இஸ்லாத்தில் திருமணம்

in 1996 அக்டோபர்

A.H. நஸீர் அகமது, குன்னூர்.

    அல்லாஹ் ஜல்லஷானஹுதஆலாவுடைய மாபெரும் கிருபையாக உள்ளது, பல முறை பல நபிமார்கள் மூலம் ஷரீஅத்துடைய சட்ட திட்டங்களை கொடுத்தும், வேதத்தைக் கொடுத்தும் அருள் செய்தான். ஆனால், ஷைத்தான் அவன் சூழ்ச்சியில் மனிதர்களை ஆட்டிப் படைத்து, மாசற்ற தூய்மையான முறையில் அல்லாஹ் கொடுத்த மார்க்க ஞானத்தை, தீனின் உண்மையை கலங்கப்படுத்தி பலவகையாக மனிதர்களை பல பிரிவினர்களாகப் பிரித்து, பல கோளாறுகளை உண்டாக்கி, பல இன்னல்களை மனிதர்களை சந்திக்க செய்து  அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டிய உண்மையான தூய்மையான வாழ்க்கையின் வழியில் இருந்து தவறச் செய்துவிட்டான்.

    நபி(ஸல்) கூறுகிறார்கள்: எனக்கு முன்னுள்ள எந்த சமூகத்திற்கும் அல்லாஹ் அனுப்பிய இறைத்தூதருக்கு அச்சமூகத்தைச் சேர்ந்த தோழர்களையும், உதவியாளர்களையும் உருவாக்காமல் இருந்ததில்லை. அவர்கள் தங்கள் நபியின் சுன்னத்தை கடைபிடித்து, ஏவல்களை எடுத்து நடந்தனர். (ஆனால்) அவர்களுக்குப் பின் வந்தவர்களோ தாங்கள் செய்யாதவற்றையே பேசினர். ஏவப்படாதவைகளையே எடுத்து நடந்தனர். இத்தகையவர்களுடன் யார் தன் கரத்தால் போராடுகின்றாரோ அவர் முஃமீன் ஆவார். யார் தன் நாவினால் போராடுகின்றாரோ அவரும் முஃமின் ஆவார். யார் தன் உள்ளத்தால் போராடுகின்றாரோ அவரும் முஃமின் ஆவார. இதற்கு பின் ஈமானில் ஒரு அணு அளவு கூட இல்லை.

அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத்(ரழி), நூல்: முஸ்லிம்.

    இதில் இருந்து நாம் தெளிவாக அறிகின்றோம். ஒரு முஃமின், முஃமினாக இருக்க கண்டிப்பாக தவறைக் கண்டால் எதிர்த்தே ஆக வேண்டும். அதை எதிர்க்க சக்தி அற்ற நிலையில் மிகக் குறைவான அணு அளவேனும் அல்லாஹ்வின் மேல் நமக்கு இருக்கக் கூடிய ஈமானை பாதுகாத்திட நடக்ககூடிய தவறுகள் குறித்து மனம் வருந்த வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் நாம் ஒரு காலமும் முஃமினாக இருக்க  முடியாது என்று நபி(ஸல்) கூறுகிறார்கள்.

சகோதர, சகோதரிகளே! சிந்தியுங்கள்!

    இக்காலத்தில் எவ்வளவு தவறான விஷயங்களைக் கண்டும் அதை சிறிதளவேனும் பொருட்படுத்தாமல் முஸ்லிம் என்று கூறிக் கொண்டு அல்லாஹ்வின் மீதும் அதிக ஈமான் வைத்துள்ளோம் என்று எண்ணிக் கொண்டும் உள்ளோம். இவ்வளவு கடுமையான முறையில் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இவ்வாறு எச்சரித்துள்ள, நிலையில்,இன்று தீனுக்காக உழைக்கிறோம் என்று பறைசாற்றிக் கொண்டிருக்கும் ஒரு பெரிய இயக்கம், நல்லதை மட்டும் எடுத்துக் கூறுங்கள் தீயது தானாகவே போய்விடும் என்று கூறிக் கொண்டிருக்கிறார்களே சிந்தியுங்கள்! இது எவ்வகையில் தீனுக்கான முயற்சியாக இருக்கும்.

    அல்லாஹ்(ஜல்)தன் பரிசுத்த குர்ஆனில் கூறுகிறான்: (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு மக்களை ஏவுபவர்களாகவும், தீயதைக் கொண்டு விலக்குபவர்களாகவும் உங்களில் ஒரு கூட்டத்தார் இருக்கட்டும். இன்னும் அவர்களே வெற்றி பெற்றோர் ஆவர்.

அல்குர்ஆன்்3:104-3:110)

    இந்தளவுக்கு அல்லாஹ்(ஜல்) நன்மையை ஏவுவதை போலவே தீயதையும் தடுக்க வேண்டும் என்ற கட்டளை இட்டபின் எவருக்காவது இதை மாற்றிச் சொல்ல அங்கீகாரம் உள்ளதா? இல்லை அருகதைதான் உள்ளதா? அப்படிக் கூறக் கூடியவர்களைப் பின்பற்றுவது சரிதானா சிந்தியுங்கள்!

    மேலும் அல்லாஹ்(ஜல்) கூறுகிறான்: அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றி கட்டனையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்ராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே அல்லாஹ்வுக்கும், அவனுடைய ரசூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார். (அல்குர்ஆன் 33:36)

    இந்நிலையில் தீமையை எடுத்துக் கூறாதீர்கள் என்ற சொல்லக் கூடியவர்களை அல்லாஹ் கூறுகிறான் அவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார்கள் என்று. அவர்களைப் பின்பற்றுவது எவ்வகையில் நியாயமாகும். அப்படியே பின்பற்றினாலும் அது அல்லாஹ்வுடைய தீனுக்கான உழைப்பு என்று எப்படி கருத முடியும்.  அப்படி ஒவ்வொருவரும் தன்  இஷ்டத்திற்கு குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் மாறுபட்ட சட்டங்களை உருவாக்கியதனாலேயே தீனில் குழப்பதை உண்டாக்குகின்றார்கள்; தீனை விட்டு பிரிந்தும் தனி இயக்கங்களையும் ஆரம்பித்து விடுகிறார்கள். அதற்குப் பின் நாங்கள் கூறுவது தான் சரி. நாங்களே உண்மையான தீனின் நேர்வழியிவ் இருக்கின்றோம் என்று பறைசாற்றுவதும் இல்லாமல் நாங்கள் தான் உண்மையான முஃமின் என்று பெருமைபடக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.

    அல்லாஹ் அவன் பரிசுத்த திருமறையில் கூறுகிறார்கள்: எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி(பல) பிரிவுகளாக பிரிந்து விட்டனரே; (அவர்களில் ஆகிவிட வேண்டாம் அவ்வாறு பிரிந்து) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிட மிருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள்.

அல்குர்ஆன் 30:32)்.

    சிந்தியுங்கள்!

    மேலும் ஊர் வழக்கம், நடைமுறைக் கல்யாணம் என்று முஸ்லிம்களில் பெரும்பாலோர் கூறுகிறார்கள். இது எவ்வகையில் நபிவழி ஆகும் என்பதை நாம் அறியோம்; இவர்கள் கூறுகிறார்கள், நபி(ஸல்) அவர்களை பின்பற்றுவதில் தான் வெற்றியுண்டு என்று. இதை நாமும் நூற்றக்கு நூறு ஏற்றுக் கொள்கிறோம்.இதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ் என்று சொல்வது அர்த்தமற்றுப் போய்விடும். ஆனால் நாம் கூறுவது என்னவென்றால் நபி வழியை அல்லவா மக்கள் மத்தியில் எடுத்து வைக்க வேண்டும். அதற்கு மாற்றமாக இவர்களே ஒரு வழியை உண்டாக்கி செயல்படுவது எவ்வகையில் சரியாகும்.

    உதாரணமாக இவர்கள் கல்யாணம் செய்யும் முறை: பெண் வீட்டாரிடம் பெருந்தொகை கைக்கூலியாக வாங்கி, அந்தப் பணத்தை வாரி இறைத்து வீண் ஆடம்பரம், வீண் செலவுகள் செய்து, பெரும் விளம்பரப்படுத்தி திருமணத்தை மேளதாளங்களுடன், கச்சேரிகளுடன் தாம தூம் என்று நடத்துகின்றனர். ஆனால் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் கல்யாணம் எவ்வகையில் நடந்தது என்றால்.. கல்யாணத்திற்கு என்று எவரையும் அழைத்ததாக சரித்திரமே கிடையாது. உதாரணமாக திருமணத்தை அனாச்சார, ஆடம்பர, வீண்விரயங்களுடன் நடத்துவது, பெண் வயதிற்கு வந்து விட்டாள் என்று கூட்டத்தை கூட்டி சீரும், சிறப்புடன் பிரபலப்பத்துவது, பையனுக்கு கத்னா பண்ணுவதை ஜனங்கள் மத்தியில் பிரபலப்படுத்துவது ஆகியவை இஸ்லாத்தில் இல்லாத செயல்கள் ஆகும். உதாரணமாக இஸ்லாத்தில் ஒரு கல்யாணத்திற்கு தேவை பெண்ணுக்கு ஒரு வலி, பெண்ணின் சம்மதம், மஹர் நிர்ணயிப்பது, இரண்டு சாட்சிகள் இவை போதுமானதாக உள்ளது.

    (பெண்ணுக்கு மஹர் நிர்ணயிப்பது ஒரு முக்கியமான அம்சமாக உள்ளது.அவை (அ) பெண் கேட்கக் கூடிய மஹரை ஆண் கொடுக்க தகுதி பெற்றவரா என்று அறிந்து கொள்ள. (ஆ) மஹரை கொடுப்பதிலிருந்து அப்பெண்ணை பராமரிக்க அந்த ஆண் தகுதி  பெற்றவர் தானா என்று அறிந்து  கொள்ள. (இ) அப்பெண்ணை அந்த ஆண் தலாக் கூறிவிட்டாலோ,  அல்லது கணவன் இறந்து விட்டாலோ அப்பெண் அந்த மஹர் தொகையை ஜீவனாம்சமாக எடுத்துக் கொண்டு வாழ்க்கையை தொடர உதவியாக  இருக்கவும் உள்ளது. இதை எத்தனை முஃமினான குடும்பத்தினர்கள் உணர்ந்துள்ளார்கள்.) உதாரணமாக அப்துர்ரஹ்மான் பின் அவூப்(ரழி) அவர்களை பற்றி நாம் அனைவரும் அறிந்துள்ளோம். இவர் எவ்வளவு நெருங்கிய நண்பராகவும் இஸ்லாத்திற்காக எவ்வளவு நெருங்கிய நண்பராகவும் இஸ்லாத்திற்காக எவ்வளவு அரிய தியாகங்களைச் செய்துள்ளார்கள் என்பதையும் அறிந்து உள்ளோம். அப்படியிருக்க ஒரு நாள் இவர் புத்தாடை அணிந்தவராக, நறுமணத்துடன்  நபி(ஸல்) அவர்கள் அப்துர்ரஹ்மான் பின் அவூப்(ரழி) யை பார்த்து ஒ அப்துர் ரஹ்மானே  என்ன விஷேசம் என்று கேட்க அப்துர்ரஹ்மான பின் அவூப்(ரழி) யா! ரசூலுல்லாஹ் நேற்று  நான் திருமணம் செய்து கொண்டேன் என்று கூற, நபி(ஸல்) அவர்கள் ஓ! அப்துர்ரஹ்மான்(ரழி) யா! ரசூலுல்லாஹ் ஒரு பேரீத்தம்பழ கொட்டையளவு தங்கத்தை மஹராக கொடுத்தேன் என்று கூற, ஓ! அப்துர்ரஹ்மானே அப்படியாயின் ஒரு ஆட்டையேனும் அறுத்து வலீமா விருந்தை கொடுப்பாயா என்று ஏவினார்கள். இந்த சஹீஹான ஹதீஸ் சஹீஹுல் புகரீயிலும் மற்ற ஹதீஸ்  தொகுப்புகளிலும் உள்ளது.

    சகோதர, சகோதரிகளே! சிந்தியுங்கள்! மதீனா அன்றைய  தினம் ஒரு சிறிய ஊராக இருந்தது. அங்கே நபி(ஸல்) அவர்களும் இருந்தார்கள். அப்படி இருக்க அப்துர்ரஹ்மான்  பின் அவூப்(ரழி)  நபி(ஸல்) அவர்களுடைய துஆ பரக்கத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றோ அவர்கள் தன் கல்யாணத்தில் பங்கேற்றுக் கொள்ள வேண்டும் என்றோ, அவர்களுக்கு எவ்வகையான அழைப்பும் கொடுக்கவில்லை. கடைசி பட்சம் தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று அறிவிப்பு கூட கொடுக்கவில்லை.

    2. நபி(ஸல்) சபீயா(ரழி) அவர்களை திருமணம் செய்த பொழுது கைபருக்கும் மதீனாவுக்கும் இடையில் ஓர் இடத்தில் ரசூல்(ஸல்) தம் தோழர்களுடன் தங்கியிருந்தார்கள். அவர்களும், அவர்கள் தோழர்களும் பக்கம் பக்கமாக, நெருங்கிய அருகாமையில் உள்ள தனித் தனி கூடாரங்களில் தங்கியிருந்தார்கள். அப்பொழுது கூட ரசூல்(ஸல்) தான் சபியா(ரழி)வை திருமணம செய்ய போவதாக எவருக்கும் அழைப்பு கொடுக்கவுமில்லை. அறிவிப்பு செய்யவுமில்லை.

    சபியா(ரழி) அவர்களுடன் மூன்ற தினங்கள் கழிந்த பின் ஒரு நாள் தன் சஹாக்ககளிடம் வந்து ஒரு சுப்ராவை(தோலை) விரித்து உங்களிடம் சாப்பிடக் கூடிய பொருட்கள் ஏதேனும் இருந்தால் இவ்விடம் கொண்டு வந்து வையுங்கள் என்று கூறினார்கள். அப்பொழுது சஹாபாக்கள் பேரீத்தம் பழம், வெண்ணெய் காய்ந்த பால் கட்டி கொண்டு வந்து வைத்தார்கள். அப்பொழுது நபி(ஸல்) இதுதான் என்னுடைய வலீமா என்று அறிவித்தார்கள்.  சஹீஹில்(V.7/H.89?P.65)

    சிந்தியுங்கள்! நபி(ஸல்) ஒரு எச்சில் துப்பினாலும் அதனுடைய முறையை தெளிவான முறையில் ஜனங்களுக்கு எத்தி வைத்தவர்கள். உதாரணமாக மேல் நோக்கி துப்பாதீர்கள், வலது பக்கம் துப்பாதீர்கள், முன் புறமாக துப்பாதீர்கள், கிப்லாவை நோக்கி துப்பாதீர்கள். மாறாக இடது பக்கமாக துப்புங்கள், அல்லது உங்கள் கால் அடியில் துப்பி மண்ணை தள்ளி மூடிவிடுங்கள் என்று கூறியவர்கள் . கல்யாணம் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான அம்சத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்று சொல்லாமல் சென்று இருப்பார்கள் என்று நீங்கள்  எண்ணுகிறீர்களா? நிச்சயமாக கிடையாது. அதை தெள்ளத் தெளிவாக நமக்கு அறிவித்து சென்று இருக்கிறார்கள்.

    பொதுவாக கல்யாணம் பெண்ணை முடிவு செய்ததற்குப் பின் கண்டிப்பாக அந்த பெண்ணிடம் ஈஜாப்கபூல் (சம்மதம்) பெற வேண்டும். அப்படியில்லையேல் அந்த கல்யாணம் செல்லாது. ஆதாரம்: கன்ஸா பின்த் கின்தாம் அல்அன்சாரியா ரசூல்(ஸல்) அவர்களிடம் வந்து தன் தகப்பனார் தன்னுடைய விருப்பத்திற்கு மாற்றமாக ஒரு மனிதருக்கு என்னை நிக்காஹ் செய்து கொடுத்து விட்டார் என்று கூறினார். அப்பொழுது ரசூல்(ஸல்) அந்த கல்யாணத்தை ரத்து செய்தார்கள். இக்கல்யாணம் செல்லாது என்றும் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அப்துர்ரஹ்மான பின் யஜீத், மஜாமி பின் யஜீத், நூல்: புகரீ V.7./ P.52.53/?H.69.70)

    இப்படியிருக்க ஒரு பெண்ணின் திருமணத்திற்கு அந்த பெண்ணின் சம்மதம் எவ்வளவு ஒரு முக்கியமான அம்சமாக இருக்கிறது என்று எத்தனை பேர் அறிந்து இருக்கிறார்கள். எத்தனை பெண்களை தன் விருப்பத்திற்கு மாற்றமாக வலுக்கட்டாயமாக தாம் விரும்பாத ஒரு ஆணுக்கு மணமுடித்து வைத்திருக்கிறார்கள். இக்கல்யாணத்தின் நிலைகளை சிந்தியுங்கள். இவ்வளவு தெளிவாக இஸ்லாம் ஒரு தகப்பனுக்குக் கூட தன் பெண்ணுடைய விருப்பத்திற்க மாறாக நிகாஹ் செய்து கொடுப்பதை வன்மையகாக் கண்டிக்கிறது. அந்தக் கல்யாணத்தை ரத்தும் செய்கிறது.

    அடுத்தபடியாக பெண் மஹரை நிர்ணயிப்பது மிகவும் முக்கியமான அம்சமாக உள்ளது. இந்த மஹரை நிர்ணயிப்பது மணம் செய்து கொள்ளக் கூடிய பெண்ணின் தனி உரிமையாக உள்ளது. இதை அந்தப் பெண் விரும்பினால் விட்டுக் கொடுக்கலாம். தான் விரும்பியதை கேட்கவும் செய்யலாம். அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: “நீங்கள்  (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள். அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்குக் கொடுத்தால் அதை தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள்.” (அல்குர்ஆன் 4:4).

    உமர்(ரழி) அவர்கள் காலத்தில் பெண்கள் அதிகமாக மஹரை கேட்கக் கூடியவர்களாக ஆகிவிட்ட காரணத்தினால், அதிகமான இளைஞர்கள் நிக்காஹ் செய்து கொள்வதற்கு சிரமப்பட்டார்கள்; உமர்(ரழி) அவர்களிடம் வந்து இதை முறையிடவும் செய்தார்கள். பெண்கள் மிகவும்  அதிகமான மஹர் தொகையை கேட்பதனால் நாங்கள் திருமணம் செய்து கொள்ள இயலவில்லை. ஆகையால் நீங்கள் இதற்கு ஒரு வரம்பு நிர்ணயித்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டார்கள். இதன் அடிப்படையில் உமர்(ரழி) அவர்கள் ஜும்ஆவுடைய தினத்தன்று மிம்பரின் மீது பயான் செய்து கொண்டிருக்கும் பொழுது பெண்கள் அதிகமாக மஹரை கேட்பதினால் ஆண்கள் நிகாஹ் செய்து கொள்வது கடினமாக உள்ளது. ஆதலால் பெண்கள் நானூறு திர்ஹமுக்க மேல் கேட்கக் கூடாது என்று நான் நிர்ணயிக்கிறேன் என்று கூறினார்கள். அப்பொழுது ஒரு பெண்மணி இது உங்களுடைய அபிப்ராயம் தானே, ஏனெனில் அல்லாஹ் அவனுடைய திருமறையில் கூறுகிறான்: பெண்களுக்கு (மஹராக) ஓர் பொற்குவியலையே கொடுத்தாலும் அதை நீங்கள் திரும்பி பெறாதீர்கள் என்பதாக இதை நிர்ணயிக்கிறீர்கள் என்று கேட்டார்கள். அப்பொழுதே உமர்(ரழி) தன் குற்றத்தை உணர்ந்தவராக இப்பெண்மணி கூறுவதே உண்மையாகும் என்று கூறி மஹரை நிர்ணயிக்க நிகாஹ் செய்து கொள்ளும் பெண்ணே தகுதியுயைவள் என்பதை பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்கள்.

    இந்த உரிமையை எத்தனை பெண்களை அறிந்து இருக்கிறார்கள்? இன்னும் இதற்கு மாறான முறையில் மஹரையும் கொடுக்காமல், பெண் வீட்டாரிடம் இருந்து  வரதட்சணையை பெற்றுக் கொண்டு நடத்தக் கூடிய திருமணங்கள் எத்தனையோ உள்ளன. இவர்களும் தாங்கள் முஸ்லிம்கள், நாங்களும் கலிமா கூறியுள்ளோம் என்று மார்தட்டி பெருமை பாராட்டுகின்றார்கள்.

    இதற்கு அனைத்தையும் விட ஊர் ஊராக அழைத்து வீடு வீடாக சென்று திருமணத்திற்கு அழைப்பிதழை வழங்கி ஒவ்வொருவரையாக அழைத்து, எவ்வளவு சீர்களையும், சடங்குகளையும் செயகிறார்கள். இன்னும் பெரிய விருந்துகளையும் அளித்து இன்னார், இன்னாரும் இணையப் போகிறார்கள் என்று அனைவர் மத்தியிலும் அறிவிக்கின்றார்கள். இது எவ்வகையில் இஸ்லாமிய முறையாகும். இன்னும் கேட்டால் ரசூல் கரீம்(ஸல்) கல்யாணத்தை பகிரங்கமான முறையில் விளம்பரப்படுத்த கூறியிருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இவர்கள் மாற்றார் மதத்தினுடைய குஃப்ரான, ஷிர்க்கான பழக்க வழக்கங்களை நிலை நாட்டியதும் அல்லாமல் நபி(ஸல்) கூறியதாக பொய் கூறுகிறார்கள். இவர்களைக், குறித்து அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: (நபியே!) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீர் பார்க்கவில்லையா? இவர்கள் சிலைகளையும், சூன்யத்தையும், ஷைத்தானையும், நம்பி காஃபிர்களைக் குறித்து இவர்கள் தாம் நம்பிக்கை கொண்டவர்களைக் குறித்து இவர்கள் தாம்  நம்பிக்கை கொண்டவர்களை விட நேரான பாதையில் இருக்கிறார்கள் என்று கூறுகின்றனர். இவர்களைத்தான் அல்லாஹ் சபிக்கிறான்; எவர்களை  அல்லாஹ் சபிக்கிறானோ அவர்களுக்கு உதவி செய்பவர் எவரையும் நீர் காணமாட்டீர். (அல்குர்ஆன் 4:51,52)

    நபி(ஸல்) அவர்கள் இவ்வளவு ஒரு அழகிய முறையில் திருமணத்தை நடத்த வழிகாட்டி ஒரு அரசனானாலும், ஆண்டியானாலும், திருமணத்தை தமக்கு எச்சிரமும் இன்றி செய்து கொள்வதற்கு வழிகாட்டியதற்கு பின் அதை தூக்கி எறிந்து விட்டு இஸ்லாத்தை எதிர்க்கக் கூடியவர்களுடைய வழியை எடுத்து இம்முறைதான் நடைமுறைக்கு ஏற்றது என்று ஒரு முஃமின் கூறுவது வியப்பாக உள்ளது. இவர் என்ன கூறுகிறார் என்று நாம் சிந்திக்காமல் செயல்படுகிறோம். இவர் கூறுகிறார் அல்லாஹ்வும், ரசூலும் கொடுத்த/கூறிய வழிமுறை இக்கால கட்டத்திற்கு சரிவராது. காஃபிர்கள் உடைய பழக்க வழக்கம் தான் சரியாக உள்ளது. ஆகையினால் அதை நாங்கள் எடுத்து நடக்கிறோம். நீங்களும் எங்களை ஆதரியுங்கள் என்று கூறுகிறார்கள்.

    நபி(ஸல்) கல்யாணத்தை பகிரங்கமான முறையில் விளம்பரப்படுத்துங்கள் என்று கூறி அப்படியே விட்டு விடவில்லை. அதை எப்படி செயல்படுத்த வேண்டும் (விளம்பரப்படுத்தவேண்டும்) என்பதையும் தெளிவான முறையில் காண்பித்துள்ளார்கள். ரசூல்(ஸல்) அவர்கள் காலத்திலும், சஹாபாக்களின் காலத்திலும் கல்யாண விருந்து என்பது வலிமா விருந்தாகவே இருந்தது.

    இந்த ஒரே ஒரு வலிமா விருந்தைத்தான் கல்யாணத்தில் நபி(ஸல்) அங்கீகரித்தும், ஏவியும், கொடுத்தும் உள்ளார்கள். உதாரணமாக 1. நபி(ஸல்) கொடுத்த வலிமா விருந்துகளில் ஜைனப்(ரழி) அவர்களை மணம் முடித்த பின் கொடுத்த சிறப்பான  விருந்தை நான் பார்க்கவில்லை. அதற்கென  ரசூல்(ஸல்) ஓர் ஆட்டை அறுத்து விருந்து அளித்தார்கள், அந்த விருந்தில் ரொட்டியும்,  இறைச்சியும் வழங்கப்பட்டது. அறிவிப்பவர்: அனஸ் இப்ன மாலிக்(ரழி) நூல்கள்: புகாரீ, முஸ்லிம், அபூதாவூத்,  இப்னமாஜ்ஜா, பைஹகி, அஹ்மத்.

    2.சபியா(ரழி) கூறுகிறார்கள்: முஹம்மத்(ஸல்) அவர்கள் ஒரு சில பெண்களை மணம் முடித்ததற்கு பின் பார்லியால் செய்யப்பட்ட உணவுகளை விருந்தாக (வலிமாவாக) அருளினார்கள்.

அறிவிப்பவர்: சபியா பின்த் ஷைபா(ரழி), நூல் : புகாரீ.

    இதிலிருந்து நாம் தெளிவாக அறிந்து கொள்வது என்னவென்றால், கல்யாணத்திற்கு அழைப்பது என்ற பழக்கம் இஸ்லாத்தில் கிடையவே கிடையாது. மாறாக வலிமாவை இஸ்லாம் வலியுறுத்துகிறது. இதில் இன்னார் இன்னார் நிக்காஹ் செய்து கொண்டு ஹலாலான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை பொதுமக்கள் பகிரங்கமாக அறிந்து கொள்ள விளம்பரபடுத்த, கொடுக்கப்படும் விருந்தே இவ்வலிமா விருந்தாகும். இந்த விருந்திற்கு ஜனங்களை அழைத்து ஒரு சில பேரீத்தம் பழங்களையோ, மிட்டாய்களையோ வழங்கினாலும் போதும்; இல்லை ஆடுகளை அறுத்து விருந்து கொடுத்தாலும் தகும். இன்னும் ரசூல்(ஸல்), சபியா(ரழி) அவர்களை மணம் முடித்ததற்கு பின் உங்களில் யார்யாரிடம் உணவுப் பொருட்கள் உள்ளதோ அதைக் கொண்டு வந்து சுப்ராவில் வையுங்கள் என்று கூறியதின் அடிப்படையில் இந்த விருந்தை ஒரு மணமகன் கொடுப்பது சுன்னத்தாக இருக்கிறது. ஆயினும் பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும், உற்றார் உறவினரும், நண்பரும் அனைவரும் சேர்ந்தும் இவ்விருந்தைக் கொடுக்கலாம். பொதுவாக இவ்விருந்தின் நோக்கம் கல்யாணம் முடிந்து இத்தம்பதிகள் ஹலாலான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிவிப்பதற்காகவே கொடுக்கப்படவேண்டும்.

    அல்லாஹ்(ஜல்) கூறுகிறான்: அல்லாஹ்வுடைய கிருபையும், அவனுடைய அருளும் உங்கள் மீதில்லாதிருந்தால், உங்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் ஷைத்தானையே பின்பற்றியிருப்பார்கள்.

(அல்குர்ஆன் 4:83)

    சகோதர, சகோதரிகளே! சிந்தித்து பாருங்கள்!

       அல்லாஹ்(ஜல்) அவனுடைய மாபெரும் கிருபையால் இவ்வேதத்தை (தீனுலல் இஸ்லாத்தை) ஆதம்(அலை) அவர்களுக்கு மட்டும் அருளியிருந்தால், அவர்களுக்குப்பின் எவருக்கும் கொடுக்காமல் இருந்தால்  நம் கதி என்னவாகியிருக்கும்? ஆனால் எப்படி அல்லாஹ்(ஜல்) நம் உயிரை காக்க பரிசுத்தமான தண்ணீர் எவ்வளவு அத்தியாவசியமான ஒரு பொருளாக உள்ளதோ, அதை மனிதர்கள் எத்தனை வகையில் அசுத்தப்படுத்தினாலும், எதை எதையோ அதில் கழுவுகிறார்கள்; எதை எதையோ அதில் கரைத்து விடுகிறார்கள். அப்படியிருந்தும் அல்லாஹ்(ஜல்) அதை சூரியனின் வெப்பத்தினால் நீராவியாக மாற்றி மேகங்களாக அருளி தூய்மையான நீராக மீண்டும் மீண்டும் நமக்கு கொடுப்பது பருகச் செய்கிறான்.

    இதைப்போல்தான் அல்லாஹ்(ஜல்) அவன் அருளிய உண்மையை, தீனை, வேதத்தை. நபிமார்கள் மூலமாக மீண்டும் மீண்டும்  தூய்மையான முறையில் கொடுத்துக் கொண்டேயிருந்தான். தனது இறுதிநபியைக் கொண்டு இறுதி வேதத்தைக் கொடுத்து, அதனை உலகம் அழியும் வரை பாதுகாக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டிருக்கிறான். ஒவ்வொரு நபிமார்களின் காலத்திற்குப் பின்னும் ஷைத்தான் எவ்வளவோ சூழ்ச்சி செய்து மக்களை வழி கெடுக்க – அல்லாஹ்விடம் அவன் செய்த சபதத்தை நிலை நாட்ட முயலுகின்றான். அச்சூழ்ச்சியில் பெரும்பாலானோர் சிக்கியும் கொள்கிறார்கள். இவர்கள் ஷைத்தான் செய்த சபதத்திற்கு உடந்தையாகவும் ஆகிக் கொள்கிறார்கள். அவன்  கூறியதைப் போல் அவர்களை வழி கெடுத்து நரகிலும் கொண்டு தள்ளுவான். நாம் எவ்வளவு முன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்? எவ்வளவு சர்வசாதாரணமாக எவர் எவரோ கூறிய அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும்  மாற்றமான வழியில் சென்று கொண்டிருக்கிறோம். மெய்ப்பிப்பது என்றால் அல்லாஹ்வுடைய சொல்லுக்கு எம்மாற்றமும் செய்யாமலும், நபி(ஸல்) காட்டிய வழிமுறையை முழுமையாக பின்பற்றக் கூடியவராக இருப்பதேயாகும். அல்லாஹ்வுக்கு மாறு செய்து கொண்டு, நபி(ஸல்) காட்டிய வழிமுறையை தூக்கி எறிந்து விட்டு மாற்றார் மதத்தின் வழிமுறைகளை மதித்து எடுத்து நடந்து ஓங்கச் செய்து கொண்டு நாங்கள் முஸ்லிம்கள் என்று கூறுவது எவ்வளவு அறிவீனமாகும்.

    அல்லாஹ் கூறுகிறான்: நான் தூய்மையானவன். நான் சொல்லுவது தூய்மையானதாகும். தூய்மையானவற்றையே நான் ஏற்றக் கொள்வேன் என்று. அப்படியிருக்க நாம் எந்த அளவுக்கு மாறு செய்து கொண்டு, நபி(ஸல்) காட்டிய வழிமுறையை தூக்கி எறிந்து விட்டு மாற்றார் மதத்தின் வழிமுறையைகளை  மதித்து எடுத்து நடந்து ஓங்கச் செய்து கொண்டு நாங்கள் முஸ்லிம்கள் என்று கூறுவது எவ்வளவு அறிவீனமாகும்.

    அல்லாஹ் கூறுகிறான்: நான் தூய்மையானவன். நான் சொல்லுவது தூய்மையானதாகும். தூய்மையானவற்றையே நான் ஏற்றுக் கொள்வேன் என்று. அப்படியிருக்க நாம் எந்த அளவுக்கு குர்ஆனையும்,  ஹதீஸையும் நன்கு விளங்கி செயல்படக் கூடியவர்களாக இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் ஷைத்தான் நம்மை ஏமாற்றுவது மிக்க லேசான காரியமாகிவிடும்.

    அல்லாஹ் நம் அனைவரையும் ஸைத்தானினதும் அவனுக்கு அடிபணிந்தவர்களினதும்  சூழ்ச்சியிலிருந்தும், பித்னாக்களிலிருந்தும், பாவமான காரியங்களில் இருந்தும் பாதுகாத்து உண்மையான முஃமின்களாக, மரணிக்க நல்லருள் புரிவானாக! ஆமீன்!

Previous post:

Next post: