ஜும்ஆ குத்பா!

in 2022 நவம்பர்

ஜும்ஆ குத்பா!

K.M.H. அபூ அப்தில்லாஹ்

மறு பதிப்பு :

முஸ்லிம்கள் வாரத்தின் ஒரு நாள் ஒன்று கூடி மார்க்க உபதேசம் (குத்பா) பெறும் நாளாக வெள்ளிக்கிழமையை அல்லாஹ் அளித்து அருள்புரிந்திருக்கிறான். இதேபோல் வாரத்தில் ஒருநாள் ஒன்று கூடும் நாளாக யூதர்களுக்கு சனிக்கிழமையையும், கிறிஸ்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமையை யும் அல்லாஹ் அளித்திருந்தான். யூதர்களும், கிறிஸ்தவர்களும் எப்படி அந்த நாட்களை அல்லாஹ்வின் கட்டளைப்படி செலவிடாமல், தங்களின் மனோ இச்சைப்படி ஆக்கிக் கொண்டார்களோ அதேபோல் முஸ்லிம்களும் வெள்ளிக்கிழமை ஜும் ஆவை-ஜும்ஆ குத்பாவை அல்லாஹ்வின் கட்டளைப்படிச் செய்யாமல், தங்களின் மனம்போன போக்கின்படி செயல்பட்டு ஜும்ஆ குத்பாவை ஒரு வெற்றுச் சடங்காக ஆக்கி இருக்கிறார்கள். ஜும்ஆ நேரத்தில் பெரும்பான்மை முஸ்லிம்கள் செய்யும் செயல்பாடுகள் நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளதற்கு முரணாக அமைந்துள்ளதை அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

இன்று நமது இந்திய நாட்டில் ஜும்ஆவுடைய தினத்தில் என்ன நடைபெறுகிறது. என்று பார்க்கும்போது, நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில் ஜும்ஆவுடைய பாங்கு ஒன்றாக இருந்ததை இவர்கள் இரண்டாக அதிகப்படுத்தி இருக்கிறார்கள். நபி(ஸல்) அவர்களது காலத்தில் அவர்கள் ஒரு தடியையோ அல்லது வாளையோ பிடித்துக் கொண்டே ஜும்ஆ உரை நிகழ்த்தினார்கள்; எனவே நாங்களும் இந்த நவீன காலத்திலும் அதே வாளையோ, தடியையோ பிடித்துக் கொண்டுதான் உரை நிகழ்த்துவோம்; அதுவும் அரபியில்தான் உரை நிகழ்த்துவோம்; என்று செயல்படுகிறார்கள். இந்த அறிஞர்களின் போக்கு எப்படி இருக்கிறதென்றால் மார்க்கத்தின் சத்தையும், சாரையும் விட்டு வெறும் சக்கையை மட்டுமே மார்க்கமாக – மதமாக கொள்வோம் என்று கூறும் மற்ற நபிமார்களின் உம்மத்திலுள்ள புரோகிதர்களின் அதே பிடிவாத போக்கே முஸ்லிம் மதப் புரோகிதர்களிடம் காணப்படுகிறது.

குத்பா-பிரசங்கம் தங்கள் முன்னே அமர்ந்துள்ள மக்களுக்காகச் செய்யப்படுவதாகும். எனவே அந்த மக்கள் புரிந்து கொள்ளும் நிலையில் அவர்களது மொழியில் இருக்க வேண்டும்; அதுவே குத்பா-பிரசங்கம் என்ற சாதாரண அடிப்படை உண்மையைக் கூட புறந்தள்ளும் மார்க்க அறிஞர்களையே பார்க்க முடிகிறது. மக்கள் எங்கள் உபதேசத்தைப் புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை; அவர்கள் ஜும்ஆவுடைய நேரத்தில் பள்ளிக்கு வந்து குறட்டை விட்டு தூங்கினாலும் பரவாயில்லை. அவர் களுக்குப் புரியாத அரபி பாஷையில் தான் எங்களது குத்பாவை -பிரசங்கத்தை நாங்கள் செய்து முடிப்போம் என்ற வீராப்போடு பேசுகிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம்! நபி(ஸல்) அவர்கள் தங்களது குத்பாவை – பிரசங்கத்தை அரபி பாஷையில் நிகழ்த்தினார்கள் என்பதுதான்.

அது சரி! அன்று நபி(ஸல்) அவர்கள் முன்னிலையில் அமர்ந்திருந்தவர்கள் அரபி மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களா? அல்லது நம்மைப் போல் தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்களா? அரபிமொழியைத் தாய் மொழியாகக் கொண்டிருந்தவர்களுக்கு முன்னால் நபி(ஸல்) அவர்கள் அந்த மக்களுக்குப் புரியும் வகையில் அவர்களின் தாய் பாஷையான அரபியில் குத்பா-பிரசங்கம் செய்தார்கள். இப்போது அதேபோல் தமிழ் பேசும் மக்கள் முன்னால் குத்பா- பிரசங்கம் செய்யும் அறிஞர்கள் அவர்களின் தாய்மொழியான தமிழில் குத்பா-பிரசங்கம் செய்யவேண்டும் என்ற சாதாரண அடிப்படை உண்மையைக் கூட புரியாதவர்களாகவா இருக்கிறார்கள்? அல்லது நபி (ஸல்) அவர்கள் தங்களுக்கு முன்னால் அமர்ந்திருக்கும் மக்களுக்குப் புரியாத நிலையில் அவர்கள் அறியாத மொழியில் குத்பா – பிரசங்கம் செய்தார்கள். அதைப் பின்பற்றியே நாங்கள் தமிழ் பேசும் மக்கள் முன்னிலையில் அவர்கள் புரியாத நிலையில் அரபியில் குத்பா-பிரசங்கம் செய்கிறோம் என்கிறார்களா?

தங்களுக்கு முன்னால் அமர்ந்திருக்கும் தமிழ் பேசும் மக்களுக்குப் புரியாத அரபி பாஷையில் குத்பா-பிரசங்கம் செய்வதற்கு இந்த அறிஞர்கள் கூறும் இன்னொரு காரணம் என்ன தெரியுமா? குத்பா-பிரசங்கமும் வணக்க வழிபாடான தொழுகையைச் சார்ந்தது. எனவே தொழுகையை அரபியில் நிறைவேற்றுவது போல், குத்பாவையும்-பிரசங்கத்தையும் அரபியில் செய்கிறோம் என்பதாகும். அதாவது இந்த அறிஞர்களின் கருத்துப்படி நான்கு ரகாஅத்துகளாக இருக்கும் லுஹர் தொழுகையை ஜும்ஆ தினத்தில் இரண்டு ரகாஅத்தாகத் தொழுவதால் எஞ்சிய இரண்டு ரகாஅத்திற்குப் பதிலாக இந்த குத்பா-பிரசங்கம் இருக்கிறது.

எனவே தொழுகையை அரபியில் நிறைவேற்றுவது போல், குத்பா-பிரசங்கத்தையும் அரபியிலேயே செய்ய வேண்டும் என்கிறார்கள். இவர்கள் கூறுவது போல் இரண்டு ரகாஅத் திற்குப் பகரமாக இந்த குத்பா-பிரசங்கம் இருக்கிறது என்பதற்கு ஒரு ஹதீத் ஆதாரமுமில்லை. இவர்களது யூகமாக, அனுமானமாக இப்படி ஒரு கருத்தை வெளியிட்டு இருக்கிறார்களே அல்லாமல் நபிவழியில் ஆதாரத்தை இவர்களால் தரமுடியாது. ஹதீது ஆதாரப்படி இந்த குத்பா-பிரசங்கம் கடமையானது. அதனால் குத்பா-பிரசங்கம் இல்லாத நிலையில் ஜும்ஆ தொழுகை நிறைவேறாது என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. குத்பா-பிரசங்கம் இல்லாத நிலையில் ஜும்ஆவிற்கு இரண்டு ரகாஅத்துகள் தொழுதாலும் நிச்சயம் ஜும்ஆ நிறைவேறிவிடும். மக்களுக்கு பலனளிக்கக் கூடிய குத்பா-பிரசங்கத்தை கைவிட்ட குறைதான் இருக்கும். குத்பா-பிரசங்கம் அரபியில் செய்வதும் அல்லது செய்யாமல் விடுவதும் இரண்டும் ஒன்றுதான். மற்றபடி மக்களுக்கு உபதேசம் செய்யவேண்டும் என்ற அசல் குறிக்கோள் இவர்கள் அரபியில் குத்பா-பிரசங்கம் செய்வதால் நிறைவேறுவதில்லை. இதோ முதல் ஜும்ஆ பற்றி அவர்களின் மாத இதழ் ஒன்றில் எழுதியுள்ளது வருமாறு:

முதல் ஜும்ஆ!

பனுஸாலிம் எனும் குலத்தார் வாழும் பிரதேசத்தை அடைந்ததும், மதிய தொழுகை நேரம் வந்துவிட்டதால், பெருமானார் (ஸல்) அவர்கள் “ஜும்ஆ’ தொழுகையை அங்கேயே நிறைவேற்றினர்! தொழுகைக்கு முன்னர், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு வணக்கத்தின் முக்கியத்துவம் பற்றியும், பக்தி(இறையச்சம்)- நேர்மை ஆகியவற்றின் அவசியம் பற்றியும் அழகியதோர் உபதேசம் (சொற்பொழிவு) செய்தனர். இதற்குத்தான் “ஜும்ஆ குத்பா’ என்று பெயர்! பெருமானார்(ஸல்) அவர் களின் முதல் ஜும்ஆ தொழுகையும், முதல் குத்பாவும் இதுவேயாகும்.

ஆக இவ்வளவு அழகாகவும் தெளிவாகவும் ஜும்ஆ குத்பா-பிரசங்கம் பற்றி எழுதி விட்டுத்தான் அதன் பின்னர் மார்க்க பிக்ஹு சட்ட நூல்களில் இந்த குத்பா பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று கூறி குட்டையைக் குழப்பி இருக்கிறது அந்த மாத இதழ். ஆக குர்ஆன், ஹதீதில் தெள்ளத் தெளிவாக உள்ள விஷயங்களை குழப்பி, குழப்பிய குட்டையில் மீன் பிடிப்பதுதான் பிக்ஹு கலை-மத்ஹபுகள். குர்ஆன், ஹதீதில் உள்ளதை தெளிவுபடுத்துவது பிக்ஹு கலை அல்ல; தெளிவாக இருப்பதைக் குழப்பி-இலேசாக இருப்பதைக் கஷ்டமாக்கி மக்களின் உள்ளங்களில் மார்க்கக் கடமைகளைக் கடைபிடித்து நடப்பது சாத்தியமில்லாத செயல் என்ற எண்ணத்தை வளர்த்து மக்களை மார்க்கத்தை விட்டும் தூரப்படுத்துவது தான் பிக்ஹு கலை-மத் ஹபுகள். இதற்கு இதுபோல் எண்ணற்ற ஆதாரங்களை இங்கு தரமுடியும். ஆனால் அது இக்கட்டுரையின் நோக்கமல்ல.

ஆனால் ஜும்ஆ தினத்தில் மக்களுக்கு வணக்கத்தின் முக்கியம், பக்தி(தக்வா), நேர்மை, கடமை தவறாமை போன்ற நல்லு பதேசங்களை எடுத்துச் சொல்வதுதான் ஜும்ஆ குத்பா-பிரசங்கம் என்பதை அவர்களே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள் என்பது தான் நமது கவனத்திற்கு உரியது. அப்படியானால் இந்த உபதேசம் அவரவர்களின் தாய்மொழியில் இருந்தால்தான் அந்த மக்கள் அந்த உபதேசத்தை விளங்க முடியும் என்பதை பாமரனும் ஒப்புக்கொள்வான். ஆனால் இந்த மார்க்க அறிஞர்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள்.

ஆனால் இந்தக் குறையைப் போக்க இந்த மார்க்க அறிஞர்கள் இன்னொரு பித்அத்தை-புதுமையை புதிதாக உருவாக்கி இருக்கிறார்கள். ஜும்ஆ குத்பா-பிரசங்கம் இரண்டு என்று இருப்பதை இவர்கள் மூன்றாக ஆக்கி இருக்கிறார்கள். அதுவும் ஜும்ஆவின் அசலான-நபிவழியான பாங்கிற்கு முன்னர் மக்களுக்கு தமிழில் உபதேசம் செய்கிறோம் என்ற சாக்கில் பெரும்பாலும் கற்பனைக் கதைகளையும், கட்டுக்கதைகளையும் பெரியார்களின் பெயரால் அவிழ்த்து விடுகிறார்கள். இவர்களின் இந்த உபதேசத்தை மார்க்கத்தை முறையாக குர்ஆன், ஹதீத்படி விளங்கியவன் கேட்கச் சகிக்காது, அடக்க முடியாத ஆத்திரமும், கோபமும் தான் வரும்.

ஆனால் இந்த மார்க்க அறிஞர்களோ குர்ஆனுக்கும், ஹதீதுக்கும் முரண்பட்ட இப்படிப்பட்ட கட்டுக்கதைகளைத் தான் மார்க்கமாக அப்பாவி மக்களுக்கு உபதேசிக்கின்றனர். அசலான ஜும்ஆ குத்பாவை – பிரசங்கத்தை மக்களுக்குப் புரியாத நிலையில் அரபியில் செய்கிறவர்கள், ஜும்ஆ பாங்குக்கு முன்னால் பித்அத்தாகச் செய்யக் கூடிய குத்பாவில்-உபதேசத்தில் கட்டுக்கதைகளைச் சொல்லி அப்பாவி முஸ்லிம்களின் உள்ளத்தில் நஞ்சைக் கலக்கிறார்கள். முதலில் ஜும்ஆ தினத்தில் ஜும்ஆ பாங்கிற்குப் பிறகு செய்யப்படும் ஜும்ஆ குத்பா- பிரசங்கத்திற்கு முன், கூட்டு அமல் எதுவுமே செய்யக்கூடாது என்ற நபி (ஸல்) அவர்கள் கட்டளையை மீறுகிறார்கள்; அந்த

ஹதீத் வருமாறு :

நபி(ஸல்) அவர்கள் பள்ளியில் விற்பதையும், வாங்குவதையும், தவறி விட்டதைத் தேடுவதையும், கவி பாடுவதையும், வெள்ளிக்கிழமை ஜும்ஆவுக்கு முன்னர் அங்கு கூட்டமாகக் கூடுவதையும் தடை செய்தனர். அறிவிப்பவர்: அம்ருப்னு ஷிஐப் (ரழி), நூல் : சுனன். நஸயீ : 714

இந்த ஹதீத்படி வெள்ளிக்கிழமை ஜும்ஆவின் அசலான-நபிவழியிலான பாங்கிற்குப் பின் ஜும்ஆ குத்பா-நிகழ்த்தப்பட வேண்டும். கதீப்(பிரசங்கி) மிம்பரில் ஏறிய பின்னர் கொடுக்கப்படும் பாங்கே நபிவழியிலான பாங்காகும். அந்த பாங்கிற்கு முன்னர் பள்ளியில் கூட்டமாகக் கூடி கூட்டு அமல் (இஜ்திமாயி அமல்) செய்வதை நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள் என்பதை மேலே எடுத்து எழுதியுள்ள ஹதீத் உறுதிப்படுத்துகிறது. ஆனால் இன்றைய மார்க்க அறிஞர்கள் நபி(ஸல்) அவர்களின் கட்டளைக்கு முரணாக அசலான பாங்கிற்கு முன்னால் மக்களுக்கு உபதேசம் செய்கிறார்கள்.

இந்த வகையிலும் இது மார்க்க முரணான ஒரு செயலாகும். ஒரு வகையில் ஜும்ஆ குத்பா-இரண்டு என்பதற்கு முரணாக மூன்று குத்பா-ஆக்குவது; மறுவகையில் ஜும்ஆவிற்கு முன்னர் ஜும்ஆ பாங்கிற்கு முன்னர் கூட்டம் கூட்டி உபதேசம் செய்வது; ஆக இன்றைய மார்க்க அறிஞர்கள் யூத, கிறிஸ்தவ மார்க்க அறிஞர்களைப் போல் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு முரண்பட்டு நடக்க முற்படுகிறார்களே அல்லாமல் அல்லாஹ்வுக்கு முறையாக அஞ்சி, அல்லாஹ்வின் கட்டளைகளின்படியும், நபி (ஸல்) அவர்களின் நடைமுறைகளின்படியும் அவர்களும் நடப்பதாக இல்லை; மக்களையும் அந்த வகையில் தூண்டுவதாக இல்லை. யூத, கிறிஸ்தவ மார்க்க அறிஞர்கள் (மக்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கிறார்கள். (9:34) என்று அல்லாஹ் கூறுவதுபோல் முஸ்லிம் மார்க்க அறிஞர்களும் முஸ்லிம்களை அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கிறார்கள்.

லுஹரின் 4 ரகாஅத்தில் இரண்டு ரகாஅத்துகளுக்குப் பகரமாக இந்த ஜும்ஆ குத்பா இருக்கிறது. எனவே தொழுகை அரபியில் இருப்பது போல் ஜும்ஆ குத்பாவும்-உபதேசமும் அரபியில்தான் இருக்க வேண்டும் என்ற இந்த மார்க்க அறிஞர்களின் கூற்றும் மிகத் தவறானதாகவே இருக்கிறது. தொழுகை அல்லாஹ்வுக்காக நிறைவேற்றப்படுவது, தொழுகையை இமாமும், முக்ததிகளும் கிப்லாவை நோக்கி நிறைவேற்றுகிறார்கள். தொழுகையில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட செயல்களையும், அந்தந்த இடத்தில் ஒத வேண்டியதையும் மட்டுமே கடைபிடிக்க வேண்டும். மேலதிகமாக ஒன்றையும் செய்ய முடியாது. உலகின் எந்தப் பகுதியாக இருந்தாலும், எந்த மொழி பேசக்கூடியவர்களாக இருந்தாலும், தொழுகையின் அம்சங்களில் எவ்வித மாற்றத்தையும் பார்க்க முடியாது. உலகளாவிய அளவில் ஒரே சமுதாயம் என்ற பேருண்மையை நிலைநாட்ட வணக்க வழிபாடுகளில் தலைசிறந்த தொழுகையை இனமொழி, கலாச்சாரங்களுக்கு அப்பாற்பட்டு ஒரே மொழியில் நிறைவேற்றுவது சாலச் சிறந்த செயலாகும். முஸ்லிம்கள் எந்த நாட்டினராக எந்த மொழியினராக இருந்தாலும் அல்லாஹ்வின் இறுதி வேதமான குர்ஆனை ஓதவும், அதன் பொருளை விளக்கவும் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

எனவே தொழுகையை அரபி மொழியில் நிறைவேற்றுவது முஸ்லிம்களுக்கு சாத்தியமானதுதான். அவர்களுக்குப் பரிட்சமானதுதான். உலகளாவிய அளவில் ஒற்றுமையை நிலைநாட்டுவதற்கு அது பெரிதும் உதவவே செய்யும். ஆனால் குத்பா-பிரசங்கம் அப்படிப்பட்ட வி­யமல்ல. மக்கள் விளங்கிச் செயல்படுத்த வேண்டிய அறிவுரைகளாகும். அந்த அறிவுரைகள் அவரவர்களின் தாய்மொழியில் இருப்பதுதான் பலன் அளிக்கும். இந்த மார்க்க அறிஞர்கள் நினைப்பது போல் அரபி மொழியில் இருக்கும் குர்ஆனை விளங்குவது போல், அரபி மொழியில் செய்யப்படும் குத்பாவையும் விளங்கவேண்டும் என்பது நடைமுறைச் சாத்தியமற்றதாகும். அதாவது முஸ்லிம் அனைவரும் அரபி மொழி பேசக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு மடமை நிறைந்ததோ அதேபோல் தான் அரபி குத்பாவையும் மக்கள் விளங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் ஆகும்.

எனவே இன்றைய மார்க்க அறிஞர்கள் வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பாவை-பிரசங்கத்தை அரபியில்தான் செய்யவேண் டும் என்பதற்கு அவர்கள் கூறும் எந்தக் காரணமும் அறிவுக்குப் பொருத்தமாக இல்லை என்பதோடு குர்ஆன், ஹதீத் போதனைக்கு உட்பட்டும் இல்லை என்பதை அவர்கள் விளங்குவார்களாக. எனவே வாரத்தில் ஒரு நாள் கிடைக்கும் அரிய வாய்ப்பான முஸ்லிம் சமுதாயத்திற்குச் சத்தியத்தை எடுத்துச் சொல்லும் நல்ல வாய்ப்பை இந்த மார்க்க அறிஞர்கள் முறையாகப் பயன்படுத்துவார் களாக. ஜும்ஆ குத்பா-பிரசங்கத்தை மக்கள் விளங்கும் வகையில் அவர்களின் தாய்மொழியில் செய்வார்களாக. அதிலும் பெரியார்களின் கட்டுக்கதைகளையும் கப்ஸாக் களையும் அவிழ்த்து விடாமல், அல்குர்ஆனின் கருத்துக்களையும், ஆதாரபூர்வமான ஹதீத்களின் கருத்துக்களையும் மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்து அல்லாஹ்வின் பொருத்தம் பெறுவார்களாக.

Previous post:

Next post: