அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் நிலை!

in 2025 ஆகஸ்ட்

அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் நிலை!

M. சையத் முபாரக், நாகை

முக்கியத்துவம் :

குர்ஆன்  மூலாதாரம் :

அதாவது, .நமது வாழ்வின் அனைத்தையும் வடிவமைப்பதாக இருப்பது அல்குர்ஆன் ஆகும்.

சுன்னா: நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் மற்றும் நபி(ஸல்) அவர்களின் நற்பண்புகளுடன் கூடிய வாழ்வு நெறி (வழிகாட்டி). 

அதாவது, அல்குர்ஆனின் கொள்கைகளைப் பிரதிபலித்து, சுருக்கமாகக் கூறியதை தெளிவாக விளங்கச் செய்து, அதனைப் பின்பற்றச்  செய்வது  சுன்னா  ஆகும்.

(குறிப்பு : சுன்னா என்பது நபி(ஸல்) அவர்களின் குணநலன்களுடன் கூடிய வாழ்வியல் நெறியைக் குறிக்கும். அதோடு ஹதீத்களை (சொல், செயல், அங்கீகாரத்தை)ச் சேர்த்தும் சுன்னா என்று இஸ்லாமிய  மரபில்  சொல்லப்படும்)

உங்களில் இருந்தே ஒரு தூதரை உங்களிடம் அனுப்பினோம். நம் வசனங்களை உங்களுக்கு வாசித்துக் காட்டுகின்ற, உங்களை தூய்மைப்படுத்துகின்ற, நெறிநூலையும், ஞானத்தையும் உங்களுக்குக் கற்பிக்கின்ற, நீங்கள் அறியாதவற்றை எல்லாம் உங்களுக்கு கற்பிக்கின்ற ஒரு தூதர்(அவர்).    (அல்குர்ஆன் 2:151)

மேலும்  பார்க்க : அல்குர்ஆன் 4:64,113, 14:4, 62:2.

ஆகவே, அல்லாஹ்வின் நெறிநூலை, அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் வழிகாட்டல் (சுன்னா) அடிச்சுவட்டில் செயல்படுத்த  வேண்டியது  நமது  கடமை.

“…அல்லாஹ்விற்கு கீழ்ப்படியுங்கள், தூதருக்கு கட்டுப்படுங்கள். முடியாததென நீங்கள் புறக்கணித்துவிட்டால் தன்மீது சுமத்தப்பட்டதை நிறைவேற்றுவது மட்டுமே தூதரின் பொறுப்பு என்பதையும், உங்கள் மீது சுமத்தப்பட்டது உங்கள் பொறுப்பு என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். அவருக்கு கட்டுப்பட்டால் வெற்றிபெறுவீர்கள். மற்றபடி தெளிவாக எடுத்துரைப்பது ஒன்றே தூதர் மீதான பணி!”   (அல்குர்ஆன் 24:54)

மேலும், பார்க்க : அல்குர்ஆன் 3:32,132, 4:69,80, 5:92, 8:1,20. 

இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றிட அல்குர்ஆனுடன்  சுன்னாவும்  அவசியம்.

“… அல்லாஹ்வை நீங்கள் நேசிக்கின்றீர்கள் எனில் என்னைப் பின்பற்றுங்கள். அப்போது அல்லாஹ்வும் உங்களை நேசிப்பான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். மன்னிக்கக்  கூடியவன்,  இறங்குபவன்  அல்லாஹ்    (அல்குர்ஆன் 3:31)

மேலும், பார்க்க : 3:164, 33:21, 53:2-4, 64:12

அல்குர்ஆன்,  சுன்னா :

நபித் தோழர்கள் அல்குர்ஆன் நமக்கான வாழ்வியல் சட்டங்களை, கொள்கை, கோட்பாடு களைத் தன்னகத்தேக் கொண்டுள்ளது; அதனை நபி(ஸல்) அவர்களின் சுன்னா நமக்குத் தெளிவுபடுத்துகிறது என்பதை நன்கு உணர்ந்திருந்தனர்.

அதனால், அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் கூட அல்குர்ஆன் வழி தீர்வு காணப்பட்டது. சுன்னாவில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் அல்குர்ஆனை அளவு கோலாகக் கொண்டு அதனை சரி செய்தனர்.

குடும்பத்தினர் அழுவதால் இறந்தவர் வேதனைச் செய்யப்படுகிறார்என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர்(ரழி) சொன்னது, ஆயிஷா(ரழி)யிடம் தெரிவித்தபோது, “இறந்தவர் அவர் செய்த சிறு, பெரு பாவங்களின் காரணமாக வேதனைச் செய்யப்படுகிறார். அவரது குடும்பத்தினரோ அவருக்காக அழுகின்றனர் என்றுதான் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஆயிஷா(ரழி) கூறிவிட்டு அதற்குச் சான்றாக அல்குர்ஆன் வசனங்களை  ஓதிக்  காண்பித்தார்.

விரிவாகப் பார்க்க :  முஸ்லிம் : 1694, 1697

நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்ற கவலையில் ஒரு குழுவும், இறக்கவில்லை என்று உமர்(ரழி) உட்பட ஒரு குழுவும் பிரிந்து நின்றபோது, அபூபக்கர்(ரழி) “அல்லாஹ் மட்டுமே மரணிக்க மாட்டான்என்று கூறி அல்குர்ஆன் வசனம் 3:144ஐ ஓதியதும் அனைவரும் ஒன்றாக குழுமிவிட்டனர். இதைஅல்ரஹீக் அல்மக்தூம்என்ற நபி(ஸல்) அவர்களின் வரலாற்று நூலின் பக்கம் 572, 573ல்  பார்க்கலாம்.

நபித்தோழர்கள் கருத்துவேறுபாடுகள் வரும்போது அல்குர்ஆன் பக்கம் முகத்தைத் திரும்பினர். குர்ஆன், அதனை தெளிவுபடுத்தும் சுன்னாவை விட்டு வேறு ஒன்றின் பக்கம் தங்கள் கவனம் திரும்பிவிடக்கூடாது என்பதில் சஹாபாக்கள் கவனமாக, எச்சரிக்கையாக இருந்தனர்.

மக்கள் அல்குர்ஆனை, அடுத்து சுன்னாவைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கும் போது எல்லா முரண்பாடுகளிலிருந்தும், பிளவு (பிரிவு) களிலிருந்தும் பாதுகாப்பு பெறுகின்றனர்.

குர்ஆன், சுன்னாவைப் புறக்கணித்து விட்டு அவைகளைக் கவனிக்காமல் ஒதுக்கி விட்டு வேறு ஒன்றின் பக்கம் (மத்ஹப், ஃபத்வா) ஈடுபாடு காட்டுபவர்களை ஒற்றுமைப்படுத்துவதோ, அவர்களின் உள்ளங்களை ஒன்றிணைப்பதோ முடியாத காரியம். அதைத் தான் நாம் இப்போது கண்கூடாக பார்த்து வருகிறோம்.

சுன்னா : ஹிஜ்ரி முதல் நூற்றாண்டின் கடைசியில் சுன்னாவை தொகுக்கும் பணி சிறு சிறு அளவில் நடந்தாலும, ஹிஜ்ர் மூன்றாம் நூற்றாண்டிலிருந்து சுன்னாவை தொகுப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது; பெரிய அளவில் முயற்சியும் செய்யப்பட்டது. இதற்கு நபி(ஸல்) அவர்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் அதிகம் பரவியதும் ஒரு காரணமாகும்.

கஷ்டங்களும், இன்னல்களும், இடைஞ்சல்களும் பலவிதங்களில் நேரிட்ட போதிலும் நபி(ஸல்) அவர்களின் சரியான சுன்னாவை சேகரிக்க வேண்டும்; அதனை மக்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடனும் ஆவலுடனும் அறிஞர்கள் சுன்னாவை தொகுக்கும்  பணியில்  ஈடுபட்டனர்.

அதன் காரணமாக சுன்னாவிற்கு முக்கியத் துவம் கொடுக்கப்பட்டது. அல்குர்ஆனின் கொள்கை கோட்பாடு, வணக்க வழிபாடு, சட்டதிட்டங்கள் போன்றவற்றின் தொகுப்பே சுன்னா என்ற விளக்கமும் சொல்லப்பட்டது.

மத்ஹப் : அதன் பின், சுன்னா என்பது அல்குர் ஆனின் விரிவாக்கம் என்பதிலிருந்து மாறி கருத்து வேறுபாடுகளை உள்வாங்கிய மத்ஹப் (மார்க்க சட்டதிட்டங்கள்)களாக உருமாறின. பல பொருள்களைத் தரக்கூடிய வசனங்கள் அல்குர்ஆனில் இருப்பதால் கருத்து வேறுபாடுகள் வருவது சகஜம் என்கின்றனர் அறிஞர்கள்.

இறைநூலை உங்களுக்கு அருளியவன் அவனே. இதில் தெளிவான திட்டவட்டமான வசனங்களும் உள்ளன. இறைநூலுக்கு மூலம் அவையே! இவையன்றி சிந்திக்க கூடியவர்க ளுக்கு விளங்கக் கூடிய வசனங்களும் உள்ளன. உள்ளங்களில் கோளாறு கொண்டவர்கள் இவ்வகை வசனங்களின் பின்னால் திரிகிறார்கள். அவற்றில் குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டும் அவற்றைத் திரித்துக் கூறிக்கொண்டும்! உண்மையில் அவற்றின் இயற்பொருளை அல்லாஹ்வையன்றி வேறு எவரும் அறிய மாட்டார். அறிவில் கரைகண்டவர்களோ நாங்கள் இவற்றை நம்புகிறோம். எங்கள் இறைவனிடமிருந்தே வந்துள்ளன யாவும் என்கிறார்கள். படிப்பினையை அறிவுள்ளோர் தாம் பெற்றுக் கொள்வார்கள்.  (அல்குர்ஆன் 3:7)

(குறிப்பு : காலம், இடம், பொருள், சூழல், மொழி, சிந்தனை என யாவற்றிற்கும் அப்பாற்பட்டவன் இறைவன். அவன் வாக்கும் அவ்வாறே. ஆனால், மேற்கூறப்பட்ட யாவற்றிற்கும் உட்பட்ட மனிதன்தான் இதனைப் புரிந்துகொள்கிறான். தான் புரிந்தவற்றை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்கின்றான். மொழி பெயர்க்கின்றான். அவன் புரிந்துகொண்டதும் மொழி பெயர்த்ததும் ஒருபோதும் பூரணமாக அமையாது. காலம், இடம், பொருள், மொழி, சூழல், சிந்தனை மாற மாற இறை வசனங்களின் பொருளும் பரப்பும் மென்மேலும் விரிவடைந்து கொண்டே செல்லும். அதன்படி பல்வேறு வியாக்கியானங்களை உள்ளடக்கியது எனும் பொருளையும் இந்த வசனம்  தருகின்றது.)

சையத் அப்துர் ரஹ்மான் உமர் மொழி பெயர்த்த திருக்குர்ஆனிலிருந்து.

காலச் சூழலுக்கு ஏற்ப பொருள் பலவாறு விரிவடையும் என்பதை பல பொருள்களைத் தரும் வசனங்கள் (முதஷாபிஹாத்) என்றதால் மத்ஹப்களை உருவாகியது. மத்ஹப்கள் குர்ஆன், சுன்னாவை விளக்குவதால் அதனைப் பின்பற்றவேண்டும் என்றனர். அதனால் மக்கள் ஏதாவது ஒரு மத்ஹபை பின்பற்ற வேண்டும் என்ற நிலைக்கு வந்து மத்ஹபை பின்பற்றுகின்றனர். அல்குர்ஆன், சுன்னாவை விட மத்ஹபுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.

ஃபத்வா : இப்போது அல்குர்ஆனுக்கும், ஹதீதுகளுக்கும் தமிழ் மொழிபெயர்ப்புகள் வந்து விட்டதால் மக்கள் படித்து புரிந்து கொள்வார்களே என்பதால் இமாம்களும், ஆலிம்களும் (ஆலிம் என்பதன் பன்மை உலமா என்றாலும் புரிவதற்கு எளிதாக ஆலிம்கள் என்று குறிப்பிட் டிருக்கிறோம்) தம் ஆளுமையை  நிலைநிறுத்த (தக்கவைத்துக் கொள்ள) முந்தைய அறிஞர்களின் ஃபத்வாக்களை மக்களிடம் வீறு கொண்டு  எடுத்து  வருகின்றனர்.

அல்குர்ஆன், சுன்னாவிற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்குப் பதிலாக, பெயரளவில் ஓரிரு குர்ஆன் வசனங்களை, ஹதீத்களை இலேசாகக் காண்பித்து விட்டு ஃபத்வாக்களை முன்னி ருத்துகின்றனர். ஸலபிகளும், தொளஹீத் மெளலவிகளும் கூட.

அல்குர்ஆன், சுன்னாவிலிருந்து தீர்வு காண்பதற்குப் பதிலாக ஃபத்வாக்களை முன்னிலைப் படுத்துகின்றனர். முன்னால் அறிஞர்கள் மார்க்கக் கல்வியில் திறமை மிக்கவர்கள்; கரைகண்டவர்கள் அவர்கள் தீர்ப்பு சரியானதாகவே இருக்கும். அதனால், அவர்களின் ஃபத்வாக்களே இஸ்லாத்தின் தீர்வு என்று வாதிடுகின்றனர். இது மத்ஹப்வாதிகளின் கூற்றை அப்படியே பிரதிபலிக்கிறது அல்லவா?

அல்குர்ஆன், சுன்னா என்பது நேரிய வழி; (பாதை) ஃபத்வா என்பது அந்த பாதையில் வெளிச்சம் எனும் தெளிவைத் தரலாமே தவிர அதுவே பாதையாக மாறிவிடாது. ஆனால் ஸலஃபிகளும், தவ்ஹீத் மெளலவிகளும் ஃபத்வாக்கள்தான் பாதை, வழி என்று வலியுறுத்துகிறார்கள்;  வாதிடுகிறார்கள்.

நேரான  பாதை :

அல்குர்ஆன் சொல்(மொழி); அதன் செயல்வடிவமே சுன்னா என்பதில் நாம் உறுதியாக இருக்கவேண்டும். சஹாபாக்களும், அடுத்த, அடுத்த தலைமுறைகளும் அல்குர்ஆனை கடைபிடிக்க வேண்டியவர்களாகவும் அதன் செய்முறை வடிவாக சுன்னாவை பார்த்தனர். அதன்பின் மத்ஹப் மோகம் தலைவிரித்தாடியது. தற்போது ஃபத்வா மோகம் ஆர்ப்பரிக்கிறது.

நான் உங்களிடம் இரண்டை விட்டுச் செல்கிறேன். அதை நீங்கள் பின்பற்றும் காலமெல்லாம் வழிதவற மாட்டீர்கள். (அவை) அல்லாஹ்வின் நெறிநூலும், எனது வழிமுறை (சுன்னா)ம் ஆகும்என நபி(ஸல்)  கூறினார்கள்.  (முஅத்தா)

“… உரைகளில்  சிறந்தது அல்லாஹ்வின் வேதம். வழிகாட்டலில் சிறந்தது எனது வழி காட்டலாகும். செயல்களில் தீயவை புதிதாக உண்டாக்கப்படுபவை ஆகும். ஒவ்வொரு புதுமையும் வழிகேடு ஆகும். ஒவ்வொரு இறை நம்பிக்கையாளருக்கும் அவரது உயிரை விட நான் நெருக்கமானவன்என நபி(ஸல்) அவர்கள்  கூறினார்கள்.   (முஸ்லிம் 1573)

ஒரு வி­யத்தில் அல்லாஹ்வும் அவனது தூதரும் தீர்ப்பளித்துவிட்டால் அதில் மாற்றுக் கருத்துக் கொள்ள இறைநம்பிக்கைக் கொண்ட ஓர் ஆணிற்கோ, ஒரு பெண்ணிற்கோ அனுமதியே இல்லை. அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் மாறு செய்பவன் அப்பட்டமான வழிகேட்டில்  போய்  விடுகிறான்.   (அல்குர்ஆன் 33:36)

ஆகவே, 

நாம் அல்குர்ஆன், சுன்னாவைப் பற்றிப் பிடிப்போம்!

ஈருலகிலும்  நாம்  வெற்றி  பெறுவோம்!!

அதற்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக!!!

அல்ஹம்துலில்லாஹ்.

Previous post:

Next post: