அரபு நாடுகளும் – அடிமைத்தனமும்….!!

in 2025 ஆகஸ்ட்

தலையங்கம் :
அரபு நாடுகளும்அடிமைத்தனமும்….!!

உலக வரலாற்றில் நடந்த ஓர் உண்மை சம்பவம்:

அது  என்னவென்றால்;

டைட்டானிக் எனும் கப்பலுக்கு ஆபத்து ஏற்பட்ட நேரத்தில் அந்த கப்பலின் கேப்டன் அக்கப்பலில்  பயணித்தவர்களிடம்  சொன்னது, 

இந்த கப்பல் முழுகுவதற்கு வாய்ப்பே இல்லை. அந்த அளவிற்கு இக்கப்பல் பாது காப்பானது. கடவுளால் கூட டைட்டானிக்கை மூழ்கடிக்க  முடியாது  என்று  கூறினார்.

ஆனால்  நடந்தது  என்ன?

அந்த கப்பல் மூழ்கியது, அந்த கப்பலில் பயணம் செய்த பெரும்பாலோரும் கடலில் மூழ்கி இறந்து போனார்கள். இது வரலாற்று உண்மை.

இது போலவே உலக ஊடகங்களும், இந்தியாவிலுள்ள பெரும்பாலான ஊடகங்களும்  சொன்னது  என்னவென்றால்;

இஸ்ரேல் மிகவும் சக்திவாய்ந்த நாடு, பாதுகாப்பான நாடும் கூட என்பதாக, ஆனால் இஸ்ரேலில் அயன்டும் தாண்டி தாக்குதல் நடைபெறுவதை நேரலையில் பார்க்கின்றோம்.

அமெரிக்காவும், ஐரோப்பியா நாடுகளும் இஸ்ரேலை ஆதரிப்பதால் ஊடகங்கள் இதை நம்ப  சொல்கிறது.

ஆனால் நாங்கள் அல்லாஹ்வின் அடிமை, புனித காஃபாவின் சேவகர்கள் என்று சொல்லும் சவுதி அரேபியா மற்றும் மன்னர் ஆட்சி புரிகின்ற பல முஸ்லிம் நாடுகளும் இஸ்ரேலை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரிப்பது  தான்  ஆச்சரியம். 

யூதர்களைப் பற்றி இறைவன் கூறியிருப்பதாவது :

சிறு சிறு தொல்லை தருவதைத் தவிர அவர்களால் (யூதர்களால்) உங்களுக்கு (முஸ்லிம் களுக்கு) எந்தத் தீங்கும் செய்யவே முடியாது. அவர்கள் உங்களுடன் போரிட்டால் புற முதுகு காட்டி ஓடுவார்கள். பிறகு அவர்கள் உதவி செய்யப்படமாட்டார்கள்.  (.கு.3:111)

மேற்படி வசனத்தை அரபு நாட்டு மன்னர்களும், உலக முஸ்லிம்களும் படிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அமெரிக்காவிற்கும், இஸ்ரேலுக்கும் பயந்தவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் அல்குர்ஆனை நம்பவில்லையா? நிச்சயமாக அது இறைநூல் என்றும், இதற்கு நிகரான நூல் உலகில் வேறு எதுவும் இல்லை என்றும் நம்பத்தான் செய்கிறார்கள்.

ஆனால் (குர்ஆனில்) கூறப்பட்டுள்ள அறிவியல் உண்மைகளை ஆராய்வதில்லை. அதற்கான முயற்சியும் செய்வதில்லை மாறாக புத்திகளை (அறிவை) மழுங்கடிக்க வைக்கும் கேளிக்கை களை அரபு நாடுகள் ஊக்கு விக்கிறது.  அதன்  விளைவு.

இஸ்லாமிய சமூகம் பாடகர்கள்/பாடகிகள் பின்னால்  ஓடுகின்றது. 

கால்பந்து வீரர்களுக்கு கைதட்டுகிறது, மது,  மாதுவில்  மயங்கி  இருக்கிறது.

எனவேதான் குர்ஆன் கூறும் அறிவியல் ஆற்றலை ஆராயாமல் பின்தங்கி இருக்கின்றார்கள். அல்லாஹ் தன் வழிகாட்டி நூலில், “அவன் (இறைவன்) தான் நாடியோருக்கு ஞானத்தை (அறிவை) வழங்குகிறான். யாருக்கு ஞானம் வழங்கப்பட்டதோ அவர் அதிகமான நன்மைகள் வழங்கப்பட்டுள்ளார். 

அறிவுடையோரைத் தவிர வேறு எவரும் (இதனைக் கொண்டு) படிப்பினை பெறுவதில்லை.      (அல்குர்ஆன் 2:269)

அரபு நாட்டு மன்னர்களே! உலக முஸ்லிம்களே! ஒன்றை நீங்கள் தெரிந்துக் கொள்ளுங்கள். 

பறவைகள் நம்புவது கிளைகளை அல்ல, தன் சிறகுகளையே 

பறவைகளுக்கு இருக்கின்ற நம்பிக்கை கூட உங்களுக்கு  இறைவன்  மீது  இல்லையா?

நாம் மேலே குறிப்பிட்ட வசனத்தில் ஞானம் வழங்கப்பட்டவர்கள்தான் அதிகமான நன்மைகள் வழங்கப்பட்டவர் என இறைவன்  கூறுகிறான்.

அந்த  ஞானம்  என்ன?

அது முஸ்லிம்களுக்கு வழங்கப்படவில்லையா?

அது  உலகம்  சம்பந்தப்பட்டது  மட்டுமா?

அல்லது

மறுமை  சம்பந்தப்பட்டதா?

நிச்சயமாக அந்த ஞானம் என்பது அல்குர்ஆனே  ஆகும்.

அலிஃப், லாம், ரா இவை ஞானம் நிறைந்த வழிகாட்டும்  இறைநூலாகும்”.      .கு. 10:1

இவை(அல்குர்ஆன்) ஞானம் நிறைந்த இறைநூலாகும்.கு. 31:2

நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக அரபு மொழியில் இதை (அல்குர்ஆனை) தந்துள்ளோம்.”         .கு. 43:3

இது (அல்குர்ஆன்) நம்மிடமுள்ள மூலப் பதிவேட்டில் உள்ளது. (இது) உயர்ந்த ஞானம் நிறைந்தது.”     .கு. 43:4

மேற்படி வசனங்களில் எல்லாம் ஞானம் என்பது குர்ஆனே ஆகும் என்றும், அது இம்மைக்கும், மறுமைக்கும் (உலக வாழ்வுமறு உலக வாழ்வு) பயன் தரக்கூடியது என்று இறைவன் கூறியிருக்கும்போது அதிலிருந்து அறிவியல் ஞானத்தை பெருக்கிக் கொள்ளாமல் ஏன் அமெரிக்காவிற்கும், ஐரோப்பியாவிற்கும்  அடிமையாக  இருக்கின்றீர்கள்.

அமெரிக்காவும், ஐரோப்பா நாடுகளும் அறிவுக்கு மதிப்பளித்த அறிவாளிகளையும், அவர்களின் அனுபவங்களையும் விலைக்கு வாங்குகிறது. அறிவியல் ஆய்விலும், டெக்னாலஜியிலும் முதலீடு செய்கிறது. பல அறிவியல் ஆய்வகங்களை நிறுவுகிறது. ஆய்வாளர்களை வரவழைத்து  கெளரவிக்கிறது.

உதாரணமாக :

அமெரிக்காவின் அதிநவீன A-2 பறக்கும் விமானம் வான்வெளியில் ஊடுருவி, எந்த இலக்கையும் தாக்கிவிட்டு வரவல்லது. அது எந்தவொரு ராடாரிலும் தென்படாது. அது மட்டுமல்ல ஹீட் டிரேசிங் சிஸ்டம் மூலமும் கூட கண்டுபிடிக்க முடியாது. 

அதன் வடிவமைப்பு மிக துல்லியமானது. அதற்கு காரணம் அறிவியல் சிறந்த ஆய்வாளர்களை  கொண்டு  வடிவமைக்கப்பட்டது.

அதனால் நவீன காலத்தில் வான்வெளியில் அமெரிக்கா  பலமான  சக்தியாக  திகழ்கிறது.

இந்த அறிவை முஸ்லிம்களுக்கு அல்லாஹ் வழங்கமாட்டானா?

நிச்சயமாக வழங்குவான், ஆனால் நீங்கள் கிளைகளை (அமெரிக்காவை) நம்பக்கூடாது. மாறாக சிறகுகளை (இறைவனை) நம்ப வேண்டும்.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அமெரிக்காவையும், இஸ்ரேலையும் சமீபத்தில் வான்வெளியின் அறிவியல் ஞானத்தை ஈரான் பயன்படுத்தி அவர்களின் முகத்திரையை  கிழித்து  சுக்குநூறாக்கியது. 

அல்ஹம்திலில்லாஹ்.

இந்த ஞானமும், வீரமும் அனைத்து அரபு நாடுகளுக்கும் உலக முஸ்லிம்களுக்கும் வரவேண்டும். அவ்வாறு மாறாதவரை அரபு உலகம்  அடிமைகளாகத்தான்  இருப்பீர்கள்.

இறைவன்  கூறுகிறான்;

உங்கள் எதிரிகளை அல்லாஹ் நன்கறிந்தவன், (உங்களைப்) பாதுகாப்பதற்கு அல்லாஹ் போதுமானவன், உதவி செய்வதற்கும் அல்லாஹ்  போதுமானவன்.”    (.கு. 4:45)

Previous post: