ஐயமும்! தெளிவும்!!
ஐயம் : “ஸலஃப்‘ என்பவர்கள் யார்? இவர்களுடைய கொள்கை என்ன? இவர்கள் கூறுவதை மார்க்க ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாமா?
தெளிவு : இரவும் பகலைப் போல் வெள்ளை வெளேர் என்ற தூய நிலையில் நபி(ஸல்) அவர்களால் விட்டுச் செல்லப்பட்ட தூய இஸ்லாமிய மார்க்கம். மிகக் குறுகிய காலத்தில், வயிற்றுப் பிழைப்பை நோக்கமாகக் கொண்ட புரோகிதர்களால் மதமாகத் திரிக்கப்பட்டது. ஸலஃபிகள் என்று அரபி மொழியில் அழைக்கப்படும் பின்னால் வந்தவர்கள் தூய மார்க்கத்தை தர்கா சடங்குகள், மத்ஹபுகள், தரீக்காக்கள், சூஃபிஸம் போன்ற வழிகேடுகளைக் கொண்டு நிரப்பிவிட்டார்கள். ஹிஜ்ரி 500க்குப் பிறகு முஸ்லிம்கள் மத்ஹபு பிடியில் சிக்கி புரோகிதர்களைக் கண்மூடிப் பின்பற்றி, முன்னைய நபிமார்களின் சமூகங்களில் நடைமுறையிலிருந்த அனைத்து வித சிர்க், பித்அத் போன்ற இறைவனுக்கு இணை வைத்தல் மற்றும் மூட நம்பிக்கைகள், மூடச்சடங்கு சம்பிரதாயங்கள், அனாச்சாரங்களில் மூழ்கி வழிகேட்டில் சென்று கொண்டிருந்தனர். அவர்களிடையே “தக்லீது‘ எனும் கண்மூடிப் பின்பற்றும் தீய செயல் ஆழமாக வேரூன்றிப் போயிருந்தது. தக்லீதை எதிர்த்துப் பேசும் அறிஞர்கள் எண்ணற்றம் துன்பங்களுக்கு ஆளானார்கள். அவர்களின் உபதேசங்கள் அம்பலம் ஏறவில்லை.
இந்த நிலையில் ஹிஜ்ரி 661ல் பிறந்து ஹிஜ்ரி 728 வரை வாழ்ந்த இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் முஸ்லிம்களின் இந்தப் பரிதாப வழிகேட்டு நிலையைக் கண்டு மனம் மிக வேதனைப்பட்டார்கள். இவர்களை நேர்வழிக்குக் கொண்டுவர பெரும் முயற்சிகள் எடுத்தார்கள். தக்லீதுடைய பிடி மிக வலுவானதாக இருந்ததால், முஸ்லிம்களை தக்லீதை விட்டும் விடுவிப் பது கல்லில் நார் உரிப்பது போல் மிகக் கடினமாக இருந்ததால், ஒரு தந்திரம் செய்தார்கள். பின்னால் வந்தவர்களான கலஃபிகளை பின்பற்றுவதால்தான் முஸ்லிம்கள் பெருத்த வழிகேட்டில் செல்லுகிறார்கள். தர்கா சடங்குகள், மத்ஹபுகள், தரீக்காக்கள், சூஃபிஸம் போன்ற அனைத்து வழிகேடுகளும் பின்னால் வந்த கலஃபிகளால் கற்பனை செய்யப்பட்டவையே.
எனவே கலஃபிகளை தக்லீது செய்வதை விட்டும் முஸ்லிம்களைத் தடுத்து “ஸலஃபுகளை‘ தக்லீது செய்ய வைத்து விட்டால், இந்த தர்கா சடங்குகள், மத்ஹபுகள், தரீக்காக்கள், சூஃபிஸம் இவை அனைத்தும் ஒழிந்துவிடும் என்ற நோக்கத்தோடு “ஸலஃபுகளை‘ தக்லீது செய்யும்படி கூறினார்.
“முகல்லிது யுகல்லிதுஸ் ஸலஃப்‘-“‘தக்லீத் செய்யும் முகல்லிதாக இருப்பதாக இருந்தால் கலஃபிகளை தக்லீது செய்வதை விட்டு ஸலஃபிகளை தக்லீது செய்யுங்கள்” என்று அறிவுரை கூறினார். அதற்குப் பின்னர் ஹிஜ்ரி 1111 பிறந்து 1206ல் இறந்த சீர்திருத்தவாதி “முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்‘ அரபு நாட்டில் பிறந்ததாலும், அன்றைய சவூதி மன்னர்களின் உதவி ஒத்தாசை கிடைத்ததாலும், இப்னு தைமிய்யா அவர்களின் கருத்துக்களை “ஸலஃபு‘ கொள்கையை அரபு நாட்டில் பரப்ப வசதி ஏற்பட்டது. சவூதி அரபியாவின் பல அமைப்புகளிடமிருந்து நிதி உதவி பெறும் மற்ற நாட்டிலுள்ள புரோகிதர்களும் பணத்திற்காக இந்த “ஸலஃபி‘ கொள்கையை ஆதரிக்கும் கட்டாயம் ஏற்பட்டது. ஆக “ஸலஃபுகள்‘ என்போர் கலஃபிகளான பின்னால் வந்தவர்களை தக்லீது செய்வதை மறுத்து, முன்னால் இருந்த நபிதோழர்களை தக்லீது செய்யலாம். அவர்கள் குர்ஆன், ஹதீதை விளங்கியபடி தான் நாமும் விளங்க வேண்டும் என்ற கொள்கையை உடையவர்கள்.
ஆனால் அல்குர்ஆன் 7:3, 2:134,141, 3:31, 33:21,36,66,67,68, 40:35, 59:7 இந்த இறைக் கட்டளைகளை நேரடியாக படித்து விளங்கி புரிந்து செயல்படுகிறவர்கள் யாரையும் தக்லீது செய்யமாட்டார் கள். நபிதோழர்கள் விளங்கியபடிதான் நாமும் குர்ஆன், ஹதீதை விளங்க வேண்டும் என்றால் 33:68ல் “நாங்கள் இறைவனுக்கு வழிபட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும், நபிதோழர்களுக் கும், வழிபட்டிருக்க வேண்டுமே” என்று தெள்ளத் தெளிவாக நேரடியாக இறைவன் அறிவித் திருப்பான். இறைவன் மறதியாளனோ, தவறிழைப்பவனோ இல்லை. 7:3லும் நபித்தோழர் களை பின்பற்றுவது தடுக்கப்பட்டுள்ளது.
மற்ற மவ்லவிகள் போல் ஸலஃபி மவ்லவிகளும் தங்களின் ஸலஃபி கொள்கையை நிலைநாட்ட சில குர்ஆன் வசனங்களின் நேரடிக் கருத்தை மறைத்து தங்களின் தஃப்ஸீர் எனும் கோணல் விளக்கங்கள் கொடுத்து வருகின்றனர். உதாரணமாக 9:100ல் “வல்ல தீனத்தபவூ ஹும் பி இஹ்சான்” அவர்களை நற்கருமங்களில், நல்ல விசயங்களில் பின் தொடர்ந்தவர்கள் என்று தெள்ளத் தெளிவாக இருக்க, மொட்டையாக அவர்களைப் பின்பற்றுவது என்று கூறி தங்கள் “ஸலஃபி” கொள்கையை நிலைநாட்டத் துணிகிறார்கள். இதில் மற்ற மவ்லவிகளுக்கும் இவர்களுக்கும் வேறுபாடு நமக்குத் தெரியவில்லை. உண்மையில் நபி தோழர்களை நேரடியா கப் பின்பற்றச் சொல்லி ஒரே ஒரு ஆயத்தையோ, ஹதீதையோ அவர்களால் காட்டமுடியாது. அவர்களின் சொந்த தஃப்ஸீர். விளக்கம், வியாக்யானம் இவற்றால் மட்டுமே “ஸலஃபி” கொள்கையை நிலைநாட்ட முற்படுவார்கள். இது ஏற்புடையதன்று. இதுபோல் 2:137, 4:115 இறைவாக்குகளையும் தங்களின் “ஸலஃபி” கொள்கைக்கு ஏற்றவாறு திரித்து தஃப்ஸீர்–விரிவுரை தருவார்கள்.
இவர்கள் குர்ஆன், ஹதீத் நேரடியாகக் கூறும் ஆதாரத்தை எடுத்துக்காட்டினால் மட்டுமே மார்க்க ஆதாரமாக எடுத்துக் கொள்ளமுடியும். இந்த இடத்தில் நுணுக்கமாக ஒரு விசயத்தை விளங்க வேண்டியுள்ளது. நபிதோழர்கள் அனைவரும் நபி(ஸல்) அவர்களுடன் நேரடியாகப் பழகி அவர்களின் சொல், செயல், அங்கீகாரங்களைக் கண்ணால் கண்டு காதால் கேட்டு விளங்கியவர்கள். ஆனாலும் மனிதன் என்ற அடிப்படையில் இயற்கையாக உள்ள பலகீனங்கள் அவர்களுக்கும் உண்டு. மறதி, கவனக்குறைவு போன்ற பலகீனங்கள் அவர்களுக்கும் உண்டு. நபிமார்களே இதிலிருந்து விலக்குப் பெறவில்லை எனும்போது நபிதோழர்கள் பற்றி அதைவிட உயர்வாக என்ன முடியாது. இப்னுல் அரபி போன்ற வழிகேடர்களே தங்களை நபி தோழர்களை விட ஏன்? நபிமார்களை விட உயரிய படித்தரங் களைப் பெற்றவர்கள் எனப் பிதற்றியுள்ளனர். ஆயினும் நபிமார்கள் அவர்களின் நபித்துவ காலத்தில் இறைவனின் நேரடி கண்காணிப்பில் இருந்து (பார்க்க 52:48) தவறு நடந்தால் உடனுக்குடன் திருத்தப்பட்டார்கள். இதற்கு இறுதி வழிகாட்டல் நூல் குர்ஆனிலேயே பல ஆதாரங்களைப் பார்க்க முடிகிறது. (பார்க்க 4:140,5:67, 6:52,53,54,68,159,11:12,17:73,74,75, 28:85,86,87,88, 45:18, 66:1,2, 69:44,45,46, 80:1-10)
நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்களுடனேயே இருந்து அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்தை நேரடியாகப் பார்த்து, கேட்டு விளங்கியதால், நம்மை விட மிகத் தெளிவாக, சரியாக விளங்கி இருக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை. அதனால் அவர்கள் விளங்கியபடிதான் நாமும் விளங்க வேண்டும் என்றால், இறைவன் அதற்கு நமக்கு அனுமதி தந்திருக்க வேண்டும். உலக வாழ்க்கை பரீட்சை வாழ்க்கை என்று இறைவன் அல்குர்ஆன் 67:2ல் கூறுகிறான். இந்த வாழ்க்கைப் பரீட்சையில் யாரையும் காப்பி அடிக்காமல் அல்குர்ஆனையும், நபியின் நடைமுறைகளையும் நேரடியாகப் பார்த்து விளங்கி நடக்கவேண்டும் என்று 7:3ல் கட்டளையிட்டுள்ளான்.
பரீட்சை எழுதும் மாணவன் பக்கத்தில் உள்ள மாணவன் 100க்கு 100 சரியாக எழுதுகிறான் என்று சொல்லி அவனை காப்பி அடிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. பரீட்சை மண்டபத்திலிருந்து வெளியேற்றப்படுவான். ஆனால் காப்பி அடிக்காமல் சுயமாக எழுதினால் 35 புள்ளிகளாவது எடுத்து வெற்றி பெற வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆனால் பரீட்சைக்கு முன் அந்த திறமையான மாணவனிடம் தன் சந்தேகங்களைக் கேட்டு விளங்கி, பின் பரீட்சையில் சுயமாக விளங்கியதை எழுத அனுமதி உண்டு.
அதேபோல் இந்த வாழ்க்கைப் பரீட்சையிலும் நபிதோழர்கள் மிகச் சரியாக விளங்கி யிருக்கிறார்கள் என்ற அடிப்படையில், அவர்கள் குர்ஆன், ஹதீதை விளங்கியது போல்தான் நாமும் விளங்கவேண்டும் என்பது அவர்களை காப்பி அடிப்பதாக இருக்கும். பரீட்சையில் வெற்றி பெறமுடியாது. இதைத்தான் அல்குர்ஆன் 33:66,67,68 இறைக்கட்டளைகளை உணர்த்துகின்றன. சுயமுயற்சியில் குர்ஆனை, ஹதீதை விளங்க முற்பட்டு அதில் தவறு நிகழ்ந்தாலும் நரகத்தை விட்டு தப்பமுடியும். 35 பள்ளிகள் எடுத்து வெற்றி பெறும் மாணவனைப் போல், ஆயினும் குர்ஆன், ஹதீதை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாகப் படித்து, அல்லது படிக்கக் கேட்டு விளங்க முற்படும் போது அதில் நமக்குத் தடுமாற்றம் ஏற்படும்போது நபிதோழர்கள் அதில் எப்படிச் செயல்பட்டிருக்கிறார்கள் என்று பார்ப்பதில் தவறில்லை.
குர்ஆன், ஹதீத் தெளிவாக நேரடியாகக் கூறும் காரியங்களில், அதற்கு மாற்றமாக நபி தோழர்களில் யார் செயல்பட்டிருந்தாலும் அதை ஆதாரமாக நாம் எடுக்கக் கூடாது. உதாரணமாக உமர்(ரழி) அவர்கள் தமது ஆட்சியின் பிற்காலத்தில், ஒரே நேரத்தில் சொல்லப்படும் மூன்று தலாக்கைக் கொண்டு கணவன் மனைவி உறவு முறித்து விடும் என்று நடைமுறைப்படுத்தினார்கள். உதுமான்(ரழி) அவர்கள் மினாவில் ளுஹர், அஸர், இஷா தொழுகைகளை 4 ரகாஅத்தாக ஆக்கினார்கள். அதே உதுமான்(ரழி) அவர்கள் ஜும்ஆவுடைய பாங்கை கடைவீதியில் ஒன்றை அதிகப்படுத்தி இரண்டு பாங்குகள் ஆக்கினார்கள். இந்த இடங்களில் அல்குர்ஆன் 2:134,141 இறைக்கட்டளைகள்படி அவர்கள் சரியாகச் செய்தார்களா? தப்பாக செய்தார்களா? என்ற ஆய்வுக்கு நாம் போக வேண்டியதில்லை இறைவன் அவர்களின் தவறுகளை மன்னித்தும் இருக்கிறான். அவர்களின் பாவங்களை நன்மையாக மாற்றியும் கொடுத்திருக்கிறான். எனவே அவர்கள் செய்ததை ஆராயாமலும், அதைக் கணக்கில் கொள்ளாமலும், இந்தச் செயல்களில் நபி(ஸல்) அவர்கள் எப்படிச் செய்தார்கள் என்பது நமக்கு ஆதாரப்பூர்வமான ஹதீத்களில் கிடைப்பதால், இறைவனின் எண்ணற்ற கட்டளைப்படி நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றுவதுதான் நமது கடமையாகும். ஆயினும் குர்ஆன், ஹதீதில் நமது சொந்த முயற்சியைக் கொண்டு விளங்க முடியாத ஒரு தடுமாற்றம் ஏற்படுமானால், இந்தப் புரோகித முல்லாக்களின் சுயவிளக்கத்தை ஏற்பதைவிட, நமது சுய விளக்கத்தை ஏற்பதை விட நபிதோழர்களின் நடைமுறைக்கு முன்னுரிமை கொடுப்பதே ஏற்புடையதாகும்.