அழைப்புப் பணியின் அவசர அவசியம்!

in 2022 டிசம்பர்

அழைப்புப் பணியின் அவசர அவசியம்!

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.

அல்லாஹ் நபிமார்களிடம் நான் உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் வழங்கி (அதன்) பின்னர் உங்களிடம் உள்ள (வேதத்)தை உண்மையாக்கும் (இன்னு மொரு இறைத்) தூதர் ஒருவர் உங்களிடம் வந்தால், அவரின் மீது நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். அவருக்கு உதவி புரிய வேண்டும் என்று உறுதிமொழி பெற்றதை எண்ணிப் பாருங்கள். (அப்போது) இதன் பேரில் நீங்கள் எனது ஒப்பந்தத்தை ஏற்று உறுதிமொழிகின்றீர்களா? என்று கேட்டான். அதற்கு அவர்கள் (அனைவருமே) “உறுதிமொழிகின்றோம்’ என்றனர். அப்படியாயின் (இதற்கு) நீங்கள் சாட்சியாக இருங்கள். உங்களுடன் நானும் சாட்சியாக இருக்கின்றேன்’ என்று அல்லாஹ் கூறினான். இதற்குப் பிறகும் யாரேனும் (அழைப்புப் பணியினைப்) புறக்கணித்தால் அவர்கள் தான் பாவிகள் ஆவர். (அல்குர்ஆன் 3:81,82) அதாவது,

ஆதி மனிதரும் ஆதி இறைத்தூதருமாகிய ஆதம்(அலை) அவர்கள் முதல் இறைத் தூதர் ஈசா(அலை) அவர்கள் வரை தான் அனுப்பிய அனைத்து இறைத்தூதர்களிடமும் ஓர் உறுதிமொழி வாங்கியதைப் பற்றி அல்லாஹ் இங்கே எடுத்துரைக்கின்றான். அந்த நபிமார்களில் ஒருவருக்கு அல்லாஹ் வேதத்தையும், ஞானத்தையும் வழங்கி ஒரு பெரும் தகுதியை அவர் அடைந்திருக்கும் நிலையில்; அவருக்குப் பின்னர் மற்றுமோர் இறைத்தூதர் வந்தால் அவரின் மீது முந்தைய இறைத்தூதர் நம்பிக்கை கொள்ள வேண்டும்; அழைப்புப் பணிக்காக அவருக்கு ஒத்துழைக்க வேண்டும்; அவரைப் பின்பற்றுவதற்கும் அவரோடு ஒத்துழைப்பதற்கும் முந்தைய தூதரிடமுள்ள அறிவும் நபித்துவமும் தடையாக இருக்கக் கூடாது என்பதே அந்த உறுதி மொழியாகும். (தஃப்சீர் இப்னு கஸீர்: 2:141-145)

இறுதி இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களை எல்லோரும் ஏற்றே ஆகவேண்டும்:

இதில் “எனது ஒப்பந்தத்தை’ என்பதைக் குறிக்க “இஸ்ரி’ எனும் சொல் ஆளப் பெற்றுள்ளது. இதற்கு இப்னு அப்பாஸ் (ரழி), முஜாஹித்(ரஹ்) ஆகியோர் “ஒப்பந்தம்’ என்றும், முஹம்மத் பின் இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் “பலமான வலுவான ஒப்பந்தம்’ என்றும் பொருள் கூறியுள்ளனர். அலீ (ரழி) மற்றும் இப்னு அப்பாஸ்(ரழி) ஆகியோர் கூறியதாவது : நபிமார்களில் ஒவ்வொருவரிடமும் “அவர் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும்போது முஹம்மத்(ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப் பெற்றால் அவர்கள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்; அவர்களோடு அழைப்புப் பணிக்காக ஒத்துழைக்க வேண்டும்’ என்று உறுதிமொழி வாங்காமல் அவரை நபியாக அல்லாஹ் அனுப்பியதில்லை.

இறுதி இறைத்தூதரின் அழைப்புப் பணிக்கு எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும் :

அவ்வாறே அவருடைய சமுதாயத்தார் உயிருடன் இருக்கும்போது முஹம்மத் (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப் பெற்றால் அவர்களும் இறுதி இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். அவர்களோடு அழைப்புப் பணிக்காக ஒத்துழைக்க வேண்டும் என்று தமது சமுதாயத்தாரிடமும் உறுதி மொழி வாங்கும்படி அந்த நபிக்கு அல் லாஹ் உத்தரவிட்டான். (தஃப்சீர் இப்னு கஸீர்: 2:141-145) இதன் அடிப்படையிலேயே,

மூசா(அலை) அவர்களானாலும், முஹம்மத் (ஸல்) அவர்களையே பின்பற்றியாக வேண்டும் :

அப்துல்லாஹ் பின் ஸாபித்(ரழி) மற்றும் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரழி) ஆகி யோர் கூறியதாவது: ஒருமுறை நபி(ஸல்) அவர்களிடம் உமர்(ரழி) அவர்கள் வந்து “அல்லாஹ்வின் தூதரே! பனூ குறைழாவிலுள்ள எனது சகோதரர் ஒருவரிடம் நான் சென்றிருந்தேன். அவர் கருத்தாழமிக்க சில வி­யங்களைத் தவ்ராத் வேதத்தில் இருந்து எடுத்து எனக்கு எழுதிக் கொடுத்தார். அதை உங்களிடம் காட்டட்டுமா?’ என்று கேட்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் மாறியது. அப்போது நான் உமர்(ரழி) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களது முகத்தில் (கோபத்தால்) ஏற்பட்ட (மாற்றத்)தை நீங்கள் கவனிக்கவில்லையா?’ என்று கேட்டேன். உடனே உமர்(ரழி) அவர்கள் “அல்லாஹ்வை இறைவனாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத்(ஸல்) அவர்களை இறைத்தூதராகவும் மனப்பூர்வமாக நான் ஏற்றேன் என்றார்கள்.

அப்போதுதான் நபி(ஸல்) அவர்களிடமிருந்து அந்த முகமாற்றம் அகன்றது பின்னர் நபி(ஸல்) அவர்கள் “எனது உயிர் எவனது கையில் உள்ளதோ அவன்மீது சத்திய மாக! (ஒருவேளை) உங்களிடையே இறைத் தூதர் மூசா(அலை உயிருடன்) இருந்தால் கூட என்னைப் பின்பற்றுவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. நீங்கள் என்னைக் கைவிட்டுவிட்டு அவரைப் பின்பற்றினீர் களாயின் வழி தவறிப்போவீர்கள். பல்வேறு சமுதாயத்தாரில் நீங்கள் (மட்டுமே) எனக் குரியவர்கள். அவ்வாறே பல்வேறு நபிமார்களில் நான் (மட்டுமே!) உங்களுக்கு உரிய வன்” என்று கூறினார்கள். (முஸ்னது அஹ்மத், தாரிமீ, அத்தூருல் மன்ஸூர், தஃப்சீர் இப்னு கஸீர் 2:141-145) இதன் அறிவிப்பாளர்கள் தொடர்பில் சில விமர்சனங்கள் இருக்கின்றது. ஆனாலும் ஆதாரப்பூர்வமான அறிவிப்புகளில் மூசா(அலை) அவர்கள், நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கும் அழைப்புப் பணி செய்யத் தகுதி படைத்த முஹம்மத்(ஸல்) அவர்களது சமுதாயத் தாரில் ஒருவராக வருவதற்கு பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

பிறப்பில் பிந்தியவர்கள் தகுதியில் முந்தியவர்கள்:

மூசாவுக்குக் கோபம் அடங்கியபோது அவர் அந்தப் பலகைகளை எடுத்தார். அதன் பிரதியில், தமது இறைவனைப் பற்றி அஞ்சுவோருக்கு நல்வழியும் நல்லருளும் இருந்தன. (7:154) அதாவது, “இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களுக்கு தமது சமுதாயத்தார் மீதுள்ள கோபம் அடங்கியபோது அவர் அந்தப் பலகைகளை எடுத்தார்’ அப்போது மூஸா(அலை) அவர்கள் அந்தப் பலகைகளை எடுத்துப் பார்த்துவிட்டு அல்லாஹ்விடம், “இறைவா! மனித குலத்திலேயே ஒரு சிறந்த சமுதாயத்தார் தோன்றுவார்கள். அவர்கள் நன்மையை(ச் செய்யுமாறு) ஏவுவார்கள். தீமையை(ச் செய்யக் கூடாது என)த் தடுப்பார்கள் என்று இதில் எழுதப் பட்டிருப்பதைக் காண்கின்றேன். அவர்களை எனது சமுதாயத்தாராக ஆக்குவாயாக’ என்று பிரார்த்தித்தார்கள். அதற்கு இறைவன் “அவர்கள் (இறுதி இறைத்தூதர்) அஹ்மதுடைய சமுதாயத்தார் ஆவார்கள்’ என்று பதிலளித்தான். (கத்தாதா(ரஹ்), தஃப்ஸீர் தபரீ, இப்னு கஸீர் 3:906,907) அழைப்புப் பணி செய்வதனால்;

படைப்பில் பிந்தியவர்கள் சுவர்க்கம் செல்வதில் முந்தியவர்கள் :

பின்னர் மூஸா(அலை) அவர்கள், “இறைவா! படைப்பில் பிந்தியவர்கள்; சுவர்க்கம் செல்வதில் முந்தியவர்கள் என்று ஒரு சமுதாயத்தாரைப் பற்றி இதில் கூறப் பட்டிருப்பதைக் காண்கிறேன். அவர்களை எனது சமுதாயத்தாராக ஆக்குவாயாக’ என்று வேண்டினார்கள். அப்போது இறைவன்; “அவர்கள் அஹ்மதுடைய சமுதாயத் தார் ஆவார்கள்’ என்று கூறினான்.

பின்னர் மூஸா(அலை) அவர்கள் “வேதங்களைத் தமது நெஞ்சில் சுமந்து ஓதிக் கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தாரைப் பற்றிப் பலகைகளில் கூறப்பட்டிருப்பதைக் காண்கிறேன். அவர்களையாவது எனது சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக ஆக்குவா யாக’ என்று பிரார்த்தித்தார்கள். அப்போதும் அல்லாஹ் “அவர்கள் அஹ்மதுடைய சமுதாயத்தார் ஆவர்’ என்று கூறினான். (கத்தாதா (ரஹ்), தஃப்ஸீர் தபரீ, இப்னு கஸீர் 3:906,907) இறுதியாக;

அழைப்புப் பணி செய்யும் சமுதாயத்தாரில் ஒருவராக வர ஆசைப்பட்ட இறைத்தூதர் மூசா(அலை) அவர்கள் :

அப்போது மூசா(அலை) அவர்கள் அந்தப் பலகைகளை எறிந்துவிட்டு “இறைவா! என்னை அஹ்மத்(ஸல்) அவர்களின் சமுதா யத்தாரில் ஒருவனாக ஆக்குவாயாக என்று வேண்டினார்கள். (கத்தாதா(ரஹ்), தஃப்ஸீர் தபரீ, இப்னு கஸீர் 3:906, 907) ஆனாலும் அவர்களுக்கும் அந்தப் பாக்கியம் கிடைக்கவில்லை. மேலும் முன்சென்ற சில சமுதாயத் தார் நன்மையை ஏவியும், தீமையைத் தடுத் தும் அழைப்புப் பணி செய்யாததால் நபி மார்களின் நாவுகளால் சபிக்கப்பட்டவர்கள்.

நபிமார்களின் நாவுகளால் சபிக்கப்பட்டவர்கள் :

இஸ்ரவேலர்களில் (ஏக இறைவனை) மறுத்தோர் “தாவூத்’ மற்றும் மர்யமின் மைந்தர் “ஈசா’ ஆகியோரின் நாவுகளால் சபிக்கப்பட்டார்கள். அவர்கள் (நன்மையை ஏவித் தீமையைத் தடுக்காது இறைவனுக்கு)மாறு செய்து எல்லை மீறி நடந்துகொண்டதே இதற்குக் காரணமாகும். (5:78) மேலும்,

நன்மையை ஏவித் தீமையைத் தடுத்திடும் அழைப்புப் பணி செய்யாததனால் வேதங்களில் சபிக்கப்பட்டார்கள் :

இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறியதாவது: இஸ்ரவேலர்கள் “தவ்ராத்’, “இன்ஜீல்’, “ஸபூர்’, “ஃபுர்கான்’ ஆகிய நான்கு வேதங்களிலும் மற்றும் தாவூத்(அலை) ஈஸா (அலை) ஆகியோரின் நாவுகளாலும் சபிக்கப்பட்டார்கள். (5:78, தஃப்ஸீர் தபரீ, விவிலியம் பழைய ஏற்பாடு (11, இராஜாக்கள், 17:11-18, சங்கீதம், 78:21,22. புதிய ஏற்பாடு, மத்தேயு 23:31-33) தஃப்ஸீர் இப்னு கஸீர் 3:267-274) அவர்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்ததும் இறைவனின் படைப்புகளுக்கு எதிராக எல்லை மீறி நடந்து கொண்டதுமே இதற் குக் காரணமாகும். அதில்,

முதன் முதலாவதாக அவர்கள் செய்த தீமையானது :

அவர்கள் தாம் செய்துகொண்டிருந்த தீமைகளிலிருந்து ஒருவரை ஒருவர் தடுக்காமலேயே இருந்துவந்தனர். (இவ்வாறு) அவர்கள் செய்துகொண்டிருந்தது மிகவும் மோசமானதாகும். (5:79) அதாவது அவர்களில் யாரும் யாரையும் பாவங்கள் புரிவதிலிருந்தும் தடை செய்யப்பட்டவற்றைச் செய்வதிலிருந்தும் தடுக்காமல் இருந்து வந்தார்கள்.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரழி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இஸ்ரவேலர்களிடம் ஏற்பட்ட முதலாவது பாவம் இதுதான்(அவர்களில்) ஒருவர் இன்னொருவரைச் சந்தித்து “இன்ன மனிதரே! அல் லாஹ்வை அஞ்சிக்கொள்! (இத்தகைய பாவங்கள்) செய்வதை விட்டுவிடு. ஏனெனில் பாவங்கள் செய்ய உனக்கு அனுமதி இல்லை என்று கூறுவார். பின்னர் மறு நாளும் அவரைச் சந்திப்பார். ஆனால் அவர் இவருடன் ஒன்றாக அமர்ந்து உணவு உண்பவராகவும், நீர் அருந்துபவராகவும் இருக்கின்ற காரணத்தால் அவரை இவர் பாவத்திலிருந்து தடுக்கமாட்டார் அவர்கள் இப்படிச் செய்துகொண்டிருந்தபோது அவர்களில் சிலருடைய உள்ளங்களை வேறு சிலருடைய கெட்ட உள்ளங்களோடு அல்லாஹ் (இரண்டறக்) கலக்கச் செய்துவிட்டான்.

இவ்வாறு கூறிய நபி(ஸல்) அவர்கள் “இஸ்ரவேலர்களில் (ஏக இறைவனை) மறுத்தோர் தாவூத் மற்றும் மர்யமின் மைந்தர் ஈசா(அலை) ஆகியோரின் நாவால் சபிக்கப்பட்டனர் என்று தொடங்கி இந்த, (5:78,79, 80,81 நான்கு) வசனங்களையும் ஓதினார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள், “இல்லை, இல்லை’ அல்லாஹ்வின் மீது சத்தியமாக! கட்டாயமாக நீங்கள் நல்லதை(ச் செய்யு மாறு) ஏவுங்கள், தீமையை(ச் செய்யக்கூடாதென)த் தடுங்கள். அநீதி இழைத்தவரின் கைகளைப் பிடித்து அவரை நல்வழிக்குத் திருப்புங்கள். “சத்தியத்துடன் அவரைப் பிணைத்து விடுங்கள்’ என்று கூறினார்கள். (அபூதாவூத், தஃப்ஸீர் இப்னுகஸீர்: 3:267-274)

Previous post:

Next post: