மோஸஸ் எனும் மூஸா (அலை) வரலாறு…
S.H. அப்துர் ரஹ்மான்
மே மாத தொடர்ச்சி……
“உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும்” “படைத்தவன் உங்களுக்கு அருள்புரியட்டும்” அந்த (ஒரே) இறைவன் பெயரால்….
இறை நூலில் அதிகமாக குறிப்பிடப்பட்ட இறைத்தூதர்களில் ஒருவர்தான் மோசஸ் என்னும் மூஸா(அவரை இறைவன் பொருந்தி கொள்வானாக) அவர்களின் வாழ்க்கை சம்பவங்கள் இறைநூலில் பல இடங்களில் விரிவாக வருகிறது.
(மக்களை நரக) நெருப்பிற்கு அழைத்துச் செல்லும் தலைவர்களாகவே நாம் அவர்களை ஆக்கியிருந்தோம். இன்னும், விசாரணை நாளன்று அவர்கள் உதவி செய்யப்படமாட்டார்கள். இன்னும் இவ்வுலகில் அவர்களைச் சாபம் தொடருமாறு நாம் செய்தோம். விசாரணை நாளில் அவர்கள் இகழப்பட்டவர்களாகவே இருப்பார்கள்.
இன்னும், முந்தைய தலைமுறையாளர்களை நாம் அழிந்த பின் திடனாக மூஸாவுக்கு(த் தவ்ராத்) இறைநூலைக் கொடுத்தோம். மனிதர் (சிந்தித்து) உபதேசம் பெறும் பொருட்டு அவர்களுக்கு ஞானப்பிரகாசங்களாகவும், நேர்வழிகாட்டியாகவும், அருட்கொடையாகவும் (அது இருந்தது). மேலும், நாம் மூஸாவுக்குக் கட்டளைகளைக் கடமையாக்கிய சமயம் நீர் (துர்மலைக்கு) மேற்குத் திசையில் இருக்கவில்லை. (அந்நிகழ்வைப்) பார்ப்பவர்களில் ஒருவராகவும் நீர் இருக்கவில்லை.
எனினும் (அவர்களுக்குப் பின்) நாம் அநேக தலைமுறையினர்களை உண்டாக்கினோம். அவர்கள் மீது காலங்கள் பல கடந்துவிட்டன. அன்றியும் நீர் மத்யன்வாசிகளிடம் வசிக்கவுமில்லை. அவர்களுக்கு நம் வசனங்களை நீர் ஓதிக் காண்பிக்கவுமில்லை. எனினும் நாம் தூதர்களை அனுப்பி வைப்போராகவே இருந்தோம்.
இன்னும் நாம் (மூஸாவை) அழைத்த போது, நீர் துர் மலையின் பக்கத்தில் இருக்கவுமில்லை, எனினும் எந்த மக்களுக்கு, உமக்கு முன்னால் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் அனுப்பப்பட வில்லையோ, அவர்கள் நல்லுப தேசம் பெறும் பொருட்டு அவர்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காக உமக்கு உம் இறைவனிடமிருந்து அருட்கொடையாக (இவை கூறப்படுகிறது) அவர்களுடைய கைகள் செய்து முற்படுத்திய (தீ)வினை காரணமாக, அவர்களுக்கு ஏதேனும் சோதனை வரும்போது அவர்கள் “எங்கள் இறைவா! நீ எங்களுக்குத் தூதர் ஒருவரை அனுப்பி வைத்திருக்க வேண்டாமா? அப்போது நாங்கள் உன் வசனங்களை பின்பற்றி நாங்களும் இறை நம்பிக்கையாளர்களில் உள்ளவர்களாகியிருப்போமே!’ என்று கூறாதிருக்கும் பொருட்டும் (உம்மை அவர்களிடையே தூதராக அனுப்பினோம்)
எனினும் (இப்பொழுது) நம்மிடமிருந்து சத்திய(மார்க்க)ம் அவர்களிடம் வந்தபோது, “மூஸாவுக் குக் கொடுக்கப்பட்டது போன்று இவருக்கு ஏன் கொடுக்கப்படவிலலை‘ என்று கேட்கிறார்கள். இதற்கு முன்னர், மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டதையும் அவர்(களின் மூதாதையர்)கள் நிராகரிக்கவில்லையா? இன்னும் அவர்கள் கூறுகிறார்கள். (திருக்குர்ஆனும், தவ்ராத்தும்) “ஒன்றையயான்று உறுதிப்படுத்தும் இரண்டு சூனிய(மந்திர)ங்களே!’ என்று, இன்னும் அவர்கள் கூறுகிறார்கள். “நிச்சயமாக நாங்கள் (இவை) அனைத்தையும் நிராகரிக்கிறோம் என்று. ஆகவே, “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இவ்விரண்டையும் விட நேர்வழிக் காட்டக்கூடிய நெறிநூலை அந்த இறைவனிடமிருந்து நீங்கள் கொண்டுவாருங்கள். நானும் அதைப் பின்பற்றுகிறேன்” என்று தூதரே நீர் கூறும்.
உமக்கு அவர்கள் பதில் கூறாவிடில், நிச்சயமாக அவர்கள் தம் மன இச்சைகளையே பின்பற்று கிறார்கள் என்று நீர் அறிந்துகொள்ளும்; இன்னும் அந்த இறைவனிடமிருந்து நேர்வழி காட்டியின்றித் தன் மன இச்சையைப் பின்பற்றுபவனை விட, மிக வழிகெட்டவன் எவன் இருக்கின்றான்; நிச்சயமாக அந்த இறைவன் அக்கிரமக்கார சமூகத்தாருக்கு நேர்வழி காட்டமாட்டான்.
இன்னும், அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக நாம் அவர்களுக்கு (அவ்வப்போது இறைநெறி வாக்கை அனுப்பிக்கொண்டே இருந்தோம்) இதற்கு முன்னர், எவர்களுக்கு நாம் இறைநூலை கொடுத்திருக்கிறோமோ அவர்களும் இதன் மீது நம்பிக்கை கொள்கிறார்கள். மேலும் (இது) அவர்களுக்கு வாசித்து காண்பிக்கப்பட்டால், அவர்கள், “நாங்கள் இதை நம்புகிறோம். நிச்சயமாக இது நம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள சத்திய(வசன) மாகும். இதற்கு முன்னரே நாங்கள் (இறைவனுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களாகவே இருந்தோம்” என்று கூறுகிறார்கள்.
இவர்கள் பொறுமையை மேற்கொண்டமைக்காக இருமுறை நற்கூலி அளிக்கப்படுவார்கள். மேலும், இவர்கள் நன்மையைக் கொண்டு தீமையைத் தடுத்துக் கொள்வார்கள்; நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து (தானம் தருமங்களில்) செலவும் செய்வார்கள். அன்றியும், இவர்கள் வீணானதைச் செவியுற்றால், அதைப் புறக்கணித்து; எங்களுக்கு எங்கள் அமல்கள், உங்களுக்கு உங்கள் அமல்கள், உங்களுக்குச் சாந்தி உண்டாகுக. அறியாமைக்காரர் களை நாங்கள் விரும்புவதில்லை என்று கூறுவார்கள். (28:41-55)
அத்தியாயம் 20ல் அவ்வாறே ஃபிர்அவ்ன் திரும்பிச் சென்று, (சூனியத்திற்கான) சூழ்ச்சிக் காரர்களை ஒன்றுதிரட்டிக் கொண்டு, மீண்டும் வந்தான். (அப்பொழுது) மூஸா சூனியக் காரர்களிடம் “உங்களுக்குக் கேடுதான்! அந்த இறைவன் மீது பொய்யை இட்டுக் கட்டாதீர்கள். (அவ்வாறு செய்தால்) அவன் வேதனையினால் உங்களை அழித்துவிடுவான். எவன் பொய்யை இட்டுக் கட்டுகிறானோ, திடனாக அவன் (நற்பேறு கெட்டு) அழிந்துவிட்டான் என்று கூறினார்.
சூனியக்காரர்கள் தமக்குள்ளே தங்கள் காரியத்தைக் குறித்து(த் தங்களிடையே) விவாதித்து, (அவ்விவாதத்தை) இரகசிய ஆலோசனையாகவும் வைத்துக் கொண்டனர்.
(சூனியக்காரர்கள் மக்களை நோக்கி) நிச்சயமாக இவ்விருவரும் சூனியக்காரர்களே! தம்மிருவருடைய சூனியத்தைக் கொண்டு உங்களை உங்களுடைய நாட்டை விட்டு வெளியேற்றவும், சிறப்பான உங்களுடைய (மார்க்கப்) பாதையைப் போக்கிவிடவுமே இவ்விருவரும் விரும்புகிறார்கள்.
ஆகவே உங்கள் திட்டத்தை ஒரு சேரத் தீர்மானித்துக் கொண்டு அணி அணியாக வாருங்கள். இன்றைய தினம் எவருடைய (கை) மேலோங்குகிறதோ, நிச்சயமாக அவர் தாம் வெற்றியடைவார். (என்று கூறினார்)
மூஸாவே! நீர் எறிகின்றீரா! எறிகிறவர் களில் நாங்கள் முதலாவதாக இருக்கட்டுமா? என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர். அதற்கவர், “அவ்வாறன்று நீங்களே (முதலில்) எறியுங்கள்‘ என்று (மூஸா) கூறினார். (அவர்கள் எறியவே) அவர்களுடைய கயிறுகளும் அவர்களுடைய தடிகளும் அவர்கள் சூனியத்தால் (பாம்புகளாக) நிச்சயமாக நெளிந்தோடுவது போல் அவருக்குத் தோன்றியது. அப்போது, மூஸா தம் மனதில் அச்சம் கொண்டார்.
(மூஸாவே!) நீர் பயப்படாதீர்! நிச்சயமாக நீர் தாம் மேலோங்கி நிற்பீர்! என்று நாம் சொன்னோம். இன்னும் உம் வலது கையில் இருப்பதை நீர் கீழே எறியும். அவர்கள் செய்த (சூனியங்கள் யா)வற்றையும் அது விழுங்கிவிடும். அவர்கள் செய்தது சூனியக்காரனின் சூழ்ச்சியே ஆகும். ஆகவே சூனியக்காரன் எங்கு சென்றாலும் வெற்றிபெற மாட்டான் (என்றும் கூறினோம்)
(மூஸா வெற்றி பெற்றதும்) சூனியக்காரர்கள் தலைவணங்கியவர்களாக செய்தவர்களாக வீழ்த்தப்பட்டு, ஹாரூனுடைய மூஸாவுடைய இறைவன் மீதே நாங்கள் இறை நம்பிக்கை கொள்கிறோம் என்று கூறினார்கள்.
நான் உங்களை அனுமதிக்கும் முன்னரே நீங்கள் அவர் மேல் இறை நம்பிக்கை கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக அவர் உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்த தலைவர் (போல் தோன்றுகிறது) எனவே, நான் உங்களை மாறு கை, மாறு கால் வாங்கி, பேரீத்த மரக் கட்டைகளில் உங்களை கழுவேற்றுவேன். மேலும் வேதனை கொடுப்பதில் நம்மில் கடுமையானவர் யார். அதில் நிலையாக இருப்பவரும் யார் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள் என்று (ஃபிர்அவ்ன்) கூறினான்.
(மனந்திருந்திய அவர்கள் ஃபிர்அவ்னிடம்) எங்களுக்கு வந்துள்ள தெளிவான அத்தாட்சிகளை விடவும், எங்களைப் படைத்தவனை விடவும் உன்னை(மேலானவனாக) நாங்கள் எடுத்துக் கொள்ளமாட்டோம். ஆகவே என்ன தீர்ப்புச் செய்ய நீ இருக்கிறாயோ அவ்வாறே தீர்ப்புச் செய்துகொள். நீ தீர்ப்புச் செய்வதெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில் தான் என்று கூறினார். எங்களின் தவறுகளையும், எங்களை நீ கட்டாயப்படுத்தினால் (நாங்கள் செய்ய நேர்ந்த) சூனியத்தையும், எங்களுக்கு மன்னிப்பதற்காக எங்கள் இறைவன் மீது நிச்சயமாக நாங்கள் இறைநம்பிக்கை கொண்டோம். மேலும், தான் மிக்க மேலானவனாகவும், (என்றும்) நிலைத்திருப்பவனாகவும் இருக்கின்றான்” (என்று கூறினார்கள்)
நிச்சயமாக எவன் தன் இறைவனிடத்தில் குற்றவாளியாக வருகிறானோ, அவனுக்கு நரகம் நிச்சயமாக இருக்கிறது. அதில் அவன் மரணிக்கவும் மாட்டான் வாழவும் மாட்டான். ஆனால், எவர்கள் முஃமினாக, நன்செயல்களைச் செய்தவர்களாக அவனிடம் வருகிறார்களோ, அவர்களுக்கு மேலான பதவிகள் உண்டு. (அத்தகையவர்க்கு) என்றென்றும் நிலைத்திருக்கும் சுவனபதவிகள் உண்டு. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அவற்றில் அவர் என்றென்றும் வசிப்பர். இதுவே (பாவங்கள் நீங்கித்) தூய்மையானவர்களின் (நற்) கூலியாகும்.
இன்னும் “நீர் என் அடியார்களுடன் இரவோடிரவாகப் பயணம் செய்து, அவர்களுக்காக கடலில் உலர்ந்த பாதையை உண்டாக்கிக் கொள்வீராக! (ஃபிர்அவ்ன் உம்மைப்) பிடித்துவிடுவான் என்று பயப்படாமலும், (கடலில் மூழ்கி விடுவோம் என்று) அஞ்சாமலும் இருப்பீராக!’ என்று மூஸாவுக்கு நாம் திட்டமாக இறைச் செய்தி அறிவித்தோம்.
மேலும் ஃபிர்அவ்ன் தன் சேனைகளுடன் அவர்களைப் பின் தொடர்ந்தான். ஆனால் கடல் அவர்களை முற்றாக மூழ்கடித்து விட்டது. ஃபிர்அவ்ன் தன் சமூகத்தாரை வழிகெடுத்தான், நேரான பாதையை (அவர்களுக்குக்) காட்டவில்லை.
இஸ்ராயீலின் சந்ததியினரே! நாம் திட்டமாக உங்களை உங்கள் பகைவனிடமிருந்து இரட்சித்தோம். மேலும் துர்(ஸினாய் மலையின்) வலப்பக்கத்தில் நாம் (தவ்ராத் நெறிநூலை அருள்வதாக) உங்களுக்கு வாக்குறுதியளித்தோம். இன்னும் “மன்னு ஸல்வாவை‘ (உணவாக) உங்கள் மீது நாம் இறக்கி வைத்தோம். நாம் உங்களுக்கு அளித்துள்ள தூய்மையான வற்றிலிருந்து உண்ணுங்கள். (அதற்கு நன்றி செலுத்தாமல்) அழிச்சாட்டியம் செய்யாதீர்கள். (அப்படி செய்வீர்களானால்) உங்கள் மீது என் கோபம் இறங்கி விடும். மேலும், எவன் மீது என் கோபம் இறங்குகிறதோ அவன் நிச்சயமாக வீழ்வான்.
எவன் பாவமன்னிப்புத் தேடி இறை நம்பிக்கை கொண்டு நற்செயல்களையும் செய்து அப்பால் நேர்வழியும் அடைகிறானோ அவனுக்கு நிச்சயமாக நான் மிகவும் மன்னிப்பவனாக இருக்கின்றேன் (என்று கூறினோம்).
மூஸாவே! உம் சமூகத்தாரை விட்டு உம்மை இவ்வளவு சீக்கிரம் விரைந்து வரச்செய்தது யாது? (என்று துர்ஸினாய் மலைக்கு அவர்கள் வந்தபோது அந்த இறைவன் கேட்டான்) (அதற்கவர்) அவர்களும் என் அடிச்சுவட்டின் மீதே வருகின்றனர். இன்னும் (என்) இறைவனே! நீ என்னைப் பற்றித் திருப்திப்படுத்துவதற்காக, நான் உன்னிடத்தில் விரைந்து வந்தேன் என்று கூறினார்.
“நிச்சயமாக, (நீர் இங்கு வந்த) பின்னர் உம்மடைய சமூகத்தாரைச் சோதித்தோம். இன்னும் அவர்களை “ஸாமிரி‘ வழிகெடுத்துவிட்டான்‘ என்று அந்த இறைவன் கூறினான்.
ஆகவே, மூஸா கோபமும் விசனமும் கொண்டவராய்த் தம் சமூகத்தாரிடம் திரும்பி வந்து, என்னுடைய சமூகத்தவர்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு ஓர் அழகிய வாக்குறுதி கொடுக்கவில்லையா? எனவே அந்த வாக்குறுதி(க்காலம்) அதிகமாகிவிட்டதா? அல்லது எனக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு மாறு செய்தீர்களா? (என்றார்)
உங்களுக்குக் கொடுத்திருந்த வாக்குறு திக்கு எங்கள் சக்தியைக் கொண்டு நாங்கள் மாறு செய்யவில்லை. ஆனால் நாங்கள் சமூகத்தாரின் அலங்கார (ஆபரண)ங்களிலிருந்து சில சுமைகள் (கொண்டு) சுமத்தப்பட்டோம். பிறகு, நாங்கள் அவற்றை(க் கழற்றி நெருப்பில்) எறிந்தோம். அவ்வாறே ஸாமிரியும் எறிந்தான் என்று அவர்கள் கூறினார்கள்.
பின்னர் அவன் அவர்களுக்காக ஒரு காளைக்கன்றை (உருவாக்கி) வெளிப்படுத்தினான் அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. (இதைக் கண்ட) சிலர் “இது தான் உங்களுடைய நாயன், இன்னும் (இதுவே) மூஸாவின் நாயனுமாகும். ஆனால் அவர் இதை மறந்துவிட்டார் என்று சொன்னார்கள். அவர்களுக்கு அது மறுபடி எதுவும் சொல்லவில்லை என்பதையும், அவர்களுக்காக நன்மையையோ, தீமையையோ செய்யச் சக்தியற்றது என்பதையும் அவர்கள் பார்க்கவில்லையா?
இதற்கு முன்னரே ஹாரூன் அவர்களை நோக்கி, “என் சமூகத்தாரே! நிச்சயமாக இதைக் கொண்டு நீங்கள் சோதிக்கப்பட்டிருக்கிறீர்கள். நிச்சயமாக உங்களுடைய இறைவன் அருளாளன் ஆவான். எனவே என்னைப் பின்பற்றுங்கள். இன்னும் என் கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள் என்று கூறினார். மூஸா எங்களிடம் திரும்பி வரும் வரையில், நாங்கள் இதன் ஆராதனையை நிறுத்தமாட்டோம் என்று அவர்கள் கூறினார்கள்.
(மூஸா திரும்பியதும் தம் சகோதரரிடம்) ஹாரூனே! இவர்கள் வழிகெடுக்கிறார்கள் என்று நீங்கள் கண்டபோது (அவர்களுக்கு போதனை செய்து திருத்துவதில் நின்றும்) உங்களைத் தடை செய்தது யாது? என்று கேட்டார். நீங்கள் என்னைப் பின்பற்றியிருக்க வேண்டாமா? (அவ்வாறு செய்வதை என்ன தடுத்தது?) நீங்கள் என் கட்டளையை மீறினீர்களா?
(இதற்கு ஹாரூன்) என் தாயின் மகனே! என் தாடியையோ என் தலை(முடி)யையோ பிடி(த்திழு)க்காதீர்கள். “பனீ இஸ்ராயீலிடையே நீங்கள் பிரிவினையை உண்டாக்கி விட்டீர் கள். என் வார்த்தைக்காக நீங்கள் காத்திருக்கவில்லை!’ என்று நீர் கூறுவீரோ என நிச்சயமாக நான் அஞ்சினேன் என்று கூறினார்.
“ஸாமிரிய்யே! உன் விசயமென்ன?’ என்று மூஸா அவனிடம் கேட்டார். அவர்கள் காணாத ஒன்றை நன் கண்டேன். ஆகவே, நான் அந்த தூதர் காலடியிலிருந்து ஒரு பிடி (மண்ணாகப்) பிடித்து, அதை எறிந்தேன். அவ்விதம் (செய்வதை) என் மனம் எனக்கு அழகா(ன செயலா)க ஆக்கிற்று‘ என(ஸாமிரி பதில்) சொன்னான்.
நீ இங்கிருந்து போய்விடு; நிச்சயமாக இந்த வாழ்க்கையில் (எவரைக் கண்டாலும், என்னைத்) தீண்டாதீர்கள் என்று சொல்(லித் திரி)வது தான் உனக்குள்ளது. (மறுமையில்) நிச்சயமாக உனக்கு வாக்களிக்கப்பட்ட வேதனையும் உண்டு. அதை விட்டும் நீ தப்பமாட்டாய்; மேலும், நீ தரிபட்டு ஆராதனை செய்துகொண்டிருந்தாயே அந்த “நாயனைப்‘ பார்; நிச்சயமாக அதனைச் சுட்டெரித்துப் பின்னர் (சாம்பலாக்கி) அதைக் கடலில் பரத்திவிடுவோம்‘ என்றார்.
“உங்களுடைய நாயன் அந்த இறைவன் ஒருவன்தான்; அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறில்லை; எல்லாப் பொருட்களிலும் ஞானத்தால் விசாலமானவன்” என்றும் கூறினார்.
(தூதரே!) இவ்வாறே முன் சென்று போனவர்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறுகிறோம். மேலும் திட்டமாக நம்மிடமிருந்து நினைவூட்டும் நல்லுபதேசத்தை (இந்த இறை நூலை) நாம் உமக்குக் கொடுத்திருக்கிறோம். (20:60-99)