ஐயமும்! தெளிவும்!!

ஐயம்: சவூதி அரேபியாவில் பெண்கள் கண்களைத் தவிர பிற பாகங்கள் அனைத்தையும் துணியினால் மறைத்து ‘ஹிஜாப்’ முறையை பேணி வருகிறார்கள். “முகத்தையும், கைகளையும் மறைக்க தேவையில்லை” அவ்வாறு மறைப்பது கண்டிப்பாக ‘பித்அத்து’தான் (அனைத்து பித்அத்துகளும் வழிகேடுகள்) என்று தவ்ஹீது சகோதரர்கள் சிலர் வாதிடுகின்றனர்.இது சரியா? விளக்கம் கோருகின்றேன்.

H. சைய்யது நிஜாமுல்லாஹ், சேலம்-1.

தெளிவு: சவூதி அரேபியாவிலுள்ள ஆலிம்கள் முகத்தையும் மறைக்க வேண்டும் என்றே ஃபத்வா கொடுத்து வருகின்றனர். ஆனால் அதற்கு தெளிவான குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. முகமும் அழகும், வசீகரமும் உள்ளதாக இருப்பதால் அது மறைக்கப்பட வேண்டும் என்ற அவர்களின் ஊகத்தைத் தருகிறார்கள்.

    33:59 இறைவாக்கிற்கும் 24:31 இறைவாக்கிற்கும் தங்கள் சொந்த விளக்கங்களைப் புகுத்தி முகத்தை மறைப்பதை நியாயப்படுத்துகின்றனர். இவர்களின் மார்க்கத் தீர்ப்பு ஏற்கத்தக்க நிலையில் இல்லை. இது பற்றி விரிவாக அந்நஜாத் ஜூலை93, ஆகஸ்ட் 93, செப்டம்பர் 93, நவம்பர் 93 ஆகிய நான்கு இதழ்களில் எழுதியுள்ளோம். முஸ்லிம் பெண்கள் முகத்தையும் மறைத்து பர்தா அணிவதால் ஏற்படும் பெரும் தீங்குகளில் ஒன்றினை அதாவது நடந்த உண்மைச் சம்பவத்தை அந்நஜாத் அக்.94 பக்கம் 28-ல் வெளியிட்டுள்ளோம். அவை அனைத்தையும் பார்வையிட்டு நீங்களே ஒரு முடிவுக்கு வந்து விடலாம். இந்த விஷயத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ள சகோதரர்களின் கூற்று குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலானதே.

———————————————

ஐயம்: எனக்கு வெகு நாட்களாக ஒரு கேள்வி என் மனதில் உள்ளது. அதாவது திருமறையில்

1. கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியது. தான் நாடியவரை அவன் நேர்வழியில் நடத்திச் செல்வான்.(அல்குர்ஆன் 2:142)

2. (நபியே!) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம் கடமையல்ல. ஆனால் தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறான். (அல்குர்ஆன் 2:272)

 3. இதுவே அல்லாஹ்வின் நேர்வழியாகும். தன் அடியார்களில் அவன் யாரை விரும்புகிறானோ, அவர்களை அதில் செலுத்துகிறான். (அல்குர்ஆன் 6:88)

 4. அல்லாஹ் (உங்களை) தாருஸ்ஸலாமை  நோக்கி அழைக்கிறான்; அவன், தான் நாடியவரை நேர்வழியில் செலுத்துகிறான். (அல்குர்ஆன் 10:2)

 5. அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளியின் பால் நடத்திச் செல்கிறான்.(அல்குர்ஆன் 24:35)

 6. நிச்சயமாக நாம் தெளிவுபடுத்தும் வசனங்களையே இறக்கியிருக்கின்றோம். மேலும் தான் நாடியவரை அல்லாஹ் நேர்வழிப்படுத்துகிறான். (அல்குர்ஆன் 24:46) (மேலும் பார்க்க 2:213; 14:4; 28:56; 42:13) இவ்வாறு பல வசனங்களில் பல இடங்களில் அல்லாஹ் தான் நாடியவருக்கு  “ஹிதாயத்” அளிக்கின்றான். தான் நாடியவருக்கு நேர் வழியை கொடுக்கின்றான் என்று கூறுகிறான். அப்படி இருந்தால் நேர்வழியில் இல்லாதவர்களை அல்லாஹ் தன் நாட்டத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது.

    அகிலங்களின் அதிபதியான அவன் தன்னுடைய (மனித) படைப்புகளில் ஒரு சிலருக்கு நேர்வழியும் மற்றம் சிலருக்கு வழிகேட்டிலும் நடத்துவது, அல்லாஹ்வின் நாட்டத்திற்கு, அல்லாஹ்வின் நியதிக்கு சரியாக இருக்குமா? (அல்லாஹ் காப்பானாக) மேலும் பிறக்கும் போதே தலைவிதியினை நிர்ணயித்து விடுகிறான் என்றால் எப்படி?

    அப்படி என்றால் வழிகேட்டில் உள்ளவர்கள் மீது தவறு எப்படி இருக்க முடியும்? இதற்கு பதில் தர வேண்டும்.

    இந்தக் கேள்வியினை என்னுடைய மாற்றுமத நண்பர் என்னிடம் கேட்டார். எனக்கு தெரிந்த அளவு அவருக்கு கூறிவிட்டேன்.

    இருப்பினும் நான் தெளிவு பெறவில்லை. தயவு செய்து எனக்கு தெளிவு பெற செய்யுங்கள்.     M. அப்துல் வஹ்ஹாப், சென்னை -72

தெளிவு: ஒரு முஸ்லிம் (ஈமான்) விசுவாசம் கொள்ள வேண்டிய விஷயங்களில் ஒன்று நீங்கள் கேட்டுள்ள நன்மை, தீமை அனைத்தும் அல்லாஹ்வின் புறத்திலிருந்தேயாகும். அதாவது விதி பற்றிய விஷயமாகும். இதனை மனித அறிவு கொண்டு முற்றிலுமாக விளங்க முடியாது. ஒரு முஸ்லிமைப் பொறுத்த மட்டிலும் அதனை அப்படியே விசுவாசம் கொள்வதே முறையாகும். ஆனால் நீங்கள் கேட்டிருப்பது போல் மாற்று மத சகோதரர்கள் கேட்கும் போது அவர்கள் ஏற்றக் கொள்ளும் பதிலை அளிக்க வேண்டியது நமது கடமைதான்.

    இது அல்லாஹ்வின் (இறைவனின்) நிறைவான அறிவைப் பற்றிய விஷயமாகும். ஒரு மனிதன் உலகில் பிறந்து வாழ்ந்து மறைந்த பின்னரே அவன் சொர்க்கவாதியா, நரகவாதியா என்ற விஷயத்தை அல்லாஹ் தீர்மானிக்க முடியும் என்ற நிலையிலிருந்தால், அல்லாஹ் அறிவில் குறைந்தவன்; நிறைவான அறிவுடையவன் அல்ல; இறைவனை முக்காலமும் அறிந்தவன் என்று சொல்லுவது தவறு; நாளை நடப்பதை அல்லாஹ்வும் அறியமாட்டான் என்றெல்லாம் இறைவனைப் பற்றி குறைவாக மதிப்பிட வேண்டி வரும். முக்காலமும் அறிந்தவன் என்றால் பின்னால் நடக்க இருப்பதையும் அல்லாஹ் அறிவான் என்பதே சரியாகும். அதனால் மனிதன் செய்யும் தவறுகளுக்கு அல்லாஹ்வே காரணம் என்று விளங்குவது தவறாகும். உதாரணமாக தெளிந்த அறிவுடைய ஓர் ஆசிரியர்  தன்னிடம் படிக்கும் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை இப்படித்தான் அமையும் என்று கூறுகிறார் என்று வைத்துக்  கொள்வோம். அவர் மிகச் சரியான முறையில் கணித்துச் சொல்வதாக இருந்தால் அவர் சொன்னது அப்படியே நடப்பதை பின்னால் பார்க்கவும் செய்யலாம். இதனால் அந்த ஆசிரியர் இப்படி கணித்துச் சொன்னதால் தான் இப்படி ஆயிற்று. அதனால் அந்த ஆசிரியரே அதற்குப் பொறுப்பு என்று சொல்ல முடியுமா? ஒரு போதும் முடியாது.

    ஆசிரியர் தனது தெளிந்த அறிவைக் கொண்டு முடிவு செய்தாலும், அதற்கும் அந்த மாணவர்களின் செயல்பாடுகளுக்கும் சிறிதும் சம்பந்தமில்லை. அந்த மாணவர்களின் செயல்பாடுகளை வைத்தே அவர்களின் எதிர்காலம் அமைகிறது. அந்த ஆசிரியரைக் குற்றப்படுத்த முடியாது. இதே போல் சர்வ வல்லமை மிக்க அல்லாஹ்  தனது தீர்க்கமான  முழுமையான அறிவைக் கொண்டு மனிதர்களின் இறுதி முடிவை அறிந்து வைத்திருக்கிறான். மற்றபடி மனிதர்களின் தீய செயல்பாடுகளுக்கு அல்லாஹ் காரணமாகவில்லை என்பதே சரியாகும்.

    (நபியே!) நீர் நேசிப்பவர்களை(யெல்லாம்) நிச்சயமாக நேர்வழியில் செலுத்த உம்மால் முடியாது: ஆனால், அல்லாஹ் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான்; மேலும் நேர்வழி பெற்றவர்களை அவனே நன்கறிகிறான்(28:56) இந்த இறைவாக்கு இதை  உறுதிப்படுத்துகிறது.

“மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.”

Previous post:

Next post: