பல்சமயச் சிந்தனை!

in 2025 ஆகஸ்ட்

பல்சமயச் சிந்தனை!

ஆசிரியர் குழு 2025

ஜூலை  தொடர்ச்சி

முடிவுரை : அன்பர்களே! எனது பேச்சின் சுருக்கம் இதுவேஒன்றை குலம் ஒருவனே தேவன்”. இதுவே நம் முதுமொழி இறைவனை ஒருவனாக ஏற்றிருந்த நாம், மதவாதிகளின் மாயையில் சிக்கி, இறைத்தூதர்களையும், மஹான்களையும் அவதாரமாக்கிப் பின்னர் சாமிகளாக்கிப் பல தெய்வ வழிபாட்டிற்கு, வழி விலகிச் சென்றுவிட்டோம். விலகிச் சென்ற பாதையிலிருந்து, நேர்வழிக்கு உங்களை அழைக்கிறேன். ஒன்றே இறை; ஒன்றே நெறிநூல்; ஒன்றே குலம்; ஒன்றே மார்க்கம் என்ற தாரக மந்திரத்தை நாமெல்லாம் ஏற்று உலக அமைதியைக் காக்க வழி வகுப்போம் என்று  அறை  கூவி  அழைக்கிறேன்.

இறைவனால் பெயரிடப்பட்டு கொடுக்கப்பட்டு, ஆதமால்(அலை) அமுல் நடத்தப் பட்டு, ஆப்ரஹாம்(அலை) அவர்களால் நெறிப்படுத்தப்பட்டு, யாகூப்(அலை), ஜோசப் (அலை), மோசஸ்(அலை), ஜீஸஸ்(அலை), முஹம்மது(ஸல்) ஆகியோரால் போதிக்கப் பட்ட சாந்தி (இஸ்லாம்) மார்க்கத்தின்பால்  அழைக்கிறேன்.

மதவெறி கொண்டு இவ்வாறு சொல்வதாக நீங்கள் நினைக்க வேண்டாம். நான் மதவாதி அல்லவே. எப்படி எனக்கு மதவெறி வரமுடியும்? ஆனால் என்னைப் படைத்த இறைவன் என்னிடமிருந்து எதை விரும்புகிறானோ அதையே  சொல்கிறேன்.

இறை விருப்பம்,  இல்லை கட்டளை!

இது எனது சொந்த விருப்பமோ, உலகில் தோன்றிய இறைத்தூதர்களின் சொந்த விருப் பமோ அன்று. என்னையும், உங்களையும் படைத்துக் காத்து, வளர்த்து வரும் ஒரே இறை வனின் விருப்பம். நம் எஜமானனாகிய இறைவன், அவனது அடிமைகளாகிய நமக்கிட்டிருக்கும், மீற முடியாத கட்டளையாகும். ஆம்! நாம் அவனது அடிமைகளே. எஜமானனின் கட்டளையை, ஊழியன் அல்ல, அடிமை மீற முடியுமா? மாற்ற முடியுமா? சிந்தனை செய்யுங்கள்.

ஆட்சியை  மீற  முடிகின்றதா?

மனித ஆட்சி, நாம் முயன்றால் அந்த ஆட்சியையே மாற்றி அமைத்துவிடலாம். அந்த ஆட்சியைத் தானும் மீற முடிகின்றதா? எந்த அளவு அஞ்சி, அஞ்சி நடக்கிறோம். பல வரிகளைக் கட்டுகிறோமே? பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடக்கிறோமே? இவற்றை எல்லாம் சரி என்று கண்டா, வரிகளைக் காட்டுகிறோம், நிபந்தனைகளுக்குக்குக் கட்டுப்படுகிறோம்,  அவ்வளவே.

இல்லை என்றால் சரி காணாவிட்டால் மீறத்தான் முடியுமா? அரசு தண்டனைக்கு அஞ்சி, ஏற்று நடக்கவில்லையா? நம்மால் மாற்றி அமைக்க முடிந்த இந்த ஆட்சிக்கே இந்த அளவு அஞ்சுகிறோம். ஆயினும் மாற்று வழிகள் பல உண்டு. ஆட்சியை மாற்றலாம். அல்லது வேறு மாநிலத்திற்குச் சென்றுவிடலாம். இல்லை வேறு நாட்டுக்கே சென்று விடலாம்,  ஆனால் ஆட்சிகளுக்கெல்லாம் பெரிய ஆட்சி, இறையாட்சி, இறை ஆட்சியை விட்டு வேறு ஆட்சியைத் தேர்ந்தெடுக்க முடியுமா? இறைவனை விட்டால் வேறு புகழ் நமக்கு உண்டா? இறைவனது காற்றைச் சுவாசித்துக் கொண்டு, அவனது வானத்திற்குக் கீழ் இருந்து கொண்டு, அவனது பூமியிலே உலாவிக் கொண்டு, அவனது உணவுகளை உண்டு கொண்டு அவனுக்கு மட்டுமே சொந்தமான அனைத்தையும் அனுபவித்துக் கொண்டு அந்த ஒரே இறைவனுடைய கட்டளைக்கு மாறாக நாம் நடந்தால், நடக்க முற்பட்டால், அதன் விளைவு என்னவாகும்? எப்படிப்பட்ட விபரீத விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும் என்பதை நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள். மனமிருந்தால் மார்க்கம் உண்டு. வாழ்வில் வெற்றிபெற வழியுண்டு. ஐயமே வேண்டாம்.

இறைக் கட்டளையை, மகத்தான வெற்றிக்குரிய வழியை உரிய ஆதாரங்களோடு எடுத்துச் சொல்லும் என்னை மதவெறியன், அமைதியைக் கெடுப்பவன் என்று சொன்னால், முறை தவறிய சிகிச்சையினால் நோய் முற்றிக் கடுந்துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒருவருக்கு, முறையான சிகிச்சையைச் சொல்லும் ஒருவரைப் பற்றி என்ன சொல்வது?  முறை தவறி வியாபாரம் அல்லது தொழில் செய்து, பெரும் இழப்பை அடைந்து கொண்டிருக்கும் ஒருவருக்கு முறையாக வியாபாரம் செய்து, இலாபம் ஈட்டும் இரகசியத்தை எடுத்துச் சொல்லும் ஒருவரைப் பற்றி என்ன சொல்வது? அரசு உத்தரவை அறியாது அல்லது அஜாக்கிரதையாகத் தவறாகப் புரிந்துகொண்டு செயல்படுவதால், பெருந்தண்டனைக்கு ஆளாக இருக்கும் ஒருவருக்கு அரசு ஆணையைத் தெளிவுபடுத்தி, அந்த ஆபத்திலிருந்து காப்பாற்றும் ஒருவரைப் பற்றி என்ன சொல்வது? சிந்தித்து விளங்கிக் கொள்ள வேண்டுகின்றேன்.

உலக  அமைதிக்காக  முன்வாருங்கள்:

தேச துவேசம், மாநில துவேசம், இன துவேசம், மத துவேசம், மொழி துவேசம் இப்படிப் பல துவேசம் நிலை மாறி அவை அனைத்தும் கடும் வெறியாக முற்றி, ஒருவரோடொருவர் போட்டி போட்டுக் கொண்டு, உலகிற்கே அழிவு தரும் அணு ஆயுதங்களைக் குவிப்பதில் முனைந்திருக்கக் கூடிய மக்களுக்கு நடுவே அமைதி காக்க, அறிஞர்கள் பல திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் திட்டம் மனிதத் திட்டம், மனிதத் திட்டம் மனித வெற்றிக்கு ஒருபோதும் வழி வகுக்காது என்பதை முன்பே பார்த்தோம். மக்களால் பேரறிஞர் என்று போற்றப்பட்ட பெர்னாட்ஷா, 1447 ஆண்டுகளுக்கு முன் பிறந்த முஹம்மது(ஸல்) அவர்கள் இன்று இருந்தால், இன்று உலகிற்கு மிக மிகத் தேவைப்படும் அமைதியை நிலைநாட்டி விடுவார் என்று ஒருபடி முன்னால் சென்று சொன்னார்; சாத்தியமான ஒன்றனையே நான் இப்போது உங்களுக்குச் சொல்லுகிறேன். உலகில் அறிஞர் பெருமக்களுக்கும் சொல்லுகின்றேன். 1447 ஆண்டுகளுக்கு முன்னே தோன்றிய முஹம்மது(ஸல்) அவர்கள் இனி தோன்றப்  போவதில்லை. 

ஆனால் அவர்கள் வாயிலாக மனிதனுக்கு இறைவன் கொடுத்த திட்டம், வாழ்க்கை நெறி ஒரு புள்ளி கூட மாறுதல் இல்லாத நிலையில், இன்றும் நம்மிடம் இருக்கிறது. அறிஞர்களாகிய நீங்கள் அந்த இறைத் திட்டத்தை ஏற்று, உலகில் செயல்பட முன்வந்து விட்டால், உறுதியாகச் சொல்லுகிறேன், சத்தியமிட்டுச் சொல்லுகிறேன், உலகிற்கு இன்று மிக மிகத் தேவைப்படும் நலமும், அமைதியும், மகிழ்ச்சியும், அதிசயமோ என்று நீங்களே வியக்கத்தக்க வகையில்  ஏற்பட்டுவிடும்.  செய்வீர்களா?

நானும், நீங்களும் முழுமையாக நம்பும் அந்த ஒரே இறைவன், அவனது திட்டத்தை ஏற்று நடக்கும் பேற்றை நம்மனைவருக்கும் கொடுத்தருள்வானாக!  ஆமீன்.

நன்றி! இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து தந்த, பல்சமய உரையாடற் குழுவிற்கும், இடமளித்த தூய சின்னப்பர் இறையியல் கல்லூரிக்கும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவனின் சாந்தி உலகெல்லாம் உண்டாவதாக. எல்லாம் வல்ல இறைவனுக்கே அனைத்துப் புகழும், நன்றியும் உரித்தாகுக.

Previous post:

Next post: