புளியம்பழ உறவுகள்….!
A.N. Trichy
“அவனே (இறைவனே) நீரிலிருந்து மனிதனைப் படைத்தான். அம்மனிதனுக்குப் பெற்றோர் வழி உறவுகளையும், திருமண வழி உறவுகளையும் ஏற்படுத்தினான். உமது இறைவன் ஆற்றல் மிக்கவனாக இருக்கின்றான். அ.கு.25:54
மேற்கண்ட வசனத்தில் மனித படைப்பைப் பற்றியும், உறவுகளைப் பற்றியும் இறைவன் பேசுகிறான்.
பிறப்பின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு என்பது இல்லை என்றும் மனித இனம் பெருக திருமண உறவு அவசியம் என்பதையும் இறைவன் கூறியுள்ளான்.
(அதாவது குலம், கோத்திரம், வம்சம், சமுதாயம், நாடு என்று இருப்பதெல்லாம் எளிதாக அடையாளம் கண்டு கொள்வதற்காகவே அன்றி இதனால் யாருக்கும எவ்வித சிறப்பும் கிடையாது.
மாறாக இறைவழிகாட்டுதலை எந்த அளவுக்குப் பேணி நடக்கின்றார்களோ, அந்த அளவுக்குத் தான் உயர்வும், கண்ணியமும் கிடைக்கும் என்பதே உண்மை. பார்க்க வசனம் : 49:13
ஆனால் பெரும்பாலான திருமண உறவு புளியம்பழம் போல் உள்ளது.
புளியம்பழம் ஓட்டிற்குள் பாதுகாப்புடன் இருக்கும் ஆனால் ஓட்டிற்கும் பழத்திற்கும் தொடர்பு இன்றி பழம் தனியாக இருக்கும்.
அதுவே பலாப்பழமாக இருந்தால் சுளைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து பிரிக்க முடியாத அளவிற்கு இணைந்து இருக்கும். பெரும்பாலான கணவன்–மனைவி உறவுகள் பலாப்பழம் போல் இலலாமல் புளியம்பழம் போலவே இருக்கின்றன. உறவுகள் பலவும் ஏனோதானோ என்று இருக்கின்றன. ஒன்றோடு ஒன்று ஒட்டி வாழ்வதில்லை.
கணவன் : “இந்த பிசாசை என் தலையில் கட்டிட்டாங்க‘ என்று கணவன் புலம்பல்;
மனைவி : “எங்கப்பாவும், அம்மாவும் இந்த பாழுங்கிணத்தில் என்னை தள்ளிட்டாங்க‘ இது மனைவி.
மேலும், இந்த மனுசனை கட்டிக்கிட்டு என்ன சுகத்தை நான் கண்டேன். (இது பெண்கள் பெரும்பாலோர் கூறும் சர்வ சாதாரணமான வார்த்தை)
கணவனும், மனைவியும் பெரும்பாலோர் நிஜத்தில் வாழ்வதில்லை, நிழலில்தான் வாழ்கிறார்கள். காரணம் கலாச்சாரம், பண்பாடு, பிள்ளைகளின் எதிர்காலம், ஊர் வசைபாடும் என்பதே. இதற்கு காரணம், பெரும்பாலோரின் வாழ்வில் திருமணம் ஆனதிலிருந்தே சண்டை, சச்சரவுகள் இன்னும் சிலர் பல பேர் முன்னிலையில் மற்றும் பொது இடத்தில் கூட வெட்கமில்லாமல் வாக்குவாதம் செய்வாங்க.
(அவளுடன்/அவருடன்) என்னால் சமாதானமாக போக முடியவில்லை. இப்படிப்பட்ட அவசர முடிவு. அதன் விளைவு பல விவாகம், விவாகரத்தாக மாறுகிறது.
உண்மை என்னவென்றால் இருவருமே முன்வந்து தங்கள் அணுகுமுறைகளை மாற்றிக் கொண்டால் பிசாசு தேவதையாகவும், பாழுங் கிணறு பாலாறாகவும் மாறவும் வாய்ப்பு உண்டு. ஏன் என்றால்;
எல்லா மனிதர்களிடமும் வானவர்களும் இருக்கின்றார்கள், ஷைத்தானும் இருக்கின்றான். அதனால் மனிதன் ஒரே குணத்தில் எப்போதும் இல்லாமல் சில நேரம் வானவர்களின் குணமாகவும், பல நேரம் ஷைத்தானின் குணமாகவும் இருக்கின்றான். எது மிகுதியாக தலைதூக்குகிறதோ அதுவாக மனிதர்கள் மாறுகிறார்கள்.
இதைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பதாவது, “மனிதனுடைய இரத்த நாளங்களி லெல்லாம் ஷைத்தான் ஓடுகிறான்‘.
மேலும் இறைவன் கூறியிருப்பதாவது: “மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள், அவனே ஒரே ஒரு மனிதரிலிருந்து உங்களைப் படைத்தான். மேலும் அவரிலிருந்து அவரது ஜோடியைப் படைத்தான். அவ்விருவரிலிருந்தே ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான்.
அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! உங்களில் ஒவ்வொருவரும் மற்றவர்களைச் சார்ந்தே இருக்கிறீர்கள்.
இரத்த உறவுகளை துண்டிப்பதை அஞ்சிக் கொள்ளுங்கள்.
அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:1)
எனவே உறவுகள் புளியம்பழம் போல் இல்லாமல் பலாப்பழம் போல் மாற,
1. அன்பு,
2. பொறுமை,
3. விட்டுக் கொடுத்தல்,
4. பெருந்தன்மை
இந்த நான்கு தூண்களைக் கொண்டு உறவுகளை மாற்றமுடியும்.
ஆயினும் இதற்கு குறுக்கே நிற்பது ஈகோ எனும் ஷைத்தானாகும். அவனை (ஷைத்தானை) நீங்கள் கட்டுப்படுத்த வேண்டுமானால் இறைவனிடம் பாதுகாப்பு தேடுங்கள்.
1. (நபியே!) நீர் சொல்வீராக! அதிகாலையில் இறைவனிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.
2. அவன் படைத்தவற்றில் தீங்கை விட்டும்.
3. இருளின் தீங்கைவிட்டும் அது பரவிடும் போது,
4. இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,
5. பொறாமைக்காரனின் தீங்கை விட்டும், அவன் பொறாமை கொள்ளும்போது (நான் பாதுகாவல் தேடுகிறேன்) அத்தியாயம் : 113
1. (நபியே!) நீர் கூறுவீராக! மனிதர்களின் இறைவனிடத்தில் நான் பாதுகாவல் தேடுகிறேன்.
2. (அவனே) மனிதர்களின் அரசன்.
3. (அவனே) மனிதர்களின் (வணக்கத்திற்குரிய) இறைவன்.
4. பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறை வனிடத்தில் நான் பாதுகாவல் தேடுகிறேன்)
5. அவன் எத்தகையவனென்றால், மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.
6. (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர். அத்தியாயம் : 114