பகுத்தறிவாளர்களே! பகுத்தறிவை பகுத்துப் பார்த்தீர்களா?

in 2008 ஜனவரி,பகுத்தறிவாளர்களே!,பொதுவானவை

பகுத்தறிவாளர்களே! பகுத்தறிவை பகுத்துப் பார்த்தீர்களா?

அபூ ஃபாத்திமா

அளக்கு முன் அளக்கும் கருவியையும், நிறுப்பதற்கு முன் நிறுக்கும் கருவியையும் சரி பார்த்து கொள்வது அறிவாளிகளின் கடமையாகும். எந்த ஒரு முயற்சியிலும் இறங்கு முன் அதற்குரிய அடிப்படைத் தகுதிகளைச் சரி பார்த்து உறுதி செய்து கொண்ட பின்னரே அந்த முயற்சியில் இறங்கினால் அதற்குரிய பலனை சரியான அடைய முடியும். உதாரணமாக நிறுத்தக் கூடிய ஒரு கருவி – தராசு சரியாக இருக்கிறதா? எவ்வளவு எடைவரை அதில் நிறுத்துப் பார்க்க முடியும் என்பதை முறையாக முழுமையாக அறிந்த பின் அந்த எடைக்குள் உள்ள பொருளை மட்டுமே அதில் நிறுக்க வேண்டும். அந்தத் தராசில் நிறுக்கக் கூடிய அளவுக்கு அதிகமாக அதில் நிறுத்தால் அது தப்பான எடையைத்தான் காட்டும். அது தராசின் குற்றமல்ல; அந்த தராசின் தகுதியை சரி பார்த்து உறுதிப்படுத்தாத மனிதனே அத்தவறுக்குப் பொறுப்பாளி ஆகிறான்.

இந்த நியதி பொதுவாக அனைத்து அம்சங்களுக்கும் பொருந்தும் என்பதை பகுத்தறிவாளர்களும் மறுக்க முடியாது.

இந்த நியதியின் அடிப்படையில் விஷயங்களை பகுத்து ஆராயுமுன்னர் பகுத்தறிவின் தகுதியை, அதன் ஆற்றலை (Power of mind) அறிந்து கொள்வது மிகமிக அவசியமாகும். காரணம் பகுத்தறிவின் ஆற்றலை – தகுதியை அறிந்து கொள்ளாமல், அதற்கு மீறிய ஒன்றைப் பற்றிப் பகுத்தறிய முற்பட்டால் அது பெருத்த கேடாகவே முடியும் என்பதை அறிஞர்கள் மறுக்க முடியாது. எனவே மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஆறாவது அறிவான பகுத்தறிவின் ஆற்றலை அந்தப் பகுத்தறிவு கொண்டே பகுத்துப் பார்ப்போம்.

ஐம்புலன்கள் கொண்டு கிடைக்கும் தகவல்களைக் கொண்டு மட்டுமே பகுத்தறிவு செயல்பட முடியும். இந்த ஐம்புலன்களுக்குள் அடைபடாத ஒன்றை இந்தப் பகுத்தறிவால் விளங்க முடியாது; ஏற்க முடியாது. அதனால் தான் கோவூர் போன்றவர்கள் கடவுளைக் காட்டுங்கள்; கண்ணால் பார்த்து ஏற்றுக் கொள்கிறோம் என்ற அறிவற்ற வாதத்தை வைத்தனர்.

கண்ணால் பார்ப்பது என்றால் அந்த பொருளுக்கு ஒரு தோற்றம் இருக்க வேண்டும்; அந்தப் பொருளில் வெளிச்சம் பட வேண்டும்; அந்தப் பொருளுக்கும் பார்க்கும் மனிதனுக்கும் இடையில் மறைக்கும் திரை எதுவும் இருக்கக் கூடாது. இந்த நிபந்தனைகள் அனைத்தும் நிறைவேறினால்தான் குறிப்பிட்ட அந்தப் பொருளைக் கண்ணால் பார்க்க முடியும். இப்படிப்பட்ட நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்ட நிலையில் நாம் பார்க்கும் ஒன்று நமது அறிவை மயங்கச் செய்தாலும் அது கடவுள் சக்தியாக இருக்க முடியாது என்பதை விளங்காதவர்கள் தான் சில போலி ஆன்மீகவாதிகள் காட்டும் கண்கட்டி வித்தைகளை – மந்திர தந்திர காட்சிகளைக் கண்ணால் கண்டு அவர்கள் தெய்வாம்சம் பொருந்திய மஹான்களாக ஏற்று வழிகெட்டுச் செல்கின்றனர். எனவே கடவுளை கண்ணால் கண்டு தான் ஏற்பேன் என்று அடம் பிடிப்பவர்கள் பகுத்தறிவை முறைப்படி விளங்காத மூடர்களாக மட்டுமே இருக்க முடியும். காரணம் மனிதனின் ஐம்புலன்களுக்குள் கட்டுப்படும் ஒன்று கடவுளாக ஒருபோதும் இருக்க முடியாது. ஐம்புலன்களுக்கும் அப்பாற்பட்டவன், ஐம்புலன்களின் துணையுடன் செயல்படும் பகுத்தறிறவுக்கும் அப்பாற்பட்டவன் மட்டுமே மனிதனையும் மற்றும் அனைத்தையும் படைத்த ஒரே இறைவனாக இருக்க முடியும்.

தங்களை பகுத்தறிவாளர்கள், பகுத்தறிவு பாசறையில் பயிற்சி எடுத்து பக்குவப்பட்டவர்கள் என பெருமைபட பேசிக்கொள்ளும் பகுத்தறிவாளர்களிடம் சில வினாக்களைத் தொடுக்கிறோம். அவற்றிற்கு முறையான – சரியான பதில்களை தருமாறு கேட்டுக் கொள்கிறோம். ஒவ்வொரு பகுத்தறிவாளருக்கும் ஒரு தாயும், தந்தையும் நிச்சயம் உண்டு. தாயும், தந்தையும் இல்லாமல் நான் இந்த உலகிற்கு வந்து விட்டேன் என்று எந்த பகுத்தறிவாளரும் சொல்ல மாட்டார். நாம் இப்போது அவர்களிடம் கேட்பது பகுத்தறிவாளர்களாகிய நீங்கள் உங்கள் தாயையும், தந்தையையும் அவர்கள் உங்களைப் பெற்றெடுக்கும்போது உங்கள் கண்ணால் பார்த்து பகுத்தறிந்துதான் ஏற்றக்கொண்டீர்களா? நிச்சயமாக இல்லை என்ற பதிலைத்தான் உங்களால் தர முடியும். அப்படியானால் உங்கள் தாயையும், தந்தையையும் எந்தப் பகுத்தறிவின் ஆய்வைக் கொண்டு ஏற்றீர்கள்? சொல்லுங்கள். எங்களுக்கு விவரம் தெரிய ஆரம்பிக்கும்போது தாயென்றும் தகப்பனென்றும் தெரிய வந்ததை நம்பித்தான் தாயையும், தந்தையையும் ஏற்றுக்கொண்டோம் என்று மட்டுமே சொல்ல முடியும்.

தங்களை மாபெரும் பகுத்தறிவாளர்கள் என பீற்றிக் கொள்ளும் ஒரு சிலர் அதிகப் பிரசிங்கித்தனமாக மரபணு சோதனை மூலமாக எங்களின் தாயையும் தந்தையையும் பகுத்தறிந்து கொள்வோம் என பீற்றலாம். இங்கும் அவர்கள் தாயாக, தந்தையாக நம்பி ஏற்றிருப்பவர்கள் உண்மையில் தங்களின் தாய்தானா? தந்தைதானா? என்று மட்டுமே உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். இதுகாலம் வரை தங்களின் தாயாக, தந்தையாக நம்பி ஏற்றிருந்தவர்கள், தங்களின் தாயுமல்ல, தந்தையுமல்ல என மரபணு சோதனையின் மூலம் அறிந்து கொண்ட பின்னர், அதே மரபணு சோதனை மூலம் தங்களை உண்மையிலேயே பெற்றெடுத்த தாயையும், தந்தையும் அறிய முடியுமா? ஒரு போதும் முடியாது. அதாவது இவ்வுலகிலுள்ள குறைந்தது தங்கள் ஊரிலுள்ள அனைவரையும் மரபணு சோதனைக்கு உட்படுத்த முடியுமா? சாத்தியமா? சுருக்கம் தங்களின் பெற்ற தாயையும் தந்தையையும் தங்களின் பகுத்தறிவின் மூலம் ஒரு போதும் அறிந்து கொள்ள முடியாது. ஊரை நம்பி தாயையும், தாயை நம்பி தந்தையும் ஏற்றுக் கொள்ளும் பரிதாப நிலையிலேயே மனிதனின் அற்பமான பகுத்தறிவு இருக்கிறது.

பெற்ற தாயையும், தந்தையையும் தான் பகுத்தறிவினால் பகுத்தறிய முடியவில்லை. தாயின் கர்ப்பப்பை உலகிலிருந்து இவ்வுலகிற்கு வந்த பின்னர் தங்களின் மழலைப்பருவத்தில் தாங்கள் செய்த அசிங்கமான செயல்களையாவது பகுத்தறிவு கொண்டு அறிய முடிகிறதா? அதாவது அந்தக் குழந்தைப் பருவத்தில் பெற்றதாய் சிறிது கவனமில்லாதிருக்கும் போது, ஒன்றிற்கும் இரண்டிற்கும் போய் அவற்றைக் கைகளால் பிசைத்து அதை வாயில் வைத்து சப்பியதையெல்லாம் தங்களின் பகுத்தறிவால் பகுத்தறிய முடிகிறதா? அதுதான் போகட்டும். சிறு பிராயத்தில் தாங்கள் செய்த சில பல செயல்பாடுகளைத் தங்களின் பகுத்தறிவால் பகுத்தறிய முடிகிறதா? தாய் , பாட்டி என்று சிலர் சொல்லித்தான் அவற்றை அறிய முடிகிறது.

தாயின் கர்ப்பப்பையில் இருந்ததையோ, சிறு பிராயத்தில் செய்தவைகளையோ, போய் வந்த ஊர்களையோ, பகுத்தறிவால் பகுத்தறிய முடிகிறதா? உதாரணமாக விபரம் தெரிந்த பின்னர் லண்டனுக்கோ, அமெரிக்காவுக்கோ போய் சிறிது காலம் தங்கிவிட்டு வந்தால் அந்த ஊர்களைப் பற்றிய விபரங்களை, அனுபவங்களை பகுத்தறிவால் பகுத்தறிய முடிகிறது. தான் இதுவரை போகாத சைனா, சிங்கப்பூர் பற்றிய விபரங்களை, அனுபவங்களை பகுத்தறிய முடியுமா? கேவலம் இந்த உலகிலேயே தான் போய்வராத ஊர்களைப் பற்றி பகுத்தறிய முடியாத அற்ப பகுத்தறிவு கொண்டு, மரணத்தின் பின் உள்ள வாழ்வு பற்றி பகுத்தறிய முற்பட்டால் அது விவேகமான செயலாக முடியுமா?

தாயின் கர்ப்பப்பையில் பத்து மாதம் இருக்கும் காலகட்டத்தில், இங்கு நீ இருப்பது நிரந்தரமல்ல, உனது உடலின் அனைத்து பாகங்களும் இங்கு தயாரானாலும் இங்கு உபபோயமில்லை. இந்த பையூரிலிருந்து. இதைவிட பிரமாண்டமான ஒரு பேரூருக்கு நீ செல்ல வேண்டும். அங்குதான் இங்கு தயாரான உனது பாகங்கள் செயல்பாட்டுக்கு வரும். குறிப்பிட்ட காலத்திற்குப்பின் நீ விரும்பினாலும் இங்கிருக்க முடியாது. இங்கிருந்து வெளியேறியே ஆக வேண்டும் என்று கூறப்பட்டால் அக்குழந்தை ஏற்குமா? அங்கு தாயிடமிருந்து தொப்புள்குழாய் வழியாகக் கிடைத்த இரத்தம் அதற்கு அமுதம்; இவ்வுலகிற்கு வர விரும்பியே இருக்காது. ஆனால் குறித்த தவணையில் அந்தப் பையூரிலிருந்து இவ்வூருக்கு வந்து விவரம் தெரிந்து பின்னரே தனது உடலுறுப்புகளின் அவசியத்தையும், இருந்து வந்த பையூரிலிருந்து இவ்வூருக்கு வந்து விவரம் தெரிந்த பின்னரே தனது உடலுறுப்புகளின் அவசியத்தையும், இருந்து வந்த பையூருடன் இவ்வூரை ஒப்பிடும் போது இதன் விசாலத்தையும் அறிய முடிகிறது.

அந்தப் பையூரிலிருக்கும் போது இவ்வூரை மறுத்து பின்னர் பையூரிலிருந்து இவ்வூருக்கு வந்தது என்ற அளவு உண்மை என்பதை மனிதன் இங்கு வந்த பின் எப்படி ஒப்புக்கொள்கிறானோ, அது போல்தான் இவ்வூரிலிருந்து இதைவிட மிகமிக பிரமாண்டமான மறுமை ஊருக்குச் சென்ற பின்னரே அந்த உண்மையை ஒப்புக்கொள்ளும் நிலையில் இருப்பான். ஆனால் உடல் ஊனமுடன் பையூரிலிருந்து இவ்வூருக்கு வந்த குழந்தை வளர்ந்து ஆளானாலும் ஊனத்தின் காரணமாக அனைத்துத் துன்பங்களையும் அனுபவிக்க நேரிடுமோ, அதேபோல் மனித நேயத்தை மதித்து மனிதனாக வாழ்ந்து, தன்னைப் படைத்து உணவளித்து பாதுகாத்து வரும் இறைவனுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு தனது ஆன்மாவின் அனைத்து உறுப்புக்களையும் முறையாகச் செம்மைப்படுத்தி முழுமைப்படுத்தாத நிலையில் இவ்வூரிலிருந்து மறுமை ஊருக்குச் சென்ற பின்னரே அழுது வருந்துவான். ஆனால் அவனது எந்த தந்திரமும் அவனுக்குப் பலன் தராது. ஆக தாயின் பையூரிலிருந்து இந்த ஊருக்கு வந்ததும், அங்கு தயாரான உடல் இவ்வூரில் மட்டுமே உபயோகத்தில் வருவது போல், இவ்வூரிலிருக்கும் பகுத்தறிவாளர்கள், இவ்வூரிலிருந்து மறுமை ஊருக்கு செல்வதையும், இங்கு தயாராகும் ஆன்மாவின் உறுப்புகள் நாளை மறுமையில் மட்டுமே உபயோகத்திற்கு வரும் என்பதையும் முறையாக முழுமையாக நுண்ணறிவுடன் பகுத்தறிய முடியாதவர்கள் எப்படித் தங்களை பகுத்தறிவாளர்கள் என மெச்சிக் கொள்கிறார்கள்?

இந்த பகுத்தறிவாளர்கள் தங்களின் பகுத்தறிவைக் கொண்டு தங்களைப் பெற்றெடுத்த தாயையும் தந்தையும் மட்டுமா பகுத்தறிய முடியாமல் தடுமாறுகிறார்கள். இதுபோல் எண்ணற்ற விஷயங்களை பகுத்தறிய முடியாமல் அவற்றில் அறிவீனர்களாகவே இருக்கிறார்கள். மரத்தையும் பார்க்கிறார்கள். மரத்தின் விதையையும் பார்க்கிறார்கள். விதையிலிருந்து மரமா? மரத்திலிருந்து விதையா? என்பதை பகுத்தறிந்திருக்கிறார்களா? முட்டையையும் பார்க்கிறார்கள். கோழியையும் பார்க்கிறார்கள். முட்டையிலிருந்து கோழியா? கோழியிலிருந்து முட்டையா? பகுத்தறிந்து உண்மையை கண்டறிந்துவிட்டார்களா? இப்படி இவ்வுலகிலேயே இவர்களுக்கு நெருக்கமாக இருக்கும் பலவற்றின் உண்மை நிலையை – எதார்த்த நிலையை பகுத்தறிந்து, அவற்றின் உண்மை நிலையை பகுத்தறிந்து, அவற்றின் உண்மை நிலையை பகுத்தறிந்து கண்டுபிடிக்க முடியாத அற்பமான அறிவை உடையவர்கள் விண்ணையும், மண்ணையும் இன்னும் எண்ணற்ற கோள்களையும் படைத்து அதிசயிக்கத்தக்க வகையில் அவற்றை அவற்றின் ஓடுபாதைகளில் ஒரு வினாடி முன்பின் ஆகாமல் பல்லாயிரம் கோடி ஆண்டுகள் எவ்வித இடையூறுமில்லாமல் சுழல வைத்திருக்கும் அந்த ஒரே இறைவன் இவர்களின் பகுத்தறிவில் அடைபடவில்லை என்பதால் அந்த இறைவனை மறுப்பவர்கள் எந்த அளவு அறிவீனர்களாக இருக்க முடியும்?

மேலே நாம் மனித பகுத்தறிவுக்குள் அடைபடாத, பகுத்தறிவுக்கு எட்டாத பலவற்றில் ஒரு சிலவற்றை தான் குறிப்பிட்டிருக்கிறோம். இவற்றுக்கு விடை காணாத நிலையில் ஓரிறைவனின் உள்ளமை பற்றி பகுத்தறிய முற்படுவது, அ…ம்…மா என்ற மூன்று எழுத்துக்களைக் கூட்டி அம்மா என்று சொல்லத் தெரியாத ஒரு மூடன் திருக்குறளைப் படித்து விளக்கம் சொல்ல முற்பட்ட கதைதான் – அறியாத ஓர் அறிவிலி 3100

என்ற பெருங்கணக்கிற்கு விடைகாண முற்பட்ட கதைதான்.

எனவே உண்மையிலேயே தாங்கள் பகுத்தறிவாளர்கள்தான் என்று நம்புகிறவர்கள் அவர்களது கூற்றில் உண்மையாளர்கள் என்றால், முதலில் தங்களைப் பெற்றெடுத்த தாயையும் தந்தையையும் தங்களின் பகுத்தறிவால் பகுத்தறிந்து சொல்லட்டும்; விதையிலிருந்து மரமா? மரத்திலிருந்து விதையா? என்பதைச் சொல்லட்டும்; கோழியிலிருந்து முட்டையா? முட்டையிலிருந்து கோழியா? என்பதையெல்லாம் பகுத்தறிந்து விடை கண்டுவிட்டு அதன் பின்னர் அனைத்தையும் படைத்து, உணவளித்து, நிர்வகித்து வரும் இறைவனைப் பற்றி பகுத்தறிய முற்படட்டும். அதுவே நுண்ணறிவுடன் கூடிய பகுத்தறிவாகும்.

Previous post:

Next post: