ஏற்றுமதியாகும் தப்லீக் ஜமாஅத் கொள்கைகள் ஏற்கப்படவில்லை!

in 1996 ஏப்ரல்

“ஜித்தா நிரூபர்”

இந்தியாவில் உருவாகிய தப்லீக் ஜமாஅத், முஸ்லிம்களுக்கு குர்ஆன் – ஹதீஸ்களை போதிப்பதை விட்டு விட்டு ஜக்கரிய்யா சாஹிப் எழுதிய தஃலீம் நூல்களை இஸ்லாமிய கொள்கையின் வேத நூல்களாக மக்களிடையே போதித்து வருவதை யாவரும் அறிவர். இந்நூல்களில் ஆதாரமற்ற பொய்யான, பலவீனமான நபிமொழிகளும், இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைக்குப் புறம்பான, அர்த்தமற்ற கருத்துக்களும் பல்கியுள்ளதை நாம் அவ்வப்போது குறிப்பிட்டுள்ளோம். இதனை எழுத்து மூலம் நேரிலும் எடுத்துக்காட்டி இந்நூல்களுக்கு பதிலாக குர்ஆன் – ஹதீஸ்களை நேரடியாக போதிக்கும்படி நாம் தப்லீக் ஜமாஅத்தின் கஃபாவான – தலைமையகமான – டில்லி நிஜாமுத்தீன் மர்கஸ் வரை சென்று முக்கியஸ்தர்களிடம் சுமார் ஐந்து, ஆறு வருடங்களுக்கு முன்பே விண்ணப்பித்தோம். அம்முயற்சியை நாம் அந்நஜாத் இதழிலும் பிரிசுரித்தோம். சம்பந்தப்பட்டவர்கள் இதனை அலட்சியப்படுத்தினாலும், இந்த ஜமாஅத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந்த பல நண்பர்கள் உண்மையை விளங்கி குர்ஆன் ஹதீஸ்களின்படி வாழ முன் வந்தனர் என்பது நாம் கண்ட உண்மை. அதே நிலை இன்றும் தொடர மேலும் ஒரு வாய்ப்பு.

ஒரு சில தஃலீக் ஜமாஅத் பக்தர்கள் அரபு நாடுகளில் வேலை கிடைத்து செல்கையில், “அமல்களின் சிறப்புக்கள்” போன்ற அவர்களது வேத நூல்களை தங்களுடன் ஏற்றுமதி செய்து அங்கு அவர்களது ஜமாஅத்தில் படிக்கவும், பரப்பவும் செய்கின்றனர். அவை தமிழிலிருப்பதால் அரபிகள் அறிய வாய்ப்பில்லை என நினைக்கின்றனர். இது தவறு; அரபிகள் இதனை கவனித்து வருகிறார்கள்; இவர்களது நூல்களையும், கொள்கைகளையும் ஏற்க வில்லை; நாம்இதுவரை இந்நூல்களைப் பற்றி கூறி வந்த தவறுகளையே சுட்டிக்காட்டி எச்சரிக்கின்றனர் என்பதை கீழ்காணும் செளதி அரசு அலுவலக நோட்டீஸ் மூலம் அறியலாம்.

ஜித்தா இஸ்லாமிய துறைமுக அலுவலக கடிதத்தின் மொழிபெயர்ப்பு
கண்ணியத்திற்குரிய அல்ஃபனார் கம்பெனி ஊழியர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்….)
சவுதி அரேபியாவில் பணி புரியும் மக்களுக்கு இஸ்லாத்தை பரப்புவதின் மீது எங்கள் கண்ணியத்திற்குரிய அரசாங்கம் எடுக்கும் முயற்சியாலும், ஜித்தா இஸ்லாமிய துறைமுக அலுவலகத்தில் அமைந்துள்ள இஸ்லாமிய மையத்தின் ஆர்வத்தாலும் உங்களுக்கு சில விஷயத்தை அறிவிக்க விரும்புகின்றோம்.

1. உங்களின் கேம்பில் உள்ள ஊழியர்களுக்கு மத்தியில் இஸ்லாமிய கொள்கைகளுக்கு மாற்றமான கொள்கைகளை, சில பள்ளி இமாம்களும், அவர்கள் இல்லாத வேறு சிலர்களும் பரப்பி வருகின்றார்கள்.
2.இன்னும் சிலர் அமல்களின் சிறப்புகள் என்று தமிழில் எழுதப்பட்ட கிதாபை மக்களுக்கு படித்துக் கொடுக்கின்றார்கள், இந்த கிதாபில் (ஸஹீஸ் அல்லாத) பலவீனமான ஹதீஸ்களும், சில தவறான கருத்துக்களும் உள்ளன.
3. இன்னும் சிலர் மக்களுக்கு மத்தியில் கொள்கை ரீதியில் பிரிவினையை உருவாக்கி பல இயக்கங்களை உருவாக்குகின்றார்கள்.
மக்களுக்கு ஆதாரப்பூர்வமான நபிமொழிகளையும், இஸ்லாமியக் கொள்கைகளையும், மற்ற மார்க்க விஷயங்களையும் ஆதாரப்பூர்வமான கிதாபுகளிலிருந்து படிப்பித்துக் கொடுப்பதற்கு உங்களின் பள்ளி இமாமுக்கு ஆதாரப்பூர்வமான இஸ்லாமிய கிதாபுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றது, அதிலிருந்து மக்களுக்கு இஸ்லாத்தை படித்துக் கொடுக்கும்படி அவருக்கு ஞாபகம் ஊட்டுங்கள்.

இன்னும் உங்களின் பள்ளியில் வைக்கப்பட்டிருக்கும் அமல்களின் சிறப்புகள் என்ற கிதாபை எடுத்து எமது இஸ்லாமிய மைய்யத்துக்கு அனுப்பி வைக்கும்படியும் தயவாய் வேண்டுகிறோம். பின்பு ஜித்தாவிலுள்ள தலைமை மைய்யத்துக்கு அதை நாங்கள் அனுப்பி வைப்போம்.

உங்கள் ஒத்துழைப்பிற்கு எங்கள் அன்பார்ந்த நன்றிகள்.
ஜித்தா துறைமுக இஸ்லாமிய மைய்யத்தின் காரியதரிசி.

இதன் ஒரிஜினல் அரபி கடிதத்தின் நகலை நாம் சென்னை, திருச்சி தப்லீக் மர்கஸுக்கு அனுப்பியுள்ளோம். பக்கத்திலும் இடம் பெற்றுள்ளது. தங்களுக்குச் சாதகமானத்திற்கு மட்டும் அரபு நாடுகளை உதாரணம் காட்டும் தப்லீக் ஜமாஅத்தினர் இக்கடிதத்திற்கும் முக்கியத்தும் தருவார்கள் என நம்புகிறோம். அல்லாஹ் நேர்வழி காட்ட போதுமானவன்.

Previous post:

Next post: