மனம் திறந்த மடல்!

in 2022 நவம்பர்

மனம் திறந்த மடல்!

S.M. அமீர், நிந்தாவூர், இலங்கை

ஹிஜ்ரிக் கமிட்டியில் உள்ளவர்களில் தெளிவான நாவன்மை, பதட்டம் இல்லாத நிதானம், தூரநோக்குச் சிந்தனை, தெளிவான பேச்சு, பொலிவான முகம், புரிய வைக்கும் திறமை என மிகவும் சிறந்த ஒருவராக இதுவரை சகோதரர் “அஹ்மது ஸாஹிபை’ நான் கருதினேன். மார்க்கத்திற்காக, அல்லாஹ்விற்காக உண்மையான நேசம் கொண்டேன், கொண்டிருந்தேன், கொண்டிருக்கிறேன்.

ஆனாலும் சமீபத்திய அவரது அலட்சியம் நிறைந்த குரல் பதிவை நான் கேட்டு அதிர்ந்து போனேன் உண்மையில் இந்த பிறை விவகாரம் இந்த அளவிற்கு முறுகல் நிலையை அடைந்ததற்கு இவரே முக்கிய காரணம் என எண்ணத் தோன்றுகிறது. இவர் நினைத்திருந்தால் காதும், காதும் வைத்ததுபோல இந்த விடயத்தை கையாண்டிருக்கலாம். இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். ஆனாலும் இடையில் இரு தரப்பாரிடையிலும் ஷைத்தான் புகுந்து பிரிவினைக்காக சதி செய்து கொண்டிருக்கின்றான் என்றே எண்ணத் தோன்றுகிறது.

ஆக இரண்டு தரப்பாருக்கும் இடையே உள்ள சர்ச்சையானது ஆறு அல்லது ஏழு மணித்தியாலங்கள்தான் வித்தியாசம் காதும், காதும் வைத்தது போல அதனை காலண்டரில் சிறு மாற்றம் செய்து இரு அணிகளுக்கிடையே ஒற்றுமையைக் கொண்டு வந்திருக்கலாம். இதைவிடப் பாரதூரமான எத்தனையோ விடயங்களில் சமுதாய நலனுக்காக, ஒற்றுமைக்காக, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விட்டுக்கொடுத்துப் போயிருக்கின்றார்கள். கட்டுக்கோப்பை உறுதிப் படுத்தினார்கள்.

ஆனால் இவரோ! ஏழு கடல் தாண்டினாலும் மார்க்கத்திற்குக் கரைகாண முடியாது. அது என்ன சாமானிய விஷயமா என்று கூறிய மூட முல்லாக்கள், மெளலவிமார்கள், புரோகிதர்கள், பூசாரிமார்கள், மக்களின் தலையைக் கழுவிய கதைதான் ஞாபகத்திற்கு வருகிறது. ஆ,ஓ. அது எப்படி முடியும்? சாத்தியமே இல்லை என்று குதிக்கின்றாரே! அவரால் முடியாது, சாத்தியமற்றது என்று பேசிய அந்த விவகாரம் அவரது பார்வையில் ஒன்றுமே தெரியாதவர் என்று கருதிய அப்துர்ரஹ்மானால் எப்படி சாத்தியமானது.

அந்த ஏழு மணித்தியாலங்களை உள்ளடக்கி எவ்வாறு அவரால் காலண்டர் போட முடிந்தது. நம் கண்முன்னே இருக்கிறதே இதை நாம் மறுக்க முடியுமா? ஆரம்பத்திலேயே அப்துர்ரஹ்மான் சொன்னதைக் கொஞ்சம் உள்வாங்கி சிந்திந்திருந்தால், செயல்பட்டிருந்தால் இந்த விரிசல் தோன்றியிருக்குமா? நமக்கு இவரு சொல்வது என்ன? நாம் என்ன கேட்பது எனும் அவரது ஆணவப் போக்கே இதற்குக் காரணம் என எண்ணத் தோன்றுகிறது.

முஸ்லிம்களாகிய நாம் ஓர் சமுதாய ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு இரண்டு அணிகளுக்கிடையே ஏற்பட்ட சிறு கருத்து வேறுபாட்டை நீக்கி அதற்கான சிறிய தொரு மாற்றத்தைச் செய்து ஒற்றுமையாகப் பாடுபடுவதன் மூலம் நமக்கு என்ன குறைந்துவிடப் போகிறது? எவன் நம்மிடம் கேட்கப் போகிறான்? அன்னியனான அவன் போட்ட காலண்டர் அவனோட இருக்கட்டும் நாம் நமக்கென்றோர் தனித்துவமான காலண்டர் போட்டுக் கொள்வதில் நமக்கு என்ன பிரச்சினை? எவன் நம்மிடம் கேட்கப் போகிறான்.

ஆனாலும் ஆகா! ஓகோ! எப்படி சாத்தியமாகும் என்ற இவரது பேச்சு வெறும் பிதற்றலேயாகும் என நான் கருதுகின்றேன். இன்று தனியயாரு ஆளாக நின்று கொண்டு போட்ட காலண்டர் குறித்து எவனும் அப்துர்ரஹ்மானை இதுவரை கேட்கவில்லையே! ஆதிக்க வெறியர்கள், அன்னியர்கள், எவரும் அச்சுறுத்தவில்லையே! அவரது காலண்டர் பல வருடங்களாக ஓடிக் கொண்டுதானே இருக்கிறது. இது எவ்வாறு இவருக்கு சாத்தியமானது. இது ஏன்? அவருக்கு சாத்தியமற்றதாக இருக்கிறது.

“கால் தூசுக்கும் பெறுமதி இல்லை’ என்று பேசுகின்றாரே! பொறுப்பு வாய்ந்த ஒருவர் இவ்வாறு பேசலாமா? இவரிடத்தில் நீதியை, நேர்மையை, நடுநிலைத் தன் மையை, நாம் எதிர்பார்க்கலாமா? நேற்று வரை எனக்கு அவரோடு இருந்த மதிப்பு மரியாதை என்று எங்கு போனது என்று எனக் குத் தெரியவில்லையே. இதுவரை அவர் தீனுக்காக செய்த தியாகம், உழைப்பு, முயற்சி போன்றவற்றின் நிலை என்ன? என்று இன்று கேள்விக்குறியாக நிற்கிறதே. இவரது பார்வையில், “கால் தூசுக்கும் பெறுமதி இல்லாதவர்களால்’.

உலகின் சில பாகங்களில் உள்ளவர்கள் சங்கமம் நடைபெறுவதற்கு முன்னரே! சங்கம நாளிலேயே நோன்பையும், பெருநாளையும், புது வருடத்தையும் அடைந்து கொள்ளுதல் எனும் குறைபாட்டைத் தவிர்த்து முழு உலக மக்களும் முழுமையாக சங்கமம் ஆனபின்னர் நோன்பையும், பெருநாளையும், புதுவருடத்தையும் அடைந்து கொள்ளும் பொருட்டு “கால் தூசுக்கும் பெறுமதி இல்லாதவர்களால்’ காலண்டர் போட முடியும் என்றிருந்தால் ஏன் இவர்களால் முடியவில்லை?

ஆதாரப்பூர்வமான அறிவிப்புகளின் பிரகாரம், பின்னோக்கிக் கணக்கிட்டுச் சென்றால் அரஃபாவுடைய நாள் வெள்ளிக்கிழமை வருகின்றவாறு “”கால் தூசுக்கும் பெறுமதி இல்லாதவர்களால்” காலண்டர் போட முடியும் என்றிருந்தால்; ஏன்? இவர்களால் முடியவில்லை.

ஆதாரப்பூர்வமான அறிவிப்புகளிலிருந்து மாதத்தின் வெள்ளை நாட்கள் என்பது 13,14,15 என்றிருக்க அதற்கு மாற்றமாக பிறை 16லும் பெளர்ணமி வருவதைத் தவிர்த்து “கால் தூசுக்கும் பெறுமதி இல்லாதவர்களால்’ காலண்டர் போட முடியும் என்றிருந்தால்; ஏன்? இவர்களால் முடியவில்லை.

“கால் தூசுக்கும் பெறுமதி இல்லாதவர்கள்’ ஹிஜ்ரிக் காலண்டரில் பிழைகள் இருக்கின்றன. வாருங்கள் இரு அணியினரும் ஒன்றாக அமர்ந்து பேசி ஒன்றாக ஆக்குவோம் என்று பகிரங்கமாக அழைக்கின்றார்கள். இவர்கள் ஏன் வர மறுக்கிறார்கள். அடுத்து;

ஆங்கில நாளின் ஆரம்பம் உச்சிப் பொழுதுக்கு முட்டுக் கொடுப்பதற்கென்றே தயாரிப்போடு, தீர்மானத்தோடு வந்த சகோதரர் முஹம்மது அலியின் பேச்சில் உங்களுக்கு ஏதாவது புரிந்ததா? உச்சிப் பொழுதுக்கு முட்டுக் கொடுப்பதற்கென்றே சில குர்ஆன் வசனங்களைத் தேடி எடுத்துத் திரித்து வளைத்துக் கூடியிருந்தவர்களை அச்சுறுத்தி அச்சுறுத்தி தலையைக் கழுவினார் அவ்வளவுதான். அவரது பேச்சோடு ஹிஜ்ரிக் கமிட்டியினரில் எனக்கு இருந்த நல்லெண்ணம், நன்நம்பிக்கை, நாணயம், எதிர்பார்ப்பு அற்றுப் போய்விட்டது. எஞ்சியிருந்த மிச்சம் மிகுதியும் அஹமது ஸாஹிபுடைய பேச்சிலிருந்து அகன்றுபோனது என்றுதான் சொல்ல வேண்டும். எனக்குத் தூக்கமே வரவில்லை. இரவு நடுநிசியில் எழுந்திருந்து இதனை உங்களோடு நான் பகிர்ந்து கொள்கிறேன். என் மன ஆறுதலுக்காக தவறுகள் இருந்தால் பொறுத்துக் கொள்க.

Previous post:

Next post: