்றைப் பின்பற்றுவது என்பது எவ்வளவு பெரிய பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. மேலும் அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்கள் கூறுவதைப் பாருங்கள்.

உமக்கு சந்தேகம் ஏற்படுத்துவதை விட்டும் விலகிவிடுவீராக! சந்தேகமற்ற உறுதியான விஷயங்களின் பால் நீர் சென்று விடுவீராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறி னார்கள். நுஃமான் பின் பUர்(ரழி) ஹஸ்ஸான்பின் அபீ ஸனான்(ரஹ்), புகாரி பாகம் 2, பக்கம் 700, பாடம் 3, ஹதீத் எண். 52, திர்மிதி, அஹ்மத்)

உமக்கு சந்தேகம் ஏற்படுத்துவதை விட்டும் விலகிவிடுவீராக! உமக்கு சந்தேகம் ஏற்படாதவைகளின் பக்கமாகச் சென்று விடுவீராக! நிச்சயமாக உண்மையானது அமைதி, பொய்யானது சந்தேகம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூ முஹம்மது ஹஸன் இப்னு அலி(ரழி), திர்மிதி, 2518, ரியாதுஸ் ஸாலிஹீன்: 55,593.

எவர் சந்தேகத்திற்கிடமானவைக ளைத் தவிர்த்துக் கொள்கின்றாரோ அவர் தனது மார்க்கத்திற்கும் தனது மானம் மரியாதைக்கும் களங்கம் ஏற்படுத்துபவைகளை விட்டும் விலகித் தூய்மையானவராகி விடுகின்றார். எவர் சந்தேகமானவைகளில் போய் விழுகின்றாரோ அவர் பாவமானவைகளில் சென்றுவிடக் கூடும். எச்சரிக்கை! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: நுஃமான் பின் பUர்(ரழி) அவர்கள் புகாரி: 52, ரியாதுஸ் ஸாலிஹீன் 588, முஸ்லிம்:1599) “அரஃபா’ தினம் தொடர்பான சந்தேகமான விசயங்களைத் தவிர்த்து சந்தேகமற்ற பலமான அறிவிப்புகளின்பால் செல்வோமாக.

Previous post:

Next post: