ஒரு நீண்ட பகிரங்கக் கடிதம்!

in 2009 மார்ச்,பகுத்தறிவாளர்களே!

ஒரு நீண்ட பகிரங்கக் கடிதம்! –
அபூ அப்தில்லாஹ்

டிசம்பர் 2008 தொடர் : 5

உண்மை இதழ் ஆசிரியர் திரு.கி.வீரமணி அவர்களே, அந்நஜாத்திற்குப் பதிலடி என மூட நம்பிக்கைகளைப் பகுத்தறிவு எனக் கிறுக்கியுள்ள திரு.ந.வெற்றியழகன் அவர்களே சத்தியத்தை-நேர்வழியை அறிந்து நடப்பவர்களக்கே இறுதி வெற்றி என அபூ அப்தில்லாஹ்வாகிய நான் நல்வாழ்த்துக் கூறி ஆரம்பிக்கிறேன். அந்நஜாத் இதழுக்கு உங்களின் உண்மை இதழின் மாற்றுப் பிரதியை (Exchange Copy) அனுப்பும் பத்திரிகை தர்மமோ,உண்மை உணர்வோ உங்களிடம் இல்லை என மீண்டும் குற்றப்படுத்துகிறேன்.

1947-ல் நீங்கள் பெரிதும் மதித்துப் போற்றும் பெரியார் “இன இழிவு ஒழிய இஸ்லாமே நன் மருந்து” என முடிவு செய்து அறிவித்தார். உங்களைப் போன்றவர்கள் அந்த நன்முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டீர்கள். உங்களைப் போன்றவர்களும் அன்ற பெரியாரின் அந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்து அதை நடைமுறைப்படுத்தி இருந்தால் இந்த 62 ஆண்டுகளில் ஒரு பெரும் மாறுதலே தமிழ் நாட்டில் ஏற்பட்டிருக்கும். பெருங்கொண்ட தாழ்த்தப்பட்ட மக்களோடு ஒட்டிக் கொண்டிருக்கும் இன இழிவு இருந்த இடம் தெரியாமல் ஒழிந்து போயிருக்கும். மீண்டும் உறுதியாகக் கூறுகிறோம். இன்று தமிழகத்தின் நிலையே மாறி இருக்கும். பெருங்கொண்ட தலித் மக்கள் இன இழிவிலிருந்து விடுதலைப் பெற்று சுயமரியாதையுடன், சுதந்திரமாக உலாவரும் பேறு பெற்றிருப்பார்கள். போலி பகுத்தறிவாளர்களாகிய உங்களைப் போன்றவர்கள்தான் அன்று 1947-ல் பெரியார் மனதில் தோன்றிய உன்னத கருத்துக்கு முட்டுக்கட்டை போட்டீர்கள். தமிழகத்தை இருளில் மூழ்கச் செய்தீர்கள்.

டாக்டர் அம்பேத்கார் இஸ்லாத்தை தழுவ முற்பட்டபோது, அதற்கு இடையூறு ஏற்படுத்தி அவர் பெளத்தத்தை தழுவ வைத்தார்கள். இன இழிவுடன் நியோபுத்திஸ்ட் தோன்றினார்கள். இன இழிவு ஒழியவில்லை. கிறிஸ்தவத்தைத் தழுவியவர்களுடன் அதே இன இழிவு இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறது. இஸ்லாத்தைத் தழுவிய முஸ்லிம்களிடம் மட்டுமே அந்த இன இழிவு இருந்த இடம் தெரியாமல் ஒழிந்து போய்விட்டது.

இன்று இன இழிவு, ஜாதி வேற்றுமை இப்படிப்பட்ட கொடுமைகளிலிருந்து தலித் மக்களைக் காப்பாற்றும் நல்லெண்ணத்தில் ஓயாது போராடிக் கொண்டிருக்கும் தலைவர்களும், சிந்தனையாளர்களும், சுயமரியாதையை குறிக்கோளாகக் கொண்டு பாடுபடுகிறவர்களும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஓயாது உழைத்தாலும், ஓடாகத் தேய்ந்தாலும் அவர்களது குறிக்கோளை ஒருபோதும் எட்ட முடியவே முடியாது. மனிதத் திட்டங்களைக் கொண்டு மனிதனை வெற்றிபெறச் செய்ய ஒரு போதும் முடியாது.

பிரதேச, இன, மொழி, நிற, ஜாதி பேதங்கள் அனைத்தையும் ஒழித்துக்கட்டி இன்றைக்கு 1430 வருடங்களுக்கு முன்னால் இறைத்தூதர் வெற்றி பெற்றார் என்றால், அது அவரது மனித சிந்தனையால் சாதித்த சாதனை அல்ல. இறைவன் அளித்த நேர்வழியை அவர் பற்றிப் பிடித்து அதன்படி நடந்ததால் கிடைத்த வெற்றியாகும்.-சாதனையாகும். அந்த நேர்வழியிலிருந்து முஸ்லிம்கள் தடம் புரண்டு, மார்க்கத்தை மதமாக்கி அதையே வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டுள்ள புரோகிதர்களின் பின்னால் அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பது என்னவோ உண்மைதான். அப்படிப்பட்ட முஸ்லிம்களின் மூட நம்பிக்கைகளை வைத்தும், வீண் சடங்கு சம்பிரதாயங்களை வைத்தும் இஸ்லாத்தை எடை போடாதீர்கள். அவர்கள் மாற்று மதங்களிலுள்ள சடங்குகளையே இறக்குமதி செய்து நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.

ஆனால் அவர்கள் எங்களுடையது என சொந்தம் கொண்டாடும் வாழ்க்கை நெறியை எடுத்துச் சொல்லும் அல்குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. அகில உலக மக்களுக்கும் சொந்தமானது என்பதை அல்குர்ஆனே எடுத்தியம்புகிறது. முன்னைய இறைத் தூதர்களுக்கு கொடுக்கப்பட்ட இன்ஜீல், தவ்ராத் போன்ற நெறிநூல்கள் பைபிள் என்றும், தோரா என்றும் மனிதக் கரம்பட்டு கலப்படமாகி அவற்றின் தூய பரிசுத்த நிலையை இழந்து விட்டது போல் இன்று சுமார் 1450 ஆண்டுகள் ஆகியும் அல்குர்ஆன் அதன் பரிசுத்த தூய நிலையை இழக்காமல், ஒரு உச்சரிப்பு கூட மாற்றமில்லாமல் அப்படியே இருக்கிறது. அது சுமார் 1450 ஆண்டுகளுக்கு முன்னர் இறக்கப்பட்ட மூல அரபி மொழியிலேயே பதிந்து பாதுகாக்கப்பட்ட மூல அரபி மொழியிலேயே பதிந்து பாதுகாக்கப்படு வருகிறது. அரபி மொழியும் இன்றும் பல நாடுகளில் பேச்சு வழக்கில் இருக்கிறது. ஐ.நா. சபையில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் ஒன்று அரபி மொழி. இதற்கு முன்னர் அருளப்பட்ட வாழ்க்கை நெறிநூல்களான பைபிள், தோரா, இந்து வேதங்கள் மனிதக் கரம்பட்டு கலப்படமானதோடு அவை இறக்கப்பட்ட மொழிகளிலும் இல்லை. அந்த மொழிகள் பேச்சு வழக்கிலும் இல்லை. இவை நடைமுறைக்கு உரியவை அல்ல என்பதை இதன் மூலம் அறியலாம். அல்குர்ஆன் மக்களுக்காக தெள்ளத் தெளிவாக இறைவனாலேயே விளக்கப்பட்டுவிட்டது. மற்ற மதங்களிலுள்ள மத குருமார்களுக்கு அவர்களின் மதத்தில் அதிகாரம் இருப்பதுபோல், எவ்வித அதிகாரமும் முஸ்லிம் மதகுருமார்களுக:கு அல்குர்ஆனில் இல்லவே இல்லை. அவர்கள் திருட்டுத்தனமாக முஸ்லிம் மக்களிடையே புகுந்து கொண்டு முஸ்லிம்களை ஏமாற்றி வஞ்சித்து வருகிறார்கள். இந்த விபரங்களை எல்லாம் இங்கு ஏன் விவரிக்கிறோம் என்றால் அன்று 1947-ல், இந்த முஸ்லிம் மதகுருமார்கள் இஸ்லாத்தைப் பற்றி சொல்வதைத் தான் அல்குர்ஆன் சொல்கிறது என்ற தவறான எண்ணத்தில் தான் உங்களில் பலர் இஸ்லாத்தை எதிர்த்தனர். தலித்கள் முஸ்லிம் ஆவதைத் தடுத்தனர்.

அன்று இந்த உண்மைகள் பெரியாருக்கு தெளிவு படுத்தப்பட்டிருந்தால் ஒரு வேளை அவர் “இன இழிவு ஒழிய இஸ்லாமே நன் மருந்து” என்ற அவரது கொள்கையில் உறுதியாக இருந்திருக்கலாம். நாமே எமது 21 வயதிலிருந்து 42 வயது வரை (1984) அல்குர்ஆனை கிளிப்பிள்ளைப் பாடமாக அரபியில் ஓதுவதோடு, இந்த மத குருமார்களான முஸ்லிம் புரோகிதர்கள் சொல்வதையே வேதவாக்காக நம்பிச் செயல்பட்டோம். 1984-க்குப் பிறகு அல்குர்ஆனை பொருள் அறிந்து படிக்க ஆரம்பித்த பின்னரே இந்தப் புரொகித – மவ்லவிகளின் சுயநல வஞ்சக ஏமாற்றுத் தந்திரம் எமக்குப் புரிந்து அவர்களின் வசீகர வலையிலிருந்து விடுபட்டோம்.

இன்று நாத்திகம் பேசும் பெரும்பாலானவர்கள் முஸ்லிம் மத குருமார்களான புரோகித முல்லாக்கள் இறை கொடுத்த நெறி நூல் அல்குர்ஆனுக்கும், இறைத் தூதரின் நடைமுறைக்கும் கொடுக்கும் மேல் விளக்கத்தையே இஸ்லாம் போதிப்பதாகத் தவறாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர். அந்த அடிப்படையிலேயே தங்கள் கருத்துக்களை வெளியிடுகின்றனர்.

மெய்யறிவு என்ற மாத இதழின் ஆசிரியர் அவரது டிசம்பர் 2008 இதழில் அந்த அடிப்படையிலேயே தனது கருத்துக்களை தலையங்கமாக வெளிப்படுத்தியுள்ளார். அவரை நாம் குறை சொல்லமாட்டோம். புரோகிதர்கள் பின்னால் செல்லும் முஸ்லிம்களில் பெரும்பாலானோருக்கே படைத்த இறைவனுக்கும், படைக்கப்பட்ட மனிதனுக்குமுள்ள வேறுபாடு தெரியாமல், மனிதன் இறைவனுடன் இரண்டறக் கலக்கலாம் என்ற மூட முல்லாக்களின் முட்டாள் கொள்கையான அத்துவைதத்தை அதாவது சூஃபிசத்தை ஏற்று செயல்படும்போது, மனிதனைப் படைத்த இறைவனும், படைக்கப்பட்ட அவனது அடிமையான இறுதித் தூதரும் ஒன்றுதான் என்று மூடத்தனமாக எண்ணும்போது “மெய்யறிவு” இதழின் ஆசிரியர் அதே கருத்தில் அல்லாஹ்வும் நபியும் ஒருவர்தான் என தவறாக எண்ணி எழுதி இருப்பதை எம்மால் குறை காண முடியவில்லை.

ஆத்திரமோ, அனுதாபமோ இல்லாமல், வெறுப்போ விருப்போ இல்லாமல் நடுநிலையோடு அவரே குறிப்பிட்டிருக்கும் செப்டம்பர், அக்டோபர் அந்நஜாத் இதழ்களிலுள்ள ஆக்கங்களை அவர் படித்து உள்வாங்கி இருந்தால் இப்படி தலையங்கம் தீட்டி இருக்க முடியாது. அவரது உள்ளத்தில் நாத்திகக் கொள்கையை நிறைவாக அப்படியே வைத்துக் கொண்டு ஆத்திரத்துடனும் நடுநிலை தவறியும் நுனிப்புல் மேய்வது போல் அந்த ஆக்கங்களை படித்துள்ளார். அதனால்தான் முஸ்லிம்களிலுள்ள பெரும்பாலானோர் முஸ்லிம் மதப் புரோகிதர்கள் பின்னால் செல்வதன் மூலம் அவர்களில் சிலர் அல்குர்ஆன், நபி நடைமுறைகளுக்கு முரணாக ஜிஹாதை தவறாக விளங்கிச் செயல்படுகிறார்கள் என்று நாம் தெளிவாக எழுதி இருந்தும், அதை விளங்காமல் ஜிஹாதைப் பற்றி விலைபோன பெயர் தாங்கி முஸ்லிம்களின் வாக்குமூலங்களை அதாவது பார்ப்பன வெறி பிடித்த இதழான இந்தியா டுடேயில் வந்தவற்றைக் கொண்டு பக்கங்களை நிரப்பியுள்ளார். ஒட்டுமொத்த முஸ்லிம்களின் நிலை அதுதான் என்பதுபோல் எழுதியுள்ளார்.

ஒரு பாத்திரத்தின் முழுக் கொள்ளளவும் சாராயம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதனுள்ளே சுத்தமான பாலை ஊற்றினால் அந்த பால் பாத்திரத்தினுள் செல்லுமா? அல்லது வெளியே வடியுமா? அறிவு குறைந்தவனும் பால் வெளியே வடியவே செய்யம் என்றே கூறுவான். அப்படியே ஒரு சில துளிகள் பாத்திரத்தினுள் சென்றாலும் அது பாலாக இருக்காது. அதுவும் சாராயமாகவே மாறிவிடும் என்பதையும் யாரும் மறுக்க முடியாது.

பால் அந்த சாராய பாத்திரத்தில் தங்குவதாக இருந்தால் முதலில் சாராயத்தை அகற்றிவிட்டு அதில் பாலை ஊற்ற வேண்டும். அப்போதுதான் அப்பாத்திரம் பாலைக் கொள்ளும். அதன் பின்னர் அதைக் சுவைத்துப் பார்த்துவிட்டு, பிடிக்காவிட்டால் அப்பாலை பாத்திரத்தை விட்டு வெளியே எறிந்து விடமுடியும்.

அதுபோல் மெய்யறிவு இதழ் ஆசிரியர் தனது இதழுக்கு மிக அழகிய பெயரை வைத்திருந்தாலும். தனது உள்ளத்தில் நாத்திக வழிகேட்டுக் கொள்கையை நிறைத்து வைத்துக்கொண்டு, நுனிப்பல் மேய்வது போல் எமது குறிப்பிட்ட ஆக்கங்களைப் படித்துள்ளார். அதன் விளைவே அந்த ஆக்கங்களில் தெளிவாக புரோகித முல்லாக்கள் பின்னால் செல்லும் பெயர்தாங்கி முஸ்லிம்களில் சிலர் ஜிஹாத், அப்பாவிகளைக் கொல்லுதல், படைப்புகளிடம் இரக்கம் காட்டாத நிலை போன்றவற்றில் இஸ்லாமிய போதனைக்கு முரணாகச் செயல்பட்டு வழி தவறிச் செல்கின்றனர் என்பதை விளக்கி எழுதி இருந்தும், அவற்றை எல்லாம் உள்வாங்கி விளங்காமல், அல்குர்ஆன், நபி நடைமுறைகளுக்கு முற்றிலும் முரணான அச்செயல்களையே இஸ்லாம் போதிப்பதாக தவறான கண்ணோட்டத்தில் எழுதி பார்ப்பன இதழ் இந்தியா டுடேயிக்கு துணை போயிருக்கிறார்.

இன்று இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்களில் நாம் உட்பட மிகப் பெரும்பாலோரஆசிரியர்களால் கீழ்ஜாதி, இழிஜாதி, தொட்டால் தீட்டு, இரட்டைக் குவளை, ஒதுக்குப் புறத்தில் தனிச்சேரி என ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த பள்ளு பறை சக்கிலி போன்றவர்களின் வழித்தோன்றல்கள் தான். இந்த மண்ணின் மைந்தர்கள்தான். தங்களோடு ஒட்டிக் கொண்டிருந்த இன இழிவை நீக்க ஒரே வழி, வேறு டிழியே இல்லை என்பதை அறிந்து இஸ்லாத்தைத் தழுவியவர்கள்தான். புரோகித முல்லாக்களின் துர்போதனையால் அவர்களிடம் மூட நம்பிக்கைகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள் தர்கா – சமாதி வழிபாடு போன்ற மூடத்தனமான வழிபாடுகள், நல்லநேரம், கெட்ட நேரம் இத்தியாதி, இத்தியாதி இந்துக்களிடம் காணப்படும் அனைத்து வழிகேடுகளும் மலிந்து காணப்படுகின்றன எனபதையும் மறுப்பதற்கில்லை. லெப்பை, மரைக்கார், ராவுத்தர், தக்னி, ஹனஃபி, ஷாஃபி, மாலிக்கி, ஹம்பலி,ஜாக், ததஜ, முஜாஹித், ஸலஃபி போன்ற ஜாதிகளுக்கு வழிவகுக்கும் மூடச் சம்பிரதாயங்கள், பிரிவுகள் நுழைந்துள்ளதையும் மறுப்பதற்கில்லை.

ஆயினும் ஆயிரம் ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியானாலும் நீங்காத இன இழிவு, படித்துப் பல பட்டங்கள் பெற்று அரசின் ஆக உணர் பதவியை அடைந்தாலும் நீங்காத இன இழிவு, அரசியலில் அரும்பாடுபட்டு உயர்ந்து நாட்டின் முதல் குடிமகள் என்ற ஆக உயர் குடியரசுத் தலைவர் பதவியை அடைந்தாலும் நீங்காத இன இழிவு, மனம் மாறி இஸ்லாத்தைத் தழுவி முஸ்லிம் ஆன அடுத்த வினாடியே இன இழிவு இருந்த இடம் தெரியாமல் ஒழிந்து போகும் அதிசயத்தை போலி பகுத்தறிவாளர்களால் உணர முடியவில்லையா?

ஆம்! உங்களைப் போன்ற, மெய்யறிவு இதழ் ஆசிரியர் போன்ற நாத்திகச் சிந்தனையாளர்கள் ஒன்றைக் கவனிக்கத் தவறி விடுகிறீர்கள். ஆசிரியர்கள் இன்றைய மஸ்லிம்களின் முன்னோர்களை பள்ளு, பறை, சக்கிலி, தீண்டத்தகாத ஜாதிகள், இன இழிவுக்குரியவர்கள், ஒதுக்குப்புறமாக சேரிகளில் வாழ வேண்டியவர்கள். பொதுப்பாதைகளில் நடக்கத் தகுதியற்றவர்கள். இரட்டைக் குவளை, தீண்டாமைச் சுவர் என அனைத்து இன இழிவுகளையும் சுமத்தி இழிவு படுத்தியதுபோல், இன்று இஸ்லாத்தை தழுவிய அவர்களின் வாரிசுகளையும் இன இழிவைக் கொண்டு இழிவுபடுத்துகிறார்களா? இல்லையே!

உயர் ஜாதி ஆரியர்கள் தங்களைப் போல் சம அந்தஸ்து கொடுத்து அல்லவா இந்த முஸ்லிம்களை நடத்துகிறார்கள். தங்களின் பக்கத்திலேயே உட்காரவைத்துக் கொள்கிறார்களே! இன இழிவு அவர்களை விட்டும் இருந்த இடம் தெரியாமல் ஒழிந்து போய்விட்டதை நாத்திகர்கள் மறுக்க முடியுமா? அவர்களில் கிறிஸ்தவர்கள் ஆனவர்கள். பெளத்தவர்கள் ஆனவர்களிடம் அந்த இன இழிவு இன்றும் ஒட்டிக் கொண்டு தலித் கிறிஸ்தவர், நியோ புத்திஸ்ட் என இழிவு படுத்தப்படும் நிலையில் இஸ்லாத்தைத் தழுவி முஸ்லிம் ஆனவர்களிடம் அந்த இன இழிவு ஒட்டிக் கொண்டிருக்கிறதா? இல்லையே! இந்த ஒன்றுக்காவது தலித்கள் இஸ்லாத்தைத் தழுவுவதை மெய்யறிவு ஆசிரியர் குறை காண முடியுமா?

நாம் என்ன இன்றைய பெயர் தாங்கி முஸ்லிம்களைப் போல் நீங்களும் ஆகுங்கள் என்றா சொல்லுகிறோம். மற்ற மதங்களில் மதகுருமார்களுக்கு ஆதிக்கம், அதிகாரம் இருப்பதுபோல், இஸ்லாத்தில் மதகுருமார்களுக்கு அணுவளவும் ஆதிக்கமோ, அதிகாரமோ திட்டமாக இல்லை. அந்த மதப் புரோகிதர்கள் பின்னால் செல்லும் முஸ்லிம்ளுக்கும், கிறிஸ்தவ மதப் புரோகிதர்கள் பின்னால் செல்லும் கிறிஸ்தவர்களுக்கும், ஆரிய மதப் புரோகிதர்கள் பின்னால் செல்லும் இந்துக்களுக்கும், யூதமதப் புரோகிதர்கள் பின்னால் செல்லும் யூதர்களக்கும் இப்படி ஒவ்வொரு மதப் புரோகிதர்கள் பின்னால் செல்லும் அனைத்து மதத்தினருக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என மெய்யறிவு ஆசிரியரை விட ஒரு படிமேலே நின்று உரத்துச் சொல்கிறோம் நாம்.

இதோ ஒரு மாற்றமத அறிஞரே கூறுகிறார் காது கொடுத்து கேளுங்கள்!

முஹம்மது(ஸல்) அவர்கள் புரோகிதத்தின் வசீகர வலையை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே கிழித்தெறிந்துவிட்டார். இறுதி வழிகாட்டல் நெறிநூல் அல்குர்ஆனின் போதனைகள் மூலமே ஒவ்வொருவரும் இறைவனுடன் நேரடித் தொடர்பு கொள்ள உரிமை ஏற்பட்டுவிட்டது. இதன்மீது எந்தப் புரோகிதக் குழுவினரும் எப்படிப்பட்ட தடை உத்தரவையும் பிரயோகிக்க வழி இல்லாமல் போய்விட்டது. டாக்டர் ஜூவியஸ் ஜென்மான்ஸ்ஸ

ஆம்! நாங்கள்தான் இஸ்லாமிய மார்க்கத்தைக் கற்றவர்கள். எங்களுக்குத்தான் மார்க்கத்தில் அதிகாரம் உண்டு. நாங்கள் கொடுக்கிற விளக்கத்தை ஏற்றுத்தான் முஸ்லிம்கள் செயல்படவேண்டும் என்று ஆணவம் பேசும் முஸ்லிம் மத குருமார்களான புரோகிதர்கள் கடைந்தெடுத்த அயோக்கியவர்கள், திருட்டுத்தனமான வீட்டினுள் புகும் திருடர்களைவிட கேடுகெட்ட திருடர்கள் என்பதை நாத்திகர்களாகி நீங்கள் புரிந்துகொண்டு, உள்ளத்தில் நிறைந்திருக்கும் நாத்திக வழிகேட்டுக் கொள்கையை சிறிது நேரம் எடுத்து வெளியே வைத்துவிட்டு, உள்ளத்தைக் காலியாக வைத்து நடுநிலையோடு அர்குர்ஆனை உங்களது தாய்மொழி தமிழிலிலேயே படித்துப் பாருங்கள். நாகரீக இன்றைய நவீன உலகில் மனித அறிவக்குத் தட்டுப்படும் எத்தனையோ படித்துப் பாருங்கள். நாகரீக இன்றைய நவீன உலகில் மனித அறிவுக்குத் தட்டுப்படும் எத்தனையோ அறிவியல் உண்மைகளை 1450 வருடங்களுக்கு முன்னரே அல்குர்ஆன் எடுத்தியம்பிக் கொண்டிருப்பதை அறிய முடியும். இக்கருத்துக்களை 1450 வருடங்களுக்கு முன்னர் முஹம்மது போன்ற தனி மனிதரோ கூட்டு முயற்சியாக உலக மனிதர்களாலும் சுயமாகச் சொல்லி இருக்க முடியாது என்பதை உணர்வீர்கள்.

முஸ்லிம் மத குருமார்களுக்கு இஸ்லாத்திலோ, அதை எடுத்துச் சொல்லும் குர்ஆனிலே, அணுவத்தனையும் உரிமை இல்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். அல்குர்ஆனைப் பற்றிய தவறான எண்ணங்களை உங்கள் உள்ளங்களிலிருந்து எடுத்தெறிந்துவிட்டு, உள்ளத்தைக் காலியாக வைத்துக் கொண்டு ஆத்திரமோ அனுதாபமோ இல்லாமல் நடுநிலையோடு உங்களுக்குத் தெரிந்த மொழிகளிலுள்ள அல்குர்ஆன் மொழி பெயர்ப்புகளை நீங்கள் படிக்க ஆரம்பித்தால் சிந்திக்க ஆரம்பித்தால் அது தெள்ளத் தெளிவாக விளங்கம். இதுவரை இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் கொண்டிருந்த கருத்துக்கள் அனைத்தும் தவறானவை என்பதை நீங்களே பரிந்து கொள்வீர்கள்.

தலித் மக்களுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் இன இழிவு ஒழிந்து அவர்கள் மற்ற உயர் ஜாதி(?) மனிதர்களைப் போல் சுய மரியாதையுடனும், சுதந்திரமாகவும் இந்த மண்ணில் வாழ அவர்களுக்கள்ள ஒரே வழி இஸ்லாத்தைத் தழுவி, முஸ்லிம் மத குருமார்கள் பின்னால் செல்லாமல், சுயமாக அல்குர்ஆன் மொழி பெயர்ப்புகளை நேரடியாகப் படித்து விளங்கி அதன்படி நடப்பதேயாகும்.

பெரியார் 1947-ல் அந்த நல்ல முயற்சியில் ஈடுபட்டும், தனது ஆதரவாளர்களின் தவறான பேச்சைக் கேட்டு அந்த முயற்சியைக் கைவிட்டது மாபெரும் இழப்பாகும்.

எனவே எந்த சுயமரியாதைக்காக சுய மரியாதை இயக்கம் ஆரம்பித்தாரோ, பகுத்தறிவு வாதம் தன் வாழ்நாள் முழுவதும் பேசினாரோ அந்த சுயமரயாதையை தலித் மக்களுக்குப் பெறறுத் தருவதில் பெரியார் தோல்வியடைந்தார் என்பதே மறுக்க முடியாத உண்மையாகும். இன்றைய தேதி வரை தலித் மக்கள் தங்களை பிடித்துள்ள இன இழிவு ஒழிந்து சுய மரியாதையுடன் வாழ வழி பிறக்கவே இல்லை என்ற நிலையே அதை உண்மைப்படுத்தும். இறைவனின் இறுதித் தூதர் வெறும் 23 ஆண்டுகளில் நிகழ்த்திக் காட்டிய சாதனையை, அதனைப் போல் மும்முடங்கு காலத்திற்கும் அதிகமாக சுமார் 75 ஆண்டு கால ஓயாத உழைப்பிலும் அவரால் சாதிக்க முடியவில்லை என்ற உண்மையை இந்தப் போலி பகுத்தறிவுவாதிகளால் மறுக்க முடியுமா?

இப்’படி ஒவ்வொரு விஷயமாக எடுத்து ஆராய்ந்து பார்த்தால் இன்றைக்கு சுமார் 1450 ஆண்டுகளுக்கு முன்னரே இறைவன் தனது இறதித் தூதரைக் கொண்டு மக்களிடையே மண்டிக் கிடந்த அனைத்து வகை சீர்கேடகளையும், கோணல் வழிகளையும், எண்ணற்ற மூட நம்பிக்கைகளையும் சடங்கு சம்பிரதாயங்களையும் 23 வருட முயற்சியிலேயே வேரோடு, வேரடி மண்ணோடு மண் மூடிப் போகச் செய்தான். இறதி இறைத்தூதர், அவர் எடுத்து வைக்காத ஒரே ஒரு சீர்திருத்தக் கருத்தையாவது, செயலையாவது அதன் பின்னர் நீங்கள் பேரறிஞர்களாக மதிப்பவர்களில் யாராவது எடுத்து வைத்து அதில் அவர் வெற்றியும் கண்டார் என்று உங்களால் பள்ளி விபரத்துடன் பட்டியலிட முடியுமா?

நிச்சயமாக உங்களால் முடியாது. மனித வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் ஆழமாகப் புகுந்து அவற்றில் பல கடவுள் கொள்கையைப் புகுத்தும் மதகுருமார்கள் என்ற புரோகித வர்க்கத்தினரால் புகுத்தப்பட்டிருந்த பகுத்தறிவுக்குப் பொருந்தாத அனைத்து மூட வணக்க வழிபாடுகள் அனைத்தையும் இருந்த இடம் தெரியாமல் தரைமட்டமாக்கினார் இறைத் தூதர்.

அவருக்கு முன்னால் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இறுதித் தூதரின் மூதாதையும், யூதர்கள் மதித்துப் போற்றும் இறைத் தூதர் மோஸஸ் மற்றும் கிறிஸ்தவர்கள் இறைவனின் குமாரர் என்று தவறாக கற்பனை செய்துள்ள இறைத்தூதர் யேசு என்ற ஈஸா, மற்றும் பல இறைத் தூதர்களின் மூதாதையான ஏப்ரஹாம் என் இப்றாஹீம் இறைத்தூதர் புணர் நிர்மானம் செய்து, ஏகன் இறைவனை மட்டும் வணங்குவதற்கு விட்டுச் சென்ற இறை இல்லம் கஃபா, இறுதித் தூதர் இறைத்தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, 360 பொய்க் கடவுள்களான சிலைகளாலும், சுற்றி வர இறந்தவர்களின் கல்லறைகளாலும் மத குருமார்களால் நிரப்பப்பட்டு, அனைத்து மூடச் சடங்கு சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கைகளை, மூட வழிபாடுகள், கஃபாவை ஆணும் பெண்ணும் நிர்வாணமாக வலம் வருதல், ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம், சீட்டியடித்தல், கைத்தட்டுதல் போன்ற அனைத்து வழிகேடுகளையும் கொண்டு நிரப்பப்பட்டு இருந்தது. இறைவனின் இறுதி இறைத்தூதரின் வெறும் 23 வருட முயற்சியால், சிலைகள் உடைத்தெறியப்பட்டு, கல்லறைகள் தரைமட்டமாக்கப்பட்டு அனைத்து மூட நம்பிக்கைகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள், மூட வழிபாடுகள், நிர்வாண வலம் வருவதல், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், சீட்டியடித்தல், கைத்தட்டுதல் போன்ற அனைத்து வகை வழி கேடுகளையும் இருந்த இடம் தெரியாமல் ஒழித்துக் கட்டி படைத்த ஓரிறைவினை மட்டும் பரிசுத்த மனதுடன் அமைதியாக, ஆரோக்கியமாக வழிபடும் இயற்கை நெறியை நிலைநாட்டினார்.

அரபக தீப கற்பகத்தை விட்டே இவை அனைத்தும் ஒழித்துக் கட்டி இல்லாமலாக்கி அற்புத சாதனையை 23 ஆண்டுகளில் நிகழ்த்திக் காட்டியவர்தான் இறைவனின் இறுதி இறைத் தூதர். அதே சமயம் பெரியாரால் சுமார் 75 வருட உழைப்பில் ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு இடத்தில் இருக்கும் பொய்க்கடவுள் சிலையை அகற்றச் செய்ய முடிந்ததா? அல்லது நீங்கள் மதித்துப் போற்றும் அறிஞர்களில் ஒருவராவது அப்படி சாதித்துக் காட்ட முடிந்ததா? இல்லையே!

அதற்கு மாறாக நீங்கள் மதிக்கும் அறிஞர்களாவும், அவர்களைப் பின்பற்றி நடக்கும் உங்களைப் போன்றவர்களாலும் சாமி சிலைகளைவிட மனித சிலைகள் அதிகமாகி வருகின்றன. அது மட்டுமல்ல; அந்த சிலைகளால் பல ஊர்களில் பல கொடூரமான கலவரங்கள், உயிர்ப்பலிகள் எல்லாம் ஏற்பட்டு வரகின்றன. சிலை உடைப்பு, சிலைக்குச் சேதம் என்று இன்று நாட்டில் நீக்கமற இடம்பெற்று வரும் கலவரங்களும், ஜாதி, கட்சி மோதல்களும் நீங்கள் அறிந்தவைதான். இவை அனைத்தையும் தாண்டி இன்னும் சில ஆயிரம் வருடங்களுக்குப் பின்னர் இச்சிலைகளும் பொய்க் கடவுள்களின் பட்டியலில் இடம் பெற்று விடும். இந்த நிலையில் நீங்களா பொய்க் கடவுள்களை ஒழித்து,இன இழிவை ஒழித்து, ஜாதி வேற்றுமைகளை இல்லாமலாக்கி சமத்துவ சமுதாயம் அமைக்கப் போகிறீர்கள்? (தொடர்வேம்….)

Previous post:

Next post: