அந்நஜாத் இதழ் ஏன்? எதற்கு? எப்போது?

in 2010 அக்டோபர்

A.கமால் உசேன், திருச்சி.

இஸ்லாமிய இலட்சிய மாத இதழ் என்ற முழக்கத்துடன் சுமார் 25 ஆண்டுகளையும் கடந்து அந்நஜாத் தொடர்ந்து வெளியாகி வருவது யாவரும் அறிந்ததே. அல்ஹம்துலில்லாஹ். அந்நஜாத் இதழின் துவக்க கால நிர்வாகிகளில் சிலர் மதரஸாக்களில் ஓதி பட்டம் வாங்கிய ஆலிம்கள் என்பதையும் யாவரும் அறிவார்கள். 1980-1985க்கு முன் மாற்று மதத்தினர்களைப் போன்ற எல்லா அனாச்சாரங்களையும் முஸ்லிம்கள் மத்தியில் அதுவும் இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்களை நல்வழியில் நடத்த வேண்டியவர்களான ஆலிம் உலமாக்கள், எங்கே மக்கள் நேர் வழியை அறிந்து கொண்டால் தங்களது வருவாய் பாழ்பட்டுவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக அல்லாஹ்வின் மீது அச்சமற்றவர்களாக, தாங்களும் நேர்வழி அடையாமல்-மக்களையும் நேர் வழி அடையவிடாமல் மக்களின் பால் தூய இஸ்லாத்தை கொண்டு செல்லாமல் இருந்த காலகட்டத்தில் தூய இஸ்லாத்தை அதன் அசல் வடிவில் கொண்டுச் செல்லவும், நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் நன்நோக்கத்துடனும் அந்நஜாத் துவங்கப்பட்டது. ஆங்காங்கே இதே நோக்கில் செயல் பட்டு, துண்டு பிரசுரங்கள் மூலம் பிரச்சாரம் செய்தவர்களால் இது ஒரு மாத இதழாக வெளி வந்தால் என்ன என்ற கருத்தின்-ஒத்துழைப்பின் அடிப்படையில் அந்நஜாத் துவங்கப்பட்டது.

அந்த கால கட்டங்களில் இஸ்லாமிய இதழ்கள் என்று விரல்விட்டு எண்ணக்கூடிய அளவி லேயே இருந்தன. அவைகளிலும், தர்கா மவ்லூது, பாத்திஹா விளம்பரங்கள் நிரம்பி வழிந்தன. அப்போதைய முடிசூடா மன்னர்களாக கருதப் பட்ட பீடிக் கம்பெனிகளின் (பீடிகளின்) விளம்பரங்கள் இல்லாத இதழே இல்லை என்று சொல்லலாம். எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி அவன் மீதே நம்பிக்கை வைத்து அவனுடைய கிருபையால் இந்த பத்திரிக்கை எந்த பீடி விளம்பரங்கள் இல்லாமல், பில்லி, சூனிய, மாந்தீரிக விளம்பரங்கள் இல்லாமல், மஹல்லா பணக்காரர்களின் திருமணம், ஹஜ், மவுத் அறிவிப்பு விளம்பரங்கள் இல்லாமல் நாரே தக்பீர் அல்லாஹு அக்பர் என்ற வெற்று முழக்கங்கள் இல்லாமல், எந்த ஒரு அரசியல் பின்னணியும் இல்லாமல் தூய இஸ்லாத்தின் இலட்சியத்தை கடைக்கோடி முஸ்லிமும் அடைந்து பேணிட வேண்டும் என்ற ஒரே முயற்சியின் வெளிப்பாடாக அந்நஜாத் மாத இதழ் வெளியானது.

குழப்பங்களும், இணைவைப்புகளும், அனாச் சாரங்களும் நிறைந்த அந்த கால கட்டத்தில் தூய இஸ்லாத்தை எடுத்து வைத்தது, பெரும் சவாலான புது அனுபவமாகத்தான் இருந்தது. காரணம் மார்க்கத்தில் இல்லாத பல விஷயங்கள் முஸ்லிம் மக்கள் மத்தியில் வேரூன்றி கிடந்தபோது, இது வெல்லாம் நாம் உயிரினும் போற்றக்கூடிய நபி (ஸல்) அவர்கள் காட்டித்தரவில்லை. அவர்களின் சொல்,செயல், அங்கீகாரத்தை தவிர வேறு எதுவும் மார்க்கம் ஆகாது என்ற பிரச்சாரம் செய்த நமக்கு “குழப்பவாதிகள்’ என்ற பட்டம் தான் சமுதாயம் வழங்கியது.

மார்க்கத்தில் இல்லாத சடங்கு சம்பிரதாயங்களை மனிதனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை அதுவும் நபியின் பெயரால், அடுத்தபடியாக மஹபூப் சுபஹானி என்றும் முஹையத்தீன் அப்துல் காதிர் ஜீலானி என்றும் அழைக்கப்படுபவரின் பெயரால், நாகூர் ஏர்வாடி…. இப்படி போய்க்கொண்டே இருந்தால் கட்டுரையின் நீளம் போதாது. இஸ்லாத்தின் ஐவேளை கடமைகளுக்கு தராத முக்கியத்துவத்தை, அவ்லியாக்களுக்கும், ஷேக், முரீத்களுக்கும் தந்து குழப்பங்களின் முழு அவதாரங்களாக திரிந்தவர்கள் இஸ்லாத்தை அதன் தூய வடிவத்தில் சொல்ல வந்தவர்களைப் பார்த்து குழப்பவாதிகள் என்று இன்றுவரை சொல்லி வருகிறார்கள். மேலும், யூதக் கைக் கூலிகள், பிரிவினைவாதிகள், வெளி நாட்டிலிருந்து காசு வாங்கி ஜமாஅத்தை கூறு போடுபவர்கள் என்று தங்கள் வாய்க்கு வந்ததையயல்லாம் இன்று வரை சொல்லி வருகிறார்கள். நவூதுபில்லாஹ்.

ஓரிறையை போதிக்க வந்த அந்த இறைத் தூதர்களுக்கு கிடைக்காத இழிச் சொற்களும், பழிச் சொற்களுமா நமக்கு கிடைத்துவிட்டது என்றவாறு, நெறிநூலான குர்ஆனில் அல்லாஹ் சொல்லும் அழகிய பொறுமையுடன், சொல்லொண்ணா துயரங்களைத் தாங்கி இந்த பயணத்தை மேற்கொண்டோம். அல்லாஹ்வின் நேர்வழி யாருக்கு கிடைத்ததோ அவர்கள் குர்ஆனை கொஞ்சம்-கொஞ்சமாக தாய்மொழியில் விளங்கிப் படிக்க ஆரம்பித்தார்கள்.

நேர்வழி காட்ட வந்த குர்ஆன், அழகிய வெல்வெட் துணிகளால் அலங்கரிக்கப்பட்டு, காட்சிப் பொருளாக, பாதுகாப்புப் பெட்டகத்தில், சண்டை சச்சரவுகளின்போது சத்தியம் செய்வதற்காகவும் பயன்பட்டு வந்ததை எந்த மத்ஹப்வாதிகளும் மக்களுக்கு எடுத்துச் சொல்லவில்லை. இஸ்லாமிய இசையில்(?) பாடல்கள் கேட்கலானார்கள், இசை முரசு, இசையருவி, தீன் இசைத் தென்றல், தீன் இசைத் திலகம் என்ற பட்டமெல்லாம் இஸ்லாமிய(?) பாடகர்களுக்கு வழங்கலானார்கள். ஒரு கையில் இறை வேதம் மறு கையில் நபி போதம் இருக்கையில் நமக்கென்ன தயக்கம் என்றெல்லாம் புல்லரிக்க பாடுவதை ரசிக்கலானார்கள். ஆனால் இதையயல்லாம் இஸ்லாம் சகிக்கிறதா என்று யாரும் யோசிக்கவில்லை. காரணம் அல்லாஹ்வுக்கு ஒரு பாடல், ரசூலுக்கு 2 பாடல், அவுலியாக்களுக்கு அளவுக்கதிகமான பாடல்கள் பாடி கேசட் விற்பனை ஜோர். ஆங்காங்கே தர்கா கூடுகளிலும், முஸ்லிம்களின் விசே சுப காரிய வீடுகளிலும், திருமணங்களின் போதும் ஹனீபா பாடல் பாடவில்லையென்றால் அது முஸ்லிம் வீடே இல்லை என்ற நிலை. இசை ஹராம், கவிதை ஹராம், இணைவைப்பு ஹராம்,மெளலூது-மீலாது ஹராம், தட்டு-தாயத்து ஹராம், வரதட்சணை கூடாது என்பதை உரைக்க கிளம்பியவர்களுக்கு அடி-உதை கிடைத்ததோடு மட்டுமல்லாமல் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டோம்.

அழகிய பொறுமையை அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் மேற்கொண்டு வீழ்வது நாமாக இருந்தாலும், முஸ்லிம் என்று சொல்பவர்கள், உண்மை முஸ்லிமாக அல்லாஹ் வுக்கு அடிபணிந்த முஸ்லிமாக, நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்த முஸ்லிமாக வாழ்வதே சிறந்தது என்ற அடிப்படையில் தாஃவா பணியை தொடர்ந்து வந்தோம். அல்ஹம்துலில்லாஹ்.

தாய்மார்களிடம் மண்டிக் கிடந்த அளவிலா இணைவைப்புப் பாடல்கள், தர்கா சடங்குகள், பால் கிதாபு வகையறாக்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தயிரிலிருந்து வெண்ணை வருவது போல் தூய இஸ்லாத்தின் பக்கம், முஸ்லிம்களே நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள் என்ற வசனத்தின் அழைப்பிற் கேற்ப-சத்தியத்தின் பக்கம் விரைந்து வரலானார்கள்.

மாபெரும் இந்த தவ்ஹீது எழுச்சியை கண்டு நாம் இன்னும் முழு மன நிறைவுக்கு வரமுடிய வில்லை. ஏனென்றால் எந்த 4 மத்ஹபுகள் இல்லை என்று சொல்லி கிளம்பினார்களோ 5வது மத்ஹபாக தவ்ஹீது மத்ஹபை உருவாக்கி அதன் உட் பிரிவுகளாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஏகப்பட்ட பிளவுகள் (நவூதுபில்லாஹ்) உருவாகி வருகின்றன. ஆம் அந்நஜாத் இதழை ஆரம்பிக்கும்போது அதன் ஆசிரியர் உள்ளிட்ட பல பொறுப்புகளிலிருந்த ஆலிம்கள்(?)  ஏற்கனவே இஸ்லாத்தின் தூண்களாக கருதப்பட்ட நான்கு மத்ஹபுகளை சரிகாணாமல் ஒரே ஜமாஅத் உருவாக அரும்பாடு பட்டார்கள். ஆனால் நமக்கு(ம்) ஒரு பெயர் வேண்டும் என்றார்கள். காலப்போக்கில் இதுவும் ஒரு பிரிவாக ஆகிவிடும் என்பதை கண்டித்த ஆலிம் அல்லாத ஒரே ஜமாஅத் ஆர்வலர்களை-நீங்கள்ஆலிம்கள் இல்லை என்ற ஒரே காரணத்தை காட்டி, நாங்களே மெத்தப்படித்த மேதாவிகள் என்ற ஆணவத்தோடு வெளியேறினார்கள். வெளியேறும்போது, அரசியல்வாதிகள் புதுக்கட்சிகள் தொடங்கும் போது ஏற்கனவே அவர்கள் இருந்த கட்சி மீது பொருளாதார மோசடியை கூறி வெளி யேறுவது போல் அதே பாணியை இவர்கள் அரங்கேற்றினார்கள். பொதுக்குழு, செயற்குழு முடிவுகளுக்குப்பின் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று ஓட்டம் பிடித்தவர்கள் அந்நஜாத் என்ற பத்திரிக்கையே வருவதில்லை என்ற உச்சகட்ட தம்பட்டம் அடித்தார்கள். நஜாத் என்ற பத்திரிக்கைப் பெயர்-பிளவுப் பெயராக மக்கள் மத்தியில் ஆகி அதோ நஜாத்காரன் போறான் என்று நஜாத் என்ற சொல்லுக்கு அர்த்தம் கூட தெரியாமல் நஜீஸை விட கேவலமாக பேசுவதாக எண்ணி அசல் தவ்ஹீதை சொல்லக் கிளம்பியவர்களுக்கு சமுதாயம் அவர்கள் அறிந்தோ அறியா மலோ அதோ வெற்றியாளன் போகிறான் அதோ ஈடேற்றம் கொண்டவன் என்று அசல் பெயரைத் தந்தது அல்ஹம்துலில்லாஹ்.

அவர்கள் பாராட்டவில்லை; மாறாக தூற்றும் நோக்கத்துடன்தான் அதை இன்றுவரை சொல்லி வருகிறார்கள். பத்திரிக்கையின் துவக்கத்தில் இங்கிருந்து வெளியேறியவர்கள் ஜன்னத், முபீன் என்று தங்கள் பத்திரிக்கைகளுக்கு பெயர் வைத்தாலும் அவர்களுடைய பத்திரிக்கை பெயர்களை வைத்து மக்கள் அவர்களை அடையாளம் காட்டுவ தில்லை. ஆளுக்கொரு இயக்கம் கண்டு வருவதால், ஆளுக்கொரு ஊடகங்களில் தோன்றி தங்கள் இயக்கப் பெயர்களை தொடர்ந்து விளம்பரப்படுத்தி வந்தாலும், அவர்களது ஆதரவாளர்கள் அப்பிரிவுப் பெயர்களை உச்சரித்தாலும், பொது மக்களிடம் புதுப்புது தவ்ஹீது இயக்க வாதிகளுக்கும் தொன்று தொட்டு வரும் பெயர் நஜாத்தாகவே உள்ளது.  நீ சட்டையை வேண்டுமானால் மாற்றி இருக்கலாம்; உன் உடம்பு நஜாத்தான் என்கிறார்கள் தப்லீக் போன்ற சுன்னத் ஜமாஅத்காரர்கள். பாவம் அவர்களுக்கு அமல்களின் சிறப்புகள் ஓதி-கஸ்த் செய்யவே நேரம் போதவில்லை. அதனால் இந்த வீண் இயக்கங்கள் என்ன? அதன் தலைவர்கள் யார் என்பது பற்றிய வீண் ஆராய்ச்சிகளில் அவர்கள் ஈடுபடுவதில்லை. தர்க்கா சகோதரர்களுக்கு கூடு எப்ப வரும் கந்தூரி எப்ப நடக்கும் என்று யோசிக்கவே நேரம் போதவில்லை. இவர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் என்பதை விட, இந்த இரண்டு பேரையும் தூக்கி சாப்பிடும் வகையில், மத்ஹபுகளை, தப்லீக், தர்க்காக்களை கண்டித்து தீமையை தடுத்து-தங்களுடைய அப்போதைய புது இயக்க நன்மையை(?) ஏவுபவர்கள் ஒருபக்கம் சமுதாயப் பணிகளில் ஈடுபட்டு வந்தாலும் மறுபக்கம் நஜாத் மீது அவதூறு புராணம் பாட மறப்பதில்லை. அவ்வப்போது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நஜாத் பத்திரிகையிலிருந்து தாங்கள் ஏன் பிரிந்தோம் என்ற அதே பழைய பல்லவியை பாடி அங்கலாய்த்து வருகிறார்கள்.

இவர்களில் யாருக்கும் சமுதாயத்தை ஒன்றி ணைப்பது; ஒற்றுமைப்படுத்துவது பற்றிய எந்த அக்கறையோ-ஆவலோ இல்லை; நீ என்னைத் திட்டு; நான் உன்னைத் திட்டுகிறேன். நம்ம எல்லோரும் சேர்ந்து நஜாத் பத்திரிக்கையை திட்டுவோம். அதை யாரும் படிக்கவிடாமல் தடுப்போம் என்று எழுதப்படாத ஒரு ஒப்பந்தத்தை போட்டவர்கள் போன்று அந்நஜாத்தைப் பற்றி அவதூறு பேசி வருகிறார்கள். காரணம் அதன் ஆசிரியர் மெளலவி அல்ல என்ற ஒரே காரணத்திற்காகவும்; மெளலவியாக இல்லாமல் எல்லா மெளலவிகளின் அடிப்படைப் பிரச்சினையான இமாமத் மற்றும் தாவா பணிக்கு சம்பளம் வாங்குவதை கண்டிப்பதாலும் இந்த ஒப்பந்தம் போட்டவர்களாக மக்கள் நேரான வழியிலிருந்து தடம் புரளச் செய்ய எல்லா தடம்களையும் காட்டி தடங்கல்களை செய்து வருகிறார்கள்.

சுன்னத் ஜமாஅத் என்றழைக்கப்படும் மத்ஹபுவாதிகள் மதரஸாக்கள் அமைத்து அங்கு பயிலும் மாணவர்களை தத்தமது பள்ளிவாசல்களில் இமாமத் பணிக்கு அமர்த்தி வருவதைப் போல் தவ்ஹீத் ஜமாஅத் என்றழைக்கப்படும் நவீன மத்ஹபுவாதிகளும் தவ்ஹீத் மதரஸாக்கள் அமைத்து அங்கு பயிலும் மாணவர்களை தத்தமது பள்ளிவாசல்களில் இமாமத் பணிக்கு அமர்த்தி வருவதை கண்கூடாகப் பார்க்கலாம். ஆக எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் போல் இமாமத்-தாவா பணிக்கு அல்லாஹ் விடம் கூலியை எதிர்பார்க்காமல் தன்னைப் பின்பற்றும் (முஸ்லிம்) மக்களிடத்தில் கூலியை இம்மையில் மட்டும் எதிர்பார்த்தவர்களாக மறுமை கூலியை தேவையற்றவர்களாக இருந்து வருகிறார்கள்.

இதனை பகிரங்கமாகச் சுட்டிக்காட்டும் ஒரே பத்திரிக்கையாக அந்நஜாத் மட்டும் இருந்து வருவதால் இவர்களின் ஆதிக்க வெறியை முறியடிக்க பல்வேறு விதங்களில் இவர்கள் செய்யும் பிரச்சினைகளை, அல்லாஹ் ஒருவனின் பொருத்தத்தை மட்டும் நாடி நபி(ஸல்) அவர்களின் சீரிய வழிகாட்டுதலின்படி அழகிய பொறுமையுடன் எதிர்கொள்கிறோம். இம்மையில் இமாம்களைப் பின்பற்றித் தொழும் முஸ்லிம்கள் தாம் தொழுவதற்காக எந்த கூலியும் வாங்காமல் நாளை மறுமைக் கூலி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொழுகிறார்கள். ஆனால், முஸ்லிம்கள் ஜமாஅத்தாகத் தொழுவதற்கு முன்னோடியாக, முன்நின்று தொழும் இமாம்களோ தாம் தொழ (வைக்க) சம்பளம் பேசி கறாராக மார்க்கத்தை வியாபாரம் செய்கிறார்கள். இதன் காரணமாக நாளை மறுமை நாளில் இவர்களுக்கு தொழுததின் கூலியை சம்பளமாக இவர்கள் இங்கு மாதாமாதம் பெற்று விட்டதால் எதுவும் கிடைக்க வாய்ப்பில்லை. எவர் இம்மையில் மட்டும் கூலியை எதிர்பார்க்கிறாரோ அவருக்கு இம்மையில் மட்டும் கூலி தருவேன் என்ற அல்லாஹ்வின் வாக்குறுதிப்படி இது சாத்தியமாகும். (2:200)

இம்மையிலும், மறுமையிலும் நன்மையை எதிர்பார்த்து தொழுவதற்கு சம்பளம் வாங் வில்லையோ அவர்களுக்கு (2:201 என்ற வசனத்தின் பிரார்த்தனையின்படி) அவர்களுக்கு நிச்சயமாக அல்லாஹ்விடம் சன்மானம் உண்டு. இதை அப்பட்டமாகச் சொல்லும் துணிச்சலும் இவர்களுக்கு இல்லை. இதை ஏற்றுக் கொள்ளும் மனோ பக்குவமும் இல்லை. அவர்கள்தான் ஒவ்வொரு ஐவேளை தொழுகையையும் முடித்த பின்னர் இஸ்லாம் காட்டித்தராத கூட்டு துஆவை இவர்களாகவே உருவாக்கி ஓதி, பாமர முஸ்லிம்களை (ஆமாம்சாமி போட சொல்வது போல்) ஆமீன் சொல்ல வைத்து அழகு பார்க்கிறார்களே! அப் போது மேற்கண்ட 2:201வது வசன துஆவையும் கேட்கிறார்களே என்று நீங்கள் சொல்லலாம். அப்படியே அவர்கள் அதை கேட்டாலும் ஆமீன் சொல்லுபவர்கள் பின்னால் தொழும் பாமரர்களே தவிர அவர்களுக்கு அவர்களே கூட்டு துஆவுக்கு ஆமீன் சொல்லுவதில்லையே.

ஐவேளை தொழுகைகளில் தக்பீர் கட்ட வேண்டிய முறைகள்-மத்ஹபுகளின் பெயரால் மாற்றம், ஜனாசா தொழுகை-பெருநாள் தொழுகைகளின் தக்பீர்களின் எண்ணிக்கை மாற்றம், பெருநாட்களின் போது ஓத வேண்டிய தக்பீர் சொல்லும் முறைகளில் மாற்றம். திக்ரு மஜ்லீஸ் என்று இல்லாததுகளை மார்க்கத்தில் புகுத்தியது; பாமர முஸ்லிம்களை அவாம் என்றும்; நாங்களே சகலமும் கற்றறிந்த ஆலிம் என்று ஆணவம் பேசுவது; ஜும்ஆ குத்பாவை தாய்மொழியில் மட்டும் மிம்பர் ஏறி செய்தால் போதும் என்பதை தாய்மொழியில் மிம்பருக்கு கீழும், பின்னர் மிம்பரில் ஏறி அரபியிலும் அகம்பாவத்துடன் (பயான்) செய்வது; ஜும்ஆவுக்கு இரட்டை பாங்கு சொல்வது, பெருநாள் தொழுகைகளை காலம் தாழ்த்தித் தொழுவது, பிறை விஷயத்திலும், நாளின் துவக்கம் எப்போது போன்ற அடிப்படை விஷயங்களை குர்ஆன், ஹதீஸ் பார்வையிலும், அறிவியல் பூர்வமாகவும் சிந்திக்க மறுப்பது; திருமண குத்பாவை அரபியில் தான் செய்வேன் என்று அடம் பிடிப்பது, திருமணத்தின்போது பிறவி முஸ்லிமை கலிமா சொல்லி புதிதாக(நவ்) முஸ்லிமாக்குவது; ஜனாசா தொழுகையில் கூட்டு துஆ கேட்பது. ஜியாரத் 3ம் நாள் 10, 20, முக்கியமாக 40ம் நாள் பாத்திஹா மெளலூது ஓதி மக்களை வழிகெடுத்து தர்கா, தரீக்காக்களை மவ்லவிகளே முன்னின்று நடத்தாட்டுவது, முரீத் முறைகளை கொண்டு வந்து உயிருள்ள ஷேக்மார்களுக்கு சந்தனக் கூடு நடத்தி இணைவைப்பின் விளிம்பிற்கு கொண்டு செல்வது, இப்படி எண்ணிலடங்கா குழப்பங்களை உருவாக்கி குழம்பிய குட்டைக்குள் மீன் பிடித்து இவர்கள் தான் வெற்றியாளர்களைப் பார்த்து, நடுநிலையாளர்களைப் பார்த்து, உண்மை மார்க்கத்தில் சென்று மற்றவர்களையும் அழைப்பவர்களைப் பார்த்து, குழப்பவாதிகள் என்று சொன்னால், பைத்தியம் அடுத்தவரைப் பார்த்து பைத்தியம் என்று சொல்வது போலத்தானே உள்ளது.

குழப்பம் கொலையைவிட கொடுமையான கொடூரமானதாகும் என்பது அல்குர்ஆனின் கூற்று, எனவே உண்மை குழப்பவாதிகளை படம் பிடித்து அடையாளங்காட்டவே உண்மை முஸ்லிம்கள் உண்மையான இஸ்லாம் மார்க்கத்தை விளங்கி அதன்படி செயல்படச் செய்யவே இந்த அந்நஜாத் மாத இதழின் அறைகூவல் தொடர்கிறது. மாற்று மதத்தினரில் கடவுளுக்கும்-பக்தனுக்கும் இடையில் இடைத்தரகர்களாக செயல்படுவதாக(?) கருதுவோரை புரோகிதர்கள் என்றழைப்பார்கள். அதுபோல இஸ்லாத்திலும் அல்லாஹ்வுக்கும் அடியானுக்குமிடையில் இடைத்தரகர்களாக தங்களைத் தாங்களே ஆக்கிக் கொண்டு, இதுபற்றி அல்லாஹ்வின் அருமைத் தூதர் அவர்கள் காட்டித்தராத முறையில் அங்கு குருகுல கல்வி போல, இங்கு மதரசா கல்வியை ஏற்படுத்தி அதில் கால் வைத்து விட்டாலே ஏதோ தேவலோக இந்திரர்கள் போல கருதப்படுவது போல, இங்கு வெள்ளை ஜிப்பா தரித்த மலக்குகள் போல வானத்துக்கும் பூமிக்கும் தான் என்ற அகம்பாவத்துடன் தாவிக் குதிப்போரையே நாங்கள் புரோகிதர்கள் என்கிறோம். காரணம் தான் என்ற பெருமை கொண்டவன் நரகம் புகுவான் என்பது நபிமொழி. எனவே புரோகிதர்கள் என்று யாரை சொல்கிறோம். ஏன் சொல்கிறோம் என்பதையும் விளங்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு முஸ்லிமும் ஒவ்வொரு ஆலிமாக திகழவே இந்த முயற்சி. ஆலிம் என்ற போலி வேஷம் வேண்டாம். போலிகளை இனங்கண்டு அவர்களின் பிடியிலிருந்து எல்லா முஸ்லிம்களையும் விடுபடச் செய்வோம். அதனால் நரகத்தின் கோரப் பிடியிலிருந்து விடுபடுவோம்.
(பார்க்க அல்குர்ஆன் 33:66,67,68)

நரகத்தில் அவர்களுடைய முகங்களை புரட்டிப் புரட்டிப் பொசுக்கும் நாளில் “எங்களுடைய கேடே! நாங்கள் அல்லாஹ்வுக்கும் அவனு டைய தூதருக்கும் வழிப்பட்டிருக்க வேண்டாமா?” என்று கதறுவார்கள். (33:66)

அன்றி “எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம். நாங்கள் தப்பான வழியில் செல்லும்படி அவர்கள் செய்துவிட்டார்கள். (33:67)

(ஆகவே) எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைக் கொடுத்து அவர்கள் மீது பெரிய சாபத்தைப் போடு” என்று கூறுவார்கள். (33:68)

Previous post:

Next post: