விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

in 1996 அக்டோபர்,விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

விமர்சனம்: (sep.’96-26-27) கிணறு, குளம் போன்றவற்றில் “குளிப்பு கடமையானவர்” குளிக்கலாம் என்று கூறியுள்ளீர். அந்த ஹதீஸ் தண்ணீரின் தன்மையைப் பற்றித்தானே கூறியுள்ளது.ஏனெனறால்,

    “குளிப்பு கடமையானவர் தேங்கி நிற்கும் தண்ணீரில் குளிக்கலாகாது” என்று நபி(ஸல்)  கூறியதாக அபூஹரைரா(ரழி) அறிவிக்கிறார்கள்.- ஸுனன் இப்னுமாஜ்ஜா (605) மற்றும் முஸ்லிம். நஸயீ ஆகிய நூல்களிலும் உள்ளது.இதற்கு மாற்றமாக கூறியுள்ளீர்கள். (இது ‘அமல் விஷயம் என்பதால் உடன் விளக்கம் தரவும்).

இப்னு கதீஜா, கோவை-26..

 விளக்கம்: நீங்கள் எடுத்தெழுதி இருக்கும் ஹதீஸில் “தேங்கி நிற்கும் தண்ணீர்” என்று குறிப்பிட்டுள்ளதை விளங்குவதில் ஏற்பட்ட கோளாறே உங்களின் மறுப்புக்கு காரணமாக இருக்கிறது. கிணறு, குட்டை, குளம், ஏரி போன்றவற்றிலுள்ள நீரும் தேங்கி நிற்கும் நீரே என்ற எண்ணத்தில் எழுதியள்ளீர்கள். இந்த கருத்தில் பார்த்தால் கடலையும் கூட தேங்கி நிற்கும் நீர் என்றம் சிலர் வாதிடலாம். நபி(ஸல்) அவர்களின் ஒவ்வொரு சொல்லும் மிகத் தெளிவாக இருக்கிறது. அரபியில் முஸ்லிமில் காணப்படும் ஹதீஸில் “மாயித்தாயிம்” – நிலைத்து நிற்கும் நீர் என்றே தெளிவாகக் கூறியுள்ளதை அறிய முடிகிறது. அதாவது சிறிய அளவில் (உதாரணமாக பள்ளிகளில் காணப்படும் “ஹவுழ்” – நீர்த் தொட்டி) காணப்படும் நீரையே குறிக்கிறது. அவற்றில் கூட உள்ளே இறங்கி குளிக்கக் கூடாது; நீரை வெளியே எடுத்து குளிக்கலாம் என்பதை முஸ்லிமில் காணப்படும் அதே ஹதீஸில் அபூஹுரைரா(ரழி) அவர்களிடம் கேட்ட கேள்விக்கு அவர்கள் அளித்த பதில் தெளிவுபடுத்துகிறது.

    தமிழில் தொட்டி, கிணறு, குட்டை, குளம், ஏரி, கடல் என்ற நீர் கொள்ளளவிற்கு ஏற்ப சொற்பிரயோகங்கள் இருப்பது போல் அரபியிலும் இருக்கின்றன. நபி(ஸல்) அவர்களோ கிணறு, குட்டை, குளம், ஏரி, கடல், இவற்றைக் குறிப்பிடாமல் சிறிய அளவிலுள்ள தேங்கி நிற்கும் நீரை மட்டுமே குறிப்பிடடுள்ளார்கள். கிணற்றில் நீர் ஊறுகின்றது. இந்த அடிப்படையில் தான் “புழாஈ” கிணற்றைப்பற்றி நபி(ஸல்) கூறியிருக்கிறார்கள் என்பதை விளங்க முடியும். எனவே கிணற்றை விட  அதிகம் கொள்ளளவு கொண்ட குட்டை, குளம், ஏரி, கடல் போன்றவற்றில் குளிப்பதை நீங்கள் எடுத்து எழுதியுள்ள ஹதீஸ் தடை செய்வதாக நாம் அறியவில்லை.

    “தூங்கி எழுந்தவுடன்  உங்கள் கைகளைக் கழுவாமல் தண்ணீருக்குள் விட வேண்டாம்; தூக்கத்தில் உங்கள் கைகள் எங்கெல்லாம் சென்றன என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்” என்ற ஹதீஸை நீங்கள் அறிவீர்கள்.இந்த எச்சரிக்கை சிறிய கொள்ளளவு கொண்ட தண்ணீரின் சுத்தத்தைப் பேணவே அல்லாமல், அப்படி கழுவுவதால் கை சுத்தமாகாது என்ற பொருளில் அல்ல என்பதை விளங்குகிறோம்.

    இது போன்றதொரு எச்சரிக்கையைத்தான் நீங்கள் எடுத்தெழுதியுள்ள ஹதீஸும் தருகிறது. என்பதை விளங்கிக் கொண்டால் கொள்ளளவு அதிகமுள்ள குட்டை, குளம், ஏரி,போன்றவற்றிற்கு இது பொருந்தாது என்பதை எளிதாகப் புரிந்துக் கொள்ள முடியும்.

Previous post:

Next post: