வருடாந்தர அனர்த்தங்களினால் படிப்பினை பெறுவதில்லையா?
அபூ இஸ்ஸத், இலங்கை
ஜூன் 2026 தொடர்ச்சி…
அதீத செல்வச் செழிப்பின் செருக்கினாலும், மிதமிஞ்சிய, பெருமையும், அகம்பாவமும், ஆணவமும், அகந்தையும் கொண்டு மண்ணில் பவனி வரும்போது மூஸா(அலை) அவர் களும், அவர்களின் சமூகத்தைச் சேர்ந்த இஸ்ரவேலர்களும் காரூனை அழைத்து “உம்மை இவ்வாறு செய்யத் தூண்டியது எது? உனக்கு அல்லாஹ் கொடுத்துள்ளவற்றில் மறுமை இல்லத்தைத் தேடிக்கொள். இவ்வுலகில் உனக்குள்ள பங்கையும் நீ மறந்து விடாதே. உனக்கு அல்லாஹ் நன்மை செய்ததைப் போன்று நீயும் (பிறருக்கு) நன்மை செய் (அகம்பாவம் கொண்டு) பூமியில் குழப்பம் விளைவிக்க முனையாதே! நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் விளைவிப்போரை விரும்புவதில்லை. (28:77) என்றெல்லாம் கூறினார்கள்.
அதற்கு அவன், “மூஸாவே! நபித்துவத்தின் மூலம் நீர் என்னைவிட மேலானவராக இருந்தால் உலகச் செல்வங்களால் உம்மை விட நானே மேலானவனாக இருக்கிறேன் என்று கூறினான்.
“என்னிடமுள்ள அறிவினாலேயே இவை எல்லாம் எனக்கு வழங்கப்பட்டுள்ளன‘ என்றும் கூறினான். (28:78)
மேலும் என்னுடைய திறமையே என்னைச் செல்வந்தனாக்கியது என்றான்.
என்னிடமுள்ள தகுதிதனை அல்லாஹ் அறிந்ததனாலேயே இவை எல்லாம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது என்றான்.
இந்தச் செல்வங்களையயல்லாம் எனக்கு அல்லாஹ் வழங்கியிருப்பதே நான் அதற்கு மிகத் தகுதி வாய்ந்தவன் என்பதை அவன் அறிந்திருப்பதாலும் என்மீது அவன் அன்பு கொண்டிருப்பதாலும் தான் என்றான்.
என்மீது அன்பும் எனது மேன்மை பற்றிய அறிவும் அல்லாஹ்வுக்கு இல்லாமலிருந் திருப்பின் அவன் எனக்கு இச்செல்வத்தை வழங்கியிருக்கமாட்டான் (39:49) என்றான்.
செல்வச் செருக்கோடு சிங்காரமாகப் பவனி போனவன் சொரிமணலில் புதையுண்டான் :
மூஸா(அலை) நபித்துவத்தின் மூலம் நீர் என்னைக் காட்டிலும் மேலானவராக இருந்தால், உலகச் செல்வங்களால் உம்மைவிட நானே மேலானவனாக இருக்கின்றேன். எனவே நீங்கள் சொல்லக்கூடிய அறிவுரை எனக்குத் தேவையில்லை வேண்டுமானால் நீர் புறப்படுவீராக எனக்கெதிராகப் பிரார்த்திப்பீராக என்றான். (கத்தாதா, சுத்தி, அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம்(ரஹ்), தஃப்ஸீர் இப்னு கஸீர்: 6:826,827) இது குறித்து அல்லாஹ் குறிப்பிடும்போது, நம்மிடமிருந்து ஓர் அருட்கொடையை அவனுக்கு நாம் வழங்கும்போது என்னைப்பற்றி அல்லாஹ் அறிந்ததனாலேயே இது எனக்கு வழங்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றான். (39:49) இதனால்;
மூஸா(அலை) அவர்கள் “இறைவா! இன்று எனக்குக் கட்டுப்படுமாறு பூமிக்கு நீ உத்தர விடுவாயாக! என்று பிரார்த்தனை செய்தார்கள்‘ அவ்வாறே நான் செய்துவிட்டேன் என்று அவர்களுக்கு அல்லாஹ் பதிலளித்தான். அப்போது மூஸா(அலை) அவர்கள் “பூமியே! இவர்களை உள்ளே இழுத்துக்கொள் என்று கூறினார்கள். உடனே பூமி அவர்களைப் பாதம் வரை உள்ளே இழுத்துக் கொண்டது.
“இன்னும் இவர்களைப் பிடித்து இழு என்றார்கள். முழங்கால் வரை அவர்களை இழுத்துக் கொண்டது. பின்னர் அவர்களின் தோள் வரை உள்ளே இழுத்துப் பிடித்துக் கொண்டது அடுத்து அவர்களின் கருவூலங்களையும், பொருட் செல்வங்களையும், கொண்டு வருமாறு பூமிக்கு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவை அனைத்தையும், காரூனும் அவனுடைய படையினரும் நேரடியாகப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பூமி கொண்டுவந்தது.
பின்னர் மூஸா(அலை) அவர்கள் “லேவியின் புத்திரர்களே!’ என்று அழைத்து அழிந்து போங்கள்! என்று தமது கரத்தால் சைகை செய்தார்கள். உடனே பூமி அவர்கள் அனைவரையும் அவர்களது கரூவூலங்களோடு சேர்த்து அப்படியே இழுத்து மூடிக் கொண்டது. அவர்கள் அனைவரும் ஏழாவது பூமி வரை புதைந்து போனார்கள் என்று இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள்.
மேலும் “இவர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு ஆளுயரத்திற்கு பூமியின் உள்ளே புதைந்து கொண்டே இருக்கிறார்கள். இவ்வாறே மறுமை நாள் வரை பூமிக்குள் அழுந்திச் சென்று கொண்டே இருப்பார்கள் என்று கத்தாதா(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். (தஃப்ஸீர் இப்னு அபீஹாத்திம், இப்னு கஸீர் 6:831-836)
இதனையே அல்லாஹ்வும்; அவனையும் அவனது வீட்டையும் பூமிக்குள் நாம் புதையச் செய்தோம். அப்போது அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்யும் கூட்டத்தார் யாரும் அங்கு இருக்கவில்லை; அவன் தனக்கே உதவி செய்து கொள்பவனாகவும் இருக்கவில்லை. (28:81) என்று கூறுகின்றான்.
பூமி தன் வாயைத் திறந்து அவர்களையும் அவர்கள் வீடுகளையும் எல்லா மனிதரையும் அவர்களுக்கு உண்டான சகல பொருட்களையும் விழுங்கிவிட்டது அவர்கள் தங்களுக்கு உண்டானவை எல்லாவற்றோடும் உயிரோடே பாதாளத்தில் இறங்கினார்கள். பூமி முழுவதுமாக அவர்களை மூடிக்கொண்டது. இப்படிச் சபையின் நடுவிலிருந்து அழிந்து போனாவர்கள். (விவிலியம் பழைய ஏற்பாடு எண்ணாகமம் 16:32,33) செல்வச் செருக்கோடு சிங்காரமாக வந்தவன் சொரி மணலில் புதைந்தான்.
நேற்று அவனைக் கண்டபோது ஏக்கம் இன்று அவனது நிலை கண்டு தாக்கம் :
நேற்று பவனி வரும்போது அவனை அழகு அலங்காரத்துடன் கண்டவர்கள் “காரூனுக்குக் கொடுக்கப்பட்டது போல் நமக்கும் கொடுக்கப்பட்டிருக்கலாமே. நிச்சயமாக அவன் பெரும் பாக்கியசாலியாவான் என்று கூறி அவனது இடத்தை அடைய ஆசைப்பட்டவர்கள்; இன்று “அல்லாஹ் நம்மீது கருணை காட்டியிருக்காவிட்டால் நம்மையும் அவன் பூமிக்குள் புதையச் செய்திருப்பான்‘ நல்ல வேளை நாம் பிழைத்தோம் என்று கூறினார்கள். (28:82, கத்தாதா (ரஹ்), இப்னு ஜரீர்(ரஹ்) தஃப்ஸீர் இப்னு கஸீர் : 6:831-836)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களுக்கு முன்னிருந்தவர்களில் ஒரு மனிதர் கண் கவர்ந்த தமது பச்சை நிற ஆடைகள் இரண்டை அணிந்துகொண்டு அவரின் கீழங்கியைத் தரையில் பெருமையுடன் இழுத்துக்கொண்டு தனது தலை முடியைச் சீவிப் பெருமையோடு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அல்லாஹ் பூமிக்கு ஆணையிட்டான். உடனே அது அவரைப் பிடித்து உள்ளே இழுத்துக்கொண்டது. அவர் அப்படியே உடல் குலுங்கியபடி மறுமை நாள்வரை பூமிக்குள் புதைந்து சென்றுகொண்டேயிருப்பார். (அபூஹுரைரா(ரழி), இப்னு உமர்(ரழி), அபூசயீத் அல்குத்ரீ(ரழி), புகாரி : 3485, 5783,5788,5790,5791, முஸ்லிம்: 2088, திர்மிதி : 2415, முஸ்னத் அஹ்மத் ரிஸா, 619, தஃப்ஸீர் இப்னு கஸீர் : 6:832)
தனது கீழங்கியைப் பெருமைக்காகத் தரையில் இழுத்துச் செல்பவர் நரகில்தான் இருப்பார். மறுமை நாளில் அவரை அல்லாஹ் அருட்பார்வையால் ஏறிட்டும் பார்க்கமாட்டான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), அபூஸயீத் அல்குத்ரீ(ரழி), அப்துல்லாஹ் பின் உமர்(ரழி), புகாரி : 5788, 3665, முஸ்லிம் 2087, அபூதாவூத் : 4093, ரியாதுஸ் ஸாலிஹீன் 616, 792)
இரண்டு கணுக்கால்களுக்குக் கீழ் எந்த ஆடை (பெருமைக்காக) இறங்கி விடுகிறதோ அது நரகத்தில் உள்ளதாகும் (அவ்வாறு பெருமையாக அணிபவர் நரகம் செல்வார்) என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரி 3665, 5783, 5784, 5787-5791, 5887, 1392, 3665, 3700, ரியாதுஸ் ஸாலிஹீன் 793, 799, 800, 801)
மேலும், மூன்று வகை மனிதர்களிடம் அல்லாஹ் மறுமை நாளில் பேசமாட்டான் அவர்களை (அருட்கொண்டு) பார்க்கவும்மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தி சுவர்க்கத்தில் நுழைவிக்கவும் மாட்டான். மாறாக அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையைக் கொடுப்பான். அவற்றில் ஒருவர்; பெருமைக்காகத் தனது ஆடையைக் கணுக்காலுக்குக் கீழ்வரை தொங்கவிட்டுத் திரிபவர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதர் அல் கிஃப்ஃபாரி(ரழி), முஸ்லிம் 171) அடுத்து,
அல்லாஹ்விடம் நாயின் உதாரணமாக மாறிய பல்ஆம் பின் பாஊரா:
இறைத்தூதர் மூஸா(அலை) அவர்களது இறுதிக் காலகட்டத்தில் வாழ்ந்தவரும், இஸ்ரவேலர்களின் அறிஞர்களில் உள்ள ஒரு “துறவி‘யாகவும் ஆனவரான; (7:175) இப்னு மஸ்வூத்(ரழி), முஸன்னஃப் அப்திர் நஸ்ஸாக், தஃப்ஸீர் மாஜிதீ, இப்னு கஸீர் 3:955)
வணக்க வழிபாடுகளில் அதிகமாக ஈடுபாடுடையவரும், அதைக்காட்டிலும் சோதிடம் பார்ப்பதிலும் சூனியம் செய்வதிலும் வல்லவராக இருந்தவராகி, (தஃப்ஸீர் இப்னு கஸீர் 3:955, 956)
விவிலியம் பழைய ஏற்பாட்டில் “பேயோ ரின் குமாரன் பிலேயாம்‘ எனும் பெயரில் அழைத்து எண்ணாகமம், 22,23,24 ஆகிய அதி காரங்களில் அதிகம் பேசப்படுபவரான; (தஃப்ஸீர் இப்னு கஸீர் 3:956)
விவிலியம் பழைய ஏற்பாடு எண்ணாகமம் 23:16இல் “கர்த்தர் பிலேயாமைச் சந்தித்து அவன் வாயிலே வசனத்தை அருளினார் என்று பேசப்படுபவரான; (தஃப்ஸீர் இப்னு கஸீர் 3:956)
புதிய ஏற்பாட்டிலும் ஆங்காங்கே இவர் குறித்துப் பேசப்படுபவரான, (தஃப்ஸீர் மாஜிதீ, இப்னு கஸீர் 3:956)
“அல்லாஹ்‘வினால் அவனது மகத்தான பெயராகிய “அல்இஸ்முல் அஃழம்‘ என்பதைக் கற்றுக் கொடுக்கப்பட்டவராகி, அதனால் அவர் பிரார்த்தனை செய்தால் தடையின்றி ஏற்றுக்கொள்ளப்படுபவராகிய; அவர் பிரார்த்தித்து அல்லாஹ் எதையும் கொடுக்காமல் இருந்ததில்லை. அந்த அளவுக்கு பிரார்த்தனை ஒப்புக்கொள்ளப்படுவதற்கான “அல்இஸ்முல் அஃழம்‘ எனும் அல்லாஹ்வின் மகத்தான அழகிய திருநாமத்தை அறிந்திருந்தவராகிய (இப்னு மஸ்ஊத்(ரழி) இப்னு அப்பாஸ்(ரழி), மாலிக் பின் தீனார்(ரஹ்) வரலாற்றாசிரியர் முஹம்மத் பின் இஸ்ஹாக்(ரஹ்), முஸன்னஃப் அப்திர் ரஸ்ஸாக், தஃப்ஸீர் இப்னு கஸீர் 3:955-965)
அதன் காரணமாக நெருக்கடியான நேரங்களிலெல்லாம் மக்கள் ஓடோடி வந்து அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதற்காக முன்னிலைப்படுத்தப்பட்டவரான; (மாலிக் பின் தீனார்(ரஹ்), தஃப்ஸீர் இப்னு கஸீர் 3:956)
“மத்யன்‘ நாட்டு மன்னரை அல்லாஹ்வின் பால் அழைப்பதற்கான இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களால் அனுப்பிவைக்கப்பட்டவரான; (மாலிக் பின் தீனார்(ரஹ்), தஃப்ஸீர் இப்னு கஸீர் 3:956)
ஏக இறைவனாகிய அல்லாஹ் பரிசுத்த குர்ஆனில்; (நபியே! இஸ்ரவேலர்களில்) ஒருவரைப் பற்றிய செய்தியை அவர்களுக்கு எடுத்துரைப்பீராக; நாம் அவருக்கு நமது சான்றுகளை வழங்கியிருந்தோம். (7:175) என்று சொல்லப்படுபவரான;
“பல்ஆம் பின் பாஊரை‘ என்பவர்; அற்பமான இவ்வுலக வாழ்க்கையின் அழகு, அலங்காரம், மற்றும் போலியான பகட்டின் பக்கமாகச் சாய்ந்து அதன் அற்ப இன்பங்களை யும், சுகபோகங்களையும் எதிர்நோக்க ஆரம்பித்தார், இறுதியில் அகப்பார்வை இல்லாதவர் களை ஏமாற்றியதைப் போன்றே அவரையும் இந்த உலகம் ஷைத்தானின் துணை கோண்டு எளிதாக ஏமாற்றிவிட்டது; (7:175,176, இப்னு மஸ்ஊத்(ரழி), இப்னு அப்பாஸ்(ரழி), மாலிக் பின் தீனார்(ரஹ்) வரலாற்றாசிரியர் முஹம்மத் பின் இஸ்ஹாக்(ரஹ்), முஸன்னஃப் அப்திர் ரஸ்ஸாக், தஃப்ஸீர் இப்னு கஸீர் 3:955-965)
“மத்யன்‘ நாட்டு மன்னரை அல்லாஹ்வின் பால் அழைப்பதற்காக இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களால் அனுப்பிவைக்கப்பட்ட போது, அந்த அரசர் இவரைத் தடுத்துப் பல அன்பளிப்புகளையும் வழங்கி மூளைச் சலவை செய்ததனால் மூஸா(அலை) அவர்களின் மார்க்கத்தை விட்டுவிட்டு அந்த அரசரின் மதத்தைப் பின்பற்றிவிட்டார். (மாலிக் பின் தீனார்(ரஹ்), தஃப்ஸீர் இப்னு கஸீர் 3:956)
இந்நிலையில்; இஸ்ரவேலர்கள் யுத்தம் செய்வதற்கு அஞ்சிய “அமாலிகா‘ என்னும் அடக்குமுறையாளர்களின் இடத்திற்கு; (5:21-24,26, இப்னு அப்பாஸ்(ரழி), கஅபுல் அஹ்பார் (ரஹ்), பைஹகீ, மஜ்முஸ் ஸவாயித், அஸ்ஸுனனுல் குப்ரா லிந்நஸயீ, முஸ்னது அபீயஅலா, தப்ரானீ, தஃப்ஸீர் இப்னு கஸீர் 3:119-135, 4:562, 563, 5:723-726) இறைத்தூதர் மூஸா(அலை) அவர்களும், அவர்களுடன் சேர்ந்து அடக்கு முறையாளர்களான “அமாலிகா‘ வினரோடு யுத்தம் செய்வதற்காக உடன்பட்ட இஸ்ரவேலர்களும் சென்றபோது;
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)