பின்பற்றக்கூடாத இமாமும் இருக்கிறார்களா?

in 2026 ஜுலை

பின்பற்றக்கூடாத இமாமும் இருக்கிறார்களா?

மறு பதிப்பு :

  அபூ அப்தில்லாஹ்

ஜூன்  மாத  தொடர்ச்சி…..

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) அவர்கள் ஒரு பள்ளியில் பாங்கின்போது தற்போது சில பள்ளிகளில் நடைபெறுவது போல் பித்அத்தாக சில வாசகங்களை இணைத்துச் சொன்னதைக் கேட்டதால் அந்தப் பள்ளியில் தொழாமல் சென்றதாக தப்லீக் தஃலீம் தொகுப்பில் ஒரு கதை காணப்படுகிறது. இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. ஆனால் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) அவர்கள் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் போன்ற கொடிய அக்கிரமம், அநியாயம் செய்பவர்கள் பின்னாலும், கஷ்பிய்யா, காரிஜிய்யா போன்ற பெரும் குழப்பாவதிகளுக்குப் பின்னாலும் தொழுததாக இமாம் புகாரி(ரஹ்), நாபிஉ(ரழி) போன்றோர் அறிவித்தது திர்மிதி, அபூதாவூது, நஸயி, ஸுனனு பின் மன்சூர் போன்ற  நூல்களில்  பதியப்பட்டுள்ளது.

ஆக ஒருசில இமாம்களுக்குப் பின்னால் தொழக்கூடாது என்று நபி(ஸல்) அவர்களோ, நேர்வழி நடந்த கலீஃபாக்களோ, நபிதோழர்களோ கூறியதாக ஒரு ஆதாரத்தையும் இவர்களால், தரமுடியாது. அந்தக் காலத்தில் சிர்க் செய்யக்கூடிய இமாம் யாரும் இருக்கவில்லை. எனவே அப்படி தடுத்துச் சொன்ன ஆதாரத்தைப் பார்க்க முடியாது என்பது இவர்களது வாதமாகும். இதுவும் அறிவற்ற ஒரு வாதமேயாகும். முகல்லிதுகள்இப்போதைய பெண்களின் நிலையை நபி(ஸல்) அவர்கள் அறிந்திருந்தால், பெண்களைப் பள்ளிவாசலுக்கு வருவதை விட்டும் தடுத்திருப்பார்கள்என்று ஆயிஷா(ரழி) கூறியதாக ஒரு கற்பனைக் கதையைக் கூறுவது போல், இவர்களும் அன்று சிர்க் செய்யக்கூடிய இமாம்கள் இருக்கவில்லை. அதனால் அதைத் தடுத்த ஹதீத்களில்லை. இப்போது நாங்கள் தடுத்து ஃபத்வா கொடுக்கிறோம் என்று சொல்கிறார்கள். மற்றபடி அல்லாஹ் முக்காலமும் அறிந்தவன். உலகம் அழியும் வரை நிலைத்திருக்கும் ஒரு உயரிய மார்க்கத்தையே மக்களுக்குக் கொடுத்திருக்கிறான். பின்னால் இப்படிப்பட்ட சிர்க் செய்யும் இமாம்கள் தோன்றுவார்கள் என்பது அல்லாஹ்வுக்கு மிகத் தெளிவாகவே தெரியும். அல்லாஹ் மறதியாளனோ, தவறிழைப்பவனோ இல்லை. “எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்றும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்தவில்லையோ அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக்கொண்டவர்கள்” (6:82) என்று அல்லாஹ் குறிப்பிட்டுக் கூறும் வசனத்தின் மூலம் சிர்க் செய்யும் ஒரு முஸ்லிமை இங்கு காஃபிர், முஷ்ரிக் என்று தீர்ப்பு அளிக்க முடியாது  என்பதைத்  தெளிவுபடுத்துகிறது.

எனவே எந்த ஒரு சட்டத்தையும் பின்னால் வருபவர்கள் மார்க்கத்தில் திணிக்கும் வகையில் அல்லாஹ் விட்டு வைக்கவில்லை என்பதை சரிவர உணர்ந்தவர்கள் இப்படியயாரு குருட்டு ஃபத்வாவை வெளியிடமாட்டார்கள். சிர்க் செய்யும் இமாம் பின்னால் தொழுவது கூடாது என்றால் அதை அல்லாஹ் அன்றே தெளிவாக நேரடியாக தனது இறுதி நபி மூலம் அறிவித்துக் கொடுத்திருப்பான். காரணம் இது சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் ஒரு மிகப் பாராதூரமான விசயம் என்று உறுதியாக நம்புவார்கள். தான்தோன்றித்தனமாக அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிட்டு அவர்கள் ஃபத்வா கொடுக்க முற்படமாட்டார்கள். 42:21 வசனப்படி நாளை அல்லாஹ்வின் கடுமையான தண்டனைக்கு ஆளாகமாட்டார்கள். அல்லாஹ்வின் கருணையால் தான் இப்படி அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிட்டு குருட்டு ஃபத்வா கொடுத்தும் அல்லாஹ் உடனடியாகப் பிடிக்காமல் விட்டு வைத்திருக்கிறான் என்பதையும் நல்லடியார்களாக இருந்தால் உணர்ந்து கொள்வார்கள். தவ்பா செய்வார்கள்.

சிர்க்செய்யும் இமாம் பின்னால் தொழக் கூடாது என்று ஃபத்வா கொடுத்து அதை நியாயப் படுத்துகிற சகோதரர்கள் கருணாநிதி பின்னால் தொழமுடியுமா? ஒரு காஃபிர் பின்னால் தொழ முடியுமா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி உணர்வுகளுக்கு எளிதாக அடிமையாகும் வாலிபர்களைக் கொதிப்படையச் செய்து சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் கொடுஞ் செயலைச் செய்கிறார்கள். எந்த அளவு இவர்கள் ஷைத்தானின் பிடியில் சிக்கி இருக்கிறார்கள் என்பதை நிதானமாகச் சிந்தித்து உணரவேண்டும். இன்று முஸ்லிம் மஹல்லாக்களிலுள்ள பள்ளிகளில் எந்தப் பள்ளியில் கருணாநிதி இமாமாக இருக்கிறார். அல்லது ஒரு காஃபிர் என்று தன்னைப் பிரகடனப்படுத்துகிறவர் இமாமாக இருக்கிறார்? சொல்வார்களா? குறைந்தது ஒரே ஒருபள்ளியையாவது  இவர்கள்  காட்டுவார்களா?

ஒருவன் தனது ஆண்குறியை தனது பின் துவாரத்தில் நுழைத்தால் குளிப்பு கடமையாகாது; “மனிதனுக்கும் மிருகத்திற்கும் பிறந்தவன் இமாமத் செய்யலாம்போன்ற முட்டாள்தனமானநடைபெறவே சாத்தியமில்லாத சட்டங்களைபிக்ஹின்பெயரால் முகல்லிது இமாம்கள் இயற்றி வைத்திருக்கிறார்கள் என்று அவர்களை நையாண்டி பேசி கேளி செய்யும் இந்த தவ்ஹீது மவ்லவிகள், இமாம்கள்(?) அதே நையாண்டிக்கும், கேளிக்கும் ஆளாவதை உணர முடியவில்லையா? என்னே மதியீனம்? முஸ்லிமல்லாத ஒரு காஃபிரை எந்த மஹல்லாவிலாவது, பள்ளியிலாவது இமாமாக நியமிக்கும் சூடு சுரணையற்ற முஸ்லிம்கள் இருப்பதாக இவர்கள் கற்பனை செய்கிறார்களே? இப்போதாவது கருணாநிதி பின்னால் தொழலாமா? ஒரு காஃபிர் பின்னால் தொழலாமா? என்ற அறிவீனமானமுட்டாள் தனமானஷைத்தானுக்கு அடிமைப்பட்டு வெளிப்படுத்தும் கேள்வியை வரும் வாலிப உள்ளங்களில் வெறியைத் தூண்டு சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் கொடுஞ் செயலை விட்டொழிப்பார்களா?

நாம் ஆரம்பத்திலிருந்தேபின்பற்றக் கூடாத இமாமுண்டா?” என்ற தலைப்பிலேயே கட்டுரைகள் வெளியிட்டு வருகிறோம். காரணம் காலம் காலமாகப் பள்ளிகளில் இமாமாகப் பணி புரிகிறவர்களின் பின்னால் தொழ மார்க்கத்தில் தடை இல்லை என்பதை நிலைநாட்டவே மற்றபடி புதிதாக ஒரு இமாமை நியமிப்பது சம்பந்தமாக நாம் எழுதவில்லை என்ற சாதாரண மக்களுக்குப் புரியும் உண்மையும் இந்த அறிஞர்களுக்குப் புரியாதிருப்பது வேதனையாக  விசயமே!

இப்போது அவர்கள் தங்களின் ஃபத்வாவுக்கு ஆதாரமாகக் கொடுக்கும் குர்ஆன் வசனங்களிலோ, ஹதீத்களிலோ அவர்கள் கூறிடும் கருத்து இருக்கிறதா? என்று ஆராய்வோம். அல்லாஹ்வுக்கு இணை வைப்பது மாபெரும் குற்றம். அந்த குற்றத்தை அல்லாஹ் மன்னிக்கவேமாட்டான்; இணை வைப்பவர்களின் அமல்கள் அனைத்தும் அழிந்துவிடும். நாளை மறுமையில் அவர்களின் நல்லமல்கள் மலைபோல் இருந்தாலும் அவை நிறுக்கப்பட்டு கூலி கொடுக்கப்படாது. அதற்கு மாறாக நாளை மறுமையில் நரகில் போடப்படுவார்கள். நரகிலிருந்து அவர்களுக்கு மீட்சியே இல்லை. முஸ்லிம் மக்களுக்கு இணை வைப்பவர் கடும் பகைவர்கள்; இன்னும் இவை போன்ற குர்ஆன் வசனங்களை தங்களின் சிர்க் செய்யும் இமாம் பின்னால் தொழக்கூடாது என்ற ஃபத்வாவுக்கு ஆதாரமாகத் தருகிறார்கள். உண்மையில் இந்த ஆயத்துக்களின் கருத்துக்களை நிதானமாகச் சிந்திக்கவேண்டும். சிர்க்கின் மிகக் கொடூர நிலையை மக்களுக்கு எடுத்துச் சொல்லி மக்களை அந்த கொடிய செயலிலிருந்து மீளவைக்கச் சொல்கின்றனவா? அல்லது அப்படிப்பட்ட செயல்களை செய்பவர்களுக்கு இவ்வுலகிலேயேகுஃப்ர்ர்க்ஃபத்வா கொடுத்து இங்கேயே தீர்ப்பளிக்கச்  சொல்கின்றனவா?

இதோ இந்த வசனத்தைப் பாருங்கள்: (நபியே!) எவன் நிராகரிப்பானோ அவனுடைய குஃப்ருநிராகரிப்பு உம்மை விசனப்படுத்தவேண்டாம். அவர்களின் மீளுதல் நம்மிடத்தில்தான் இருக்கிறது. அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை அப்போது நாம் அவர்களுக்கு அறிவிப்போம். நிச்சயமாக அல்லாஹ்வே இருதயங்களில் உள்ளவற்றை  அறிபவன்.    அல்குர்ஆன்31:23

இந்த வசனம் என்ன சொல்கிறது? நபிக்கே அப்படிப்பட்டவர்கள் விசயத்தில் இந்த உலகில் தீர்ப்புச் செய்ய அதிகாரம் கொடுக்கப்படவில்லை. அவர்கள் பற்றி விசனப்பட்டு செயல் படுவதை அல்லாஹ் தடுக்கிறான்; நாளை மறுமையில் அவர்களுக்குரிய தீர்ப்பு இருப்பதாகச் சொல்கிறான். அவர்களுடைய உள்ளத்தில் இருப்பதை அல்லாஹ்வே அறிபவன்;  நீர் அல்ல என்று நபியையே கடுமையாக எச்சரித்துள்ளான். இறுதி நபிக்கே குஃப்ர், சிர்க் செய்யும் குற்றவாளிகள் விசயத்தில் இவ்வுலகில் தீர்ப்புச் செய்ய அதிகாரமில்லை. எனும்போது, அவர்களுக்கே அவர்களுடைய உள்ளத்தில் இருப்பது தெரியாது என்று சொல்லும்போது, இவர்களுக்கு இவ்வுலகில் அவர்கள் விசயத்தில் தீர்ப்பளித்து அவர்கள் பின்னால் தொழக்கூடாது என்று ஃபத்வா கொடுக்கும் அதிகாரம்  இருக்கிறதா?  நபி(ஸல்) அவர்கள் காஃபிர்களின் குஃப்ரான செயல்களைப் பார்த்தே விசனப்படுகிறார்கள். அந்த நிலையில்தான் அது உமது வேலையில்லை. உமக்கு அதில் அதிகாரம் இல்லை. அது நமது அதிகாரத்திலுள்ளது என்று அல்லாஹ் எச்சரித்துள்ளான். 

இந்த நிலையில் இவர்கள் இந்த இமாம்கள் சிர்க், பித்அத் செய்வதை எங்கள் கண்ணால் பார்க்கிறோம். அவர்கள் தர்ஹாசடங்குகளைச் செய்யத்தான் செய்வோம் என்று தங்கள் நாவினாலேயே பிரகடனப்படுத்துகிறார்கள்; எனவே அவர்கள் முஷ்ரிக்கீன்கள்தான். எனவே அவர்கள் பின்னால் தொழக்கூடாது என்று ஃபத்வா கொடுப்பதை அல்லாஹ் ஏற்பானா? அவர்களின் உள்ளத்தில் உள்ளதை அவர்களே வெளிப்படுத்துகிறார்கள். அதை வைத்தே அவ்வாறு ஃபத்வா கொடுக்கிறோம் என்று சொல்ல முடியுமா? அன்றும் நபி(ஸல்) அவர்களது முன்னிலையில் அவர்கள் தங்கள் வாயால் தங்கள் உள்ளத்திலுள்ளதை வெளிப்படுத்தத்தான் செய்தார்கள். அதனால் தான் நபி(ஸல்) அவர்கள் வேதனைப்பட்டார்கள். அதை மறுத்தே அல்லாஹ் இந்த 31:23 வசனத்தை இறக்கி நபியை எச்சரித்துள்ளான்.

இன்னும் பாருங்கள் : “அல்லாஹ் மார்க்கத்தில் விதிக்காததை விதிக்கக் கூடிய இணையாளர்கள் அவர்களுக்கிருக்கின்றனரா? மேலும் (மறுமையில் விசாரணைக்குப் பிறகு தக்க கூலி கொடுக்கப்படும் என்னும் இறைவனின்) தீர்ப்புப் பற்றிய வாக்கு இல்லாதிருப்பின் (இதுவரை இவ்வுலகிலேயே) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு”.   அல்குர்ஆன் 42:21

எத்தனைக் கடுமையான எச்சரிக்கை பாருங்கள். அல்லாஹ் விதிக்காததை விதிப்பவன் யார்? தன்னை அல்லாஹ்வுக்கு இணையாக ஆக்கிக் கொண்டவன்; பக்கா முழு முதல் முஷ்ரிக். அந்த முஷ்ரிக்குடைய விசயத்தில் கூட தீர்ப்பளிக்கும் அதிகாரம் பெற்ற அல்லாஹ்வே இவ்வுலகில் தீர்ப்பளிக்கவில்லை. நாளை மறுமைக்கென்று ஒத்தி வைத்துள்ளான். தீர்ப்பளிக்கும் அதிகாரம் பெற்ற அல்லாஹ்வே தீர்ப்பை இவ்வுலகில் இல்லை; நாளை மறுமைக்கென்று ஒத்திவைத்துள்ள நிலையில் இவர்கள் தங்களுக்கு அதிகாரம் இல்லாத நிலையில் இவ்வுலகிலேயே அவர்களுக்கு முஷ்ரிக் என்று தீர்ப்பளித்து அவர்கள் பின்னால் தொழுவதைத் தடுத்து ஃபத்வா கொடுத்தால் இவர்களின் நிலை என்ன? இவர்களும் அல்லாஹ் விதிக்காததை விதிக்கும் இணையாளர்களாக ஆகிவிடுகிறார்களா? இல்லையா? அல்லாஹ் 42:21ல் கூறியுள்ளது போல் கருணை காட்டுவதால் இவர்கள் தப்பிப் பிழைத்திருக்கிறார்கள். இல்லையயன்றால் இங்கேயே இப்போதே இவ்வுலகிலேயே இந்த அதிகப்பிரசங்கிகள் விசயத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கும். அல்லாஹ்வின் கருணையால் தப்பி இருக்கிறார்கள். இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள ஒரு உதாரணம் சொல்லுகிறோம்.

ஒரு கல்லூரியில் ஒரு வகுப்பறையில் 50 மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலரே நன்றாகப் படிக்கிறார்கள். அதில் ஒரு மாணவன் மிகமிகக் கெட்டிக்காரன். பெரும்பாலான பாடங்களில் நூற்றுக்கு நூறு மார்க் வாங்குகிறான். அதற்கு நேர்மாறாக இன்னொரு மாணவன் படிப்பில் மிக மிக மோசம். படிப்பதே இல்லை. சினிமா, டிராமா என்று ஊர் சுற்றி வருவதே அவனது வாடிக்கை. வகுப்பறையிலுள்ள மற்ற 49 மாணவர்களும் இவனைப் பற்றிப் பலவிதமாகப்  பேசிக் கொள்வார்கள்.

Previous post:

Next post: