வருமுன் காப்போம்…..
நரம்புகள் சுருண்டாலும்… நம்பிக்கைகள் சுருளவேண்டாம்…
அய்யம்பேட்டை A. நஜ்முதீன்
பொதுவாக மனிதர்களிடம் ஒரு நல்ல கலாச்சாரம் உண்டு. அது என்னவென்றால், தெரிந்த ஒருவரை நாம் சந்திக்கும்பொழுது நலமாக இருக்கிறீர்களா? என்று கேட்பது.
மேலும் அப்பா, அம்மா, மனைவி, மக்கள் நலமாக இருக்கிறார்களா? என்று கேட்பது. ஆனால் யாருமே சந்திக்கும்பொழுது உங்கள் சொத்துக்கள் பத்திரமாக இருக்கின்றதா என்று கேள்வியாக கேட்பதில்லை.
தெரிந்தோ, தெரியாமலோ இத்தகைய நலம் விசாரிக்கும் நல்ல பழக்கத்திற்கு பல நன்மையும் உண்டு.
ஏன் என்றால்;
கல்வி, புகழ், பதவி, அதிகாரம், இவை எல்லாவற்றையும் விட “உடல் நலம்‘ தான் முக்கியமானது என்று இதன்மூலம் உணர்த்தப்படுகிறது. நல்ல உடல்நலம் இருந்தால் தான் மேற்கண்ட எல்லா அருட்கொடைகளையும் அனுபவிக்க முடியும்.
நம் உடல் ஆரோக்கியத்தை விட உயர்ந்த செல்வம் எதுவும் இல்லை. இந்தச் சுகத்தினை வேறு எதுவும் தந்துவிட முடியாது. உடல்நலம் கெட்டுவிட்டால் ஏற்படும் துன்பத்தை விட பெரிய துன்பம் ஏதும் இல்லை இந்த உண்மையை அனுபவத்தால் மட்டுமே உணரமுடியும்.
உடல் நலம் பேணிக்காக்க வேண்டுமானால் இரண்டு விசயங்கள் எப்பொழுதும் மனதில் இருக்கவேண்டும்.
ஒன்று : உடல் நலம் பேண வேண்டும் என்ற ஆர்வம்.
மற்றொன்று: உடல் நலம் காக்கும் செயல்களில் (உணவுகளில், உடைகளில், பழக்க வழக்கங்களில்) முறையாக பேணவேண்டும்.
நல்ல உடல் தோற்றத்துடன், ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்ற ஆர்வம் நம் அனைவரிடமே உள்ளதுதான். இல்லை என்று சொல்லமுடியாது.
எவ்வாறு என்றால்,
இளமையுடனும், கவர்ச்சியுடனும் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். அதிலும் வயதான காலத்தில் முதுமையை மறைக்க சிலர் தலைமுடிக்கு கருப்பு “டை‘ அடித்துக் கொள்கிறார்கள். இளமையாக காட்சியளிக்க வேண்டும் என்பதாகும். ஆனாலும் முதுமையை பலருக்கும் அவர்களின் “தொப்பை‘ காட்டிக் கொடுத்து விடுகிறது.
இதற்கு காரணம் :
1. உடல் நலம் பற்றிய தவறான பல மருத்துவர்களின் கருத்துகளை முழுமையாக நம்புவது.
2. உடல் நலம் காக்கத் தேவையான உணவுக் கட்டுப்பாடு, உறக்கம், நல்ல பழக்க வழக்கம், மற்றும் குறிப்பாக தொழுகையில் ஈடுபடத் தவறுவது.
3. மூடப்பழக்கங்களை நம்புவது.
4. உடல் நலம் பற்றி எழுதப்பட்ட புத்தகங்கள் நிரம்பி வழிகின்றன. இருப்பினும் விழிப்புணர்ச்சி போதுமான அக்கரையும் இல்லாமல் அவற்றை படிக்காமல் இருப்பது.
5. அளவிற்கு மீறிய நம்பிக்கை அலோபதி மருத்துவர்கள் மீதும், அலோபதி மருந்து மாத்திரைகள் மீதும் இருப்பது.
அந்நஜாத்தில் வருமுன் காப்போம்… கட்டுரையை உடல் நலம் பற்றியான கட்டுரை தொடராக வருவதற்கான காரணமே மேற்கண்ட காரணங்கள் ஆகும். அதாவது மார்க்க விசயத்தில் பெரும்பாலோர் புரோகிதர்களை நம்பி ஏமாறுவது போல் உடல்நல விசயத்தில் மருத்துவர்களை நம்பி ஏமாறுகிறார்கள்.
ஒரு உண்மை என்னவென்றால்,
இந்த உடல்தான் நம் உயிர், இந்த உடலை தான் அனைவரும் பார்க்கிறார்கள். இந்த உடலிலிருந்து உயிர் பிரியும் வரை அதை பாதுகாப்பது ஒருவகையான அமானிதம். இறைவன் நமக்கு வழங்கிய அமானிதத்தை பாதுகாப்பது நமது கடமையாகும்.
எனவேதான் இறைநூலில் இறைவனும், இறைத்தூதரும் மற்றும் ஆரோக்கியத்தைப் பற்றி பல்வேறு வழிமுறைகளை கூறியுள்ளார்கள்.
ஒருவருடைய உடல் பருமனாக இருப்பதாலோ உடல் உறுதியாக இருப்பதாலோ அவருக்கு எந்த நோயும் வராது என்று சொல்லிவிட முடியாது. அது மட்டுமல்ல நோயில்லாத மனிதரை நல்ல உடல்நலம் உள்ளவர் என்று சொல்லலாமா? அதுவும் முடியாது.
நலம் என்னும் சொல் வெறும் நோயின்மையை மட்டும் குறிப்பதில்லை. யாரெல்லாம் மனதளவிலும் நோயை அண்டவிடாது இருக்கின்றாரோ அவரே நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் என்று சொல்ல முடியும்.
உடல் நலம் பேண எல்லோருக்கும் ஆர்வம் இருக்கிறது. அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?
1. ஊட்ட சத்துள்ள உணவு,
2. அளவான உணவு,
3. பசி ஏற்பட்ட பிறகே மட்டுமே சாப்பிடுவது.
(அதாவது ¼ வயிறு உணவு, ¼ வயிறு தண்ணீர், ¼ வயிறு அளவிற்கு வயிறு நிரம்பாமல் காலியாக இருப்பது)