புரோகிதத்திற்குக் கூலி நரகமே! 

in 2023 டிசம்பர்

புரோகிதத்திற்குக் கூலி நரகமே! 

அபூ அப்தில்லாஹ்

நவம்பர்  மாத  தொடர்ச்சி….

வழிகேட்டின்  ஒட்டுமொத்த  உருவம் :

ஹறாம்களைச் செய்கிறவர்கள் சமுதா யத்தின் ஒரு பகுதியை அல்லது ஒரு சில பகுதிகளைச் சீரழிக்கும் நிலையில் இருக்கிறார்கள் என்றால், மார்க்கத்தைக் கொண்டு வயிறு வளர்ப்பவர்கள், புரோகிதர்கள் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் சகல துறைகளிலும் சீரழிக்கும் நிலையிலிருக்கிறார்கள் என்பதை அவர்களால் மறுக்க முடியுமா? இன்று முஸ்லிம் சமுதாயம் சீரழிவின் அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறதென்றால் அதற்கு மார்க்கத்தைப் பிழைப்பாக்கிக் கொண்ட இந்தப் புரோகிதர்கள்தான் காரணம்  என்பதை  யாரால்  மறுக்க முடியும்?

எது   அன்பளிப்பு?

புரோகிதத்திற்குக் கூலி என்பதில் இந்தப் புரோகிதர்களின் வாதங்கள் அனைத்தும் முடக்குவாதங்கள் ஆகிப்போன பின், சிறிது கீழிறங்கி மக்கள் அவர்களாக விரும்பி எங்களுக்கு அன்பளிப்பாகத் தருகிறார்கள் என்று நியாயப்படுத்துகின்றனர். இது அன்ப ளிப்பின் இலக்கணம் விளங்காது பிதற்றுவதாகும். நபி(ஸல்) அவர்களது காலத்தில் ஜகாத் வசூலித்து வந்த ஒருவர் அவற்றில் சிலவற்றைப் பிரித்து எடுத்து இவை எனக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டவை என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் அவற்றைப் பிடுங்கி ஜகாத் பொருள்களுடன் போட்டுவிட்டுநீர் உமது வீட்டில் போய் இருந்து கொள்ளும்: யார் அன்பளிப்புத் தருகிறார்கள் பார்ப்போம்  (புகாரி: 9:305) என்று எச்சரித்தார்கள். அதேபோல இவர்கள் பிரசாரம், இமாமத், பாங்கு சொல்லல், குர்ஆன் ஓதிக்கொடுத்தல், மார்க்கம் கற்றுக்கொடுத்தல் போன்ற பணிகளைச் செய்யாமல் வீட்டில் இருந்துகொள்ளட்டும். மக்கள் அன்பளிப்புக் கொடுக்கிறார்களா என்று பார்ப்போம். அன்பளிப்பு என்பது எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் அல்லாஹ்வின் பொருத்தம் நாடி ஒருவருக்கொருவர் அன்பை அதிகரித்துக் கொள்வதாகும். மக்களிடமிருந்து அன்பளிப்புகளை வாங்கும் இந்தப் புரோகிதர்கள் மக்களுக்கு அன்ப ளிப்புக்  கொடுக்கின்றனரா?  இல்லையே?

இந்தப் புரோகிதர்கள் மக்களிடமிருந்து அன்பளிப்பு என்று வாங்குவதும் ஒரு வகையில் லஞ்சமேயாகும். மக்கள் விரும்பிக் கொடுப்பதால் அவை லஞ்சத்திற்கு அப்பாற்பட்டதாக ஆகிவிடாது. சில காரியங்களைச் சாதித்துக் கொள்ளும் நோக்கத்துடன் மக்கள் அதிகாரிகளுக்கு விரும்பித் தான் அன்பளிப்பு என்ற பெயரால் லஞ்சம் கொடுக்கின்றனர். இது நியாயமாகி விடுமா? இதைப்போல் அப்பாவி மக்கள் இந்தப் புரோகிதர்களுக்கு அன்பளிப்புக் கொடுத்து விட்டால், இந்தப் புரோகிதர்கள் அவர்களை நல்லமல்கள் செய்யாமலேயே சொர்க்கத்தில் கொண்டு சேர்ந்து விடுவார்கள் என்ற குருட்டு நம்பிக்கையில்தான் அன்பளிப்புகளை அள்ளி அள்ளிக்கொடுக்கின்றனர். அப்படிப்பட்ட குருட்டு நம்பிக்கையை பல இட்டுக்கட்டப்பட்ட கட்டுக் கதைகளைக் கூறி மக்களது உள்ளத்தில் உறையச் செய்துள்ளனர் இந்தப் புரோகிதர் கள். எனவே புரோகிதர்கள் என்ற அடிப் படையில் மக்களிடமிருந்து இந்தப் புரோகிதர்கள் அன்பளிப்பு என்று பெறுவதும் லஞ்சமே!  ஹறாமேயாகும்.

ஜகாத்  பெறும்  முறை  என்ன?

கூலி, அன்பளிப்பு என்ற வாதங்கள் அனைத்தும் அடிபட்டுப் போன பின் கடைசியாக நாங்கள் ஏழைகள்; ஜகாத் நிதியிலிருந்து எங்களுக்குரிய பங்கையே மக்களிடமிருந்து பெற்றுக் கொள்கிறோம்; இது எப்படி ஹறாமாகும்? என்று கேள்விக்கணை தொடுக்கின்றனர். ஏழைகள் என்ற நிலையில் ஜகாத் பெறுவதற்கு இவர்கள் உரிமையுடையவர்கள் என்பதை நாமும் மறுக்கவில்லை. ஏழைகள் என்ற நிலையில் மற்ற ஏழைகளுக்கொப்ப ஜகாத் நிதி பெறுவதில் தவறில்லை. ஆனால் இங்கும் அவர்கள் மார்க்கப்பணி புரிகிறார்கள், இமாமத் செய்கிறார்கள், பாங்கு சொல்கிறார்கள், குர்ஆன் ஓதிக்கொடுக்கிறார்கள், மார்க்கம் கற்றுக் கொடுக்கிறார்கள் என்பதைக் காரணம் காட்டி ஜகாத் நிதியிலிருந்து கொடுப்பது எப்படி முறையாகும்? அதுவும் மாதா மாதம் குறிப்பிட்ட ஒரு தொகையை பெற்றுக் கொள்வது எப்படி ஜகாத் ஆகும்? இந்தத் தொகை கொடுப்பது கொண்டு அவர்கள் ஒழுங்காக வந்து இமாமத் செய்கிறார்களா? பாங்கு சொல்கிறார்களா? ஓதிக் கொடுக்கிறார்களா? என்று எப்படிக் கண்காணிக்க  முடியும்?  இது  முறையா?

அந்நியர்கள் மார்க்கத்தில் மூக்கை  நுழைக்க  வழிகாட்டி  யார்?

அவர்களது உரிமையான ஜகாத் பணத்தைப் பெறுவதற்கு இந்த நிபந்தனைகள் ஏன்? உண்மையில் ஜகாத் பணம் கொடுக்கப்படவில்லை. அவர்களது பணிக்கு கூலியாகக் கொடுக்கப்படுகிறது என்பது புரிகிறதா? இல்லையா? அன்பளிப்பாக, ஜகாத்தாக இருந்தால் எங்களுக்கு மாதாமாதம் இவ்வளவு கொடுத்தே தீரவேண்டும் என்று உச்சநீதிமன்றம் வரை போய் வழக்குத் தொடுத்துத் தீர்ப்புப் பெற்றிருக்க முடியுமா? மார்க்கத்தைப் பாதுகாக்கப் பொறுப் புள்ளதாகச் சொல்லிக்கொள்ளும் இந்த முல்லாக்களே உச்சநீதிமன்றம் சென்று குர்ஆன், ஹதீதுக்கு முரணான சம்பள விசயமாக ஹறாமான வழியில் தீர்ப்புப் பெற்றிருக்கையில், ஒரு ஷாபானு, ஒரு அப்துல்காதிர் நீதிமன்றம் சென்று குர்ஆன், ஹதீதுக்கு முரணாக தீர்ப்பு பெற நாடுவதையும், அதைக் காரணம் காட்டி உச்சநீதி மன்றம் என்று மற்றவர்களை முறுக்கிவிடுவதையும் எப்படிக் குறை சொல்லமுடியும்? முஸ்லிம் சமுதாயம் இதை எல்லாம் பெருங்குற்றமாகவும், அதேசமயம் இந்த முல்லாக்கள் சம்பள விசயமாக உச்சநீதிமன்றம் சென்றதைச் சாதாரண விசயமாகவும் கருதுவதற்குக் காரணம், முல்லாக்கள் பெறும் கூலி இவை அனைத்தையும் விட கொடிய ஹறாம் என்பதை  அவர்கள்  அறியாததேயாகும்.

மேலும் இன்று உச்சநீதிமன்றம் சென்று சந்திசிரிக்கும் நிலையிலிருப்பவை குர்ஆன், ஹதீத் சட்டமல்ல. குர்ஆன், ஹதீத் பெயரால் இந்த முல்லாக்கள் தங்கள் சுயநலத்திற்காக உண்டாக்கி வைத்திருக்கும்முஹம்மடன்லாஎன்ற மத்ஹபுகளின் சட் டங்களே. அவற்றிலே தான் ஒரே நேரத்தில் 3 தலாக் சொன்னாலும் அது செல்லும்; கணவன், மனைவி உறவு முறிந்து விடும் என்ற அறிவுக்கே பொருந்தாத கணவன், மனைவி உறவை கணவனின் வீட்டோடு அதிகாரமாக்கி வைத்திருக்கும் அலங்கோலத்தை எல்லாம் பார்க்க முடியும். அதிக சம்பளம் வேண்டி உச்சநீதிமன்றம் சென்றவர்கள் அன்பளிப்பு, ஜகாத் பணம் என்றெல்லாம் கூறி மழுப்புவது வெறும் கண் துடைப்பே,  மக்களை  ஏமாற்றவே.

தெளஹீது மவ்லவிகளுக்குப் பல ஆயிரக்கணக்கில் ஜகாத் நிதியிலிருந்து கொடுக்கப்பட்டாலும், அதற்காக அவர்கள் விதித்திருக்கும் நிபந்தனைகள் உண்மையில் அவர்களது பிரசார பணிக்குரிய கூலியாக ஆகிவிடுகிறது. இவர்கள் வாங்கும் இந்த பணத்திற்காக மாதா மாதம் இவர்கள் செய்யும் பணி குறித்து தெளிவாக எழுதி கையயழுத்திட்டு இவர்கள் பொறுப்பு சாட்டப்பட்டிருக்கும் முதீருக்கு (அதிபர்) அனுப்ப வேண்டும். இதற்காகப் பாடம் நடத்தாமலேயே பாடம் நடத்தியதாகவும், செய்யாத பிரசாரத்தை செய்ததாகவும் எழுதி கையயழுத்திட்டு அனுப்புவோரும் உண்டு. இப்படி வாங்குவது கூலி இல்லாமல் எப்படி ஜகாத் நிதியாகும்? அல்லாஹ்வுடைய பாதையில் பாடுபடுகிறவர்களுக்கு ஜகாத் நிதியிலிருந்து கொடுப்பதை நாம் மறுக்கவில்லை. குர்ஆன், ஹதீத் தாராளமாகவே அனுமதிக்கிறது. ஆனால் அல்லாஹ்வுடைய பாதையில் கூலி எதையும் எதிர்பாராமல் இஃலாசுடன் அல்லாஹ்வின் பொருத்தம் மட்டும் நாடி பாடுபட வேண்டும். ஜகாத் நிதியிலிருந்து கொடுப்பவர்களும் அல்லாஹ்வின் பொருத்தம் நாடி எவ்வித நிபந்தனை களுமின்றிக்  கொடுக்க வேண்டும்.

அப்போதுதான் ஜகாத் நிதியிலிருந்து அவர்களுக்குரிய பங்கைக் கொடுத்ததாக ஆகும். நடப்பதோ அப்படியல்ல. அவர்களின் மதரஸாவில் ஓதி பட்டம் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் எதை நேரான வழியாக கொள்கையாகக் கொண்டிருக்கிறார்களோ அதையே மார்க்கமாகப் பிரச்சாரம் செய்யவேண்டும். அவற்றில் சில குர்ஆன், ஹதீதுக்கு முரணாக இருந்தாலும் கண்டுகொள்ளக் கூடாது. ஜகாத் பணத்தைக் கொடுப்பவர்களின் தவறுகள் சுட்டிக் காட்டப்படக்கூடாது. இப்படிப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையிலேயே கொடுக்கப்படுகிறது. இப்படி  வாங்குவது  கூலி   அல்லாமல்  வேறு  என்னவாம்?

அந்நஜாத்திற்கு  சந்தா  கூலி  இல்லையா?

கூலி, அன்பளிப்பு, ஜகாத் பணம் என்ற வாதங்களெல்லாம் அடிபட்டுப் போன பின் கடைசியாக நீங்கள் அந்நஜாத்திற்கு சந்தா வாங்குகிறீர்களே? இது மட்டும் மார்க்கப் பிரசாரத்திற்குக் கூலி வாங்குவது ஆகாதா? என்று கேட்டு தங்களைத் தாங்களே மெச்சிக் கொள்வார்கள் இந்தப் புரோகிதர்களும், அவர்களது அபிமானிகளும், இது விதண்டாவாதமேயாகும். “உங்களது தேவைகள் குறித்து அல்லாஹ்விடமே உதவி தேடுங்கள்; இறந்து போன அவுலியாக்களின் கபுருகளில் போய் உதவி தேடாதீர் கள்என்று குர்ஆன், ஹதீதின் தெளிவான போதனையைச் சொல்லும்போது அதை எதிர்த்துச் சொல்லும் வாதங்கள் எல்லாம் அடிபட்டுப் போனபின், “நீங்கள் மட்டும் டாக்டர்களிடம் போய் உதவி தேடுகிறீர்கள?” என்று தர்கா சடங்குகளை நியாயப் படுத்துவோர் கேட்கும் கேள்வி போன்றதே இதுவும். அல்லது இமாம்களான அபூ ஹனீஃபா, ஷாஃபி, ஹன்பல், மாலிக் (ரஹ்) போன்றவர்களைதக்லீதுசெய்யாதீர்கள் என்று குர்ஆன், ஹதீத் போதனைகளை எடுத்துச் சொல்லும்போது, முகல்லிதுகளைநீங்கள் மட்டும் இமாம்களான புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி (ரஹ்) போன்றோரைதக்லீதுசெய்கிறீர்களே?’ என்று கேட்கும் கேள்வி போன்றதே இதுவும், சுய சிந்தனையற்ற மக்கள் இப்படிப்பட்ட கேள்விகளில் மயங்கி வழிகேட்டில் செல்லலாம். ஆனால் நிதானித்துச் சிந்திப்பவர் கள் உண்மை எங்கே இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள  முடியும்.

கடமையானதற்குக்  கூலி  கூடாது!

அல்லாஹ் முஸ்லிம்கள் மீது எதை விதித்திருக்கிறானோ, கடமையாக்கி இருக்கிறானோ, மறுமையில் கூலி தருவதாக வாக்களித்திருக்கிறானோ அந்தச் செயல்களைச் செய்துவிட்டு அவற்றிற்கு இங்கு கூலி வாங்குவது பற்றியே நமது மறுப்பெல்லாம். காரணம் அதையே குர்ஆனும், ஹதீதும் மறுக்கின்றன. தனது தாய்மொழியையோ அல்லது வேறு மொழிகளையோ கற்றுக்கொள்வது கடமையாக இருந்தால், நபி(ஸல்) அவர்கள் எழுதப் படிக்கக் கற்றிருப் பார்கள். நபித் தோழர்கள் அனைவரும் எழுதப் படிக்கக் கற்றிருப்பார்கள். நபித் தோழர்கள் அனைவரும் எழுதப் படிக்கக் கற்றுக்கொள்வது கடமையில்லாத நிலையில், மார்க்கத்தைக் கற்றுக்கொள்வது அவர்கள் மீது கடமையாக இருந்தது. அந்த மார்க்கத்தை மற்றவர்களுக்குப் போதிப்பதும் கடமையாக இருந்தது. அரபு மொழியோ, அல்லது வேறு மொழிகளோ கற்றலுக்கு மறுமையில் அதிக நன்மையுண்டு. கல்லாதவனுக்கு நன்மை இல்லை   என்று  குர்ஆனிலோ,  ஹதீதிலோ   இல்லை.

அதே சமயம் மார்க்கத்தைக் கற்றவன் மறுமையில் உயர்ந்த பதவிகளை அடைவான்; கல்லாதவன் தோல்வியடைந்து நரகில் புகுவான். மொழியைக் கொண்டு மறுமையில் உயர்ந்த பதவிகள் இருக்குமானால் அந்த மொழிகளில் எதனையுமே எழுதப் படிக்கத் தெரியாத நபி(ஸல்) அவர்களுக்கு மிக உயர்ந்த பதவிகள் எப்படிக் கிடைக்கும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். எனவே ஒரு மொழியை எழுதப்படிக்கக் கற்றுக் கொள்வது மறுமையில் கூலி கிடைக்கும்  என்பதற்காக  அல்ல.

Previous post:

Next post: