இறை அத்தாட்சி சூனியத்தை வென்றது
மறு பதிப்பு :
முஹிப்புல் இஸ்லாம்
சிந்திக்கத் தூண்டுவதே இறை அத்தாட்சி?
இறைநெறிநூல் காட்டும் அற்புதங்கள் தான் இறை அத்தாட்சிகளாகும்! இறை அத்தாட்சி எதுவாக இருந்தாலும் மனிதர்களைச் சிந்திக்க தூண்டி படிப்பினை பெற வைக்கும் அவ்வித அத்தாட்சிகள் ஒருக்காலும் மூட நம்பிக்கைகளுக்கு வித்திடாது. மாறாக, மூட நம்பிக்கைகளையும், அவைகளின் அடியயாட்டி உருவாகும் மூட சடங்கு சம்பிரதாயங் களையும் கூண்டோடு ஒழிக்கும்.
இறை அத்தாட்சிகளுக்குத் தெள்ளத் தெளிவான எடுத்துக்காட்டுகளாய் நபிமார்கள் வழியாக இறைவன் நிகழ்த்திக் காட்டிய அற்புதங்கள் நிகழ்கின்றன. இறுதி இறை நெறிநூல் பல்வேறு நபிமார்கள் வழியாக நிகழ்த்தப்பட்ட அற்புதங்கள் இறை யத்தாட்சிகள் சிலவற்றை மனித சமுதாய சிந்தனைக்கு கொண்டு வந்துள்ளது.
அதில் எந்த இறை அத்தாட்சியை எடுத்து ஆராய்ந்தாலும் சரி, அந்த இறை அத்தாட்சிகள்–அற்புதங்கள் அனைத்தும் மிகவும் நுணுக்கமும், நுட்பமும் நிறைந்த வைகளாய் இருப்பது நமது ஆழ்ந்த சிந்தனைக்குரியது. அந்த இறை அத்தாட்சிகள் எதிலும், சிறிதளவும் சூனியக் கலையின் சாயல் படியாமல் பாதுகாப்பு பெற்றுள்ளதும் மாபெரும் இறை அத்தாட்சிதான்.
மக்கள் சூனியக் கலையின் விளைவுகளைப் பார்த்தும் கேட்டும் அதன் பிடியிலிருந்து விடுபட முடியாமல் சிக்க வைக்கப்பட்டுள்ளார்கள். சூனியக் கலையின் பாதிப்பிலிருந்து மனிதர்களை விடுவிப்பதும் எளிதான ஒன்றல்ல. மலையைப் புரட்டுவதைக் காட்டிலும் மகா கடின காரியம்.
இறை அத்தாட்சி சூனியத்தை வென்றது!
சூனியம் தற்காலிகமானது; உடன் அழியக் கூடியது! அதேநேரத்தில் இறை அத்தாட்சி நிரந்தரமானது. சூனியத்தை அழித்தொழிக்கும் வல்லமைமிக்கதே இறை அத்தாட்சி சூனியமாகக் காட்டப்படுபவைகள் காண்போரை பயமுறுத்தும் இறை அத்தாட்சி வியக்க வைக்கும் சிந்திக்க தூண்டும் இதை இறுதி நெறிநூல் தெளிவாக உணர்த்துகிறது.
இறைத் தூதர் மூஸா(அலை) அவர்களுக்கும், சூனியக்காரர்களுக்கும் நிகழ்ந்த கடும் போட்டியில் இறை அத்தாட்சி வென்றது. சூனியம் மண்ணைக் கவ்வியது. சூனியக் காரர்கள் போட்ட கம்புகளும், கயிறுகளும் பாம்புகளாய் நெளிவது போன்று தோற்ற மளித்தன. இதைக் கண்டு இறைத் தூதர் மூஸா(அலை) அவர்களும் பயந்தார்கள், வல்ல அல்லாஹ் பயப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தினான். சூனியக்காரர்கள் தோற்கடிக்கப் படுபவர்கள். இறைத் தூதர் மூஸா(அலை) அவர்கள் வெற்றியடைவார்கள். இது அல்லாஹ் வின் அறிவுறுத்தல். அதன்பின் இறைத்தூதர் மூஸா(அலை) அவர்கள் தெளிவும், தெம்பும் பெற்றார்கள். இறை அத்தாட்சிகளைத் தாங்கி நிற்பவர்கள். மக்களிடம் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் இஸ்லாமிய வாழ்க்கை நெறியை எடுத்துக் காட்டுபவர்கள். அதற்காக எந்த எதிர்ப்பையும், இன்னல்களையும் எதிர்கொள்பவர்கள்! சூனியக்காரர்கள் போன்ற ஏமாற்றுவோர் பிடியிலிருந்து மக்களை விடுவிக்க வந்தவர்கள். இதுபோன்ற உன்னத உயர் நெறிகள் மேற்கண்ட சம்பவம் மூலம் மனித சமுதாயத்திற்கு உணர்த்தப்படுகிறது. ஆனால் மனித சமுதாயம் படிப்பினை பெறவில்லை. (பார்க்க : அல் அஹ்ராஃப்: 7:103-118, யூனுஸ் 10:75, 82, தாஹா: 20:56-69, அஷ்ஷிஃரா : 26:22-45)
கொடுங்கோலன் ஃபிர்அவ்னும், அவனது அடிவருடிகளும் சூனியத்தைத் தோற்கடித்த இறைத்தூதர் மூஸா(அலை) அவர்களுக்கு மாபெரும் சூனியக்காரர் என்று முத்திரை குத்தினர்.
நேர்வழியை ஏற்றதற்காக ….
வழிகேட்டிலிருந்து விடுபட்டு நேர்வழியை ஏற்றுக்கொண்டதற்காக முன்னால் சூனியக் காரர்களான, ஈமானில் உறுதி கொண்டிருந்த அந்த புதிய முஸ்லிம்கள் அனைவரும் பிர்அவ்னால் மாறுகால், மாறுகை வெட்டப்பட்டு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார் கள். அப்படி அவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டபோது அவர்கள் சஞ்சலப்பட்டவுமில்லை. சருகி விடவும் இல்லை. அல்லாஹ்விற்காக, அவன் திருப்பொருத்தம் நாடி அதை சகித்துக் கொண்டார்கள். அல்லாஹ் அவர்களை சரித்திரமாக்கினான். அவர்களது வாழ்வை மனித சமுதாயத்துக்கு படிப்பினையாக்கியுள்ளான். (பார்க்க : 7:118-126, 20:70-76, 26:46-51)
இஸ்லாத்திற்குப் பாரம்பரிய சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கும் இன்றைய பரம்பரை பெயர் தாங்கி முஸ்லிம்கள் இன்று உண்மை இஸ்லாத்திற்கு சமாதி கட்டிக் கொண்டிருக் கிறார்கள். அன்றைய புதிய முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்ட சத்தியத்தை சில நொடிகளில் இஸ்லாத்திற்காக இன்னுயிரையும் கொடுக்க முன்வந்தார்கள். இப்படிப்பட்ட தியாக உள்ளம் படைத்த அவர்கள் எங்கே? நாம் எங்கே? ஆழ்ந்து சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளோம். இஸ்லாத்தை ஏற்ற சில நொடிகளில் ஈமானில் உறுதி! இஸ்லாத்திற்காக இன்னுயிரையும் துறப்பதற்கும் சித்தமான அந்த புதிய முஸ்லிம்களின் துணிவு! ஓ! நமக்கும் அவர்களுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்!
உண்மை இஸ்லாத்தை உணர்வதும், அதன்படி ஒழுகுவதும் அதன் மூலம் இஸ்லாத்தின் மேன்மையை மனித சமுதாயத்துக்கு எடுத்துக்காட்டுவதும், ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கட்டாயக் கடமையாகும். ஏற்றுக்கொண்ட வாழ்க்கை நெறியை எடுத்து நடக்க முயற்சிக்காதவர்களிடம் எந்த தியாகத்தை எதிர்பார்க்க முடியும்? தங்கள் நேரத்தையும், பொருளையும் கொஞ்சமேனும் செலவழித்து சுயமே உண்மை மார்க்கம் உணர முஸ்லிம் பொதுமக்கள் முன்வந்து விட்டால் மட்டுமே இது சாத்தியப்படும்.விஞ்ஞானம் வியத்தகு வளர்ச்சி கண்டுள்ள இந்நாட்களில் கூட மக்கள் சூனிய மோகத்திலிருந்து விடுபடவில்லை. இதை நாம் அன்றாட வாழ்வில் நிதர்சனமாய் சந்திக்கிறோம். அந்நாட்களில் மனிதர்கள் எப்படி இருந்திருப்பார்கள்? சூனியக் கலையின் வசீகரத்தில் மூளை சலவை செய்யப்பட்ட மக்கள் எப்படி உண்மையையும், சத்தியத்தையும் ஏறெடுத்துப் பார்க்க முடியும்? அறிவுக்கும், சிந்தனைக்கும் திரை போட்டுவிட்டார்கள்.
கனவிலும் நினைத்திராத பிரமாண்டம், இறை அத்தாட்சியாக வெளிப்பட்டது. அதையும் நேரில் கண்டார்கள், திகைத்தார்கள், திடுக்கிட்டார்கள். ஆனால் அம்மாபெரும் இறை அத்தாட்சியை இறை அத்தாட்சி என்று ஏற்க முடியவில்லை. அந்த இறை அத்தாட்சியையும் சூனியமென்று நிராகரித்தனர். எந்த கட்டத்தில் அவ்விறை அத்தாட்சி நிகழ்த்தப்பட்டதோ அங்குள்ளோர் வழக்கம் போல் அவ்விறை அத்தாட்சியைச் சூனியமென்று புறக்கணித்தனர். அதைப் பல்லாயிரக்கணக்கான மைல்கள் தூரத்தில் இருந்து பார்த்தவர் முதலில் திடுக்கிட்டார் என்றாலும் பின் சுதாரித்துக்கொண்டு சிந்தித்தார். ஆராய்ந்தார் நேர்வழியும் பெற்றார்.
அந்த இறை அத்தாட்சி எது? பார்த்தவர் யார்?
இன்ஷா அல்லாஹ், மீண்டும் சந்திப்போம்! சிந்திப்போம்!! சீர்பெறுவோம்!!!
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)