பாவமும் மன்னிப்புத் தேடுதலு(தவ்பாவு)ம்

in 2022 அக்டோபர்

பாவமும் மன்னிப்புத் தேடுதலு(தவ்பாவு)ம்

எம். சையத் முபாரக்

நமக்கு வேதனைகளும், துன்பங்களும், கஷ்டங்களும் வருவதற்குக் காரணம் நாம் அல்லாஹ்(ஜல்)வுடைய கட்டளைப்படியும், நபி(ஸல்) அவர்களுடைய வழிமுறைப்படியும் நடக்காது; அதற்கு மாறாக (குர்ஆன், ஹதீத் வழிமுறைகளுக்கு மாறுபட்டு) நடக்கும் காரணத்தினால்தான் என்பதைக் கீழ்க்காணும் வசனங்கள் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன.

நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடங்கள். மேலும், உங்களுக்குள் பிணங்கிக் கொள்ளாதீர்கள்; அவ்வாறாயின், நீங்கள் தைரியத்தை இழந்து விடுவீர்கள். மேலும், உங்கள் வலிமை குன்றி விடும். (அல்குர்ஆன் 8:46)

எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முரண்படுகிறாரோ நிச்சயமாக அல்லாஹ்(அவர்களை) தண்டனை செய்வதில் மிகக் கடினமானவன். (குர்ஆன் 8:13)

(நமது தூதராகிய) அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களே அத்தகைய வர்கள் (உலகில்) தங்களுக்கு யாதொரு துன்பம் பிடித்து விடுவதையோ அல்லது துன்புறுத்தும் வேதனை பிடித்துவிடுவதையோ பயந்து கொண்டிருக்கவும். (குர்ஆன் 24:63)

(நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுத் தாரோ அதை நீங்கள் (மனமொப்பி) எடுத்துக் கொள்ளுங்கள். அவர் எதனை விட்டும் உங்க ளைத் தடுத்தாரோ அதிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். மேலும், அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தண் டிப்பதில் மிக்க கடினமானவன். (அல்குர்ஆன் 59:7)

இப்படியாக நாம் பாவச் செயல்களில் ஈடுபட்டு இம்மையிலும், மறுமையிலும் நமக்கு நாமே தீங்கிழைத்துக் கொள்வதிலிருந்து விலகி இம்மை மறுமையில் நாம் பலனடைய வேண்டு மானால் அதற்காக பாவமன்னிப்புத் தேடுதல் மிகவும் அவசியமாகும். அதுபற்றி கீழே பார்ப்போம்.

பாவத்தை நீக்கும் செயல்கள் :

பாவங்கள் செய்யக்கூடிய நாம், நாம் செய்யும் சில நல்ல செயல்களினால் நம் பாவங்கள் அல்லாஹ்வினால் மன்னிக்கப்படு கின்றன. அச்செயல்களைப் பற்றி நாம் முதலில் பார்ப்போம்.

  1. நற்செயல்களைச் செய்வது :

(உண்மையாகவே) விசுவாசம் கொண்டு நற்கருமங்களையும் செய்கிறார்களோ அத் தகையோர், அவர்களுக்கு பாவமன்னிப்பும் (நற்)கூலியும் உண்டு என அல்லாஹ் வாக்க ளித்திருக்கிறார்கள். (குர்ஆன் 5:9,25:7,48:29)

(துன்பங்களைச் சகித்துப்) பொறுத்துக் கொண்டு, நன்மையான காரியங்களைச் செய்து வருகிறார்களே, அத்தகையோருக்கு மன்னிப் பும் மாபெரும் (நற்)கூலியும் உண்டு.
(அல்குர்ஆன் 11:11)

எவர், பச்சாதாபப்பட்டு (பாவத்திலிருந்து தவ்பாச் செய்து) விசுவாசமும் கொண்டு, நற்கருமங்களையும் செய்து அதன் பின்னர் நேர்வழியில் நிலைத்திருக்கிறாரோ அவருக்கு நான் நிச்சயமாக மிக மன்னிப்பவன். (அல்குர்ஆன் 20:82)

மேலும், 22:50, 25:70, 41:34 ஆகிய வசனங்களையும் பார்வையிடுக.

தீமையை நினைத்துப் பின் அதனைச் செய்யாமல் இருப்பது:

ஒரு அடியான் ஒரு நன்மையைச் செய்ய நாடினால் அதைச் செய்யாதவரை அவனுக் காக ஒரு நன்மையை எழுதி விடுகிறேன். அவன் அக்காரியத்தைச் செய்துவிட்டால் அதை பத்து நன்மைகளாக எழுதுகிறேன். அவன் ஒரு தீமையைச் செய்ய(மனதால்) நாடினால் அவன் அதைச் செய்யாதவரையில் அவனை நான் மன்னித்துவிடுகிறேன். அவன் அதைச் செய்து விட்டால் அதைப் போன்று ஒரு தீமையையே எழுதுகிறேன் என மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்(ஜல்) கூறுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். எனது ரட்சகா! அவன் உன் அடியான். அவன் ஒரு தீமையைச் செய்ய விரும்புகிறான்.

அதை ரப்பாகிய அல் லாஹ் மிக நன்றாகப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என வானவர்கள் கூறுகின்றனர். அதற்கு வல்ல அல்லாஹ் அவனைக் கண்காணியுங்கள். அவன் அதனைச் செய்துவிட்டால் அதைப் போன்றதையே எழுதுங்கள். அவன் அதை(ச் செய்யாமல்) விட்டுவிட்டால் அதை அவனுக்கு நன்மையாக எழுதிவிடுங்கள். ஏனெனில், அவன் அதை விட்டுவிட்டதெல்லாம் எனக்காகத் தான் என அல்லாஹ் கூறுகிறான். உங்களில் எவர் இஸ்லாத்தில் அழகானதைச் செய்கிறாரோ அவர் செய்யக்கூடிய ஒவ்வொரு நன் மைக்கும் அதைப் போன்று பத்தாக பத்தின் மடங்காக எழுநூறு வரை எழுதப்படும்.  (முஸ்லிம்: 205)

  1. தொழுகையை நிலைநிறுத்துவது:

நிச்சயமாகத் தொழுகை மானக்கேடான வற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். (அல்குர்ஆன் 29:45)

தொழுகையை நிறைவேற்றுவார்கள், நாம் அவர்களுக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து (தானமாகச்) செலவும் செய்வார்கள். இத்தகையோர் தாம் உண்மையான விசுவாசிகள். அவர்களுக்கு அவர்கள் இரட்சகனிடத்தில் பல உயர் பதவிகளும், பாவமன்னிப்பும், சங்கையான உணவும் உண்டு. (அல்குர்ஆன் 8:3,4)

  1. தான தர்மம் செய்வது :

(நீங்கள் தருமம் செய்வதால்) ஷைத்தான் உங்களுக்கு ஏழ்மையை அச்சுறுத்தி மானக் கேடானதைக் கொண்டு உங்களை அவன் ஏவுகிறான். ஆனால், அல்லாஹ்வோ (நீங்கள் தான தர்மம் செய்தால்) தன்னிடமிருந்து பாவமன்னிப்பையும், பேரருளையும் உங்களுக்கு வாக்களிக்கிறான்.

தண்ணீர் நெருப்பை அணைத்துவிடுவது போன்று தர்மம் குற்றத்தைப் போக்கி விடுகிறது.

(மிஷ்காத்துல் மஸாபீஹ்)

பழி வாங்குவதை தர்மமாக விட்டுவிடுதல்:

பழி வாங்குவதைத் தவிர்த்துவிட்டு அதனை மன்னித்தால் அது பாவத்திற்கு பரிகாரமாகி விடும் என்பதை கீழ்க்கண்ட வசனம் கூறுகிறது.

எவரேனும் பழி வாங்குவதை (மன்னித் துத்)தானமாக விட்டுவிட்டால் அது அவருடைய தீவினை)க்குப் பரிகாரமாகிவிடும்.

நோன்பும், ஹஜ்ஜும் கூட பாவங்களை மன்னிக்கும் செயல்களாகும்.

பாவங்கள் மன்னிக்கப்பட கடைபிடிக்க வேண்டிய முறைகள் :

  1. அல்லாஹ் மன்னிப்பானா என்று நிராசை அடைதல் கூடாது:

தங்கள் மீது (தாங்களே) அளவு கடந்து (பாவங்கள் செய்து) விட்டோராகிய என் அடியார்களே! அல்லாஹ்வின் அருளிலிருந்து (அவன் மன்னிப்பை விட்டும்) நிராசையற்றோராய் நீங்கள் ஆகிவிட வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் (உங்களுடைய) பாவங்கள் யாவையும் (நீங்கள் பிழை பொறுக்கத் தேடினால்) அவன் மன்னித்து விடுவான். (ஏனெனில்) நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிக்கிறவன், மிகக் கிருபையுடையவன். (அல்குர்ஆன் 39:53)

மேலும் அல்குர்ஆன் 15:56, 12:87 வசனங் களையும் பார்க்க.

  1. பாவங்களை நினைத்து மிகவும் வருந்துவது:

பாவத்தைச் செய்துவிட்டோமே, இதற்காக அல்லாஹ் என்ன தண்டனையை நமக்குத் தரப் போகிறானோ என பயந்து மிகவும் கவலை யடைந்து வருந்த வேண்டும்.

ஒரு தடவை, நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து (பாவம் செய்து விட்டதால் ஏற்பட்ட அச்சத்தால் மிகவும் மனம் வருந்தி) விபச்சாரம் செய்துவிட்டேன். எனக்குத் தண் டனையளித்து என் பாவம் தீரச் செய்யுங்கள் என்றாள். அவள் பாவத்தை உணர்ந்து திருந்தி வந்திருக்கிறாள் என்பதனால் நபி(ஸல்) அவர்கள் தமக்கு அவள் சொன்னது கேட்கவில்லை என்பதைப் போல முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு சபையில் சஹாபாக்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்ணும் விடாமல் அந்தப் பக்கம் வந்து குரலை சிறிது உயர்த்தியும் திரும்ப அதையேச் சொன்னாள் அப்பொழுதும் நபி(ஸல்) அவர்கள் காதில் வாங்கிக் கொள்ளாதவர் போலவே இருந்தார்கள்.

மனம் வருந்தி திருந்தி வந்தவளை தண்டிக்க வேண்டாமே என்பதால் அந்தப் பெண் திரும்பவும் விடாமல் நபி(ஸல்) அவர்கள் முகத்திற்கு எதிராக வந்து நின்று எனக்குத் தண்டனையளித்து பாவத்திலிருந்து என்னைப் பரிசுத்தப்படுத்துங்கள்; நான் விபச்சாரம் செய்து விட்டேன். அதனால் கர்ப்பமாகவும் இருக்கிறேன் என்றாள். குழந்தைப் பிறந்த பிறகு வா என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். அந்தப் பெண் குழந்தைப் பிறந்தவுடன் வர குழந்தைக்கு பால் மறக்கடித்த பிறகு வா என்று நபி(ஸல்) அவர்கள் சொல்லி அவளை திருப்பி அனுப்பிவிட்டார்கள். அவள் வருந்தி திருந்தி விட்டாள் அல்லாஹ் மன்னித்துவிடுவான். அதனால் தண்டனையளிக்க வேண்டாம் என்பதால் நபி(ஸல்) அவர்கள் இப்படிச் சொல்லி யிருந்தார்கள்.

ஆனால், அப்பெண்ணோ தான் செய்த பாவத்திற்கு அல்லாஹ் மிகப் பெரும் தண்டனையல்லவா தருவான். அதனால் இவ்வுலகிலேயே அந்தப் பாவத்திற்குரிய தண்ட னையை அடைந்து மறுமையில் நரக வேத னையிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வோம் என்று குழந்தைக்கு பால் மறக்கடித்த பிறகு, குழந்தை பிறந்து இரண்டு வருடங்களுக்குப் பின், நபி(ஸல்) அவர்களிடம் வந்து, நான் தான் விபச்சாரத்திற்காகத் தண்டனை வேண்டி வந்தவள். தாங்கள் குழந்தைப் பிறந்த பிறகு வரச் சொன்னீர்கள். குழந்தைப் பிறந்த பின் வந்தபோது, பால் மறக்கடித்து வரச் சொன்னீர்கள். இப்போது குழந்தைக்குப் பால் மறக்கடித்து வந்திருக்கிறேன். எனது குற்றத்திற்கானத் தண்டனையைத் தாருங்கள் என வேண்டினாள். குழந்தையை வளர்ப்பவர் யார்? என சஹாபாக்களிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்க ஒரு சஹாபி அக் குழந்தைக்குப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

பிறகு அப்பெண்ணிற்குத் தண்டனை யளிக்க அப்பெண்ணை மைதானத்தில் கழுத்து வரை புதைத்து கல்லால் அடித்துக் கொல்லும் படி நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். அங்கு கூடியிருந்த மக்கள் அப்பெண்ணைக் கற்களால் அடித்தார்கள். ஒரு சஹாபி பெருங்கல்லை எடுத்து அப்பெண்ணின் தலையில் போட அவள் தலைச் சிதைந்து சாக, தெரித்த இரத்த மானது அந்த சஹாபியின் உடம்பில் பட்டது. அசுத்தமான பாவ ஆத்மாவான அப்பெண் ணின் இரத்தம் தன் மீது தெரித்துவிட்டதே என அச்சஹாபி அப்பெண்ணைத் திட்டுகிறார். அப் போது நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். அந்தப் பெண் தான் செய்த பாவத்தை நினைத்து வருந்தி வருந்தி அல்லாஹ்விடம் மனமுருகி பாவமன்னிப்புத் தேடியதை சிறிது சிறிதாகப் பிரித்து மதீனாவிலுள்ள அனைவருக்கும் கொடுத்ததால் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் அச்சிறு துண்டாவது அவரவர்களுடைய பாவங்கள் அனைத்தையும் போக்கிவிடும். அதைவிட அதிகமாகவே அவளது பாவமன் னிப்பு இருந்தது என்று கூறிவிட்டு, அப்பெண் ணிற்காக நபி(ஸல்) அவர்கள் துஆ செய்தார்கள்.

அந்தப் பெண் எந்த அளவிற்குத் தன் பாவத்தை நினைத்து வருந்தி கவலை யடைந்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடியிருக்கி றாள் என்பதைப் பாருங்கள். நமது பாவமன் னிப்புத் தேடும் நிலை எவ்வாறு இருக்கிறது என்பதையும் சிந்தித்துப் பாருங்கள். இமாம் எங்கள் பாவங்களை எல்லாம் மன்னித்துவிடு வாயாக! என்று துஆ கேட்கும்போது நாமும் பின்னாலிருந்து ஆமீன்! ஆமீன்!! என்று சொல்லிவிட்டால் அல்லாஹ் நமது பாவங்களை மன்னித்து விடுவான் என்று நம்மில் பலர் எண்ணு கின்றார்கள். ஆனால், நாம் செய்த பாவங்களை நினைத்து வருந்தி அதிலிருந்து விலகி அல்லாஹ்விடம் தனியாக மனமுருகிக் கேட்கும் பாவமன் னிப்பைத்தான் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான் என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

  1. அல்லாஹ்விடம் பிழை பொறுக்க மனமுருகி மன்றாடுவது:

எவரேனும் பாவம் செய்துவிட்டு பின் ஒளூ செய்து தொழுது அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரினால் அவன் அவரை மன்னிக்கா மலிருப்பதில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை ஓதினார்கள்.

ஏதேனும் மானக்கேடான காரியத்தை அவர்கள் செய்துவிட்டால், அல்லது (ஏதும்) பாவமிழைத்துத் தங்களுக்குத் தாங்களே அநீதி யிழைத்துக் கொண்டால் (உடனே) அல் லாஹ்வை நினைவு கூறுவார்கள். இன்னும் (அவனிடமே) தங்களுடைய பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள். (அல்லாஹ்வும் அவர்களை மன்னித்துவிடுவான்) அல்லாஹ் வைத் தவிர (இத்தகையோரின்) குற்றங்களை மன்னிப்பவன் யார்? அவர்கள் செய்த(தவ றான)க் காரியத்தை(த் தவறென்று) அவர்கள் அறிந்து கொண்டே (அதில்) நிலைத்திருக்கவும் மாட்டார்கள். (உடனே அதிலிருந்து விலகிவிடுவார்கள். (அல்குர்ஆன் 3:135)

எவர் தீயச்செயலுக்காக மனம் வருந்தித் தம்மைச் சீர்திருத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் அவர் தவ்பாவை அங்கீகரிக்கிறான். (காரணம்) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன்; மிகக் கிருபையுடையவன்.  (அல்குர்ஆன் 5:39)

மேலும் 2:160, 3:89, 6:153, 4:106,110, 9:104, 11:90, 15:49, 16:119, 23:118, 24:5, 25:70, 42:25,30, 71:10, 110:3 ஆகிய வசனங்களையும் பார்வையிடுக.

எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நாங்கள் (உன்னை) விசுவாசிக்கிறோம். ஆதலால், நீ எங் \களுக்கு எங்கள் பாவங்களை மன்னித்து (அருள் புரிந்து, நரக) நெருப்பின் வேதனையிலிருந்து நீ எங்களைக் காத்தருள்வாயாக!  (அல்குர்ஆன் 3:16)

மேலும் வசனங்கள் 3:193, 23:109 ஆகிய வற்றையும் பாருங்கள்.

  1. பாவத்தைத் திரும்பச் செய்யாதிருப்பது:

பாவம் செய்த பின் மனம் வருந்தி திருந்தி அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்ட பின் அப்பாவத்தை மீண்டும் செய்யாமலிருக்க மிகவும் உறுதியாக இருக்க வேண்டும்.

இந்த நான்கு முறைகளும் தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்டால் கடைபிடிக்கப்பட வேண்டிய வழிமுறைகள் ஆகும்.

மற்றவர்களுக்கு நாம் ஏதாவது தீங்கி ழைத்திருந்தால் அப்பாவத்திலிருந்து நாம் மீள மேற்கண்ட நான்கு முறைகளுடன் ஐந்தாவதாக ஒரு வழிமுறையையும் நாம் கடைபிடிக்க வேண்டும். அது.

  1. பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்புக் கேட்பது :

யாருக்காவது நாம் தீங்கு செய்திருந்தால் அவரிடமிருந்தும் அத்தீங்கை நாம் அவருக்குச் செய்ததற்காக வருந்தி மன்னிப்பை அவரிட மிருந்தும் பெற வேண்டும்.

இவைகளைக் கடைபிடித்து நாம் அல்லாஹ்வின் மன்னிப்பைப் பெறுவோமாக! முடிவாக,

நாம் பாவங்களிலேயே ஈடுபட்டுக் கொண்டிருந்தால் நம்மீது வேதனை இறக்கப்படும். அப்படி வேதனை அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்துவிட்டால் நமக்கு எந்த உதவியும் கிட்டாது என்பதைக் கீழ்வரும் வசனங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

அக்கிரமங்கள் செய்தோர் மீது (அவ்வாறு அவர்கள்) பாவம் செய்து கொண்டிருந்த காரணத்தால் வானத்திலிருந்து நாம் வேதனையை இறக்கி வைத்தோம். (2:59)

உங்களுக்கு வேதனை வருமுன்னே நீங்கள் உங்கள் இறைவன்பால் திரும்பி, அவனுக்கு முற்றிலும் வழிபடுங்கள். (வேதனை வந்துவிட்டால்) பின்பு நீங்கள் (எவராலும்) உதவிச் செய்யப்படமாட்டீர்கள். (அல்குர்ஆன் 39:54)

ஆகவே, நம்மீது வேதனை வராதிருக்க பாவமன்னிப்புத் தேடிக் கொண்டிருக்க வேண்டும் என்பதை கீழுள்ள வசனம் உணர்த்துகிறது.

அவர்கள் பாவமன்னிப்புக் கோரிக் கொண்டிருக்கும் நிலையில், அல்லாஹ் அவர்களை வேதனை செய்பவனாக இல்லை.

ஷைத்தான் கூறுகின்றான். நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன். அவன் தண்டனை கொடுப்பதில் கடுமையானவன். (அல்குர்ஆன் 8:48) என்பதையும், அதிகமான நல்ல மல்கள் செய்த ஒரு பெண் பூனையைக் கட்டி வைத்து அதற்குச் சாப்பாடு போடாததாலும், அது தானாகவே தன் ரிஜ்க்கைத் தேட முடியாதவாறு செய்ததாலும் அவள் நரகம் புகுந்தாள் என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதையும் மனதில் இறுத்தி, நாம் செய்யும் சிறு பாவங்கள் கூட நம்மை நரகப் படுகுழியில் தள்ளிவிடும் என்பதை உணர்ந்து நாம் பாவங்கள் செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்வோமாக! அப்படியே பாவங்கள் ஏதேனும் செய்து விட்டால் உடன டியாக மனம் வருந்தி, திருந்தி அல்லாஹ்விடம் தவ்பா செய்து கொள்வோமாக! அல்லாஹ் நம் அனைவரின் பாவங்களையும் மன்னித்தருள் புரிவானாக!

Previous post:

Next post: