ஐயமும்! தெளிவும்!!

in 2009 ஜனவரி,ஐயமும்! தெளிவும்!!

 ஐயமும்! தெளிவும்!!

ஐயம்: உங்களது ஹிஜ்ரா நாள் காட்டியிலும், ஜாக் சார்பாக வெளியிட்ட ஹிஜ்ரா நாள்காட்டியிலும் கணினி கணக்கீட்டின்படி துல்ஹஜ் பிறை 9 அரஃபா தினம் 6.12.08 சனி என்றும் 7.12.08 ஈதுல் அழ்ஹா என்ற பெருநாள் தினம் என்றும் துல்லியமாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் சவூதி அரேபியா அரசு அரஃபா நாள் 7.12.08 ஞாயிறு என்று அறிவித்து ஹாஜிகள் 7.12.08 ஞாயிறன்றே அரஃபாவில் கூடினார்கள்.

அதனால் ஜாக் தலைமையிலிருந்து ஜாக் கிளைகளுக்கு ஹாஜிகள் அரஃபாவில் கூடும் 7.12.08 ஞாயிறே அரஃபா தினம். அன்றே இங்குள்ளவர்கள் அரஃபா நோன்பு நோற்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியதோடு, அதை வலியுறுத்தயும் இருக்கிறார்கள். அதாவது அவர்களின் நாள் காட்டிபடியே துல்ஹஜ் பிறை 10 நோன்பு நோற்க ஹராமாக்கப்பட்ட பெருநாள் தினத்தில் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அதை நியாயப்படுத்தியும் இருக்கிறார்கள். குர்ஆன், ஹதீஃத் ஒளியில் இது சரியா? K.S.இப்றாஹீம், திருச்சி-8.

தெளிவு: ஹஜ்ஜுடைய செயல்பாடுகள் துல்ஹஜ் பிறை 8-ல் ஆரம்பித்து பிறை 13-ல் முடிகின்றன. பிறை 8-ல் இஹ்ராம் உடை, நிய்யத்துடன் மினாவை அடைந்து பிறை 9 பஜ்ர் வரை அங்கிருந்துவிட்டு, மினாவிலிருந்து பிறை 9 காலை புறப்பட்டு அரஃபாலை அடைந்து அங்கு பிறை 9 மாலை மஃறிபு வரை இருந்து விட்டு, மஃறிபுக்குப் பின் புறப்பட்டு பிறை 9 இரவை முஜ்தலிபாவல் கழிக்க வேண்டும். பிறை 10 சூரிய உதயத்திற்குப் பின் மீண்டும் மினா வந்து கல் எறிந்து குர்பானி கொடுத்து, தலை மழித்து இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும். இச் செயல்பாடுகளில் முஸ்லிம்களில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆக துல்ஹஜ் பிறை 9-ல் அரஃபாவில் தங்க வேண்டும். அதுவே ஏற்கப்படும் ஹஜ் ஆகும். இதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஆனால் இப்போதுள்ள விவகாரம் என்னவென்றால், நமது இந்திய புரோகித மவ்லவிகள் தங்கள் பகுதியில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் தலைப்பிறை என்று கூறுவதுபோல் சவுதி புரோகித ஷெய்குகளும் அங்கு புறக்கண்ணால் பார்ப்பதே தலைப்பிறை என்ற தவறான எண்ணத்தில் இருக்கிறார்கள்.

சவுதி அரேபியாவின் வானிலை ஆய்வு மையத்தின் தலைம அதிகாரியும், இரண்டொரு ஷெய்குகளும் விஞ்ஞானிகள் புதிய பிறை (N.M) என்று கூறும் தினத்திற்கு அடுத்த நாளிலிருந்து தலைப்பிறையாக ஏற்கலாம் என்று சரியாகக் கூறியும் பெரும்பாலான ஷெய்குகள் அதை ஏற்காமல் புறக்கண்ணால் பார்ப்பதைக் கட்டாயப்படுத்தியுள்ளனர். அதனால் சவுதியில் (29.11.08) பிறையையே தலைப்பிறையாக அறிவித்துள்ளனர். அதன்படி அரஃபா தினம் 6.12.2008 சனி என்பதற்குப் பதிலாக 7.12.2008 ஞாயிறு என்று தவறாக அறிவித்துள்ளனர்.

தேதிக்கோட்டில் 00.00 சர்வதேச நேரம் என்றால் சவுதியில் அப்போது 09.00UT ஆகும். 09.00UTக்குப் பிறகு கன்ஜங்ஷன் ஏற்பட்டால் 3ம் நாளையே தலைபிறையாகக் கொள்கிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால் துல்ஹஜ் மாதம் 28.11.08 வெள்ளியன்று பிறக்கவில்லை என்று அவர்கள் கூறவில்லை. 27.11.08 வியாழன் சூரியன், சந்திரன், பூமி மூன்றும் 16:55:48UTசர்வதேச நேரப்படி நேர்கோட்டிற்கு வந்து துல்கஃதா மாதம் முடிவுற்று துல்ஹஜ் மாதம் பிறந்ததையும் அவர்கள் மறுக்கவில்லை. 50 அல்லது 60 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றும் சூரிய, சந்திர கிரகணங்களை இன்றே கணினி கணக்கீட்டின் மூலம் துல்லியமாகக் கணக்கிட்டுச் சொல்ல முடியும் என்பதையும் அவர்கள் மறுக்கவில்லை. ஆனால் பிறையைப் புறக்கண்ணால் பார்க்கும் நாளைக்கு அடுத்த நாளே தலைப்பிறை என்பதே இந்தப் புரோகிதர்களின் பிடிவாதமான தவறான வாதம். குர்ஆனிலோ, ஹதீஃதிலோ தலைப்பிறையைப் புறக்கண்ணால் பார்க்கும் நாளைக்கு அடுத்த நாளே தலைப்பிறை என்பதே இந்தப் புரோகிதர்களின் பிடிவாதமான தவறான வாதம். குர்ஆனிலோ, ஹதீஃதிலோ தலைப்பிறையைப் புறக்கண்ணால் பார்த்தே தீர்மானிக்கவேண்டும் என்ற நிபந்தனை எதுவும் இல்லை. ஆனால் நபி(ஸல்) அவர்கள் 1430 வருடங்களுக்கு முன்னர் புறக்கண்ணால் பிறையைப் பார்த்த தகவலை வைத்துத்தானே தலைப்பிறையை முடிவு செய்தார்கள் என்பதே அவர்களின் ஒரே ஆதாரம்.

உண்மை என்ன? நேரம் காட்டும் கருவிகள் இல்லாத அக்காலத்தில் ஐங்கால தொழுகை, நோன்பு தொடக்கம், முடிவு இவற்றை சூரியனைப் பார்த்து முடிவு செய்தது போல், தொலை பேசி இல்லாத அக்காலத்தில், தொலை தூரத்திலிருந்து ஆட்கள் மூலம் காலம் தாழ்ந்தே இறப்புச் செய்திகள் கிடைத்ததுபோல், நவீன வாகனங்கள் இல்லாத அக்காலத்தில் ஒட்டகத்தில் ஹஜ்ஜுக்குச் சென்றது போல், மாதம் பிறப்பதை அறிய இன்றைய நவீன கணினி கணக்கீட்டு முறை அக்காலத்தில் இல்லாத காரணத்தால் அன்று பிறையைப் புறக்கண்ணால் மட்டுமே பார்த்துத் தீர்மானிக்கும் கட்டாயத்தில் மக்கள் இருந்தார்கள் என்பதே உண்மை. மற்றபடி பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பது பர்ழும் அல்ல; சுன்னத்தும் அல்ல. நோன்பு நோற்பதற்குரிய ஷர்த்தும் அல்ல என்பதை புரோகிதர்கள் விளங்கத் தயாராக இல்லை.

கடிகாரம், தொலைபேசி, ஒலிபெருக்கி போன்ற நவீன கண்டுபிடிப்புகள் புழக்கத்திற்கு முதன் முதலாக வரும்போது அவற்றை மறுத்து குதர்க்க வாதம் பேசி, பின்னால் காலம் செல்ல, செல்ல புரோகிதர்கள் நிர்பந்தமாக நேர்வழியின் பக்கம் தள்ளப்பட்டது போல், இந்தப் பிறை விவகாரத்திலும் அவர்களைக் காலமே நேர்வழியின் பக்கம் தள்ளும். கடந்த சுமார் பத்து வருடங்களாக தத்தம் பகுதி பிறை எனத் தடுமாறிக் கொண்டிருந்த, விதண்டாவாதம் செய்து கொண்டிருந்த ததஜ தலைவரும் அவர் பின்னால் செல்பவர்களும், இப்போது தத்தம் பகுதியிலிருந்து தத்தம் மாநிலம் என்ற நிலைக்கு தாவி இருக்கிறார்கள். தள்ளப்பட்டிருக்கிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் தத்தம் மாநிலத்திலிருந்து தத்தம் நாடு என்றும் பின்னர் உலகம் முழுவதும் என்ற நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இது எமது கூற்றை உண்மைப் படுத்தப் போதுமானதாகும். ஆக புரோகிதர்களாகிய மார்க்க அறிஞர்கள் என ஆணவம் பேசும் அனைவரும் நன்கு அறிந்த நிலையிலேயே நேர்வழியிலிருந்து மக்களை கோணல் வழிகளில் இட்டுச் செல்கிறார்கள் (பார்க்க 9:9,34,11:19) என்பதைத் தெள்ளத் தெளிவாக அறிந்தவர்கள் அவர்கள் பின்னால் அந்த கோணல் வழிகளில் செல்ல முடியுமா? ஒருபோதும் முடியாது.

எனவே துல்ஹஜ் பிறை 9 அரஃபா தினம் 6.12.08 என்பதைத் திட்டமாக, துல்லியமாக அறிந்திருப்பவர்கள், தவறாக பெருநாள் தினமான பிறை பதத்தில் நோன்பு நோற்க முடியுமா? ஒருபோதும் முடியாது. எனவே 6.12.08 சனி அன்று பிறை 9-ல் நோன்பு நோற்றவர்களே உரிய தினத்தில் நோன்பு நேற்றுள்ளார்கள். அதற்கு மாறாக பிறை 10-ல் சவூதியில் அன்றுதான் ஹாஜிகள் அரஃபாவில் இருக்கிறார்கள் என்பதைக் காரணம் சொல்லி அன்று நோன்பு நோற்றவர்கள் நோன்பு நோற்க தடை செய்யப்பட்ட ஈதுடைய தினத்தில் நோன்பு நோற்ற குற்றவாளியாக ஆகிறார்கள்.

6.12.08 பிறை 9-ல் ஒருவர் நோன்பு நோற்கவில்லை. அவருக்கு நன்மைதான் கிடைக்காது. ஆனால் குற்றமில்லை. பிறை 10-ல் ஒருவர் பெருநாள் தொழுகை தொழவும் இல்லை; பெருநாள் கொண்டாடவும் இல்லை. இங்கும் நன்மைதான் அவருக்கு கிடைக்காது. ஆனாலும் குற்றமில்லை. ஆனால் பிறை 10-ல் நோன்பு நோற்பது குற்றமாகும்; பாவமாகும். நபி(ஸல்) தடுத்துள்ளார்கள்.

சவூதி அரசு அங்குள்ள புரோகித ஷெய்குகளின் தவறான வழிகாட்டலின்படி துல்லியமான கணினி கணக்கீட்டின்படி மிகச் சரியான பிறை 10ஐ பிறை 9 என தவறாகத் தீர்மானித்து பிறை 10-ல் அரஃபாவில் ஹாஜிகள் தங்கினால் அது யாருடைய குற்றம்?

ஹாஜிகளுக்கு வேறு வழியே இல்லை; சவுதி அரசு பிறை 9 என்று பிறை 10ஐ தவறாகத் தீர்மானத்து அறிவிக்கிறார்கள் என மிக நன்றாக அறிந்த ஹாஜிகளுக்கும் வேறு வழியில்லாமல் பிறை 10-ல் அரஃபாவில் தங்கும் நிர்பந்த நிலைக்கு ஆளானார்கள். இது அவர்களது குற்றமில்லை. அதனால் ஏற்பட்ட பாவச் சுமை சவூதி அரசையும், அந்த அரசுக்கு தவறான வழிகாட்டிய புரோகித ஷெய்குகளையுமே சேர்ந்தது.

ஆனால் ஹாஜி அல்லாதவர்கள் பிறை 9க்கு மாறாக பிறை 10-ல் நன்கு அறிந்த நிலையில் நோன்பு நோற்பது எப்படி? இவர்களுக்குரிய நிர்பந்த நிலை என்ன? இந்த குற்றச் செயலுக்கு சவூதி அரசோ, அங்குள்ள ஷெய்குகளோ பொறுப்பு ஏற்பார்களா? நிச்சயமாக ஏற்கமாட்டார்கள். நோன்பு நோற்றவர்களே பாவிகளாக, குற்றவாளிகளாக நேரிடும்.

ஹாஜிகள் பிறை 10-ல்தானே அரஃபாவில் தங்கினார்கள். அன்று நோற்பது தானே அரஃபா நோன்பு என்ற வாதம் தவறாகும் என்று ஹாஜிகள் அரஃபாவில் தங்குறிளார்களோ அன்று மற்றவர்கள் நோன்பு நோற்க வேண்டும் என்பது நபி(ஸல்) அவர்களின் கட்டளை இல்லையே! துல்ஹஜ் பிறை 9-ல் ஹாஜிகள் அரஃபாவில் தங்க வேண்டும்; மற்றவர்கள் நோன்பு நோற்க வேண்டும் என்பதே நபி(ஸல்) அவர்களின் தெளிவான நேரடியான கட்டளை.

இறைத் தூதரின் இந்தத் தெளிவான கட்டளைக்கு முரணாக ஹாஜிகள் பிறை 10-ல் அரஃபாவில் தங்குகிறார்கள் என்பதற்காக மற்றவர்களும் பிறை 10-ல் பெருநாள் தினத்தில் நோன்பு நோற்க வேண்டுமா? இது சரியா? ஒரு தவறை இன்னொரு தவறைக் கொண்டு சரி செய்ய முடியுமா?

நன்மையும் திமையும் சமமாக மாட்டா; நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்ளுங்கள்…..” (41:34)

எனவே ஹாஜிகள் பிறை 10-ல் அரஃபாவில் தவறாகத் தங்குகிறார்கள் என்பதற்காக ஹாஜி அல்லாதவர்கள் பிறை 10-ல் நோன்பு நோற்பது அதாவது தடை செய்யப்பட்ட ஈதுடைய நாளில் நோன்பு நோற்பது தவறாகும். குர்ஆன், ஹதீஸுக்கு முரண்பட்ட செயலாகும். அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக.

Previous post:

Next post: