பாலியல் குற்றம் குறைய என்ன செய்யவேண்டும்?

in 2026 ஜுலை

தலையங்கம் :
பாலியல் குற்றம் குறைய என்ன செய்யவேண்டும்?

உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும்” “படைத்தவன் உங்களுக்கு அருள் புரியட்டும்அந்த ஒரே இறைவன் பெயரால்….

இன்றைக்கு நாட்டில் சமூக ஒழுங்கு சீர் குலைந்துள்ளது என்ற கசப்பான உண்மையை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். சமூக ஒழுங்கு சீர்குலைந்ததன் காரணமாக நாட்டில் சட்டம் ஒழுங்கும் சீர்குலைந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் கொலைச் சம்பவங்கள் மிகவும் அதிகரித்துக் காணப்படுகின்றன. இந்தக் கொலைச் சம்பவங்களுக்கு தகாத பாலியல் உறவுகளே பெரும்பாலும் காரணங்களாக இருக்கின்றன. ஏன்? வீடுகளில் கூட பெண்கள், சிறுமிகள் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகின்றனர். செய்தித்தாள்களையும், காவல்துறையின் விசாரணை அறிக்கைகளையும் படிக்கின்றபோது இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களில் 90 விழுக்காட்டினர் போதையில் இருந்தனர் என்பதை அறிந்துகொள்ள முடியும்.

போதையில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று சாராயம் அருந்தியதால் ஏற்படும் போதை இன்னொன்று கஞ்சா, யஹராயின் ஆகிய போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் போதை, அண்மைக் காலமாக இளைஞர்களிடையே இந்த இரண்டாவது வகை போதைப் பழக்கம் அதிகரித்து வருகிறது. மதுவையும், கஞ்சாவையும் தொடர்ந்து பயன்படுத்தும் ஒருவனது மூளை சிந்திக்கும் திறனை இழந்துவிடும். அவனுக்கு எது நல்லது, கெட்டது என்று பகுத்தறியத் தெரியாது. தான் நினைத்ததை நிறைவேற்ற தயங்கமாட்டான்.

போதையைத் தவிர, இன்றைக்கு இளைஞர்களைப் பெரிதும் சீரழிப்பது அலைபேசியும், திரைப்படங்களும், மிகவும் மோசமான ஆபாசக் காட்சிகள், உடலுறவுக் காட்சிகள் அலைபேசியில் வருகின்றன. இவற்றைப் பார்க்கின்ற இளைஞர்களின் மனநிலை என்னவாக இருக்கும்? தொடர்ந்த இந்தக் காட்சிகளைப் பார்க்கின்ற காரணத்தால் அவர்களின் காம உணர்ச்சி தூண்டப்படுகிறது. அண்மைக் காலமாக வெளிவருகின்ற திரைப்படங்களிலும் மிக மோசமான காதல் காட்சிகளும், வன்முறைக் காட்சிகளும் இடம் பெறுகின்றன. இவை இளைஞர்கள் இளம் பெண்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள மோசமான தாக்கம் காரணமாகவே குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்  கொண்டே  போகிறது.

முதலில் சமூகம் திருந்தவேண்டும். மதுவுக்கும், கஞ்சாவுக்கும் எதிரான பரப்புரைகளை சமுதாயத்திலுள்ள அனைத்துத் தரப்பினரும் மேற்கொள்ளவேண்டும். இதனை ஒரு தொடர்ச்சியாக நாம் செய்யவேண்டும். அலைபேசியில் ஆபாசக் காட்சிகள் வருவதைத் தடுக்க அரசு முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். அலைபேசியைப் பயன்படுத்துகின்ற சிறுவர் சிறுமிகளைப் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். பெற்றோர்களே எப்போதும் அலைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்தால், பிள்ளைகளை அவர்களால்  திருத்த முடியாது. 

அதுபோலவே, திரைப்படங்களுக்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்குகின்ற தணிக்கைத் துறை ஆபாச, வன்முறைக் காட்சிகள் கொண்ட படங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது.

திரைப்படத் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும், நடிகர் நடிகைகளும் தங்களது வீடுகளிலும் பெண்கள் இருக்கிறார்கள். சிறுவர் சிறுமிகள், குழந்தைகள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து படங்களை எடுக்க வேண்டும். காட்சிகளை அமைக்க வேண்டும்.

குற்றங்களைத் தடுப்பதில், குறிப்பாக பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளைத் தடுப்பதில் அரசு, சமூகம் என்ற இரு தரப்பினருக்கும் சம பங்கு உள்ளது. வெறுமனே ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டிருந்தால் அதனால் விளையப் போவது ஒன்றுமில்லை. பாலியல் குற்றங்களுக்கு அரபு நாடுகளைப் போன்று கடுமையான தண்டனை கொடுத்தால் மட்டும் தான் பாலியல்  குற்றங்கள்  குறையும்.

Previous post: