இப்னு ஹத்தாது தொடர்: 7
நேர்வழி நடக்க அல்குர்ஆன் மட்டும் போதும், நபியின் நடைமுறைகளைச் சொல்லும் ஹதீஸ்கள் தேவை இல்லை என்போரும், நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு நபி, ரசூல் வரமுடியும் என்ற நம்பிக்கை உடையோரும் நேர் வழியை தவர விட்டு, பல கோணல் வழிகளில் சென்று நரகிற்கு இரையாகிக் கொண்டிருக்கின்றனர். அதற்கும், மூலகர்த்தாக்கள் அற்ப உலக ஆதாயங்களைக் குறிக்கோளாகக் கொண்ட புரோகிதர்களே என்பதையும் விரிவாகப் பார்த்தோம்.
அடுத்து, இந்தப் புரோகிதவர்க்கம் தங்களின் நிலைப்பாட்டை இந்த முஸ்லிம் சமுதாயத்தில் நிலைநாட்டிக் கொள்ள ஒரு தந்திரத்தைக் கையாள்கிறார்கள். அவர்களின் இந்தத் தந்திரத்தைப் பெரும்பான்மையான முஸ்லிம்கள், அப்படியே குருட்டுத்தனமாக நம்பி ஏற்றுச் செயல்படுவதால் பெரும் வழிகேட்டில் சென்று கொண்டிருக்கின்றனர்.
அந்த தந்திரம் என்ன தெரியுமா? அல்குர்ஆன் அரபி மொழியில் இறங்கி இருக்கிறது. அரபி மொழி தெரியாமல் வெறும் அல்குர்ஆனின் மொழி பெயர்ப்புகளை மட்டும் பார்த்து, ஒருவன் அல்லாஹ்வின் கட்டளைகளை விளங்கிக்கொள்ள முடியாது. அரபி மொழி பண்டிதர்களான மவ்லவிகள் கொடுக்கும் விளக்கத்தை எடுத்து நடப்பதே அரபி மொழி தெரியாத அவாம்களான பாமரர்களின் கடமை எனக் கூறி முஸ்லிம்களை நம்பவைத்து, அல்குர்ஆனின் நேரடிப் போதனைக்கு நேர்முரணான தர்கா, தரீக்கா, மத்ஹபு, இயக்கங்கள், அமைப்புகள், ஸலஃபி என விதவிதமாகக் கூறி, அல்லாஹ் ஒரே சமுதாயம் எனக் கூறும் முஸ்லிம் சமுதாயத்தைப் பல கூறுகளாக, பிரிவுகளாக, பிளவுகளாகப் பிரித்து இந்தப் புரோகித மவ்லவிகள் ஆதிக்கம் செலுத்தி உலக ஆதாயம் அடைந்து வருகிறார்கள்
ஆனால் உண்மை அதற்கு மாறாக உள்ளது. அல்குர்ஆனை படித்த பண்டிதர்களைவிட, படிப்பறிவற்ற பாமரர்கள் எளிதாக விளங்கும் நிலையிலேயே அல்லாஹ் அல்குர்ஆனை இறக்கி அருள் புரிந்திருக்கிறான். இதற்கு அல்குர்ஆனின் 62:2, 7:157,158, 3:20 இறைவாக்குகள் போதிய சான்றுகளாக இருக்கின்றன. நபி(ஸல்) அவர்கள் மட்டும் அவர்களது தோழர்கள் மட்டும் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் அல்ல; அல்லாஹ் நபியாகத் தேர்ந்தெடுத்த அனைவரும் படிப்பறிவற்றவர்களாக ஆடு மேய்ப்பவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதையே அல்குர்ஆனின் வசனங்களும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் உறுதிப்படுத்துகின்றன. மூஸா(அலை) ஆடு மேய்த்ததை அல்குர்ஆன் கூறிக் கொண்டிருக்கிறது. மெத்தப் படித்த மேதைகளிலிருந்து அல்லாஹ் நபிமார்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. ஆயினும் அந்தந்த காலத்தில் படித்த மேதைகள் இல்லாமலில்லை.
அல்லாஹ் மெத்தப்படித்த மேதைகளை விட்டுவிட்டு, எழுதப்படிக்கத் தெரியாத பாமரர்களில் இருந்து நபிமார்களைத் தேர்ந்தெடுத்தது, அந்த மெத்தப்படித்த மேதைகளுக்குப் பொறாமையாகவும், கடும் கோபமாகவும் இருந்த காரணத்தால்தான், அந்த மெத்தப்படித்த மேதைகள் நபிமார்களை மிகக் கடுமையாக எதிர்த்துப் போராடினார்கள். நபி(ஸல்) அவர்களை உலமாக்கள் சபையான தாருந்நத்வாவிலிருந்த அரபி மொழி பண்டிதர்களான கவியரசுகளாக இருந்த மெத்தப்படித்த அபுல்ஹிக்கம் என்ற அபூ ஜஹீல் போன்றவர்கள் மிகக் கடுமையாக எதிர்த்ததற்கு ஒரே காரணம் நபி(ஸல்) அவர்கள் படிப்பறிவற்ற ஒரு பாமரர் என்பதுதான். அரபி மொழி விற்பன்னர்களான, கவிஞர்களான தன்னைப் போல் எண்ணற்ற மெத்தப்படித்த மேதைகள் அரபு நாட்டில் இருக்கும் நிலையில், போயும் போயும் இந்த எழுதப்படிக்கத் தெரியாத பாமரரையா தனது தூதராக இறைவன் தேர்ந்தெடுப்பது என்ற ஆத்திரத்தில்தான் அபூ ஜஹீல் வகையறாக்கள் நபி(ஸல்) அவர்களையும், அவர்கள் மூலம் அல்லாஹ் முழுமைப்படுத்திய தூய இஸ்லாமிய மார்க்கத்தையும் மிகக் கடுமையாக எதிர்த்துப் போராடினர்.
எழுதப் படிக்கத் தெரிந்த மொழி வல்லுநர்கள், பண்டிதர்கள், மெத்தப்படித்த மேதைகள் என்று பலர் இருக்கும் நிலையில், எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ் எழுதப்படிக்கத் தெரியாத ஆடுமேய்த்துக் கொண்டிருந்த பாமரர்களை நபிமார்களாக தேர்ந்தெடுத்தது ஏன்? இது மில்லியன் டாலர் கேள்வியாகும். இந்த கேள்விக்கு விடை கண்டுவிட்டால் இந்த மெத்தப்படித்த மேதைகளின் எதார்த்த நிலை வெளிச்சத்திற்கு வந்துவிடும். இதை ஓர் உதாரணம் மூலம் விளங்கலாம். ஒரு பாத்திரம் நிறைய சாராயம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதற்குமேல் அதில் தூய்மையான பாலை ஊற்றுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். அந்தப் பாத்திரம் சாராயத்தை விட தூய்மையான பாலை ஏற்குமா? அல்லது அதற்கு மாறாக அந்தப் பால் வெளியே வடியுமா? நாமெல்லாம் உடனடியாகச் சொல்லி விடுவோம், அந்தப் பாத்திரம் தூய்மையான பாலைக் கொள்ளாது. அப்படியே அரைகுறையாகக் கொண்டாலும் அது தூய்மையான பாலாக இருக்காது. அதுவும் சாராயமாக மாறிவிடும் என்று. அந்தப் பாத்திரம் தூய்மையான அந்தப் பாலைக் கொள்வதாக இருந்தால், அந்தப் பாத்திரம் எதுவுமே இல்லாத வெற்றுப் பாத்திரமாக மட்டுமே இருக்க வேண்டும். அந்தக் காலிப்பாத்திரம் தூய்மையான பாலை அதே தூய்மையான நிலையில் அப்படியே ஏற்றுக் கொள்ளும். அதை எடுத்துக் குடிப்பவர்களுக்கும் அந்த தூய்மையான பாலே கிடைக்கும். இந்த அப்பட்டமான உண்மையை மூடன் கூட மறுக்க மாட்டான்.
அல்லாஹ் எழுதப்படிக்கத் தெரியாத ஆடுமேய்த்துக் கொண்டிருந்தவர்களை ஏன் நபிமார்களாகத் தேர்ந்தெடுத்தான் என்ற உண்மை இப்போது புரிகிறதா? அந்த நபிமார்களின் உள்ளங்கள் காலிப்பாத்திரங்கள் போல் காலியாக இருந்ததால், இறைவனால் ‘வஹீ’ மூலம் இறக்கியருளப்பட்ட நேர்வழியின் போதனைகளை அப்படியே முழுமையாக அந்த உள்ளங்கள் ஏற்று நிரப்பிக்கொண்டன. அந்த இறைச் செய்திகளையே எவ்வித கலப்படமும் இல்லாமல் மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்தனர். யாருடைய உள்ளத்தில் உண்மையான விசுவாசம் – தக்வா இருந்ததோ அந்த நல்ல உள்ளங்களும் அவற்றை அப்படியே ஏற்று அதன்படி செயல்பட்டு நேர்வழி நடந்தனர். அந்த அடிப்படையில் அல்குர்ஆனின் அடிப்படையான “முஹ்க்கம்” வசனங்கள், அதாவது எடுத்துச் செயல்படுத்த வேண்டிய – கட்டளைக்குரிய – இரண்டாவது விளக்கத்திற்கு இடமே இல்லாத ஒரே பொருளைத்தரும் வசனங்களை, நபிமார்கள் அப்படியே எடுத்து வைத்தார்கள். அவற்றில் தங்களின் சுய கருத்துக்களைப் புகுத்த நபிமார்கள் துணியவே இல்லை. அப்படிச் சுய கருத்தைப் புகுத்தக் கூடாது. அது வழிகேடு என்று எண்ணற்ற குர்ஆன் வசனங்கள் மிகக் கடுமையாக எச்சரித்துக் கொண்டிருக்கின்றன. அதனால் எழுதப் படிக்கத் தெரியாத நபிமார்களால் சத்தியம்-நேர் வழி எவ்வித கூடுதல் குறைவும் இல்லாமல், கோணல்கள் இல்லாமல் அதன் தூய நிலையில் பாதுகாக்கப்பட்டது.
அதற்கு மாறாக கற்றறிந்த மேதைகளில் நின்றும் நபிமார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், என்ன நடந்திருக்கும்? கல்வி கற்கும் நோக்கமே உலக ஆதாயம் அடைந்து, உலகில் சுகமாக, ஆடம்பரமாக, ஆணவத்துடன் வாழ வேண்டும் என்ற தவறான எண்ணமே பிரதான நோக்கமாக ஆகி விடுகிறது. ஆரம்ப நோக்கம் எதுவோ அதுவே இறுதிவரை இருக்கும். இறைவனது கட்டளைகளைத் துச்சமாக மதித்த பிர்அவ்ன், ஹாமான், காரூன், நம்ரூது, தாருந்நத்வாவினர் இவர்களின் சரித்திரத்தை உற்று நோக்குபவர்கள் இந்த உண்மையை மறுக்க முடியாது.
படித்தவர்களின் உள்ளங்களில் அவர்கள் படித்து தங்கள் உள்ளங்களில் நிறைத்துக் கொண்டவை, பெரும்பாலும் மனிதர்களால் கற்பனையாக புனையப்பட்ட, வடிக்கப்பட்ட, மனித முடிவுகளை மட்டுமே கொண்டவையாக இருக்கும். மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட அறிவோ மிகமிக அற்பமானது. அதனால்தான் அந்த அறிவைக் கொண்டு பெருமை பாராட்டும், ஆணவம் பேசும், அகங்காரம் கொள்ளும் அனைத்து இழி குணங்களும் இந்தக் கற்றவர்களிடம் மலிந்து காணப்படுகின்றன. நிறைகுடம் தழும்பாது; குறைகுடம் தழும்பும் என்ற பிரபலமான பழமொழி அனைவரும் அறிந்ததுதானே! அதனால்தான் கல்லாதவர்களை மிக இழிவாக, கேவலமாக, ஆடு மாடுகளைப் போல் கருதி அகம்பாவத்துடன் நடந்து கொள்கின்றனர்.
“மற்றவர்களை இழிவாகக் கருதுகிறவன் ஆணவக்காரன்; அவன் சுவர்க்கம் நுழைய முடியாது” என்ற நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கை அவர்களின் உள்ளத்தில் தைக்காது. அந்தளவு அவர்களது உள்ளங்கள் இறுகிக் கருத்துப்போய் இருக்கும். அவர்களின் உள்ளங்களில் ஒரே நேர்வழியை விட, பல கோணல் வழிகளே மிகைத்துக் காணப்படும். அல்குர்ஆனின் நேரடி போதனைகளோ, நபி(ஸல்) அவர்களின் ஆதாரபூர்வமான நடைமுறைகளோ அவர்களின் உள்ளங்களைத் தொடாது. அவர்களின் உள்ளங்களில் தோன்றும் வழிகேட்டு சிந்தனைகளே அவர்களுக்கு உயர்வாகவும், சரியாகவும் தெரியும்.
எனவே கற்றவர்கள், அறிந்தவர்கள் என ஆணவம் கொள்ளும் இந்த மெத்தப்படித்த மேதைகளின் போதனைகளில் பெரும்பாலானவை வழிகேடுகளாகவே இருக்கும். ஆதம்(அலை) அவர்களிலிருந்து இன்றுவரை இறைவனால் கொடுத்தருளப்பட்ட ஒரே நேர்வழி, பல கோணல் வழிகளாக ஆக்கப்பட்டு இஸ்லாமிய மதம் உட்பட (இஸ்லாமிய மார்க்கம் அல்ல) பல மதங்களாக, அந்த மதங்களிலும் பல உட்பிரிவுகளாக மனித சமுதாயம் சின்னாபின்னமாக சிதறடிக்கப்பட்டிருப்பது, இந்த மெத்தப்படித்த மேதைகளின் கைங்கர்யமே என்பதை அல்குர்ஆனின் முஹ்க்கமாத் வசனங்களை எவ்வித சுயவிளக்கமும் இல்லாமல் உள்ளது, உள்ளபடி எடுத்து நடப்பவர்கள் எளிதாக விளங்கிக் கொள்ள முடியும். இப்படி ஒரே தகப்பனான ஆதம்(அலை) அவர்களின் சந்ததிகளான – ஒரே சமுதாயமான மனித சமுதாயத்தை எண்ணற்ற மதங்களாகவும், அந்த மதங்களிலும் எண்ணற்ற பிரிவுகளாகவும் சிதறடித்துச் சின்னாபின்னமாக்கிய பெருமை இந்த மெத்தப்படித்த மேதைகளான புரோகிதர்களான இந்த இடைத்தரகர் வர்க்கத்தையே சாரும்.
அவர்கள் மட்டும்தான், நாங்கள்தான் மார்க்கத்தைக் கற்றறிந்த மேதைகள், விற்பன்னர்கள், மற்றவர்கள் அனைவரும் ஆடுமாடுகளைப் போன்ற அவாம்கள் – பாமரர்கள். அவர்களுக்கு மார்க்கத்தை விளங்கும் ஆற்றல் இல்லை; நாங்கள் சொல்லுவதை அப்படியே கண்மூடி எடுத்து நடப்பதே அவர்களின் கடமை என பீற்றுவார்கள். ஆணவம் பேசுவார்கள். இதற்கு அல்குர்ஆனிலிருந்தோ, ஹதீஸிலிருந்தோ நேரடியான, ஆதாரபூர்வமான ஒரே ஒரு சான்றையும் அவர்களால் தரமுடியாது.
கற்றவர்களிலிருந்து, மெத்தப்படித்த மேதைகளிலிருந்து, மொழி விற்பன்னர்களிலிருந்து, கவிஞர்களிலிருந்து அல்லாஹ் நபிமார்களை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்ற உண்மை இப்போது புரிகிறதா? எப்படி கற்றறிந்த மேதைகளிலிருந்து நபிமார்களை அல்லாஹ் தேர்ந்தெடுக்கவில்லையோ, அதேபோல் அந்த நபிமார்களின் புனிதப் பணியான மார்க்கப் பிரசாரத்திற்கும் அகம்பாவமிக்க கற்றறிந்த மேதைகள்-மவ்லவிகள் தகுதியற்றவர்கள். அதிலும் மார்க்கப் பிரசாரத்தை தங்களின் தொழிலாக – பிழைப்புக்குரிய வழியாகக் கொண்டுள்ளவர்கள், அணுவளவும் தகுதியற்றவர்கள். அதனால்தான் அல்லாஹ் தனது இறுதி வழிகாட்டல் நூல் அல்குர்ஆனின் அத்.36 வச.21-ல் “கூலி வாங்காத இவர்களைப் பின்பற்றுங்கள்; இவர்களே நேர்வழியில் இருக்கிறார்கள்” என்று தெள்ளத் தெளிவாகக் கூறுகின்றான். அதாவது கூலிக்காக மார்க்கப்பிரசாரம் செய்கிறவர்கள் நேர்வழியை போதிக்கமாட்டார்கள்; வழிகேடுகளைத்தான் நேர்வழியாக போதிப்பார்கள் என நெற்றிப்பொட்டில் அடிப்பது போல் கண்டித்துக் கூறுகிறான்.
கற்ற கல்வியை காசாக்க எண்ணாமல், தொண்டு உள்ளத்துடன் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றிக் கொண்டு, தங்களின் வாழ்வாதாரத்தை அல்லாஹ் அனுமதித்த ஹலாலான – ஆகுமான வழிகளில் தேடிக் கொள்கிறவர்கள் மட்டுமே நேர்வழியை உள்ளது உள்ளபடி மக்களுக’கு எடுத்துச் சொல்லமுடியும். அவர்களிடம் ஆணவம், அகம்பாவம் பெருமை காணப்படுவது குறைவு.
இந்த மறுக்க முடியாத உண்மைகளை அல்குர்ஆனை நேரடியாக சுய சிந்தனையுடன் படித்து விளங்கிய பின்னரே எமது இந்த பிரசார பணியைத் துவக்கினோம்; ஆணவம், அகம்பாவம் பேசும் மவ்லவிகள் – புரோகிதர்கள் – இடைத்தரகர்கள் கூலிக்காக கோணல் வழிகளை உண்டாக்கும் மகாபாதகர்கள் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி அறிந்துகொண்ட பின்னரே, அதை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கத்துணிந்தோம் என்பதற்கு 30.10.1984-ல், தூய சின்னப்பர் இறையியல் கல்லூரியின் பல்சமய உரையாடற் குழுவினர் ஏற்பாடு செய்த கூட்டத்தில் “மதங்களால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள சாதக பாதகங்கள்” என்ற தலைப்பில் நாம் பேசிய உரையே போதிய சான்றாகும். அந்த உரையை முஸ்லிம் சமுதாய சிந்தனைக்கு என்ற எமது நூலில் பார்க்கலாம். (இன்ஷா அல்லாஹ் தொடர்வோம்)