புரோகிதத்திற்குக் கூலி நரகமே!

in 2023 நவம்பர்

புரோகிதத்திற்குக் கூலி நரகமே!

அபூ அப்தில்லாஹ்

மறு பதிப்பு : 

அக்டோபர்  தொடர்ச்சி….

அதிலும்முஅத்தின்களாகப் பணி புரிகிறவர்கள், அத்துடன் பள்ளியைக் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்வது மற்றும் சில வேலைகள் என்று கூலி வாங்குவதற்கு அனுமதிக்கப் பட்ட பணிகளைச் செய்து வருவதால், அவர்கள் தப்புவதற்கு வழி இருக்கிறது என்று நம்பலாம். மேலும் கிராமப் புறத்துப் பள்ளிகளில் இமாமத் செய்பவர்களான லெப்பைமார்கள் (பெரும்பாலும் மவ்லவி அல்லாதவர்கள்) பாங்கு சொல்வதிலிருந்து, பள்ளியைச் சுத்தம் செய்வதிலிருந்து, ஏன்? கக்கூஸ், பீஷாப் கானா இவற்றைச் சுத்தம் செய்வதிலிருந்து, பள்ளி சம்பந்தப்பட்ட கரண்ட் பில் கட்டுதல் மற்றும் வெளி வேலைகள் பார்ப்பதிலிருந்து அனைத்தையும் அவர்களே பார்ப்பதால், அவர்களும் தப்பிவிடலாம். கூலி வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட வேலைகளுக்கே அவர்கள் பெறும் சம்பளம் போதாது என்பதே உண்மையாகும். ஆனால் இப்படிப்பட்ட கூலி பெற அனுமதிக்கப்பட்ட எந்த வேலையையும் செய்யாமல் இமாமத் செய்வது, பயான் செய்வது, குர்ஆன் ஓதிக் கொடுப்பது போன்ற கூலி வாங்கக் கூடாத செயல்களுக்குக் கூலி வாங்கும், கற்றறிந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் மவ்லவிகளே மறுமையில் வகையாக மாட்டப்போகிறார்கள் என்பதை அவர்களால் மறுக்க முடியுமா?

மேலும் மவ்லவிகளில் ஒரு சிலரைக் கொண்டு முஸ்லிம் சமுதாயத்திற்கு உண்மையான சேவையாற்றப்பட்டிருக்கிறது. அவர்கள் நேர்வழியைப் போதித்திருக்கி றார்கள் என்றால், அவர்கள் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொள்வதை விட்டு, ஹலாலான தொழில் மற்றும் வியாபாரம் மூலம் பொருள் ஈட்டுபவர்களாகவே இருந்திருப்பார்கள், விரல் விட்டு எண்ணப்படும் ஓரிருவர் அதற்கு விதிவிலக்காக மார்க்கத்தைப் பிழைப்பாக ஆக்கிக் கொண்டவர்களாக இருந்தாலும், அது அவர்கள் நேர்வழியில் இருந்ததற்கு ஆதாரமாக ஆகாது. “வல்ல அல்லாஹ் பாவிகளைக் கொண்டும் தீனுடைய வேலை வாங்கிக்கொள்வான்” (புகாரி 4:297) என்ற நபி(ஸல்) அவர்களின் போதனையின் அடிப்படையிலானதாகவே இருக்கும்.

இன்றைக்கு தெளஹீது மவ்லவிகள் மேற்படி பித்அத்களை, அனாச்சாரங்களை வன்மையாகக் கண்டிப்பதற்குக் காரணம் அவர்களின் ஈமானின் தெளிவு என்று சொல்ல முடியாது. அந்த ஈமானில் தெளிவு ஏற்பட்டிருந்தால் அவர்கள் இன்று பிரசார பணிக்கு, இமாமத் செய்வதற்கு, குர்ஆன் ஓதிக்கொடுப்பதற்கு, மார்க்கம் கற்றுக்கொடுக்க சம்பளம் பெறுவதை விட்டும் விடுபட்டிருக்க வேண்டுமே? சொந்தமாகத் தொழில், வியாபாரம் செய்ய முன்வந்திருக்க வேண்டுமே? அப்படியானால் உண்மை நிலை என்ன? ஆயிரத்திற்கும் கீழ் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு ஐயாயிரத்துக்கும் அதிகமாக சம்பளம் வாங்க வாய்ப்பு ஏற்பட்டுவிட்டது. அதற்காக இந்த கத்தம், ஃபாத்திஹா, மவ்லூது, தர்கா சடங்கு மற்றும் அனாச்சாரங்களை கூலிக்காக எதிர்க்க முன் வந்திருக்கிறார்களே அல்லாமல் மார்க்கத்தைப் பிழைப்பாக ஆக்கிக்கொள்ளக் கூடாது என்ற குர்ஆன், ஹதீத் விளக்கத்தினால் அல்ல. மார்க்கத்தை மலிவாக விற்பதை விட்டு அதிக லாபத்துடன் விற்கத் தெரிந்து கொண்டார்கள். மார்க்கத்திற்குக் கிரயமாக சொற்ப தொகையைத்தான் பெறக்கூடாது; பல்லாயிரக் கணக்கில் வாங்கலாம் என்று இவர்களாக முடிவு செய்து கொண்டார்கள் போலும். தயாராகி விடுவார்கள் :

இன்று நாட்டிலுள்ள முகல்லிது மவ்லவிகள் அனைவருக்கும் மாதாமாதம் ரூபாய் ஐந்தாயிரம் (RS. 5,000) சம்பளமாகத் தந்து விடுகிறோம். நீங்கள் செய்து வரும் பித்அத், அனாச்சாரங்களை விட்டுவிடுங்கள். மேலும் அவற்றைக் கண்டித்து மக்களிடையே பிரச்சாரம் செய்யவேண்டும் என்று யாரும் ஏற்பாடு செய்ய முன்வந்தால், நிச்சயமாக இந்த முகல்லிது மவ்லவிகள் அனைவரும் இரட்டிப்பு சந்தோசத்துடன் அதை ஏற்று நடக்க முன்வருவார்கள். இதில் சந்தேகமேயில்லை. இந்த நிலையில் ரூபாய் ஐந்தாயிரத்திலிருந்து (RS.5,000) ரூபாய் ஐம்பதாயிரம் (RS. 50,000) வரை, அவர்கள் செய்யும் பிரச்சார பணி, ஊர், நாடு என்பதற்கேற்றார் போல் சம்பளம் வாங்கும் இந்த தவ்ஹீது மவ்லவிகள் மேற்படி அனாச்சாரங்களை எதிர்த்துக் குரல் கொடுப்பது என்ன ஆச்சரியம்? ஈமானுடைய பலத்தினால் செய்யப்படும் பிரசாரம் அல்ல அது. காசுக்காகச் செய்யப்படும் பிரசாரம். அதனால்தான் அதில் உயிரோட்டம் இல்லை. அவர்களிடையேயும் ஈமானின்  தெளிவு இல்லை.

ஈமானுடைய தெளிவு அவர்களுக்கு இருக்குமேயானால் 1986ல் மார்க்கத்தை வைத்துப் பிழைப்பு நடத்தும் ஈனச் செயலை முறியடிக்க பல தொழில்நுட்பக் கல்வியுடன், உலகக் கல்வி, மும்மொழிக் கல்வி, இலவச மார்க்கக் கல்வி கற்பிக்கும் எமது பத்து ஆண்டு திட்டம் முறைப்படி ஆரம்பிக்க இருக்கும் தருவாயில், அதை நடக்கவிடாது தடுக்கும் நோக்கத்துடன், இந்த தவ்ஹீது புரோகிதர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வெளியேறி அவதூறு பரப்பத் துணிந்து இருப்பார்களா? தெளஹீதின் பெயரால் மீண்டும்  அதே புரோகிதக் கல்வி (சம்பளத்திற்குப் பணியாற்றும் நிலை) செழிக்க மதரஸா ஆரம்பித்திருப்பார்களா? JAQH என்று தனிப் பள்ளிகள் கட்டத் துணிந்திருப்பார்களா? 1994, மே மாதம் இஸ்லாமிய மாநாட்டிற்குப் பின்னர் மீண்டும் அந்தக் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்த இருக்கிறோம் என்பதை அறிந்துகொண்டு, அத்திட்டம் மக்களிடையே பிரபலமாகி விடக்கூடாது என்பதற்காக சையது அஹமது என்பவரால் மீண்டும் அவதூறு நோட்டீஸ் வெளிவர ஏற்பாடு செய்திருப்பார்களா?

புரோகிதத்தை  விடாத  தவ்ஹீத்  பூசாரிகள்:

இவை அனைத்தையும் ஆய்ந்து பார்க்கும்போது புரோகிதமற்ற தொழிற் கல்வியுடன் கூடிய மார்க்கக் கல்வி மக்களிடையே நடைமுறைப்படுத்தப்படுவதை, தழைத்தோங்கு வதை முகல்லிது மவ்லவிகளை விட இந்த தவ்ஹீது மவ்லவிகளே அதிகமாக வெறுக்கிறார்கள் என்பது புரிகிறது. காரணம் முகல்லிது மவ்லவிகளுக்குப் புரோகிதத்தைக் கொண்டு மாதம் ஆயிரம் ரூபாய் கூட கிடைக்காத நிலையில் இந்த தவ்ஹீது மவ்லவிகளுக்கு 5 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை கிடைப்பதேயாகும்.

இவர்கள் எப்படி புரோகிதம் ஒழிய ஒத்துழைக்கப் போகிறார்கள்? அவர்களிடமிருந்து இதை எதிர்பார்க்க முடியாது. அவர்கள் பின்னால் செல்லும் குர்ஆன், ஹதீதுக்குச் சொந்தக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சகோதரர்களே சுதாரிக்க வேண்டும். இந்தப் புரோகிதர்களை ஓரம் கட்டவேண்டும். அப்போதுதான் முஸ்லிம் சமுதாயம் உருப்படும். மீண்டும் அதன் உன்னத நிலையை அடையமுடியும்.

நொண்டிச் சரக்குகள் :

புரோகிதத் தொழிலை நிலைநாட்ட, அதிலிருந்து வருவாய் பெற இந்தப் புரோகிதர்கள் பல நொண்டிக் காரணங்களைச் சொல்லுகிறார்கள். அவற்றின் நிலைகளையும் பார்ப்போம். அபூபக்கர் சித்தீக்(ரழி) அவர்கள் கலீஃபாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னால் அவர்களுக்கு மாதா மாதம் பைத்துல் மாலிலிருந்து (அரசு கருவூலம்) சம்பளம் கொடுக்கப்பட்டது. இதனை ஆதாரமாகக் காட்டி புரோகிதர்கள் வாங்கும் சம்பளத்தை நியாயப்படுத்துகின்றனர். இது தவறாகும். உண்மையில் மார்க்கப் பிரசாரத்திற்காக அவர்களுக்குச் சம்பளமாகக் கொடுக்கப்பட்டிருந்தால் அன்று மார்க்கப் பிரசாரம் செய்து கொண்டிருந்த நபித்தோழர்கள் அனைவருக்கும் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்க  வேண்டும். 

அதேபோல் மக்களுக்குத் தொழ வைப்பதற்காக, இமாமத் செய்வதற்காகக் கொடுக்கப் பட்டிருந்தால் அன்று மற்ற பள்ளிகளிலும் இமாமத் செய்த இமாம்கள் அனைவருக்கும் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படிக் கொடுக்கப்படவில்லை என்பதை அவர்களும் ஒத்துக்கொள்வார்கள். பின் யார் யாருக்குச் சம்பளம் கொடுக்கப்பட்டது? கலீஃபா அவர்களுக்கும், மாகாண கவர்னர்களுக்கும் சம்பளம் கொடுக்கப்பட்டது. அதாவது மக்களின் இவ்வுலகத் தேவைகளை நிறைவு செய்ததற்காக, ஆட்சி செய்ததற்காக அவர்களுக்குச் சம்பளம் கொடுக்கப்பட்டது. அவர்கள் மார்க்கப் பிரசாரமும் செய்தாலும், மக்களுக்குத் தொழ வைத்தாலும் சம்பளம் கொடுக்கப்பட்டதோ? ஆட்சி  அலுவல்களைப் பார்த்ததற்காகத்தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. காரணம் மற்றப் பிரசாரர்களுக் கும், இமாம்களுக்கும், முஅத்தின்களுக்கும் சம்பளம் கொடுக்கப்படவில்லை. இதிலும் இந்த ஹஜ்ரத்துகள் மக்களை குர்ஆன், ஹதீதுக்கு முரணாக ஏமாற்றுகிறார்கள்.

முழுநேர மார்க்கப் பணி கூடுமா?

முழு நேரப் பணியாளர்களாக அவர்கள் பணி புரிவதால் அதற்காகச் சம்பளம் பெறுவதாக சப்பைக்கட்டு கட்டுவோரும் புரோகிதர்களில் உண்டு. மார்க்கப் பிரசாரம், இமாமத், பாங்கு சொல்லல், குர்ஆன் ஓதக் கற்றுக்கொடுத்தல், மார்க்கம் கற்றுக்கொடுத்தல் இவை எதுவுமே முழு நேரப் பணிக்குரியவை அல்ல. நபி(ஸல்) அவர்களது காலத்தில் இவை அனைத்தும் இருந்தும், முஸ்லிம்கள் மீது பொறுப்பிருந்தும் அவர்களில் யாரும் முழு நேரப் பணியாளர்களாகப் பணி புரியவில்லை. அப்படி பணி புரியும் கட்டாயம் இருந்தாலும் அதற்காகச் சம்பளம் பெறவில்லை. ஆடு வளர்த்தல் போன்ற வேறு அனுமதிக்கப்பட்ட வழிகளிலேயே தங்கள் உலகத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டார்கள். எனவே இப்பணிகளை முழு நேரம் செய்வதாகக் காரணம் கூறி அதற்குச் சம்பளம் பெறுவதும் குர்ஆன், ஹதீதுக்கு முரணாகும், ஹறாம்  ஆகும்.

நேரம் ஒதுக்கக் கூலியா?

இமாமத், பாங்கு சொல்வது: இதற்காக நேரம் ஒதுக்கிக் காத்துக்கிடந்து பணி புரிவதால் அதற்காகச் சம்பளம் வாங்குவதாகச் சப்பைக்கட்டு கட்டுகின்றனர். இதுவும் தவறாகும். இப்படி எல்லாம் இந்தப் புரோகிதக் கூட்டம் மார்க்கத்தைப் பிழைப்பாக்க முற்படுவார்கள் என்பதை முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்த நபி(ஸல்) அவர்கள் அதற்குத் தெளிவான தடை விதித்துள்ளார்கள். அதுவும் பாங்கு சொல்வதற்குக் கூலி கொடுப்பதில்லை என்று உறுதிமொழி வாங்கியுள்ளனர்.

முஅ0த்தினை நியமனம் செய்தால் எந்தவிதமான பிரதிபலனும் (கூலியோ, சம்பளமோ) பெற்றுக்கொள்ளாத ஒருவரை நியமிக்கவேண்டும் என்று நபி(ஸல்) என்னிடம் இறுதியான உறுதிமொழியாக வாங்கினார்கள்என்று உஸ்மான் இப்னு அபில் ஆஸ்(ரழி)  அவர்கள்  கூறினர்.  (அபூதாவூத், திர்மிதி)

இங்கு கவனிக்க வேண்டிய விசயமொன்றுள்ளது. தொழவைக்க, பாங்கு சொல்ல நேரம் ஒதுக்கி வருவதுடன் அதற்காகக் காத்துக்கிடக்க வேண்டியுள்ளது என்பதே இந்த புரோகிதர்களின் நொண்டிச்சாக்கு. இங்கு குறிப்பாக நபி(ஸல்) பாங்கு சொல்பவரைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதற்குப் போதிய காரணம் இருக்கிறது. பாங்கு சொல்பவர் நேரம் ஒதுக்கி முன்கூட்டியே வரவேண்டியுள்ளது. தொழவரும் அனைவரும் பாங்கு சொல்ல வேண்டிய நிலையும் இல்லை; கடமையும் இல்லை. இப்படிப்பட்ட நிலையில் அதற்காக நேரம் ஒதுக்கி முன்கூட்டியே வந்து பாங்கு சொல்பவரே அதற்காகக் கூலி வாங்குவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

இந்த நிலையில் இமாமத் செய்பவருக்கு, மற்றவர்களைப் போல் அவருக்கும் தொழுகை கடமை; ஜமாஅத்துடன் தொழுவதும் வலியுறுத்தப்பட்டுள்ள நபிவழி. தொழவரும் மற்றவர்களுக்குள்ள பொறுப்புகளே அவருக்கும் உள்ளது. தொழுகையாளிகளுள் ஒருவராக வந்த அவர் தொழுவதற்குப் பதிலாகத் தொழ வைக்கிறார்; அவ்வளவுதான். மேலதிகமாக அல்லாஹு அக்பர் என்பதைச் சப்தமாகச் சொல்கிறார். பஜ்ர், மஃரிபு, இஷா ஆகிய மூன்று நேரங்களிலும்  சப்தமாககிராஅத்ஓதுகிறார்.

முன்னவர் மீது பாங்கு சொல்வது கடமை இல்லாத நிலையில் முன்கூட்டியே வந்து பின்னவரை விட சப்தமாக ஐந்து நேரங்களிலும் பாங்கு சொல்பவருக்குக் கூலி கொடுப்பதையே நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளனர். இந்த நிலையில் பின்னவர் மீது கடமையான தொழுகையை தொழும்போது இமாமத் செய்வதற்குக் கூலி கொடுப்பதை நியாயப்படுத்த முடியுமா? ஒருக்காலும் முடியாது.

இமாமத் பொறுப்புக்குக் கூலியா?

இமாமத் செய்வதால் அந்தக் குறிப்பிட்ட பள்ளிக்கு எங்கிருந்தாலும் வரவேண்டியுள்ளது. இல்லை என்றால் எங்கு வேண்டுமானாலும் எந்தப் பள்ளியிலும் தொழுது கொள்ளலாம். இந்த முயற்சிக்குத்தான் கூலி வாங்குகிறோம்என்று வாதிப்போரும் உண்டு. இதுவும் ஏற்கத்தக்கதாக இல்லை. அல்லாஹ்விற்காக தொழுவதையும் காசாக்க வேண்டும் என்ற இந்தப் புரோகிதர்களின் மிக இழிவான புத்தி காரணமாக, கெட்ட நோக்கத்துடன் இவர்கள் உண்டாக்கி வைத்திருக்கும், தொழுகை முடிந்தவுடனேயே அதுவும் நபிவழிக்கு முரணாகவே, தொழுதுகொண்டிருப்பவருக்கு இடைஞ்சலாக குர்ஆனே ஓதக்கூடாது என்ற நபி(ஸல்) அவர்களின் தடையிருக்க, முதல் ரகஅத்தைத் தவறவிட்டுப் பின்னால் வந்து தொழும் தொழுகையாளிகளுக்கு இடைஞ்சலாக உரத்த ஆமீன்களுடன் ஓதப்படும் ரெடிமேட் துஆவை, பித்அத்தை இந்தப் புரோகிதர்கள் விட்டுவிடட்டும்.

இவர்களுக்காக மக்கள் காத்திருக்கமாட்டார்கள். தொழவரும் யாரும் மிக எளிதாக இமாமத் செய்ய முன்வருவார்கள். தொழவைக்க என்று கூலிக்கு மாரடிக்கும் ஒரு இமாம் தேவையிராது. “உங்களில் ஒருவர் இமாமத் செய்யட்டும்என்ற நபி(ஸல்) அவர்களின் கட்டளை நிலைநாட்டப்படும். கூலி வாங்குவதற்கே, புரோகிதத்தின் ஆணி வேராகவே இந்த ரெடிமேட் துஆவை உண்டாக்கி வைத்துள்ளனர்.

ஆக இப்படி இமாமத் பணிக்கு குர்ஆன், ஹதீதுக்கு முரணாகக் கூலி வாங்குவதற்கு இந்தப் புரோகிதர்கள் கூறும் அத்தனைக் காரணங்களும் போலியானவை; ஏற்கத்தக்கவை யல்ல. இவைகளில் எதுவுமே மார்க்கத்தில் தெளிவாக ஹராமாக்கப்பட்டுள்ள கூலி வாங்குவதை ஹலாலாக ஆக்கமுடியாது. ஆக மார்க்கத்தைப் பிழைப்பாக ஆக்கிக் கொண்டவர்கள், விபச்சார விடுதி நடத்துபவர்களைவிட, சாராய வியாபாரிகளை விட, வட்டி வாங்குபவர்களை விட, மிக மிகக் கேடுகெட்ட நிலையில் இருக்கிறார்கள். மறுமையில் இவர்களுக்கு நிரந்தர நரகமே என்பதே குர்ஆன், ஹதீத் வெளிச்சத்தில்  கிடைக்கும்  உண்மையாகும்.

சில ஹஜ்ரத்துகள் சாராயக்கடை, வட்டிக்கடை, லாட்டரி சீட்டுக்கடை, சினிமா கொட்டகை இப்படிப்பட்ட இடங்களுக்கெல்லாம் சென்று பாத்திஹா, மவ்லூது ஓதுவதை சிலர் ஆச்சரியமாகப் பார்ப்பதுண்டு. இங்கெல்லாம் போய் இந்த ஹஜ்ரத் பாத்திஹா, மவ்லூது ஓதலாமா? என்று அங்கலாய்ப்பதுண்டு. உண்மையில் மேலே குறிப்பிட்டுள்ள ஈனச் செயல்களை விட கேடுகெட்டஈனச் செயலிலேயே இந்த ஹஜ்ரத்மார்கள் மூழ்கி இருக்கிறார்கள் என்ற உண்மையை அறியாத மக்களே இப்படி அங்கலாய்ப்பார்கள். காரணம் அவர்களுக்கு குர்ஆன், ஹதீதில் போதிய ஞானம் இல்லை. மார்க்கப் பணிக்குக் கூலி வாங்குவதைத் தடுத்து வந்துள்ள குர்ஆன் வசனங்களையும், ஹதீத்களையும் அவர்கள் அறிய மாட்டார்கள். குர்ஆன், ஹதீதை முறைப்படி விளங்கியவர்கள் மட்டுமே இந்தப் புரோகிதர்களின் மிகக் கேவல நிலையைப் புரிய முடியும்.

எச்சரிக்கை :இவ்வாறு நாம் எழுதியுள்ளதால் வட்டி, சாராயம், லாட்டரி சீட்டு, சினிமா இவற்றை நாம் ஆதரித்து சரிகண்டுள்ளதாக இந்த மவ்லவிகள் மக்களிடம் சரடு விடுவார்கள். காரணம் அந்த அளவு கல்மனம் படைத்தவர்கள் அவர்கள். மார்க்கத்தைக் கொண்டு வயிறு வளர்ப்பது மேற்படி ஹறாம்களை விட கொடிய ஹறாம் என்றே  இங்கு  சுட்டிக் காட்டியுள்ளோம். (இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Previous post:

Next post: