சோதனைகளின்போது பொறுமை கொள்ள வேண்டும்

in 2022 நவம்பர்

சோதனைகளின்போது பொறுமை கொள்ள வேண்டும்

அபூ அஸீம்,  இலங்கை

ஃபிர்அவ்னின் மனைவி ஆஸியா பின்த் முஸாஹிம்(ரழி) அவர்களுடைய இரண்டு கைகளையும், கால்களையும் கயிற்றால் இறுகக் கட்டி அவனின் முன்னிலையிலேயே முளைகளில் பிணைக்கப்பட்டு வெயிலில் கிடத்தப்பட்டுக் கொடுமையான வேதனைக்கு உள்ளாக்கப்படுபவராக இருந்தார். அப்போதும் அவர் “பொறுமையாகவே’ இருந்தார். இவ்வாறாகக் கொடுமைப்படுத்தப்பட்ட நிலையிலேயே அவனது கண் முன்னாலேயே அவருடைய உயிர் கைப்பற்றப்பட்டு அவர் மரணத்தைத் தழுவினார். (ஸல் மான் ஃபார்ஸி(ரழி), இப்னு ஜரீர் தபரீ(ரஹ்), தஃப்ஸீர் இப்னு கஸீர், பாகம் 9, பக்கம் 530-534) அதனை நபி(ஸல்) அவர்களும் குறிப்பிட்டுப் போற்றியவர்களாக;

ஆண்களில் நிறையப் பேர் முழுமைய டைந்திருக்கிறார்கள், பெண்களில் ஃபிர்அவ்னின் துணைவியார் ஆஸியாவையும், இம்ரானின் மகள் மர்யமையும் தவிர வேறெவரும் முழுமையடையவில்லை என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூ மூஸா அஷ்அரி(ரழி) புகாரி 3411, 3433, 3769,3770,5418, 5419, முஸ்லிம்: 4816, திர்மிதி:1757) ஆனாலும் மர்யம்(அலை) அவர்களும் வசை பாடுபவர்களால் கடுமையாகச் சோதிக்கப்பட்டார்கள்.

பின்னர் (மர்யமாகிய) அவர் தமது குழந்தையைச் சுமந்துகொண்டு தமது சமூகத்தாரிடம் வந்தார். (அப்போது) அவர்கள் மர்யமே “நீ வினோதமான காரியத்தைச் செய்து விட்டாய்” என்று கூறினார்கள்.

ஹாரூனின் சகோதரியே! உனது தந்தை கெட்ட மனிதராக இருந்ததில்லை, உனது தாயும் நடத்தை கெட்டவராக இருக்க வில்லை என்றும் கூறினார்கள். (அல்குர்ஆன் 19:27-28)

அப்போது (மர்யமாகிய) அவர் தமது குழந்தையைச் சுட்டிக்காட்டினார். அதற்கு (மர்யம் தங்களை அலட்சியம் செய்கிறார் என்றும், கேலி செய்கிறார் என்றும் எண்ணி ஆத்திரமடைந்த) அவர்கள் (கோபம் கொண்டு) தொட்டில் குழந்தையாக உள்ளவரிடம் நாங்கள் எப்படிப் பேசமுடியும்? (தொட்டில் குழந்தையிடம் பேசுமாறு தமக்கு உத்தரவிட்டதன் மூலம் மர்யம் நம்மைக் கேலி செய்துவிட்டார். இது அவர் செய்த மானக் கேடான செயலை விட மிகவும் கடுமையானது என்று கேட்டார்கள். (19:29, சுத்தீ(ரஹ்), தஃப்ஸீர் இப்னு கஸீர், பாகம் 5, பக்கம் 581-587) மேலும், நீ ஒரு தூய்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். அக்குடும்பம் இறைவழிபாடுகளில் முதன்மையாகவும், சீர்மை, உலகப் பற்றின்மை ஆகிய நற்குணங்களுக்குப் பெயர் போனதாகவும் இருக்கும் நிலையில் இக்குடும்பத்தில் பிறந்த உன்னிடமிருந்து இத்தகைய ஒரு இழி செயல் எப்படித் தோன்றியது? என்றார்கள். (இப்னு ஜரீர்(ரஹ்), தஃப்ஸீர் இப்னுகஸீர் பாகம் 5, பக்கம் 581-587)

மர்யமின் மீது கற்பொழுக்கமில்லாதவர் என அவர்கள் குற்றம் சாட்டினார்கள் என்பதாக இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களும், மர்யம்(அலை) அவர்களைக் கற்பொழுக்கமில்லாதவர் என்றும், தவறான உறவின் மூலமே அவர் ஈஸாவைப் பெற்றெ டுத்தார் என்றும், மர்யம்(அலை) அவர்கள் மீதும், அவருடைய மைந்தர் ஈஸா(அலை) அவர்கள் மீதும் பெரும் குற்றங்களைச் சுமத்தினார்கள், அவமானப்படுத்தினார்கள். சுத்தீ(ரஹ்) அவர்களும், அவர்களில் சிலர் அப்போது மர்யமுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தது என்றும் கூடுதலாகக் கூறினார்கள் என்பதாக இப்னு கஸீர்(ரஹ்) அவர்களும் விளக்கம் கூறியுள்ளார்கள். (தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 2, பக்கம்:787-819)

விதையின்றி எங்கேனும் விருட்சம் முளைக்குமா? வித்தின்றி பயிர்தான் முளைக்குமா? தந்தையின்றிக் குழந்தை பிறக்குமா? என்றெல்லாம் கேட்டார்கள்.

பிறக்கப்போகும் குழந்தையால் தமக்குச் சோதனை ஏற்படும் என்பதையும் இக்குழந்தை விஷயத்தில் தமது நிலையை மக்கள் உரிய முறையில் அணுகப் போவதுமில்லை, தாம் கூறும் விஷயங்களை அவர்கள் நம்பப்போவதுமில்லை, இனி அவர் களின் எண்ணத்தில் தவறான நடத்தை யுள்ள பெண்ணாகிவிடுவேன் என்பதை இஸ்ரவேலர்கள் மத்தியில் ஆச்சாரமும், இறை வழிபாடுகளில் ஆர்வமும் உள்ள பெண் என்று பெயர் எடுத்த மர்யம்(அலை) தெளிவாகப் புரிந்துகொண்டார்கள். ஆனாலும் வேறு வழியில்லை “உண்ணா நோன்பிருந்து’ அழகிய “பொறுமையை’ மேற்கொண் டார்கள். (தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம்5, பக்கம் 571-577) இவ்வாறெல்லாம் மர்யமின் மீது மிகப் பெரும் அவதூறைச் சுமத்தியதா லும் அவர்களை நாம் சபித்தோம். (4:156)

ஹிஜ்ரி ஒன்பதில் நடைபெற்ற தபூக் போரின் போது கஅப்பின் மாலிக்(ரழி) அவர்கள் ஆரம்ப அணியில் சேர்த்து கொள்ளாமல் வேகமாகச் செல்லும் குதிரையில் ஏறிச் சென்று இணைந்து கொள்ளலாம் என்றெண்ணி இன்று நாளை என்றிருக்கையில் யுத்தம் முடிவுற்று படையினரும் மதீனாவுக்குத் திரும்பி வந்துவிட்டார்கள், இந்நிலையில், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் முன்னால் சென்று, சலாம் சொன்னபோது கோபத்திலிருப்பவர் எவ்வாறு ஏளனமாகப் புன்னகைப்பாரோ அதுபோலவே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களும் புன்னகைத்தார்கள். என் முன்னே இருக்க வேண்டாம் எழுந்து செல்வீராக, உமது விஷயத்தில் அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான் என்றார்கள். முஸ்லிம்கள் யாரும் முராரா பின் ரபீஉ அல்அம்ர்(ரழி) ஹிலால் பின் உமைய்யா(ரழி) கஅப் பின் மாலிக்(ரழி) ஆகிய மூவரிடம் மட்டும் பேசக்கூடாது என்று தடை விதித்தார்கள்.

எனவே அந்த மூவரிடமும் எந்த முஸ்லிமும் பேசுவதில்லை முகம் வெறுத்தவர்களாக அவர்கள் விஷயத்தில் முற்றிலுமாக மாறித் தூரமானார்கள். இந்த உலகமே அவர்களுக்கு அன்னியமாக மாறிவிட்டது. இந்நிலையில் ஐம்பது நாட்கள் கழிந்தன.

யாருமே சலாம் சொல்வதில்லை. இவர்கள் சலாம் சொன்னால் கூட நபியவர்களோ, மற்றவர்களோ பதில் சலாம் சொல்வதில்லை, வெறுப்புடன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார்கள். இதனிடையே கஸ்ஸான் நாட்டின் இறை நிரா கரிப்பாளரான அரசனிடமிருந்து தம்முடன் வந்து சேரும்படி அழைப்புக் கடிதம் வந்தது.

நாற்பது நாட்கள் கழிந்தபோது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து வந்த ஒரு தூதர் மனைவியை விட்டும் விலகிவிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

இதுவோ ஒட்டுமொத்த சமூகப் புறக்கணிப்பு செய்யப்பட்டதொரு கொடிய நிலையாகும். பூமி விசாலமானதாக இருந்த போதிலும் அவர்களைப் பொறுத்தவரை அது மிகவும் சுருங்கிவிட்டது. அவர்களது உள்ளங்களும் சோதனைகளால் சுருங்கி விட்டது அல்லாஹ்வை விட்டும் தப்பிக்க அவனிடமே தவிர வேறு போக்கிடம் இல்லை எனும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள், பொறுமையை மேற்கொண்டார்கள், சரியாக ஐம்பது நாட்கள் கழித்து, ஏழு வானங்களையும் தாண்டி நற்செய்தி வந்தது. சுருக்கம் முழு விபரமறிய பாருங்கள். (9:118, 119, புகாரி பாகம் 6, பக்கம் 598, பாடம, 53, பக்கம் 740, சிறு குறிப்பு: 88,27 & 4418,4673-4678,2265, 2973,2947, 2948, 3951, 3889, 3556, 2757, 6255, 6690, 7225)

இஸ்லாத்தை ஏற்றதற்காக மாறு கை, மாறு கால் வாங்கியபோதும் பொறுத்துக் கொண்ட சூனியக்காரர்கள் :

மூஸா தமது கைத்தடியைக் கீழே எறிந்தார். உடனே அது (பெரும் பாம்பாக மாறி) அவர்களுடைய பொய்(ப் பாம்பு)களை (யயல்லாம்) விழுங்கிவிட்டது. (இதைப் பார்த்தவுடன் உண்மையை அறிந்த) சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தனர். அகிலங்களெல்லாவற்றின் இறைவன் மீது நாங்கள் இறை நம்பிக்கை கொண்டோம். “அவனே மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் இறைவனாவான்’ என்றும் கூறினார்கள். அதற்கு ஃபிர்அவ்ன் (அவர்களை நோக்கி) உங்களுக்கு நான் அனுமதி கொடுப்பதற்கு முன்னரே நீங்கள் அவர்மேல் இறை நம்பிக்கை கொண்டுவிட்டீர்களா? நிச்சயமாக இது ஒரு சூழ்ச்சியாகும் இவர்தான் உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்த குரு வானவராகும். இந்நகரவாசிகளை அதிலிருந்து வெளியேற்றுவதற்காக மூஸாவுடன் சேர்ந்து நீங்கள் செய்த சூழ்ச்சியேயாகும். இதன் விளைவை நீங்கள் அதிவிரைவில் அறிந்து கொள்வீர்கள். நிச்சயமாக நான் உங்கள் கைகளையும், கால்களையும் மாறு கை, மாறு கால் வாங்கி உங்கள் யாவரையும் சிலுவையில் அறைந்து (கொன்று) விடுவேன் என்று கூறினான்.

அதற்கு அவர்கள் (அவ்வாறாயின் அதனால் எங்களுக்கு) எந்தக் கெடுதியும் இல்லை. நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் தான் திரும்பிச் செல்வோம். (எனவே இதைப்பற்றி எங்களுக்குக் கவலை இல்லை) எங்கள் இறைவன் எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னித்து விடுவான் என்று நாங்கள் ஆதரவு வைக்கின்றோம் என்றும் கூறினார்கள்.

மேலும், எங்களுக்கு எங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள அத்தாட்சிகளை நாங்கள் நம்பினோம் என்பதற்காகவே நீ எங்களைப் பழிவாங்குகிறாய்! என்று கூறி “எங்கள் இறைவனே! எங்கள் மீது “பொறுமையையும்’ மன உறுதியையும் பொழிவாயாக! முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி) எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!’ (எனப் பிரார்த்தித்தனர்). அல்குர்ஆன் 7:120-126, 20:70-73, 26:46-51 என்பதாக சோதனைகளின்போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாக அவர்களைக் குறித்து அல்லாஹ் அதிசயித்துக் கூறுகின்றான். மேலும்,

நிராகரிப்பவர்களாகிய அவர்களது பலவிதமான பேச்சின்போதும் பொறுமை வேண்டும்:

ஆகவே (நபியே!) அவர்கள் (பலவிதமாகச்) சொல்வதை(எல்லாம்) நீர் பொறுத்துக் கொள்வீராக. இன்னும் சூரியன் உதிப்பதற்கு முன்னும், அது அடைவதற்கு முன்னும், இரவின் நேரங்களிலும் உம்முடைய இறைவனின் புகழைத் துதித்துத் தொழுவீராக! மேலும், இன்னும் பகலின் (இரு) முனைகளிலும் இவ்வாறே துதி செய்து தொழுவீராக! இதனால் (நன்மை களடைந்து) நீர் திருப்தி பெறலாம். (அல்குர்ஆன் 20:130)

இவர்கள் (பலவிதமாகவும்) கூறுவதைப் பற்றிப் பொறுமையுடன் இருப்பீராக! இன்னும், வல்லமையுள்ள நமது அடியார் தாவூதையும் நினைவு கொள்வீராக! நிச்சயமாக அவர் (எந்நிலையிலும் நம்மையே பொறுமையுடன்) நோக்குபவராக இருந்தார். (38:17)

தண்டிப்பதை விடப் பொறுத்துக் கொள்வதே மேலானது :

(முஃமின்களே!) நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் எந்த அளவிற்கு நீங்கள் தண்டிக்கப்பட்டீர்களோ? அதுபோன்ற அளவுக்கே நீங்களும் தண்டியுங்கள். (ஆனாலும் பொறுத்துக் கொண்டால், நிச்சயமாக அதுவே பொறுமையாளருக்கு மிக்க மேன்மையானதாகும்) (16:126)

அதுவும், “ஏக இறைவனுக்காகவே பொறுமை வேண்டும்’ இன்னும், உமது இறைவனுக்காகப் பொறுமையுடன் இருப்பீராக. (அல்குர்ஆன் 74:7)

இன்னும் அவர்கள் எத்தகையோரென் றால் தங்கள் இறைவனின் பொருத்தத்தைத் தேடி, “பொறுமையைக்’ கடைப்பிடிப்பார்கள். தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள். நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் (நன்முறையில்) செலவு செய்வார்கள். நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்வார்கள். இத்தகையோருக்கே மறுமையில் (சுவனபதி என்னும்) நல்ல வீடு இருக்கின்றது. (அல்குர்ஆன் 13:22)

இவர்கள் தமது (சோதனைகளின் போது ஏற்படும் துன்பங்களைப் பொறுமையுடன்) சகித்துக்கொண்டு தமது இறைவன் மீது முற்றிலும் சார்ந்து (அவன் மீதே) முழு நம்பிக்கை வைப்பவர்கள் ஆவர். (16:42)

Previous post:

Next post: