புரோகிதரிசம்!

in 2023 ஜனவரி

புரோகிதரிசம்!

அபூ அப்தில்லாஹ்

கம்யூனிசம், கேப்பிட்டலிசம், செக்யூரலிசம் போன்ற சொற்றொடர்களை அடிக்கடி நாம் கேட்டு வருகிறோம். ஆனால் “புரோகிதரிசம்’ என்று புதிதாக ஒன்றைக் கூறுகிறீர்களே? என்று சில சகோதரர்களின் உள்ளங்களில் ஐயம் எழலாம். ஆம்! உண்மைதான். இப்போது “புரோகிதரிசம்’ பற்றி மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண் டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எப்படி கம்யூனிசம் பொதுவுடைமைக் கொள்கை, கேப்பிட்டலிசம் முதலாளித்துவக் கொள்கை, செக்யூரலிசம், சமய சார்பிலாக் கொள்கை என ஒவ்வொன்றும் தனித் தனிக் கொள்கை கோட்பாடுகளுடன் நடைமுறையில் இருக்கின்றனவோ அவை போலவே இந்த புரோகிதரிசம், புரோகிதக் கொள்கையும் ஒரு தனிக்கொள்கைக் கோட்பாடுகளுடன் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த புரோகிதக் கொள்கை கோட்பாடுகள் மதத்திற்கு மதம் வேறுபடுவதாக இல்லை. யூத மதம், கிறிஸ்தவ மதம், ஹிந்து மதம், புத்த மதம், இஸ்லாமிய மதம் (மார்க்கம் அல்ல) போன்ற எல்லா மதங்களிலுமுள்ள புரோகிதர்களும் ஒரே கொள்கை கோட்பாடுகளை உடையவர்கள்தான். அவர்களில் வேறுபாட்டைக் காணமுடியாது.

இறைவனின் இறுதி நெறிநூலான அல்குர்ஆன் இந்தப் புரோகிதர்களின் கொள்கை கோட்பாடுகள் பற்றிக் கூறுவதை வரிசைப்படுத்திப்பார்த்தால், அவர்களின் கொள்கை கோட்பாடுகள் உள்ளங்கை நெல்லிக்கனி போல் வெட்டவெளிச்சமாகிவிடும். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

“அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும், மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்…” அல்குர்ஆன் 9:31

நபி(ஸல்) அவர்கள், புரோகிதர்களாகிய பாதிரிகளும், சந்நியாசிகளும் அல்லாஹ் ஹலாலாக்கியதை ஹராமாக்கியதையும் அல்லாஹ் ஹராமாக்கியதை, ஹலாலாக்கி யதையும் மக்கள் அப்படியே கண்ணை மூடிக்கொண்டு எடுத்து நடந்ததையே இந்த 9:31 வசனத்தில் அல்லாஹ் கண்டிக்கிறான் என்று விளக்கம் தந்ததாக அத்திய்யுப்னு ஹாத்திம்(ரழி) அவர்கள் அறிவித்து திர்மிதியில் இடம் பெற்றுள்ளது.

ஆம்! புரோகிதர்களின் அடிப்படைக் கொள்கைக் கோட்பாடு மக்களை அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு முரணாக நடக்க வைப்பதுதான். அதாவது ஷைத்தானின் நேரடி ஏஜண்டாகச் செயல்படுவதுதான் புரோகிதர்களின் அடிப்படைக் கொள்கையாகும். இதையும் அல்லாஹ் 9:34ல் தெளிவுபடுத்துகிறான். அது வருமாறு:

“…நிச்சயமாக பாதிரிகளிலும், சந்நியாசிகளிலும் பெரும்பாலோர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களை) தடுக்கிறார்கள்…” அல்குர்ஆன் 9:34

புரோகிதர்கள் அனைவருமே மக்களின் சொத்துக்களை ஹராமான வழியில் அதாவது தவறான வழியில் சாப்பிடுகிறார்கள் என்பதும் இந்த 9:34 வசனத்தில் உறுதிப்படுத்தப்படுகிறது.

அடுத்து அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனைகளைச் சொல்வதில் மன்னர்கள் இந்தப் புரோகிதர்கள்; இதையும் அல்லாஹ் மிகத்தெளிவாக அம்பலப்படுத்துகிறான்; அது வருமாறு:

“அல்லாஹ்மீது பொய்யான கற்பனையைச் சொல்பவனைவிடப் பெரும் அநியாயக்காரன் யார்? அத்தகையோர் (மறுமையில்) தங்கள் இறைவன் முன் நிறுத்தப்படுவார்கள். “இவர்கள் தாம் தங்கள் இறைவன் மீது பொய் கூறியவர்கள்” என்று சாட்சி கூறுவோர் சொல்வார்கள். இத்தகைய அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகும்; அவர்கள்தான் (மனிதர்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுக்கிறார்கள். மேலும் அதில் கோணலையும் உண்டுபண்ண விரும்புகிறார்கள். இவர்கள் தாம் மறுமையை நிராகரிப்பவர்கள் ஆவார்கள்”.   அல்குர்ஆன் 11:18,19

மார்க்கத்தைப் பிழைப்பாக்கிக் கொண்ட இந்தப் புரோகிதர்கள் அல்லாஹ்வின் சாபத்திற்குரியவர்கள் என்றும், மறுமையை நிராகரிப்பவர்கள் என்றும் அல்லாஹ் கடுமையாகக் கண்டித்துள்ளான். புரோகிதர்கள் பொய்யாக கற்பனை செய்து மக்களை வழிகெடுக்கிறார்கள் என்பதற்கு இன்னும் ஆதாரம் பாருங்கள்.

“…மேலும் அவர்கள் கற்பனை செய்வோர்களாக அன்றி வேறில்லை” அல்குர்ஆன் 2:78

கேவலம் அற்ப உலக வாழ்க்கைச் சுகத்தை நோக்கமாகக் கொண்டு, பொய்யா கக் கற்பனை செய்து நூல்களை எழுதி வைத்துக் கொண்டு, அவை அல்லாஹ்விட மிருந்து வந்தவைதான் என்று மக்களை ஏமாற்றுவார்கள். இந்தப் புரோகிதர்கள்; அது பற்றிச் சொல்லும் இறைவாக்கைப் பாருங்கள் :

“அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலேயே நூலை எழுதி வைத்துக் கொண்டு, பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்குக் கேடுதான்; அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாதித்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்”. அல்குர்ஆன் 2:79

மேலும் இந்தப் புரோகிதர்கள் சத்தியத்தை தங்களின் குழந்தைகளை அறிவது போல் அறிந்து கொண்டுதான் அதற்கு மாறாக மக்களை வழிகெடுத்து ஷைத்தானுக்குத் துணை போகிறார்கள் என்பதை உறுதிப்படுத்தும் வசனங்கள் இதோ:

“எவர்களுக்கு நாம் வேதங்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம்(சொந்த குழந்தைகளை அறிவது போல் (சத்தியத்தை அறிவார்கள். ஆனால் அவர்களில் ஒரு சாரார் நிச்சயமாக அறிந்துகொண்டே உண்மையை மறைக்கின்றனர்”.  அல்குர்ஆன் 2:146

“எவரும் தம் குழந்தைகளை (சந்தேக மில்லாமல்) அறிவதைப் போல் (சத்தியத்தை) நன்கறிவார்கள்…”  அல்குர்ஆன் 6:20.  மேலும் பார்க்க: 2:75,78,109

இந்தப் புரோகிதர்களை விட கேடுகெட்ட அநியாயக்காரர்கள் வேறு யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வசனம் பாருங்கள்.

“அல்லாஹ் மீது பொய்யைக் கற்பனை செய்கிறவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யாக்குகிறவனை விட அநியாயக்காரன் யார்? அநியாயக்காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள். அல்குர்ஆன் 6:21

4:59,157,158, 6:159, 7:3,55,205, 18:102 முதல் 106, 30:32, 33:36,66,67,68 போன்ற வசனங்களின் தெளிவான கட்டளைகளுக்கு மாறாக சொந்த விளக்கங்கள் கொடுத்து, மக்களை வழிகெடுக்கும் இந்தப் புரோகிதர்கள் இறைவனது வசனங்களைப் பொய்யாக்கும் சண்டாளர்கள், அநியாயக்காரர்கள் என்பதில் சந்தேகமுண்டா?

சத்தியத்தை உள்ளது உள்ளபடி சொல்லும் உண்மையாளர்களின் பேச்சை மக்கள் கேட்கவிடாமல் தடுப்பதில் இந்தப் புரோகிதர்கள் மிகமிகக் குறியாக இருப்பதையும், அதைக் கொள்கை கோட்பாடுகளில் ஒன்றாகவும் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரம் இதோ :

“மேலும் அவர்கள் (பிறரையும்) அதை (சத்தியத்தைக் கேட்கவிடாது) தடுக்கிறார்கள்; இவர்களும் அதை (சத்தியத்தை) விட்டு ஒதுங்கிக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களைத் தாங்களே நாசமாக்கிக் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் (இந்த உண்மையைப்) புரிந்து கொள்வதில்லை”.  அல்குர் ஆன் : 6:26

ஆனால் மறுமையில் இந்தப் புரோகிதர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து இவ்வாறு கதறுவார்கள்:

“நரக நெருப்பின் முன் அவர்கள் நிறுத் தப்படும்போது (நபியே!) நீர் அவர்களைப் பார்ப்பீராயின், “எங்கள் கேடே! நாங்கள் திரும்ப (உலகத்திற்கு) அனுப்பப்பட்டால் (நலமாக இருக்குமே); அப்பொழுது நாங்கள் எங்கள் இறைவனின் அத்தாட்சிகளைப் பொய்ப்பிக்க மாட்டோம்; நாங்கள் முஃமின்களாக இருப்போம்” எனக் கதறுவதைக் காண்பீர்” அல்குர்ஆன் 6:27

அல்லாஹ்வின் கட்டளைகளை அற்பமாக நினைப்பதிலும், அவற்றை மறுப்பதிலும், அவற்றை சொற்ப காசுக்காக மறைப்பதிலும், வளைப்பதிலும் இந்தப் புரோகிதர் களை யாருமே மிஞ்ச முடியாது. இதோ குர்ஆன் கூறுகிறது:

“அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்கின்றனர். இன்னும் அவனுடைய (நேர்) வழியிலிருந்து (மக்களைத்) தடுக்கிறார்கள், நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருக்கும் காரியங்கள் மிகவும் கெட்டவை” அல்குர்ஆன்9:9

வீணான யூகங்களையும், கற்பனை களையும் புனைந்து மக்களை வழிகெடுத்து, நரகில் சேர்க்கும் கைங்கரியத்திற்கு இந்தப் புரோகிதர்கள் ஷைத்தானுக்குத் துணை போகிறார்கள் என்பதைச் சொல்லும் குர்ஆன் வசனம் :

“மனிதர்களில் சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் அறிவில்லாமல் வீணான பேச்சுக்களை விலைக்கு வாங்கி (அவற்றால் மக் களை) அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுக்கவும், அல்லாஹ்வின் பாதையைப் பரிகாசமாக்கிக் கொள்ளவும் (முயல்கிறார்கள்); இத்தகையோருக்கு இழிவு தரும் வேதனையுண்டு”. அல்குர்ஆன் 31:6

வேதத்தை மக்களிடமிருந்து மறைக்கக்கூடாது என்று அல்லாஹ் உறுதிமொழி வாங்கியும், இந்தப் புரோகிதர்கள் அதற்கு மாறாகச் செயல்பட்டு உலக ஆதாயம் அடைகிறார்கள் என்று கூறும் குர்ஆன் வசனம் பாருங்கள்.

“தவிர வேதம் கொடுக்கப்பட்டோரிடம் அவர்கள் அதை மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும், அதை மறைக்கக் கூடாது என்று அல்லாஹ் உறுதி மொழி வாங்கியதை (அம்மக்களுக்கு நபியே! நீர் நினைவுபடுத்துவீராக); அப்பால், அவர்கள் அதைத் தங்கள் முதுகுகளுக்குப் பின்னால் எறிந்துவிட்டு, அதற்கு (பதிலாக)ச் சொற்ப கிரயத்தைப் பெற்றுக் கொண்டார்கள்; அவர்கள் (இவ்வாறு) வாங்கிக் கொண்டது மிகக் கெட்டதாகும். அல்குர்ஆன் 3:187

முஸ்லிம் மதப் புரோகிதர்களும் அல்குர்ஆனின் தெளிவான வசனங்களைத் தங்களின் முதுகுகளுக்குப் பின்னால் எறிந்து விட்டு, மக்களிடம் அற்பமான இவ்வுலக ஆதாயங்களைப் பெறுகிறார்கள் என்பதில் சந்தேகமுண்டா? (4:59,157,158, 6:159, 7:3,55,205, 18:102 முதல் 106, 30:32, 33:36,66,67,68 போன்ற வசனங்களைப் பார்க்க)

இந்தப் புரோகிதர்கள் தாங்கள் செய்யும் அற்பமான செயல்களையும் மக்களிடம் மிகப் பெரிதாக விளம்பரப்படுத்தி, அதன் மூலம் உலக ஆதாயம் அடைய முற்படுவதை கண்கூடாகப் பார்த்து வருகிறோம். நடந்துமுடிந்த தொண்டு நிகழ்ச்சிகளை பெரிதும் விளம்பரப்படுத்தி, ஏழைகளுக்குரிய ஜகாத், ஃபித்ரா போன்றவற்றை கொடுப்பதைப் பெரிதாகப் படம் பிடித்து பத்திரிகைகளில் பல பக்கங்கள் போட்டு விளம்பரம் தேடுகிறார்கள். ஜும்ஆ சிற்றுரைகளையும் பெரிதாக விளம்பரப்படுத்தி உலக ஆதாயம் தேடுகிறார்கள். அப்படிப்பட்ட புரோகிதர்களின் நிலைப்பற்றி அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்:

“எவர் தாம் செய்த(சொற்பமான)தைப் பற்றி மகிழ்ச்சி கொண்டும், தாம் செய் யாததை (செய்ததாகக் காட்டிக்) கொண்டும் புகழப்பட வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவர்கள் வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்வார்களென்று (நபியே!) நீர் ஒரு போதும் எண்ணாதீர்; அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு.”
அல்குர்ஆன் 3:188

இந்தப் புரோகிதர்கள் வழிகேட்டை விலைக்கு வாங்கிக் கொண்டது மட்டுமில்லாமல், மக்களையும் வழிகேட்டிலாக்கவே பெரிதும் விரும்புகின்றனர் என்று கூறும் குர்ஆன் வசனம் பாருங்கள்:

“(நபியே!) வேதத்திலிருந்து ஒரு பாகம் கொடுக்கப்பட்டோரை நீர் கவனிக்கவில்லையா? அவர்கள் வழிகேட்டை விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர்; நீங்களும் வழிகெட்டு விட வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்”. அல்குர்ஆன் 4:44

இந்தப் புரோகிதர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு முரணாக ஹராமான வழிகளில் தங்களின் உடலை வளர்ப்பதால், அல்லாஹ்வின் சாபத்திற்கு ஆளாகி, அவர்களது இருதயங்களும் கல்லாக ஆகிவிட்டன. அதனால்தான் முஸ்லிம் புரோகிதர்கள் தங் களை ஹஜ்ரத், (ஹஜர், கல்) என்று அழைக்கப்படுவதை விரும்புகின்றனர். அதனால் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு முரணாக அவர்கள் நடப்பதோடு மக்களையும் அந்த வழிகேட்டிலேயே அழைத்துச் செல்கிறார்கள். அவர்கள் மோசடியாளர்களே என்று கூறும் குர்ஆன் வசனம் பாரீர்:

அப்பால், அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்துவிட்டதால் நாம் அவர்களைச் சபித்தோம்; அவர்களுடைய இருதயங்களை இறுகச் செய்தோம். (இறை) வசனங்களை அதற்குரிய (சரியான) இடங்களிலிருந்து அவர்கள் மாற்றுகிறார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள். ஆகவே அவர்களில் சிலரைத் தவிர அவர்களில் பெரும்பாலோரின் மோசடியைப் பற்றி (நபியே!) நீர் தவறாமல் கண்டுகொண்டே இருப்பீர்….” அல்குர்ஆன் 5:13

இந்தப் புரோகிதர்கள் தங்களின் வயிறுகளில் ஹராமான வழியில் ஈட்டிய உணவை உட்கொள்வதால் தங்கள் வயிறுகளில் நரக நெருப்பையே கொட்டிக் கொள்கின்றனர் என்று மிகக் கடுமையாக எச்சரிக்கும் குர்ஆன் வசனம் பாரீர்:

எவர், அல்லாஹ் நெறிநூலில் அருளியவற்றை மறைத்து, அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை; மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும்மாட்டான்; அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. அல்குர்ஆன் 2:174

இந்தப் புரோகிதர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். மலக்குகளும் சபிக்கிறார்கள். மனிதர்களும் சபிக்கிறார்கள். மேலும் அந்தச் சாபத்திலேயே அவர்கள் நிலைத்திருக்கிறார்கள் என்று கூறும் குர்ஆன் வசனங்களைப் பாரீர் :

“நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் அதனை நாம் நெறிநூலில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்”.  அல்குர்ஆன் 2:159

யார் (இந்நெறிநூல் உண்மைகளை) நிராகரிக்கிறார்களோ, இன்னும் நிராகரிப்பவர்களாகவே மரித்தும் விடுகிறார்களோ நிச்சயமாக அவர்கள்மீது அல்லாஹ்வுடையவும், மலக்குகளுடையவும், மனிதர்கள் அனைவருடையவும் சாபம் உண்டாகும்.  அல்குர்ஆன் 2:161

அவர்கள் அ(ச்சாபத்)திலேயே என்றென்றும் இருப்பார்கள்; அவர்களுடைய வேதனை இலேசாக்கப்படாது; மேலும் (மன்னிப்புக் கோர) அவர்களுக்கு அவகாசமும் கொடுக்கப்படமாட்டாது.  அல்குர்ஆன் 2:162

Previous post:

Next post: