தினமணி நாளிதழுக்கு எழுதப்பட்ட கடிதம்

in 1989 டிசம்பர்

சகோதரர் அ. அப்துல் அஜீஸ் அவர்கள் 30-11-1989ல் தினமணி நாளிதழுக்கு எழுதிய கடிதம் அந்த நாளிதழில் இடம் பெறவில்லை. எனவே அதனை இங்கு இடம் பெற செய்கிறோம்.

விடுதல்:-

அ. அப்துல் அஜீஸ்

17 ஏ, வாழைக் கொல்லைத் தெரு,

நிரவி. (காரைக்கால் வட்டம்)

புதுவை மாநிலம்-609 604.

பெறுதல்:-

“ஆசிரியர்” தினமணி,

இந்தியன் எக்ஸ்பிரஸ் கார்டன்ஸ்,

137, காமராசர் சாலை,

மதுரை-625009,

30-11-89. நிரவி.

திணமணி ஆசிரியர் அவர்கட்கு,

கே. சுப்பாராவ் என்பவர் தினமணி 26-11-1989 இதிழில் வாசகர் கருத்துக்கள் பகுதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் உங்கள் கருத்துக்கள் அரைகுறையாக இந்திய வரலாற்றை-குறிப்பாக சுதந்திரப் போராட்ட வரலாற்றைப் படித்தவர்களாலும், தங்களைத் தாங்களே அறிவு ஜீவிகள் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களாலும் அடிக்கடி வெளியிடப்படுகிறது.

இந்தியா, இந்தியா என்றும் பாகிஸ்தான் என்றும் பிரிக்கப்பட்ட நேரத்தில் இஸ்லாமியச் சார்புள்ள நாடாகத்தான் இருக்கும் என்று அந்நாட்டுத் தலைவர்கள் அப்போதே அறிவித்து விட்டனர். ஆனால் காந்தி, நேருப் போன்ற தலைவர்கள் இந்திய மதச்சார்பற்ற நாடாக விளங்கும் என்று உலகுக்கு அறிவித்தனர். அவர்களை அப்படி அறிவிக்கச் சொல்லி பாகிஸ்தான் கேட்டவர்களோ, வேறு யாருமோ நிர்ப்பந்திக்கவில்லை. அவர்கள் தாம் முழு விருப்பத்தின் பெயரிலேயே அவ்வாறு முடிவு செய்தனர். மேலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையானவர்களாக வாழ்ந்த பகுதிகள் பாகிஸ்தானாக பிரிக்கப்பட்டது. ஆனால் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக சிதறி இருந்தப் பகுதிகளைப் பற்றி எந்த முடிவும் செய்யவில்லை. அதனால் தான் பாகிஸ்தானுக்குப் போக விரும்பாத முஸ்லிம்கள் இந்தியாவிலேயேத் தங்கி விட்டனர்.

அந்த நேரத்திலேயே இந்தியா ஹிந்து நாடுதான் என்றும், இந்தியாவில் ஹிந்துக்களைத் தவிர வேறு யாருக்கும் இடமில்லை என்றும், இந்தியாவில் இருக்க வேண்டும் என்றால் ஹிந்துக்களாகத்தான் இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தால் எந்த முஸ்லிமும் இங்கு தங்கியிருக்க மாட்டான்.

தனது மார்க்கத்தைப் பின்பற்ற முடியாத அளவுக்கு நிர்ப்பந்தத்தை ஏற்ப்படுத்தும் ஒரு மாநாட்டில், அந்த நிர்பந்தத்தை ஏற்ப்படுத்தும் அரசை வெற்றிக் கொள்ள முடியாத அளவுக்கு நிலைமை இருக்குமானால் அந்த நாட்டை விட்டு வெளியேறி விடும்படித்தான் இஸ்லாம் முஸ்லிம்களுக்குப் போதனை செய்கிறது. நபிகள் நாயகம் அவர்களும் இதனடிப்படையில் தான் மக்காவிலிருந்து மதீனாவுக்கு “ஹிஜ்ரத்” செய்தனர்.

எந்த ஒரு நாட்டு மக்களும் தம் நாட்டைத் தாங்களே படைத்துக் கொள்ளவில்லை. இறைவனே இந்த உலகையும் மனிதனையும் படைத்துள்ளான். எனவே, உலகில் பிறந்த எந்த ஒரு மனிதனும் தான் விரும்பும் மதத்தைப் பின்பற்ற முழு உரிமை பெற்றவனாவான். இஸ்லாம் இதை ஆணித்தரமாக சொல்கிறது. இறைவனேக் கூறுகிறான் இஸ்லாத்தில் நிர்ப்பந்தம் இல்லையென்று. மேலும், இஸ்லாமியக் கொள்கையின் படி மனிதனுக்கு முழு சுயேச்சைக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவன் விரும்பினால், இறைவனுக்குக் கட்டுப்பட்டு இஸ்லாத்தை ஏற்று ஈடேற்றம் அடையலாம். அல்லது தான் தோன்றித்தனமாகச் செயல்பட்டு மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்ட மதங்களைப் பின்பற்றி நாசமடையலாம். ஆனால், இஸ்லாத்தைப் பின்பற்ற விரும்பும் யாரையும் நிர்ப்பந்தித்து அவனுடைய மார்க்கத்தை எந்தக் காரணத்துக்காகவும் விட்டுவிடச் செய்ய யாருக்கும் உரிமை இல்லை. அப்படி நிர்ப்பந்திக்கப் பட்டால் ஒரு முஸ்லிம் அதை எதிர்த்துப் பொராடவும் வேறு வழியில்லாத நிலையில் அப்போராட்டத்தில் தன் உயிரையும் இழக்கத் துணிவானேயன்றி இஸ்லாத்தை விட்டு விட மாட்டான்.

அப்படியிருக்க மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட நாடுகள் என்ற பிரிவினையைக் காட்டி ஒரு நாட்டை விட்டு முஸ்லிம்கள் வெளியேறிவிட வேண்டும் என்று சொல்வது மனித உரிமையை மீறுவதாகும்.

அந்தந்த நாட்டில் பிறந்த மதங்களையே அந்தந்த நாட்டு மக்கள் பின்பற்ற வேண்டுமென்று சொல்வது மிகவும் உளுத்துப் போன பழமை வாதமாகும். அப்படியென்றால், இந்தியாவில் பிறந்து இன்று ஜப்பானிலும், இலங்கையிலும், சீனாவிலும், கம்போடியாவிலும், வியட்நாமிலும், தாய்லாந்திலும், பர்மாவிலும், கொரியாவிலும், திபத்திலும் செழித்து வளர்ந்துள்ள புத்தமதத்தின் நிலைமை என்னவாகும்? அங்குள்ள பெளத்தர்களையெல்லாம் ஏற்றுக் கொள்வதென்றால் இந்தியா போதுமா, இது நடைமுறையில் சாத்தியமான ஒன்றா? என்றெல்லாம் சிந்திக்காமல் இஸ்லாத்தின் மேல் குரோதம் கொண்டு மனம்போன போக்கில் எழுதுவதும், பேசுவதும் இந்திய முஸ்லிம்களிடையே அதிருப்தியையும், வகுப்புக் கலவரங்களையும் ஏற்ப்படுத்தும்.

உலக ஒற்றுமைக்கே உலைவைக்கும் இதுப் போன்ற கருத்துக்களை எந்த ஒரு சராசரி அறிவுடைய மனிதனும் ஏற்றுக் கொள்ள மாட்டான்.  இதுப் போன்ற கருத்துக்கள் பரவ, புகழ்ப்பெற்ற இதழான தினமணி இடமளித்திருப்பது மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும்.

                                                            இவண்

                                                        அ. அப்துல் அஜீஸ்.

Previous post:

Next post: