முஸ்லிம் – முஸ்லிமீன் – முஸ்லிமன் – முஸ்லிமத்தின் – முஸ்லிமத்தன்-முஸ்லிமைனி  என்பது  குறித்து…

in 2023 நவம்பர்

முஸ்லிம்முஸ்லிமீன்முஸ்லிமன்முஸ்லிமத்தின்

முஸ்லிமத்தன்முஸ்லிமைனி  என்பது  குறித்து

எஸ்.எம். அமீர், நிந்தாவூர், இலங்கை.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  ஒரு விலங்கு முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுப்பதைப் போன்றே, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையி(ன் மார்க்கத்தி)ல் தான் பிறக்கின்றன. விலங்குகள் நாக்கு, மூக்கு வெட்டப்பட்ட நிலையில் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்து வதைப் போன்று) பெற்றோர்கள்தான் குழந்தைகளை (ஓரிறை மார்க்கத்திலிருந்து திருப்பி) யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ, அக்னி ஆராதனையாளர்களாகவோ, இணை வைப்பாளர்களாகவோ ஆக்கிவிடுகின்றனர். இதை அபூ ஹுரைரா(ரழி) அவர்கள் அறிவித்து விட்டுப்   பிறகு,  நீங்கள்  விரும்பினால்,

(நபியே!) இது உண்மை வழியில் நின்றுமுள்ள அல்லாஹ்வின் இயற்கையான மார்க்கத்தை நோக்கி உமது முகத்தைத் திருப்புவீராக. எந்த இயற்கையோடு மனிதர்களை அல்லாஹ் படைத்துள்ளானோ அந்த இயற்கையான (இறை மார்க்கத்)தையே (நீர் பின்பற்றுவீராக!) அல்லாஹ்வின் படைப்பிற்கு எந்த மாற்றமும் கிடையாது. இதுவே சீரான மார்க்கமாகும். (30:30) எனும் வசனத்தை ஓதிக் கொள்ளுங்கள் என்றார்கள். புகாரி: 1358,1359,1385,4775,6599,6600, முஸ்லிம் 5166,5167,5168, தஃப்சீர் இப்னு கஸீர்: 7:127 134) இந்த (30:30) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ளகல்கில்லாஹ்‘-அல்லாஹ்வின் படைப்பு என்பதற்கு அல்லாஹ்வின் நெறி என்று கருத்துஃபித்ரத்‘-இயற்கை என்பதற்கு இஸ்லாம் என்று பொருள். (புகாரி: பாகம்:5, பக்கம்: 524,  பாடம்  ஒன்றின்  (30:30)ஆவது  வசனத்தின்  விளக்கவுரை)  என்பதிலிருந்தும்.

நாங்களும், ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோம் என்று (நபியே! உம்மிடம்) நாட்டுப்புறத்து அரபிகள் கூறுகின்றார்கள். நீங்கள் ஈமான்இறை நம்பிக்கை கொள்ளவில்லை. எனினும் நாங்கள் வழிபட்டோம் (இஸ்லாத்தைத் தழுவினோம்) என்று (வேண்டுமானால்) கூறுங்கள் (என நபியே! அவர்களிடம்) கூறுவீராக! ஏனெனில் உங்களுடைய உள்ளங்களில் (உண்மையான) இறை நம்பிக்கை நுழையவில்லை. மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டு நடப்பீர்களாயின் அவன் உங்களுடைய நற்செய்கை களில் எதையும் உங்களுக்குக் குறைக்கமாட்டான். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 49:14) அதாவது,

ஈமான் எனும் இறை நம்பிக்கையின் உயர்வான அந்தஸ்த்து தங்களுக்கு உண்டென வாதிட்டார்களே, ஆனால் இதுவரை யில் அவர்களின் உள்ளங்களில் ஈமான் இறை நம்பிக்கை இடம் பிடிக்கவில்லையே அத்தகைய நாட்டுப்புற அரபிகளுக்கு மறுப்பளித்தவனாக உயர்ந்தோன் அல்லாஹ் இந்த (49:14) ஆவது வசனத் தொடரில் இவ்வாறு கூறுகின்றான்.  இது குறித்து,

ஸஅத் பின் அபீவக்காஸ்(ரழி) அவர்கள் அறிவித்ததாவது: அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடன் நான் அமர்ந்திருந்தபோது, நபி(ஸல்) அவர்கள் ஒரு குழுவினருக்கு கொடுத்தார்கள். அவர்களில் ஒருவ ருக்குக் கொடுக்காமல் விட்டுவிட்டார்கள். அவர் எனக்கு மிகவும் வேண்டியவராவார். அப்போது நான் இறைத்தூதர் அவர்களே! ஏன் அவரை விட்டு விட்டீர்கள்? அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவரை நான் இறை நம்பிக்கையாளர் என்றே கருதுகிறேன் என்று ரகசியமாகக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள்அவரை முஸ்லிம் (என்று சொல்) என்றார்கள். சிறிது நேரம் மவுனமாக இருந்தேன். தொடர்ந்து, நான் அவரைப் பற்றி அறிந்திருந்த விசயங்கள் என்னையும் அறியாமல் (என் நாவில்) வந்தபோது, இறைத்தூதர் அவர்களே! அந்த மனிதர்  மீது உங்களுக்கு என்ன அதிருப்தி? அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சயமாக நான் அவரை ஒரு இறை நம்பிக்கையாளர் என்று  கருதுகிறேன்  என்றேன்.

அவரை முஸ்லிம் (என்று சொல்) என்று நபி(ஸல்) அவர்கள் மீண்டும் கூறினார்கள். சிறிது நேரம் நான் மெளனமாக இருந்தேன். அவரைப் பற்றி நான் அறிந்திருந்த விசயத்தை என்னையும்  மீறி  மீண்டும்  மீண்டும்  கூறினேன்.

இறைத்தூதர் அவர்களே! அந்த மனிதர் மீது உங்களுக்கு என்ன அதிருப்தி? அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சயமாக நான் அவரை ஒரு இறை நம்பிக்கையாளர் என்று கருதுகிறேன் என்றேன். அவரை முஸ்லிம் (என்று சொல்) என்றார்கள். பிறகு (ஸஅதே) நான் ஒரு மனிதருக்குக் கொடுக்கிறேன். ஆனால் நான் கொடுக்காதவர் என்னிடம் மிக நேசமானவராக இருக்கிறார். (அவருக்கு நான் கொடுத்ததற்கு) காரணம் (ஏதும் கொடுக்காதிருந்தால் குற்றம் இழைத்து அதனால்) அவரை இறைவன் நரகில் முகம் குப்புறத் தள்ளி விடுவானோ என்ற அச்சம் தான் என்றார்கள். (புகாரி:27, 1478, முஸ்லிம்: 236, முஸ்னது அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர், 8:612-619) குறிப்பாக இந்த இடத்தில் மூஃமின் (இறைநம்பிக்கையாளர்) என்பதையும் முஸ்லிம் என்பதையும் நபியவர்கள் வேறுபடுத்தி உள்ளார்கள். இது நிச்சயமாக ஈமான் என்பது தனிநிலைச் சொல் என்பதையும் இஸ்லாம் என்பது பொதுநிலைச் சொல் என்பதையும்  இது  எடுத்துக்காட்டுகிறது.  (தஃப்சீர் இப்னு கஸீர் : 8:612-619, 7:328-331) மேலும்,

நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களுக்கும், பெண்களுக்கும், அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான  நற்கூலியையும்  சித்தப்படுத்தியிருக்கின்றான்.

நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட  ஆண்களும், பெண்களும்; இறை வழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண் களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும் தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும்; ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான் நற்கூலியையும்  சித்தப்படுத்தியிருக்கின்றான்.

(அல்குர்ஆன் 33:35) இந்த வசனம் நிச்சயமாக முஸ்லிமான ஆண்கள், முஸ்லிமான பெண்கள், இன்னல் முஸ்லிமீன வல்முஸ்லிமாத்) இறை நம்பிக்கை கொண்ட ஆண்கள் இறைநம்பிக்கை கொண்ட பெண்கள், (வல்முஃமினீன வல்முஃமினாத்) என்று தொடங்குகிறது. அல்முஸ்லிமீன், வல்முஸ் லிமாத் ஆகிய இரு சொற்களும், அல் இஸ்லாம் எனும் வேர்ச் சொல்லிலிருந்து பிறந்தவையாகும் அல்முஃமினீன், அல்முஃமினாத், ஆகிய இரு சொற்களும்அல் ஈமான்எனும் வேர்ச் சொல்லிலிருந்து பிறந்தவையாகும். எனவே இங்கு இஸ்லாம் ஈமான் ஆகிய இரண்டையும் அல்லாஹ் தனித்தனியாகக் குறிப்பிட்டிருப்பது இங்கே கவனிக் கத்தக்கதாகும். இது இஸ்லாம் என்பதும் ஈமான் என்பதும் வெவ்வேறானவை என்ப தையே காட்டுகிறது. அதாவது, இஸ்லாம் என்பது பொதுவானதாகும். அதுபோலவே ஈமான் என்பது அதைவிடக் குறிப்பான ஒன்றாகும். (தஃப்சீர் இப்னு கஸீர்: 7:328-336, 8:612-619) என்பதிலிருந்தும்முஸ்லிம்என்பது; பிறப்பின் அடிப்படையில் கிடைக்கும்  பெயர்  அல்ல:

அது அவரவர்நடத்தையின் மூலம் ஒருவருக்குக் கிடைக்கும் பெயராகும். இச்சொல்லின் பொருள்; “சாந்தியளிப்பவர்‘ “கீழ்ப்படிகின்றவர்‘ “முழுமையாகக் கட்டுப்பட்டு நடப்பவர்‘, “இறை நம்பிக்கை கொண்டுஇறைச் சட்டங்களுக்கு முழுமையாகக் கீழ்ப்படுகின்றவர். இஸ்லாமிய நம்பிக்கைப்படி இறை வழிபாடுகளைச் சரிவரச் செய்பவர். “அல்லாஹ் கடமையாக்கிய வைகளைச் சரிவரச் செயல்படுத்தி, அல்லாஹ் தடை செய்தவற்றை விட்டும் முற்றாக விலகி அல்லாஹ்வுக்கு முற்றிலுமாகக் கட்டுப்பட்டவர் என்பதாகும். மேலும் இச்சொல் இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் சமுதாயத்துக்கு மட்டுமின்றி அவர்களுக்கு முன் வந்த இறைத்தூதர்களை ஏற்று அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடந்தவர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. (தஃப்சீர் இப்னு கஸீர்: பாகம்:1, பக்கம்  62, & 3:64, 4:65,  5:81,  6:73,  7:71)  ஆக;

இஸ்லாம்‘ “முஸ்லிம்என்பது இறுதி இறைத் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் காலத்துக்கு முன்னர் வந்த, வாழ்ந்த, நபிமார்கள், நல்லடியார்கள் அனைவரும், தங்களை முஸ்லிம்களில் உள்ளவர்கள் என்றே பிரகடனப்படுத்தினார்கள். (2:131,132, 3:52, 3:64, 3:67, 3:80, 3:102, 5:44,111, 6:163, 7:126 10:72, 10:84, 10:90, 12:101, 22:78, 27:42, 43:69, 46:15, 51:36) என்று குறிப்பிடுகின்றன.  ஆனாலும்,

இஸ்லாம்‘ “முஸ்லிம்என்பது இறைத் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களால் தோற்று விக்கப்பட்டது என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் இஸ்லாம் என்பதும், முஸ்லிம் என்பதும் முதல் மனிதரும், ஆதி இறைத்தூதருமான ஆதம்(அலை) அவர்களது காலத்திலிருந்தே தொடர்ந்து வருகின்ற ஒரு கொள்கையாகும். “அகில உலகுக்கும் ஒரே ஒரு இறைவன் மட்டுமே இருக்கிறான். மறுமை வாழ்க்கை இருக்கிறதுஎன்பன போன்ற அடிப்படையான கொள்கைகள், முதல் மனிதர் காலத்திலிருந்து இறுதி நபி(ஸல்) அவர்கள் வரை அனைவருக்கும் ஒரே விதமாகவே வழங்கப்பட்டன. ஒருசில உட் பிரிவுகளில் மட்டுமே வித்தியாசமான சட் டங்கள் சிலருக்கு அருளப்பட்டன. எனவே நபி(ஸல்) அவர்களுக்கு முன் உலகிற்கு அனுப்பப்பட்ட தூதர்கள் எந்த மார்க்கத்தைப் போதித்தார்களோ அந்த மார்க்கமும் முஸ்லிம்களுக்காகப்  போதிக்கப்பட்ட  இஸ்லாம்  மார்க்கமே.

ஆதி மனிதரும், ஆதி இறைத்தூதருமான ஆதம்(அலை) அவர்களிலிருந்து ஒன்பதாவது தலைமுறையில்  வந்தவர்களாகிய  நூஹ்(அலை)  அவர்கள் வரை வந்தவர்கள் அனைவரும் முஸ்லிம்களாகவே  இருந்தார்கள்.

மனிதர்கள் யாவரும் (ஆதியில் முஸ்லிம்களாக) ஒரே இனத்தவராகவே அன்றி வேறில்லை; பின்னர் அவர்கள் மாறுபட்டுக் கொண்டனர். உமது இறைவனிடமிருந்து (இம்மையின் கூலி மறுமையில் பூரணமாகக் கொடுக்கப்படும் என்ற) ஒரு வார்த்தை முந்தி ஏற்பட்டிருக்கா விட்டால் அவர்கள் எந்த விசயத்தில் மாறுபட்டிருக்கின்றனரோ, அதைப்பற்றி அவர்களிடையே (இதற்குள்) முடிவு செய்யப்பட்டிருக்கும் (அல்குர்ஆன் 10:19) இது குறித்து இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறியதாவது: ஆதி  மனிதர் ஆதம்(அலை) அவர்களுக்கும் நபி நூஹ்(அலை) அவர்களுக்கும் இடையே பத்து தலைமுறையினர் வாழ்ந்துள்ளனர். அவர்கள் அனைவரும் இஸ்லாத்திலேயேமுஸ்லிம்களாகவேஇருந்தனர். பின்னர் தான் மனிதர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றின. அவர்கள் உருவங்களையும், சிலைகளையும் வழிபடத் தொடங்கினர். (ஹாகிம், தபகாத்துல் குப்ரா, தஃப்சீர் தபரீ, ஹாகிம், தஃப்சீர் இப்னு கஸீர் : 4:481,482,541, 5:217,218) பின்னர்;  (இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Previous post:

Next post: