ஐயமும்! தெளிவும்!

in 2023 ஜனவரி

ஐயமும்! தெளிவும்!

ஐயம் : தீமையைத் தடுக்க வேண்டும் என்ற நபிமொழிக்கிணங்க ஆர்ப்பாட்டம் நடத்துவதை தவறு என்று கூறமுடியுமா?

தெளிவு : அருமையான கேள்வி! இது போன்ற கேள்விகள் கேட்கும் இளைஞர் களை வாழ்த்தி வரவேற்கின்றேன்! நீங்கள் குறிப்பிட்ட நபிமொழி முஸ்லிம் என்ற நூலில் 79வது நபிமொழியாக இடம் பெற்றுள்ளது.

நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை இரு பிரிவாகப் பிரிக்கலாம்!

மக்கா வாழ்க்கை 13 வருடம்!

மதீனா வாழ்க்கை 10 வருடம்!

மக்கா வாழ்க்கை நபித் தோழர்களுக்கு ஒரு கொடுமையான வாழ்க்கை!

அங்கே சித்திரவதைகள் கொடூரத்தின் உச்சமாக இருந்தது!

கப்பாப் இப்னு அல் அரத்(ரழி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்தபோது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) முறையிட்டபடி, “எங்களுக்காக (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி கோரமாட்டீர்களா? எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யமாட்டீர்களா? என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏகத்துவக் கொள்கையை ஏற்று இறைத்தூதரின் மீது நம்பிக்கை கொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில் குழிதோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட, ரம்பம் கொண்டு வரப்பட்டு அவரின் தலைமீது வைக்கப்பட்டு அது இரு கூறுகளாகப் பிளக்கப்படும். ஆயினும், அ(ந்தக் கொடுமையான)து அவரை அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்ய வில்லை. (பழுக்கக் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரின் இறைச்சியையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்பையும், நரம்பையும் சென்றடைந்து விடும். அ(ந்தக் கொடூரமான சித்திரவதையும்)துவும் கூட அவரை அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படும். எந்த அளவிற்கென்றால் வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனில் உள்ள) “ஸன்ஆ’விலிருந்து “ஹளரமவ்த்’ வரை பயணம் செய்து செல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர, அல்லது தன் ஆட்டின் விசயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்சமாட்டார். ஆயினும், நீங்கள் தான் (கொடுமை தாளாமல் பொறுமை குன்றி) அவசரப்படுகிறீர்கள்’ என்று கூறினார்கள். புகாரி : 3612

அத்தியாயம்:61, நபி(ஸல்) அவர்களின் சிறப்புகள் :

கப்பாப்(ரழி) அவர்கள் தங்களின் மீது நடந்த தாக்குதலுக்குப் பதிலாக எதிரிகளை அழிக்குமாறு நபி(ஸல்) அவர்களை துஆச் செய்யச் சொல்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் நினைத்திருந்தால் அல்லாஹ்விடம் துஆச் செய்து மலக்குகளைக் கொண்டு எதிரிகளை கரத்தால் தடுத்து அழித்திருக்கலாம் அல்லது நாவினாலாவது தடுத்திருக்கலாம்!

ஆனால் நடந்தது என்ன?

பொறுமையாக இருக்க ஏவுகின்றார்கள்!

இதுதான் ஆதாரம்!

இப்போது நாம் பயங்கரவாத பாஜக ஆட்சியில் இருக்கின்றோம்! அதாவது மக்கா வாழ்க்கை! ஆனாலும் நபித் தோழர்களுக்கு நடந்த கொடுமைகளைப் போன்றா நமக்கு நடக்கின்றது? என்றாலும் பொறுமையாகத்தான் போகவேண்டும்!

மக்காவில் 13 வருடங்கள் பொறுமையாக ஒரே அமீரின் கீழ் ஒரே ஜமாஅத்தாக நபித்தோழர்கள் இருந்ததால் எல்லாம் வல்ல அல்லாஹ் மதீனாவில் நபி(ஸல்) அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தை தந்தான்!

ஆனால் நாம் 42 ஜமாஅத்துக்களாக 42 தலைவர்களின் கீழ் நாயும் பூனையுமாக அடித்துக் கொண்டு நாசமாகிக் கிடக்கின்றோம்! ஆனால் மார்க்கத்திற்கு எதிராக ஆளாளுக்கு ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதில் மட்டும் வீம்பு வீராப்பு பேசி இந்துக்களை தூண்டுவது கொண்டு அமோகமாக வளர துணை போகிறோம் என்பதே உண்மையாகும்.

முதலில் முஸ்லிம்கள் அனைவரும் நபி (ஸல்) அவர்களை பின்பற்றி அவர்கள் அமைத்துத் தந்த ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்ற ஜமாஅத்தின் அடிப்படையில் ஒரே அமீரின் கீழ் ஒரே ஜமாஅத்தாக (ஆதாரம்: புகாரி 3606) ஒன்றிணைய வாருங்கள்!

இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள். (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர் களுடன் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 8:46)

ஐயம்: தவ்ஹீத் இயக்கவாதிகளின் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மூலம் சாதித்தது என்ன?

தெளிவு : இயக்கவாதிகள் நடத்துகின்ற ஆர்ப்பாட்டம் போராட்டங்களினால் நமது சமுதாயம் பெற்ற பலன்.

போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மூலம் பாரம்பரியமாக நம்மிடமிருந்த பாபரி மஸ்ஜிதை இழந்தோமே தவிர வேறென்ன சாதித்தோம்?

ஆனால் சப்தமில்லாமல் சாதித்த இரண்டு சாதனைகள் உண்டு.

முதலாவதான சாதனை :

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட வருடமான 1992, டிசம்பர் 6க்கு முன்பு சிங்கிள் டீக்கு லாட்டரி அடித்துக் கொண்டிருந்த நமது சமுதாய இயக்கங்களின் தலைவர்கள் இன்று நல்ல வசதியோடு வாழ்கின்றனர்.

இரண்டாவதாக :

இரண்டு மூன்று MP சீட் என்ற நிலையிலிருந்த பயங்கரவாத பாஜக இன்று முன்னூறு MP சீட்டுக்களுடன் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தப்பட்டிருக்கின்றது! உங்களுடைய போராட்டங்களினால் வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலிலும் 400 MPக்களுக்கும் மேலான பெரும்பான்மையான பலத்துடன் ஆட்சி அமைக்க இருக்கின்றது.

இதுதான் நாம் சாதித்த இரண்டு ஹிமாலய சாதனைகள்!!

எனது அன்பான இஸ்லாமிய சகோதரர்களே!

நாம் மறுமைக்காக இவ்வுலகில் வாழவந்தவர்கள்.

இங்கு அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் கட்டளையிட்டதன் பிரகாரம் நாம் வாழ்ந்தால் மட்டுமே மறு மையில் முடிவேயில்லாத சுவன வாழ்வு கிடைக்கும்.

மீறினால் இவ்வுலகத்திலும் கேடு!

மறுமையிலும் கேடுதான்!

இதோ நபி(ஸல்) அவர்களின் கட்டளை:

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரழி) அறிவித்தார்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அன்சாரிகளான) எங்களிடம் “எனக்குப் பிறகு (ஆட்சியதிகாரத்தில் உங்களைவிடப் பிறருக்கு) முன்னுரிமை வழங்கப்படுவதையும், நீங்கள் வெறுக்கிற சில விசயங்களையும், பார்ப்பீர்கள் என்றார்கள். மக்கள், “அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகிறீர்கள், இறைத்தூதர் அவர்களே?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், “(ஆட்சியாளர்களான) அவர்களுக்கு அவர்களின் உரிமையை வழங்கிவிடுங்கள்; உங்கள் உரிமையை அல்லாஹ்விடம் கேளுங்கள் என்றார்கள்?  புகாரி : 7052

அத்தியாயம்:92, குழப்பங்கள் (சோதனைகள்)

Previous post:

Next post: