பொறுமையாளர்களின் சிறப்புக்கள்!
எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.
செப்டம்பர் மாத தொடர்ச்சி…..
யார் இறை நம்பிக்கை கொண்டு முஸ் லிமாகி போதுமான அளவு வாழ்வாதாரம் வழங்கப்பட்டு தமக்கு அல்லாஹ் வழங்கியதைப் போதுமெனக் கருதினாரோ அவர் வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிட்டார் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அப்துல்லாஹ் பின் அம்ர் (ரழி) முஸ்லிம் 1903, திர்மிதி, முஸ்னத் அஹ்மத், மற்றுமொரு ஹதீதில், யாருக்கு இஸ்லாத்தின் வழிகாட்டப்பட்டு அவரது வாழ்க்கைக்குப் போதுமானதாக அமைந்து அதையே போதுமெனக் கருதினாரோ அவருக்கு வாழ்த்துக்கள் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஃபளாலா பின் உபைத்(ரழி), திர்மிதி, முஸ்னத் அஹ்மத்)
அல்லாஹ் இறை நம்பிக்கையாளருக்கு அவர் செய்த நற்செயலுக்கான நன்மையில் அநீதி இழைப்பதில்லை. அதற்குரிய நன்மை இம்மையிலும் அவருக்கு வழங்கப்படும் அதற்குரிய நன்மை பிரதிபலன் மறுமையிலும் அவருக்கு வழங்கப்படும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அனஸ்பின் மாலிக்(ரழி), முஸ்லிம், 5408, முஸ்னத் அஹ்மத், தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 5, பக்கம் 111-113) அத்துடன்,
இவ்வுலகிலும் அதிபதிகளாக்கப்படும் :
எனவே, எவர்கள் சக்தி குறைந்தவர்களாகக் கருதப்பட்டார்களோ அந்த இஸ்ர வேலர்களைக் கிழக்கிலும், மேற்கிலுமுள்ள நிலப்பகுதிகளின் அதிபதிகளாக்கினோம். இன்னும் அவற்றிலே பெரும் பாக்கியங்களையும் அளித்தோம். இஸ்ராயீலின் மக்கள் பொறுமையாகவும், உறுதியாகவும் இருந்த காரணத்தால், அவர்கள் மீது உமது இறைவனுடைய அழகிய வாக்குப் பரிபூரணமாகி நிறைவேறிற்று; மேலும் ஃபிர்அவ்னும் அவனுடைய சமூகத்தாரும் உண்டு பண்ணியிருந்தவற்றையும், கட்டியிருந்த மாடமாளிகைகளையும் நாம் தரைமட்டமாக்கி விட்டோம். (7:137)
அன்றைய காலத்தில் “அமாலிகா‘ என்ற அரசப் பரம்பரையில் வந்த அதி உயர் குலமாகக் கருதப்பட்ட “கிப்தி‘ குலத்தில் பிறந்தவன் எவனோ! (28:3-6, தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 6, பக்கம். 738, பாகம் 1, பக்கம் 200, சிறு குறிப்பு 93ஆவது)
அன்றைய காலத்து மக்களில் சிறந்த வர்களாக இருந்த இஸ்ரவேலர்களைத் தாழ்த்தப்பட்டவர் களாகக் கருதிக் கீழ்த்தரமான அடிமை வேலைகளைக் கொடுத்துக் கொடுமைப்படுத்தியவன் எவனோ! (2:49, தஃப்ஸீர் இப்னு கஸீர்: பாகம் 1, பக். 200-205)
நிச்சயமாக அந்நேரம் பூமியில் (தனது) ஆதிக்க வலிமை மிக்கவன் எவனோ! (10:83,20:24,43)
தன்னுடைய ஆட்சி அஸ்தமிப்பதற்கான அறிகுறியாக ஜெருசலத்திலுள்ள பைதுல் மக்திஸில் இருந்து புறப்பட்டு வந்த நெருப்பு ஒன்று இஸ்ரவேலர்களின் இல்லங்களை மட்டும் விட்டு விட்டுத் தனது இனமான “கிப்திகளின்‘ இல்லங்களில் மட்டும் நுழைந்தது போன்ற அதிர்ச்சி தரும் ஒரு கனவைக் கண்டவன் எவனோ! (தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 1, பக்கம் 200-205) அந்த கனவின் விளக்கமாக;
இறைத்தூதர் இஸ்ஹாக்(அலை) அவர்களின் வாரிசுகளான இஸ்ரவேலர்களில் இருந்து ஓர் ஆண்மகன் பிறந்து அவரது கரத்தாலே எகிப்தின் சர்வாதிகார ஆட்சியாளனாகிய தனக்கு ஆபத்து ஏற்படும் என்று இஸ்ரவேலர்களின் சமூகங்களின் மத்தியில் வாழையடி வாழையாகப் பேசப்பட்டு வந்த செய்தியால் பெரும் பீதி அடைந்திருந்தவன் எவனோ! (தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 1, பக்கம் 200-205, பாகம் 6, பக்கம் 738-741) எனவே,
அந்தக் குழந்தை பிறந்துவிடக் கூடாது. பிறந்தாலும் உயிரோடு இருந்துவிடக் கூடாது என முன் எச்சரிக்கையுடன் விளிப்போடு இருந்த ஆணவக்காரப் பேரரசன் எவனோ! (தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 6, பக்கம் 741)
உயிரோடு இருந்தாலும், எந்தக் குழந்தை வளர்ந்துவிடக்கூடாது என்பதற்காகப் பல்லாயிரக் கணக்கான இஸ்ரவேலர்களின் பச்சிளங் குழந்தைகளைக் கொடூரமாகக் கொன்று குவித்தவன் எவனோ! (14:6, 2:49, 7:127, 141, தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 6:741)
இஸ்ரவேலர்களுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகளை எல்லாம் அறுத்துக் கொலை செய்வதற்காக நீளமான வாள்களைக் கையில் கொடுத்துப் படைகளை ஏவி விட்டவன் எவனோ! (2:49, தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 4, பக்கம் 936-938, பாகம் 1, பக்கம் 200-205)
இஸ்ரவேலர்களைக் கொத்தடிமைகளாக்கிக் கேவலமான பணிகள் கொடுத்துக் கொடுமைப் படுத்தியவன் எவனோ! (2:49, தஃப்ஸீர் இப்னு கஸீர், பாகம் 1, பக்.200இன் சிறு குறிப்பு 93ஆவது)
அன்று தனது ஆட்சிக்குட்பட்டவர்களை எல்லாம் ஒன்றுதிரட்டி நானே உங்களின் மேலான இறைவன் என்று உரத்த குரலில் பிரகடனப்படுத்தியவன் எவனோ! (79:23,24, 28:38, தப்ஸீர் இப்னு கஸீர் பகம்: 6, பக்கம் 780-784)
எகிப்தின் செங்கடலில் மூழ்கடிக்கப்பட்டுப் பின்னால் வருவோருக்குப் பெரும் படிப்பினைக் காகப் பாதுகாக்கப்பட்டுப் பத்திரமாக கெய்ரோ நகர் அருங்காட்சியகத்தில் இன்றளவும் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும் இழிவடைந்த சடலத்திற்கு உரியவன் எவனோ! (10:90-92, தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 4, பக்கம் 556-561) அவனே,
“சாட்சாத்‘ வலீத் பின் முஸ்அப் பின் அர்ரய்யான், என்ற இயற்பெயரைக் கொண்டவனும், அன்றைய அடக்குமுறை ஆட்சியாளர்களில் எகிப்தின் கொடுங்கோலர்களுக்கே பெருங் கொடுங்கோலர்களாக இருந்ததால் அன்றைய பண்டைய எகிப்து அரசர்களின் புனைப் பெயராகப் புளக்கத்தில் இருந்து வந்த ஃபிர்அவ்ன் என்ற கொடிய பெயரைக் கொண்டவனும், இறைவனின் நிரந்தர சாபத்திற்குரியவனும், அடக்குமுறை ஆட்சியாளனாகவும், பெரும் சர்வாதிகாரியாகவும், எல்லை மீறிய கொடுங்கோலனாகவும், உலக மகா ஆணவத்தின் பிறப்பிடமாகவும், மிகப்பெரிய அரசனாக வும், பெரும் பாவியாகவும் இருந்த ஃபிர்அவ்னுடைய (28:56, 26:59, 7:137, தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம்: 1, பக்கம் 200இன் சிறு குறிப்பு : 93ஆவது) கொடுமைகள் அனைத்தையும் பொறுமையுடன் தாங்கிக் கொண்டதற்காக இஸ்ரவேலர்களை,
பொறுமையுடன் இருந்த காரணத்தினால் பூமியில் அதிபதிகளாக்கினான்:
அதுவே அல்லாஹ்வுடைய விருப்பமாகவும் இருந்தது. இதனாலேயே பலவீனர்களாகக் கருதப்பட்டோருக்கு அந்தப் பூமியில் வைத்தே அருள்புரியவேண்டும் என்றும், அவர்களைத் தலைவர்களாக ஆக்க வேண்டும் என்றும், நாம் விரும்பினோம். மேலும் அவர்களை (அப்பூமிக்கு) உரிமையாளர்களாகவும் ஆக்கவும் (விரும்பினோம்) மேலும் அந்தப் பூமியில் அவர்களுக்கு அதிகாரம் வழங்கவும் ஃபிர்அவ்ன், ஹாமான் ஆகிய அவர்களுடைய படையினர் ஆகி யோர் ஒடுக்கப்பட்ட அந்த மக்கள் குறித்து எதை அஞ்சிக் கொண்டிருந்தார்களோ அதையே அவர்களுக்குக் காட்டவும் விரும்பினோம். (28:5,6) என உயர்ந்தோனாகிய அல்லாஹ் தெரிவிக்கின்றான்.
ஏக இறைவனாகிய அல்லாஹ் தான் கூறியபடியே இஸ்ரவேலர்களுக்குச் செய்தான் என்பதை மற்றுமொரு வசனத்தில் அதையடுத்து பலவீனமானோர் என்று கருதப்பட்டு வந்த சமுதாயத்தாரைப் பூமியின் கிழக்குப் பகுதிகளுக்கும் நாம் உரிமையாளர்களாக ஆக்கினோம். அவற்றை நாம் அவர்களுக்காக முன்பே வளமாக்கிக் கொடுத்த அழகிய எமது வாக்கு நிறைவேறியது. அது ஏனெனில் அவர்கள் பொறுமை காத்தார்கள். (7:137) என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். மற்றுமோர் இடத்தில், அவ்வாறே அவற்றுக்கு இஸ்ரவேலர்களை நாம் உரிமையாளர்களாக ஆக்கினோம். (26:59) என்றும் அல்லாஹ் தெரிவிக்கின்றான்.
(கட்டுரை முடிவுற்றது)