மனிதன் அநீதி இழைப்பவனாகவும்,அறியாதவனாகவும் இருக்கின்றானா?
N. மர்யம், ஒரத்தநாடு
அல்லாஹ்வின் படைப்புக்களி லேயே மிகவும் உயர்வான படைப்பு மனித படைப்பாகும். எவ்வாறெனில் இறைவனிடமிருந்து நேரிடையாக அவன் அறியாதவற்றை (அறிவை) கற்றுக் கொண்டவன் மனிதன் மட்டுமே.
அத்தியாயம் 96ல் ஐந்தாவது வசனத்தில்,
“மனிதனுக்கு அவன் அறியாதவற்றை தான் கற்றுக்கொடுத்தேன்” என்று குர்ஆனில் அல்லாஹ் கூறியுள்ளான்.
அவ்வாறு இருக்க, அதே மனிதன் “அமானிதம்‘ என்ற ஒன்றை சுமந்து கொண்டபொழுது அநீதி இழைப்ப வனாகவும், அறியாதவனாகவும் இருப்பதாக கூறுகிறான்.
“நாம் இந்த அமானிதத்தை வானங்கள், பூமி மற்றும் மலைகள் ஆகியவற்றின் முன்பாக வைத்த போது அவை அதனை ஏற்கத் தயாராகவில்லை. மேலும் அதனை கண்டு அஞ்சின. ஆனால் மனிதன் அதனை ஏற்றுக்கொண்டான். நிச்சயமாக மனிதன் பெரிதும் அநீதி இழைப்பவனாகவும், அறியாதவனாக வும் இருக்கின்றான்.” அல்குர்ஆன் : 33:72
வானம், பூமி மற்றும் மலைகள் “அமானிதத்தை‘ சுமக்க மறுத்த பிறகும் அறிவுள்ள மனிதன் சுமக்க முன்வந்தான். நியாயமாக பார்த்தால் அறிவில் குறைவான வானம், பூமி மற்றும் மலைகள் தான் அமானிதத்தை சுமந்திருக்க வேண்டும். அது மட்டுமல்ல அவை அஞ்சி நடுங்கின என்பதாக அல்லாஹ் கூறுகிறான்.
அஞ்சி நடுங்க கூடிய அளவிற்கு அந்த சக்தி வாய்ந்த அமானிதம் என்ன? மனிதன் அநீதிக்கும், அறியாதவனாக இருப்பதற்கும் அதுவே காரணமாக இருக்க என்ன காரணம்?
பொதுவாக கல்வி அறிவு இல்லாதவர்கள் (அவ்வாம்) தவறு செய்தால் அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள். அதுவே கல்வி அறிவுப் பெற்றவன் (ஆலிம்) தவறு செய்தால் “உனக்கு அறிவு இல்லையா‘? படித்த நீ, தவறு செய்யலாமா‘? என்று கேட்பது உலக இயல்பு. அது போலவே அல்லாஹ்வும் அறிவுள்ள மனிதன் “அமானிதத்தை‘ சுமந்ததால் அநீதி இழைப்பவனாகவும், அறியாதவனாகவும் இருக்கின்றான் என்று கூறியுள்ளான்.
அந்த அமானிதம் என்ன?
“அமானிதம்‘ என்பதற்கு குர்ஆன் மொழி பெயர்ப்பாளர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். சிலர் கண்டுக்காமல் கடந்துவிட்டனர்.
அதற்கு முன்பாக,”அமானிதத்தை‘ மனிதன் ஏன் சுமந்தான் என்பதற்கு மனித இயல்பு என்னவென்பதை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும்.
மனித இயல்புகள் பற்றி அல்லாஹ் கூறியதாவது:
1. “மனிதன் பலவீனனாகப் படைக்கப்பட்டுள்ளான்‘ அல்குர்ஆன் 4:28
2. “மனிதன் அவசரகாரனாக இருக்கின்றான்‘. அல்குர்ஆன் 17:11
3. “மனிதன் பதறுபவனாக படைக்கப்பட்டுள்ளான்‘. அல்குர்ஆன் 70:19
4. “மனிதன் குற்றம் செய்யவே நாடுகிறான்‘ அல்குர்ஆன் 75:5
5. “மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாக உள்ளான்‘. அல்குர்ஆன் 18:54
6. “மனிதன் நம்பிக்கை இழந்தவனாகவும் நிராசையுடையவனாகவும் இருக்கிறான்‘ அல்குர்ஆன் 41:49
7. “தான் இறந்துவிட்டால் மீண்டும் உயிருள்ளவனாக எழுப்பப்படுவேனா? என்று சந்தேகமுள்ளவனாக இருக்கி றான்‘ அல்குர்ஆன் 19:66
8. “மனிதன் அல்லாஹ்விடம் தேவையுள்ளவனாக இருக்கிறான்; அல்லாஹ் தேவையற்றவன், புகழுக்குரியவன்‘. அல்குர்ஆன் 35:15
இன்னும் மனிதனைப் பற்றி ஏராளமான வசனங்கள் உள்ளன. அதாவது பலகீனமானவன், பலமுள்ளவனாக கருதிக் கொண்டதால் வந்த விளைவு.
அந்த அமானிதம் என்பது மனிதனுக்கு வழங்கப்பட்ட பகுத்தறிவும், அதிகாரங்களும் அவனுக்குரிய பொறுப்புக்களையும் குறிக்கும்.
அதாவது அறிவு, அதிகாரம் இருந்தும் பொறுப்பை மனிதன் உணராததால் அநீதி இழைத்துக் கொள்கின்றான்.
இந்த பொறுப்பை (அமானிதத்தை) எப்போ மனிதன் ஏற்றுக் கொண்டான்? என்ன ஆதாரம்?
“…உம் இறைவன் ஆதம் உடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய வழிதோன்றல்களை வெளிப்படுத்தி அவர்களையே அவர்களுக்குச் சாட்சியாக்கி, நான் உங்கள் இறைவன் அல்லவா?” என்று கேட்டான்.
“ஆம், நிச்சயமாக நீதான் எங்கள் இறைவா; இதற்கு சாட்சியாக இருக்கின் றோம்” என்று மனிதன் கூறினான். அல்குர்ஆன் 7:172
வாக்குறுதி கொடுத்த பொறுப்பை மனிதன் மறந்து அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்யவும் அவனுக்கு இணை வைக்கவும் துணிந்ததால்தான் அநீதி இழைப்பவனாகவும், அறியாதவனாகவும் மனிதன் இருக்கின்றான் என்று அல்லாஹ் கூறியுள்ளான்.