படைத்தவனும், படைப்பினங்களும்
அல்லாஹ்வின் அடிமை என்று பிரகடனப்படுத்திய இறுதி இறைத்தூதர்!
முஹிப்புல் இஸ்லாம்
மறுபதிப்பு :
முரண்படும் மனித நிலை :
படைத்த ஏக இறைவனாகிய அல்லாஹ்விற்கு மட்டுமே மனித சமுதாயம் முழுமையும் அடிமையாகி வாழவேண்டும். மனிதர்கள் மற்ற படைப்பினங்களுக்கும், மனிதர்கள் கற்பித்தவைகளுக்கும் அடிமைகளாகுதல் இறைக்கிணையாக்கும் மாபாதகம் என்று படைப்பினங்கள் அனைத்தின் ஒரே எஜமானனாகிய வல்ல அல்லாஹ் தெளிவு படுத்தியுள்ளான். மனிதர்கள் இதற்கு முரண்படுவதால், இறைக்கட்டளைகளைத் தாங்கி நபிமார்களைத் திரும்பத் திரும்ப அனுப்பி சிறு பிள்ளைக்கும் புரியும் எளிய மொழியில் ஏக வல்ல அல்லாஹ் இதை மனித சமுதாயத்திற்குப் புரிய வைத்துள்ளான். அல்ஹம்துலில்லாஹ்.
நபியவர்களின் அழகிய முன்மாதிரி வாழ்வியல்!
அல்லாஹ்வால் தெரிவு செய்யப்பட்ட நபிமார்கள் அனைவரும் படைத்த ஏக வல்ல அல்லாஹ்விற்கு அடிமைகளாய்த் திகழ்ந்தார்கள். இதை சென்ற ஆய்வில் தெளிவாய்ப் பார்த்தோம்.
இன்று நபி(ஸல்) அவர்கள் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. எனினும் நபியவர்கள் அல்லாஹ்விடமிருந்து பெற்ற இறைக்கட்டளைகள் அலகுர்ஆனாகவும் அந்த அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் உத்திரவுப்படி கொடுத்த செயல்வடிவம். மனித சமுதாயத்திற்கு அழகிய முன்மாதிரி வாழ்வியலாகவும் (33:21) நம்மை வந்தடைத்துள்ளன. இது மனித சமுதாயத்தை வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது.
அந்த நபியவர்களின் அழகிய முன்மாதிரி வாழ்வியலின் ஆதாரப்பூர்வ பதிவியல்களே அல்ஹதீது தொகுப்புகளாகும். இதையே நாம் அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மை ஊர்ஜிதம் செய்யப்பட்ட ஆதாரப்பூர்வ நபி வாழ்வியல் வழிகாட்டுதல் என்கிறோம். என்னே! மனித சமுதாயத்தின் மீது அல்லாஹ் கொடுத்துள்ள அளப்பரிய அருள்!
வாழ்வின் அனைத்து நிகழ்விலும் நபி(ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரி வாழ்வியலைப் பிரதிபலிப்பது, முஸ்லிம்கள் மீது தலையாய கடமையாகும். இந்தப் பிரதான கடமையை சரியாக நிறைவேற்ற அல்குர்ஆனையும். அல்ஹதீதுகளையும் முறையாக கற்றுக்கொள்வது அவசியமாகும். இவ்விரண்டையும் இறையச்சத்துடன் கற்க முற்படுவோர் தாங்களும் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்வது போன்ற உணர்வைப் பெறுவது நிச்சயம். அல்குர்ஆன், அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மை ஊர்ஜிதம் செய்யப்பட்ட ஆதாரப்பூர்வ அல்ஹதீதுகள் உயிரோட்டம் இங்குதான் நிதர்சனமாய் நிரூபணமாகிறது.
இறையருள் வழிகாட்டுதல்!
அல்குர்ஆனும், அல்ஹதீதும் அனைத்துக் காலத்துக்கும், அனைத்துலக மக்களுக்கும் நேர்வழிகாட்டும் இறையருள் வழிகாட்டுதலாகும். முற்றிலும் அல்லாஹ்விற்கே கீழ் படிந்தவர்களாய் இறைக் கட்டளைகளுக்கு செயல்வடிவம் கொடுத்த நபி(ஸல்) அவர்கள் வாழ்வின் எல்லா நிலைகளிலும், தங்களை அல்லாஹ்வின் அடிமை என்று வாக்காலும், வாழ்வாலும் மெய்ப்பித்துக் காட்டினார்கள்.
மனித சமுதாயத்திற்கோர் அழகிய முன்மாதிரி:
அல்லாஹ்வின் நபியாக இருந்தாலும், முதற்கண் தாங்கள் ஒரு அல்லாஹ்வின் அடிமை என்று பிரகடனப்படுத்தி நபி(ஸல்) அவர்கள் பெருமிதப்பட்டவர்கள். நபித்துவம் அருளப்பட்டதிலிருந்து இறுதி மூச்சு வரை நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விற்கு அடிமையாக வாழ்ந்து காட்டினார்கள்.
வாழ்வு முழுவதிலும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே அடிமையாகி அல்லாஹ்வை ஒருமைப்படுத்த மனித சமுதாயத்திற்கு நபி(ஸல்) அவர்கள் அழகிய முன்மாதிரியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நபி(ஸல்) அவர்களை வாழ்வில் அனைத்து நிகழ்விலும் அழகிய முன்மாதிரியாக்கிக் கொள்ளவேண்டும் என்ற உந்துதல் உள்ளோர் நபி(ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரி வாழ்வியலைக் கூடுதல் சிரத்தையுடன். ஆழ்ந்த சிந்தனையுடன் கற்றுக்கொள்ள முற்பட்டால், தாங்களும் நபியவர்கள் காலத்தில் வாழ்வது போன்ற உணர்வைப் பெறுவது திண்ணம். அல்குர்ஆனையும், ஆதாரப்பூர்வ அல்ஹதீதுகளையும் வேம்பாய் ஒதுக்கும் தமிழ் முஸ்லிம்கள் எப்படி இந்த உணர்வு பெறமுடியும்? விலக்கு பெறுவோர் வெகு சொற்பமே!
அல்லாஹ்வின் அடியார் :
நபி(ஸல்) அவர்களை ஏக வல்ல அல்லாஹ் தனது இறுதி நெறிநூலில் அல்லாஹ்வின் அடியார் என்று சிறப்பித்துள்ளது நம் ஆழ்ந்த சிந்தனைக்குரியது.
பெரும்பாக்கியம் நிறைந்த அல்லாஹ், சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டும் ஃபுர்க்கானை, அல்குர்ஆனை, நபி(ஸல்) அவர்களுக்கு அருளியதை உறுதிப்படுத் தும்போது, நபி(ஸல்) அவர்களைத் தன் அடியார் (அப்திஹி) என்றும் (அல்ஃபுர்க்கான் 25:1) கூறுகிறது.
சத்தியத்தையும், அசத்தியத்தையும் வேறுபடுத்திக் காட்டும் இறுதி இறை நெறிநூல், எப்படிப்பட்டது?
கோணல் (முரண்பாடு) இல்லாத நெறிநூலை நபி(ஸல்) அவர்களுக்கு அருளியதைக் கோடிட்டுக்காட்டும் புகழ் அனைத்திற்கும் உரித்தான அல்லாஹ் நபி(ஸல்) அவர்களைத் தன்னுடைய அடியார் (அப்திஹி) என்றும் கூறுகிறது. (அல்குர்ஆன் 18:1)
முரண்பாடுகள் இல்லாத இறைநெறி நூல் எதற்காக அருளப்படுகிறது? மனிதர்கள் மீது பரிவும் கருணையும் மிக்க அல்லாஹ், மனித சமுதாயத்தை இருள்களிலிருந்து வெளியேற்றி வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காக, தெளிவான இறைவாக்குகளை, நபி(ஸல்) அவர்களுக்கு அருளிக் கொண்டிருப்பதைச் சுட்டிக் காட்டும்போது நபியவர்களைத் தன் அடியார் (அப்திஹீ) என்றும் கூறுகிறது. (அல்குர்ஆன் 57:9)
மனித சமுதாயத்தை அறியாமை இருள்களிலிருந்து வெளியேற்றி அறிவு வெளிச்சத்திற் குக் கொண்டு வரும் அல்குர்ஆனை, சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது என்று உறுதிப்படுத் தும்போது, ஏக வல்ல அல்லாஹ் நபி(ஸல்) அவர்களை, நம் அடியார் (அப்தினா) என்றும் கூறுகிறான். (அல்குர்ஆன் 2:23)
அல்லாஹ்விடமிருந்து வஹியைத் தாங்கி வரும் வலிமை மிக்க நுண்ணறிவாளரான ஜிப்ரயீல்(அலை) அவர்கள், முதன் முறையாக, நபி(ஸல்) அவர்கள் முன், சுய உருவில் தோன்றி வஹி அறிவித்தார்கள். அப்போது, வில்லின் இருமுனையைக் காட்டிலும் ஜிப்ரயீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களை நெருங்கினார்கள் என்பதை நிலைநாட்டும்போது, வல்ல அல்லாஹ், நபி(ஸல்) அவர்களை, அவனுடைய அடியாருக்கு (அப்திஹி) என்றும் சிறப்பித்துள்ளான். (அல்குர்ஆன் 53:5-10)
நபி(ஸல்) அவர்களை மக்கள் அல்லாஹ்வின் அடியார் என்று புரிந்து தெளிவதற்காக நபியவர்கள் வாழ்வு முழுவதிலும் நிரம்பியுள்ள நிகழ்வுகளை நினைவு கூறிக்கொண்டே செல்லலாம். அவைகள் நூல்களால் மட்டுமின்றி, பல்வேறு பாகங்களாய் விரிந்து கொண்டே செல்லும். மிக நீண்ட விரிவான ஆய்வுகளாய் விரிந்து செல்லும். எந்த நிகழ்வை எடுத்து ஆராய்ந்தாலும், அவைகள் நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் அடியார்தான் என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கும்.
ஏக வல்ல, அல்லாஹ் ஒருவனே தங்களுக்கு எல்லா நிலைகளிலும் எஜமானன், தாங்கள் என்றென்றும் அவனது அடியார்தான் என்பதை நபி(ஸல்) அவர்கள் எப்போதும் மறந்ததே இல்லை. அதனால் ஏக வல்ல அல்லாஹ்வும், நபி(ஸல்) அவர்களை அடியார் என்று சிறப்பிக்கிறான்.
அல்லாஹ்வின் அடியார் (அப்துல்லாஹி) அவனை அல்லாஹ் ஒருவனை அழைப்ப (தொழுவ)தற்காக எழுந்து நின்றபோது, மக்கள் அவர்மீது பாய முனைந்துவிட்டார்கள். (அல்ஜின் 72:19)
நபி(ஸல்) அவர்களை, “அடியார் ஒருவர் (அப்தன்) தொழுது கொண்டிருக்கையில் அவரைத் தடுப்பவனை நீர் பார்த்தீரா? (அல்அலக் 96:10)
அனைத்தையும் படைத்த ஒரே எஜமான னாகிய ஏகவல்ல அல்லாஹ் ஒருவனை வணங்கி வழிபட்ட நபி(ஸல்) அவர்களை, “அல்லாஹ்வின் அடியார் என்றும் (92:19) அடியார் ஒருவர் (96:19) என்றும் சிறப்பித் திருப்பது கூர்ந்து நோக்கத்தக்கது. அனைத்தையும் படைத்த ஒரே எஜமானனான, ஏகவல்ல அல்லாஹ்வை வாழ்வு முழுவதிலும் அந்த ஒரே இறைவனுக்கு மட்டும் அடிமை என்று ஒருமைப்படுத்துவதில் நபி(ஸல்) அவர்கள் முன்னணியாளராகவும், அழகிய முன்மாதிரி யாளராகவும் திகழ்ந்தார்கள் என்பதற்கு மேற்கண்ட இறைவாக்குகள் சான்று பகர்கின்றன.
அல்குர்ஆனில் நபி(ஸல்) அவர்கள் எத்தனையோ விதங்களில், எத்தனையோ கோணங்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளார்கள். அது போன்று நபி(ஸல்) அவர்களை வேறு எவரும், ஏன் மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்த்தாலும் சிறப்பிக்க முடியாது. எத்தனை, எத்தனை சிறப்புகளை ஏகவல்ல அல்லாஹ் வாரி, வாரி வழங்கியிருந்தாலும், அல்லாஹ்வின் அடியார் என்று அல்லாஹ் சிறப்பித்துள்ளதை நபி(ஸல்) அவர்களும் வழி மொழிந்துள்ளார்கள்.
“என்னை அல்லாஹ்வின் அடியார் (அப்துல்லாஹி) என்றும், அவனது தூதர் (ரஸூலிஹி) என்றும் கூறுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் நவின்றதை உமர்(ரழி) அவர்கள் கூற இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் எடுத்துக் காட்டினார்கள்.
நாம் என்ன செய்கிறோம்?
அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும், எத்துணைத் தெளிவாய் பிரகடனப்படுத்தியுள் ளார்கள். நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்று. ஆனால் இந்திய முஸ்லிம்கள் பெரும்பாலோர் அல்லாஹ்வும், நபியும் ஒன்று தான் என்று தப்புக் கணக்குப் போட்டுள்ளனர். அல்லாஹ்வையும், அல்லாஹ்வின் தூதரையும் இணைத்தே பார்க்கின்றனர். பல மஸ்ஜிதுகளில், உள்ள மிஹ்ராப்களில் அல்லாஹ் முஹம்மது (அரபியில்) என்று எழுதப்பட்டுள்ளதைப் பார்க்கிறோம். அல்லது வேறு இடங்களில் அல்லாஹ் முஹம்மது என்று (அரபியில்) எழுதப்பட்டிருக்கும். காலண்டர்களில், ஸ்டிக்கர்களில் வீட்டு முகப்பு நிலைக்கதவுகளில் பதிக்கப்பட்டுள்ள கண்ணாடிகளில், வீடுகளில் தொங்கவிடப்பட்டுள்ள கண்ணாடி பிரேம்களில், அல்லாஹ் முஹம்மது என்று (அரபியில்) எழுதப்பட்டுள்ளதைப் பார்க்கிறோம். (இன்ஷா அல்லாஹ் தொடரும்)