புரோகிதத்திற்குக் கூலி நரகமே!

in 2024 ஜனவரி

புரோகிதத்திற்குக் கூலி நரகமே!

அபூ அப்தில்லாஹ்

மறு பதிப்பு :

டிசம்பர்  தொடர்ச்சி

கடமையில்லாததற்குக்  கூலி  தடையில்லை:

ஒரு மொழியைக் கற்று அதனை இவ்வுலகில் கூலி பெற பயன்படுத்தினால் அது தடுக்கப்பட்டதல்ல. அதுவும் பிரசாரம்தான் என்ற வாதம் எடுபடாது. ஒருசிலர் புரோகிதத்திற்குக் கூலி வாங்குவதை நியாயப்படுத்த இப்படியும் வாதம் செய்யலாம். எழுதப்படிக்கத் தெரியாத வரை அவனுக்கு எழுத்து வழி பிரசாரம் கடமையில்லாமல்  இருக்கலாம். 

எழுதப் படிக்கத் தெரிந்துவிட்டால் அதுவும் கடமையாகி விடுகிறதா! எது போன்றது என்றால் ஒருவனுக்குப் பணமும், உடல் ஆரோக்கியமும் இல்லாத வரை ஹஜ் கடமையல்ல; அதே சமயம் பணமும், உடல் ஆரோக்கியமும் அடை யப் பெற்றால் அவன் மீது ஹஜ் கடமையாவது போல் என்று மக்களை திசை திருப்பலாம். இதுவும் தவறு. பணமும், உடல் ஆரோக்கியமும் மனித முயற்சி யால் மட்டும் அடைந்து விடுபவையல்ல. ஒருவன் அளவு கடந்த ஆர்வத்துடன் அயராது இரவு பகல் பாடுபட்டாலும் அவன் செல்வந்தனாக முடியும் என்பதற்கு எவ்வித உத்திரவாதமும்  இல்லை.

இது அல்லாஹ்வின் நாட்டத்திலுள்ளது. அதே சமயம் ஒருவன் ஆர்வத்துடன் தினசரி சில மணித்துளிகளைச் செலவிட்டாலும் போதும், அவன் விரும்பும் மொழியை எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ளமுடியும். இங்கு மனிதனின் முயற்சியின்மையே அன்றி வேறு காரணமில்லை. மொழியைக் கற்றுக்கொள்வது கடமை என்றிருக்குமானால் அன்று நபி (ஸல்) அவர்கள் அனைவரையும் கட் டளையின் பேரில் ஒரு நபித் தோழர் அந் நிய மொழி ஒன்றினை ஒருசில நாட் களில் கற்று சாதனை படைத்தது இங்கு நினைவு  கூறத்தக்கது. (பார்க்க புகாரி:7195)

எனவே அல்குர்ஆனை கையால் எழுதியோ, அல்லது பிரிண்ட் செய்தோ புத்தக வடிவில் விற்பது, அரபு மொழியை எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்து கூலி பெறுவது, அரபு மொழியிலுள்ள நூல் களை வேறு மொழிகளில் மொழி பெயர்ப்பது, அச்சடித்து விற்பது, குர்ஆன், ஹதீத் போதனைகளை அச்சடித்து விற்பது, அந்நஜாத், அல்ஜன்னத், அல் முபீன், அல்ஹக், ரஹ்மத் போன்ற பத்திரி கைகளை அச்சிட்டு விற்பது, அவற்றின் ஆசிரியப் பணிக்காகக் கூலி வாங்குவது, ஆடியோ, வீடியோ கேஸட்டுகளில் பதிவு செய்து விற்பது இவை அனைத்தும் ஆகுமானதே. இவை குர்ஆன், ஹதீதுக்கு முரணான  செயல்கள்  அல்ல.

நபி(ஸல்) மன்னர்களுக்கு கடிதம் எழுதுவித்ததை ஆதாரமாகக் காட்டி, அதற்கு அவர்கள் கூலி வாங்கவில்லையே? அதனால் பத்திரிகைகளுக்குச் சந்தா வாங்குவது கூடாது என்று வாதிப்போரும் உண்டு. எழுதப்படும் கடிதத்திற்கும், அச்சிட்டு வெளியிடப்படும் நூல்களுக்கு முள்ள  வேறுபாடு  தெரியாதவர்களே  இப்படிக்  கேட்கமுடியும்.

ஆகுமான வியாபாரத்தைக் காட்டி ஹறாமான வட்டியை நியாயப்படுத்த ஷைத்தான் தூண்டுவது போல், இங்கும் ஆகுமான இவற்றைக் காட்டி ஹறாமான மார்க்கத்தைப் பிழைப்பாக்குவதை நியாயப்படுத்த ஷைத்தான் தூண்டுகிறான்  என்பதே  உண்மையாகும்.

மார்க்கப் பிரசாரம் செய்வது கடமை. அதே சமயம் தன் சக்திக்கு உட்பட்டு மட்டுமே தன் கைகளிலிருந்து செலவழிக்க முடியும். எனவே அந்த எல்லைக்குள் அவன் அடையும் மக்களிடையே மட்டுமே பிரசார பணி செய்யக் கடமைப்பட்டிருக்கிறான். தன்னால் சுமக்க முடியாத சுமையை சுமந்துகொண்டு பணம் செலவழித்துக் கொண்டு தொலை தூரங்களுக்குச் சென்று பிரசாரம் செய் வது கடமையல்ல. ஊர் விட்டு ஊர், நாடு விட்டு நாடு அல்லாஹ்வின் அருளை (பொருளை) அடைவதற்காக தொலை தூரம் சென்றால் அங்கும் பிரசாரம் செய்வது கடமை.

ஆனால் பிரசார பணிக்கென்று தன் னால் முடியாத நிலையில் பணம் செல வழித்துச் செல்வது கடமையல்ல. எந்த ஓர் ஆன்மாவையும் அதன் சக்திக்கு மீறி அல்லாஹ் சோதிக்கமாட்டான். (அல்குர் ஆன் 2:286) ஆயினும் ஒருவரின் பேச்சு வன்மை, திறமை காரணமாக பல ஊர் களுக்குப் பிரசார பணிக்கென்றே அழைக்கிறார்கள். தன் குடும்ப நிர்வாகத்திற்குப் பாதிப்பில்லாமல் செல்லலாம். அப்படிச் செல்லும்போது போக்குவரத்துச் செலவுகளைப் பெற்றுக் கொள்வதும் கூலி பெறுவது ஆகாது. அங்கும் பிரசார பணிக்கென்று தனக்குக் கூலி வாங்குவது கூடாது. தன்மீது கடமையானதைச் செய்யக் கூலி வாங்குவது தடுக்கப்பட் டுள்ளதேயல்லாமல், கடமையில்லாத ஒன்றைச் செய்வதற்குக் கூலி வாங்கக் கூடாது என்று நேரடித் தடையில்லாத விசயங்களில்  கூலி  வாங்குவது  அனுமதிக்கப்பட்டதே.

இதனை ஓர் உதாரணம் மூலம் விளங்குவோம். ஓர் அரசு அலுவலகத்தில் பணி புரியும் ஒரு அதிகாரி தன் பொறுப்பிலுள்ள ஒரு காரியத்தை ஒருவருக்கு முடித்துக் கொடுக்கிறார். இது அவரது கடமை. இதற்காக அந்த நபரிடம் பணம் பெறுவது கூடாது. இது லஞ்சமாகும். அதே சமயம் அந்த நபருக்கு வேறொரு அரசு அலுவலகத்தில் ஒரு காரியம் ஆக வேண்டியதிருக்கிறது. அது பற்றிய விபரம் தனக்குத் தெரியாது என்றும், மேற்படி அதிகாரியே வந்து அதை முடித்துக் கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

அந்த அதிகாரியும் தான் ஆற்ற வேண்டிய பணிகளுக்கு எவ்வித பங்கமும் இல்லாமல், தனக்குள்ள ஓய்வில் அவரோடு அந்த குறிப்பிட்ட அலுவலகத்திற்குச் சென்று அக்காரியத்தை முடித்துக் கொடுக்கிறார். இதற்காக அந்த நபர் இந்த அதிகாரிக்கும் பணம் கொடுக்கிறார். இது லஞ்சம் ஆகுமா? ஒருபோதும் ஆகாது. இந்தப் பணத்தை தாராளமாக அவர் அடையலாம். அதே சமயம் அந்த குறிப்பிட்ட அலுவலகத்திலுள்ள சம்பந்தப்பட்ட அதிகாரி தனது கடமையைச் செய்துவிட்டு அதற்காக இந்த நபரிடம் பணம் வாங்கினால் அதுவே லஞ்சத்தில் சேரும். இந்த வித்தியாசத்தைப் புரிந்து கொண்டால் மார்க்க விசயத்தில் தன் மீது கடமையான பிரசார பணி மற்றும் கடமைகளுக்குக் கூலி வாங்குவதற்கும், தன் மீது கடமையில்லாத பணிகளுக்குக் கூலி  வாங்குவதற்குமுள்ள  வித்தியாசம்  புரிந்துவிடும்.

எனவே மார்க்கப் பிரசாரத்திற்கு, இமாமத் செய்ய, பாங்கு சொல்ல, குர்ஆன் ஓதக் கற்றுக் கொடுக்க, மார்க்கம் கற்றுக்கொடுக்க கூலி வாங்குவதை நியாயப்படுத்த இறுதியாக எடுத்து வைத்த இந்த வாதமும் அடிப்பட்டுப் போகிறது. எனவே புரோகிதத்தை வைத்து வயிறு வளர்ப்பது, உலக வாழ்க்கையை வசதியாக ஆக்கிக்கொள்வது மிகக் கடுமையான ஹறாமாகும். எனவே அப்படிப்பட்டவர்கள் மக்களுக்கு நேர்வழி காட்டமுடியாது. மக்கள் இந்தப் புரோகிதர்கள் பின்னால் செல்லுவது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதாகும். நரகத்தில் வீழ்வதை யாரும் தடுக்க முடியாது. எல்லாம் வல்ல அல்லாஹ் சமுதாயத்தை இந்தப்  புரோகிதர்களின்  பிடியிலிருந்து  விடுவித்து  ஈடேற்றத்தைத்  தந்தருள்வானாக.

குர்ஆன், ஹதீத் ஆதாரங்களைக் கொண்டு மார்க்கத்தைப் பிழைப்பாக ஆக்குவது கொடிய ஹறாம் என்பதை இவ்வளவு தெளிவாக விளக்கியும், அப்படியானால் அவர்கள் எப்படிச் சாப்பிடுவார்கள்? அவர்களின் மனைவி மக்கள் மண்ணையா தின்பார்கள்? என்று கேட்பவர்களே அதிகமாக இருப்பார்கள். அதற்கு இரண்டு காரணங்கள், ஒன்று இந்த ஹஜ்ரத்மார்களைப் பற்றிய பக்தி அந்த அளவு ஊட்டப்பட்டு அவர்களின் உள்ளங்களில் உறைந்து போயிருக்கிறது. அடுத்து இரண்டாவது மார்க்கத்தைப் பிழைப்பாக்குவதின் கெடுதி பற்றி இந்த மவ்லவிகள் அடிக்கடி ஆரம்பத்திலிருந்தே சொல்லி மக்களை உணரச் செய்யாததாகும். மக்களின் அறியாமை காரணமாக குற்றம் இலேசாகிவிட்டது. வட்டித் தொழில் நடத்துபவன், சாராய வியாபாரி தனது தொழிலை விட்டு வேறு ஹலாலான தொழில் தேடவேண்டும் என்று சொல்லும்போது அதைச் சரி காணும் மக்கள், மார்க்கத்தைப் பிழைப் பாக்குவதை விட்டு இந்த ஹஜ்ரத்மார்கள் வேறு தொழில் பார்க்க வேண்டும் என்பதை மட்டும் உணர்வதாக இல்லை. மக்கள் உணர்கிறார்களோ இல்லையோ, மார்க்கத்தைப் பிழைப்பாக்குவது ஹறாம்களில் கொடிய ஹறாமாகும். இதைவிட அல்குர்ஆனில் கண்டிக்கப் பட்டுள்ள வேறு விசயம் எதுவும் இல்லை. அதனால் தான் இந்த மவ்லவிகளும், அவர்களது அபிமானிகளும் வெறுத்தாலும் சரி, கரித்துக் கொட்டினாலும் சரி, சத்தியத்தை மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்துவிடுவது என்று முடிவு செய்து இக்கட்டுரையை  வெளியிட்டுள்ளோம்.  

எமது இந்த கருத்துக்கள் குர்ஆன், ஹதீதுக்கு முரணாக இருந்தால் ஆதாரங்களுடன்  அவர்கள் எடுத்துத் தருவார்களா? உண்மை இருப்பின் ஏற்றுக்கொள்கிறோம். இல்லை என்றால் மவ்லவி வர்க்கம் மார்க்கத்தைப் பிழைப்பாக்குவதை விட்டு, வேறு ஹலாலான தொழில்களைத் தேடிக் கொள்வதே ஏற்றமாகும். அதுவே அவர்களை மறுமையில் நரகத்தை விட்டும் காப்பாற்றும். அவர்களை மட்டுமல்ல, அவர்களை நம்பி மோசம் போய் நரகத்தில் விழக் காத்திருக்கும் எண்ணற்ற முஸ்லிம்களுக்கும் நரக விடுதலை கிடைக்கக் காரணமா கும். இந்தப் புரோகிதர்கள் அற்ப இவ்வுலக சுகத்தை நோக்கமாகக்  கொண்டு மறுமையை மறந்து செயல்பட்டாலும், அவர்களை நம்பி அவர்கள் பின்னால் செல்லும் பொதுமக்களாவது, தங்களின் நிலையை விளங்கி  திருந்த  முன்வர வேண்டும்.  அல்லாஹ் அருள் புரிவானாக.

Previous post:

Next post: