ஐயமும்! தெளிவும்!!

in 2010 நவம்பர்,ஐயமும்! தெளிவும்!!

ஐயம் : என் மீது கடமையாகும் ஜக்காத்தில் என்னிடம் பள்ளிவாசல் கட்டுமான பணிக்கு நன்கொடை கேட்டு வருபவரிடம் இது ஜக்காத் நிதி என குறிப்பிட்டால் அது வேண்டாம்; உங்கள் சொந்த பணத்தில்தான் தரவேண்டும். இது ஜக்காத் ஏழைகளுக்கும் மற்ற தேவையுள்ளவர்களுக்குத்தான் போய் சேரவேண்டும். பள்ளி கட்டுமான பணிக்கு கொடுக்க (அ) வாங்க குர்ஆன், ஹதீஸ்படி கூடாது என்கிறார். சரியான விளக்கம் தரும்படி கேட்டுக் கொள்கிறேன். அபூ அஸ்லம், பாண்டிச்சேரி.

தெளிவு: ஜகாத் நிதி யார் யாருக்கு போய்ச் சேர வேண்டும் என்பதை அல்லாஹ் அல்குர்ஆன் அத்தவ்பா 9:60ல் இவ்வாறு தெளிவுபடுத்து கிறான். (ஜகாத் என்னும்) தானங்கள் வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்களது உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காக வும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடன்பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (பாடுபடுவோருக்கும்) வழிப்போக் கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும். அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்கவன் ஞானமுடையோன். (9:60)

அல்லாஹ்வின் கட்டளைப்படி இந்த இறை வாக்கில் குறிப்பிட்டுள்ள எட்டு(8)வகையான மக்களுக்கு ஜகாத் போய்ச் சேரவேண்டும். இந்தப் பட்டியலில் அல்லாஹ்வுக்குச் சொந்த மான மஸ்ஜித்கள் இடம் பெறவில்லை. எனவே பள்ளிவாசல் கட்டுமான பணிகளுக்கு ஜகாத் நிதியிலிருந்து நன்கொடையாகக் கொடுப்பது கூடாது என பள்ளிவாசல் கட்டுமான பணிக்கு நன்கொடை வசூலிக்க வந்தவர் கூறியது மிகச்மிகச் சரியானதே!

—————————————-

ஐயம்: என் வியாபார சம்பந்தமான பல்வேறு வங்கி பரிவர்த்தனைகளில் நான் விரும்பாமலேயே வட்டி வரவு வருகிறது. அதே மாதிரி வட்டி செலவும் வருகிறது. 6 மாதம் அல்லது ஒரு வருட முடிவில் என் கணக்குகளில் எவ்வளவு வட்டி வரவு என கணக்கு பார்த்து அந்த தொகை முழுவதையும் என் ஊழியர்களுக்கு பிரித்துக் கொடுத்து வருகிறேன். சில நேரங்களில் என் கணக்கில் பிடித்தம் செய்யும் தொகையை வரவு தொகையில் கழித்து விட்டு (ஏன் எனில் வட்டி வரவோ(அ) வட்டி பற்றோ என் நடவடிக்கையால் அல்ல; என் பார்ட்டிகள் செய்யும் தவறினால் வருவது) மீதியை கொடுக்கலாமா? என தோன்றுகிறது. நான் செய்து வருவது சரியா? அல்லது வேறு வகையில் குர்ஆன், ஹதீஸுக்கு முரண்படாமல் செயல்படுவது (எந்த பலாபலனுக்கும் விரும்பாமல்தான் என் ஊழியர்களுக்கு கொடுக்கிறேன் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய உரிமைகளை முறைப்படி தந்து விடுவேன்) அபூ அஸ்லம், பாண்டிச்சேரி.

தெளிவு : நமது இந்திய நாட்டில் தற்போதைய நிலையில் வட்டி சம்பந்தப்படாத நிலையில் தொழில் நடத்துவது இயலாத நிலை. வங்கித் தொடர்பு இல்லாமல் இஸ்லாமிய இதழ்களையே நடத்த முடியாத நிர்பந்த நிலை. கமிஷன் என்ற பெயரால் வட்டி செலவும், சேமிப்புக் காரணமாக வட்டி வரவும் வருகின்றது. சிலர் எங்களுக்கு அந்த வட்டி வேண்டாம் என்று வங்கிக்கு எழுதிக் கொடுக்கச் சொல்கிறார்கள். இது பெரும் தவறாகும். இச்செயல் ஆரிய அதிகாரிகள் அவ்வட்டிப் பணத்தை முஸ்லிம்களுக்கு எதிராகப் பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறது என்று கூறினால், அதற்கு நாங்கள் பொறுப்பாக மாட்டோம் என அறியாது கூறுகிறார்கள். இதுவும் பெருந் தவறாகும். இவர்களின் பணம் மூலம் வந்த வட்டிப் பணத்திற்கு நாங்கள் பொறுப்பில்லை என்று எவ்வாறு கூற முடியும்? இவர்கள் வங்கியில் பணம் போடாவிட்டால் அந்த வட்டிப் பணம் வருமா? இப்படிக் கூறுகிறவர்கள் வங்கியின் தொடர்பே இல்லாமல் வாழ்க்கை ஓட்ட வேண்டும். மற்றபடி வங்கியின் தொடர்பில் இருந்து கொண்டு இவ்வாறு ஊருக்கு உப தேசிப்பது 2:44 இறைக்கட்டளைப்படி குற்ற மாகும். இப்போது நீங்கள் கேட்டுள்ள கேள்வியைப் பார்ப்போம்.

நீங்கள் வட்டி மூலம் வந்த பணத்தை எடுத்து வாடிக்கையாளர்கள் செய்யும் தவறினால் பிடிக்கப்படும் பணத்தை அதிலிருந்து கழித்துக் கொண்டு எஞ்சிய பணத்தை எவ்வித நன்மையையும் எதிர்பாராமல் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் பரம ஏழைகளுக்குக் கொடுத்து விடுவதே நல்லது. நீங்கள் உங்கள் ஊழியர்களுக்குப் பிரித்துக் கொடுப்பதாகச் சொல்கிறீர்கள். அவர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் அன்றாட வயிற்றுத் தேவைகளுக்கே வழியில்லாமல் இருந்தால் மட்டுமே பொருந்தும். நீங்கள் கொடுக்கும் ஊதியம் மற்றும் போனஸ் கொண்டு தங்கள் வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்யும் வசதியைப் பெற்றிருந்தால், அவர்களுக்கு அந்த வட்டிப் பணத்தைக் கொடுப்பதை விட, அன்றாட உணவுத் தேவைகளையே நிறைவேற்ற அல்லல் படும் பரம ஏழைகளைக் கண்டு எந்த நன்மையையும் எதிர்பாராமல் அவர்களுக்கு அந்த வட்டிப் பணத்தைக் கொடுப்பதே சரியாகும்.

—————————————–

ஐயம்: ஷவ்வால் மாதம் ஆறுநோன்புகளை ரமழானைத் தொடர்ந்து தான் வைக்க வேண்டுமா? அல்லது அம்மாதத்தில் விட்டுவிட்டு வைத்தால் நன்மை கிடைக்காதா?
இக்பால், சுபைதார்னி, உசிலம்பட்டி

தெளிவு : ரமழானைத் தொடர்ந்து ­வ்வாலில் என்றே ஹதீஸில் வந்துள்ளது. ரமழானைத் தொடர்ந்து விடாமல் ஆறு நோன்பு வைப்பதாக இருந்தால், ­வ்வாலைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை. நபி(ஸல்) அவர்களின் ஒவ் வொரு வழிகாட்டலும் தெள்ளத் தெளிவாக இருப்பவையாகும். எனவே ­வ்வால் மாதத் தில் தொடர்ந்தோ விட்டுவிட்டோ வைத்தாலும் நன்மை கிடைக்கவே செய்யும். ரமழானைத் தொடர்ந்து வைப்பதாக இருந்தால் அந்த ஆறு நோன்பு நன்மைகள் சில பெண்களுக்கு கிடைக்காமலேயே போய்விடும். ­வ்வால் ஆரம்ப வாரத்தில் மாதவிடாய் ஏற்படும் பெண் கள் அப்போது நோன்பு வைக்க முடியாதே!
எனவே ரமழானைத் தொடர்ந்து ­வ்வால் மாதத்தில் தொடர்ந்தோ விட்டுவிட்டோ ஆறு நோன்பை நோற்றாலும் நன்மை கிடைக்கவே செய்யும் என ஆதரவு வைக்கிறோம்.

—————————————-

ஐயம் : 10.8.10 செவ்வாய் இரவு புதன் காலை நாம் நோன்பு நோற்றோம். 11.8.10 புதன் இரவு 11 மணிக்கு சவுதியில் பிறை பார்த்து மூபுஞக்ஷி நோன்பு நோற்றார்கள். அன்று இரவு பார்த்த பிறை இரண்டாம் பிறையா? முதல் பிறையா? விளக்கவும். ஜெஹராபீவி, செம்பட்டி.

தெளிவு : தெள்ளத் தெளிவான அல்குர்ஆன் (2:238, 97:1-5) இறைவாக்குகள் படியும், நடுத் தொழுகை அசர் தொழுகை தான் என்பதை நபி (ஸல்) அவர்களின் இரண்டு மனைவிமார்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டறிந்து அறிவிப்பதன் மூலமும் நாள் பஜ்ரிலிருந்து ஆரம்பிக்கிறது என்பது நமக்குத் திட்டமாகத் தெரிகிறது. யூதர்களில் சிலர் தந்திரமாக இஸ்லாத்தைத் தழுவி அவர்களின் வழிகேட்டு கொள்கைகளில் சில வற்றை முஸ்லிம்களிடையே புகுத்திய பின்னரே அவர்களின் நடைமுறையான நாள் மஃறிபில் ஆரம்பிக்கிறது என்ற தவறான கொள்கையை முஸ்லிம்களும் பின்பற்ற ஆரம்பித்தனர்.

சுன்னத் ஜமாஅத்தினரிடம் இன்றும் நடை முறையிலிருக்கும் பித்அத்தான நோன்பு நிய்யத்தை இரவு இஷா, தராவீஹ் என்ற ரமழான் இரவுத் தொழுகைக்குப்பின் சொல்லிக் கொடுக்கும்போது “”நவய்த்து சவ்ம கதின்” “”நாளை நோன்பு நோற்க நிய்யத்துச் செய்கிறேன்” என்று “நாளை’ என்று குறிப்பிட்டுச் சொல்வதே நாள் பஜ்ரில் ஆரம்பிக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. நாள் மஃறிபிலிருந்து ஆரம்பித்ததால் இரவை அடுத்து வரும் பகலை இன்று நோன்பை ஆரம்பிக்கிறேன் என்று சொல்ல முடியுமே அல்லாமல் நாளை ஆரம்பிக்கிறேன் என்று சொல்லிக் கொடுக்க முடியாது.

இப்படி நாள் ஆரம்பிப்பது பற்றிய குர்ஆன், ஹதீஸ் தெளிவாக இருக்க சம்பந்தமில்லாத பேரீச்சம் பழத்தை ஊற வைத்துச் சாப்பிடும் போது அது எத்தனை நாள் மதுவாக மாறாமல் இருக்கும் என்று கூறும் ஹதீஸ்களில் உள்ள “லைலத்’ என்ற அரபி பதத்தை அந்த இடங்களில் நாள் என்று சொல்லாமல் இரவு என்று கூறி தாங்களும் வழிகெட்டு மக்களையும் வழி கெடுக்கிறார்கள். 97ம் அத்தியாயத்தின் 1,2,3 வசனங்களில் வரும் “லைலத்’ என்ற அரபி பதத்தை நாள் என்று மொழி பெயர்க்காமல் இரவு என மொழி பெயர்த்து அவர்களும் வழி கெட்டு மக்களையும் வழிகெடுக்கிறார்கள்.

லைலத்துல் கத்ர் இரவு என்றால் அது 12 மணி நேரம் மட்டுமே இருக்க முடியும். அப்படியானால் 24 மணி நேரம் கொண்ட உலக மக்கள் அனைவருக்கும் அந்த பாக்கியம் கிடைக்காதா? 12 மணி நேர மக்களுக்கு மட்டும் தான் கிடைக்குமா? என்றால் அவர்களுக்கு இரவாக இருக்கும் எஞ்சியுள்ள 12 மணி நேரத்தில் கிடைக்கும் என அறிவீனமாகப் பதில் அளிக்கிறார்கள். 12+12=24 ஒரு நாள் என்ற சாதாரண அறிவும் இந்த மவ்லவிகளுக்கு இல்லை. அதே போல் அல்குர்ஆன் 2:51, 7:142, 44:3 ஆகிய இடங்களிலும் நாள் என்பதை இரவு என மொழி பெயர்த்து அவர்களும் வழிகெட்டு மக்களையும் வழிகெடுக்கிறார்கள். 2:51 என்ன கூறுகிறது என்று பாருங்கள்.

“”மேலும் நாம் மூஸாவுக்கு நாற்பது நாட்களை வாக்களித்தோம். (அதற்காக அவர் சென்ற) பின்னர் காளைக் கன்றை (கடவுளாக) எடுத்துக் கொண்டீர்கள். (அதனால்) நீங்கள் அக்கிரமக்காரர்களாகி விட்டீர்கள். (2:51)

இப்போது சிந்தியுங்கள். அது நாற்பது இரவுகளாக இருந்தால் மலை அடிவாரத்தில் இருந்த தமது சமூகத்தாருடன் பகலிலும், இரவில் மட்டும் மலையிலும் இருந்தால் அந்த மக்கள் காலைக் கன்றை கடவுளாக்கி அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் கொடிய குற்றத்திற்காக ஆளாகி இருப்பார்களா? குறைந்தது இரண்டு நாளுக்கு ஒரு முறை அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை பகலில் வந்திருந்தாலும் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்திருக்க முடியுமா? 40 நாட்கள் முழுமையாக மலையில் இருக்கும்போதுதான் இறைவனுக்கு இணை வைக்கும் அக்கொடிய செயல் அரங்கேறி இருக்க முடியும். எனவே 40 நாட்கள் என்பதை 40 இரவுகள் என மொழி பெயர்த்து எந்த அளவு இந்த மவ்லவிகளும் வழி கெட்டு மக்களையும் வழி கெடுக்கிறார்கள் என்பது தெளிவாக விளங்கவில்லையா?

இப்படி நாளை இரவு என மொழி பெயர்ப்பதால் மேலும் பல வழிகேடுகளை உருவாக்கிறார்கள். இப்படி நாள் ஆரம்பிப்பது பஜ்ரில் என்பதற்கு முரணாக நாள் ஆரம்பிப்பது மஃறி பில் எனத் தவறாகக் கூறி வருகிறார்கள். ஆனால் 11.8.10 புதன் மாலை சவுதியில் கண்டதாகச் சொல்லும் பிறை உண்மையில் தலைப்பிறைதான். ஆனால் அது அடுத்த நாளுக்குள்ள (12:8:10) பிறை அல்ல. 11.8.10 புதனுக்குரிய முதல் பிறைதான். தலைப் பிறையை அதற்கு முதல் நாள் மாலையில் ஒரு போதும் பார்க்க முடியாது என்பது அறிவியல் நிரூபிக்கும் உண்மையாகும். எனவே என்றைக்கு நாம் பிறையைப் பார்க்கிறோமோ அது அன்றைக்குரிய பிறையே அல்லாமல், இந்த மவ்லவிகள் சொல்வது போல் அடுத்த நாளுக்குள்ள பிறையல்ல. எனவே 11.8.10 புதன் மாலை பார்த்த பிறை அன்றைய 11.8.10 புதனுக்குரிய பிறையே அல்லாமல் 12.8.10 வியாழனுக்குரிய பிறை அல்லவே அல்ல. மேலும் இரண்டாம் பிறையா, மூன்றாம் பிறையா எனச் சிலர் சச்சரவிட்டுக் கொண்டு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் வந்து விளக்கம் கேட்டபோது, அவர்கள் “”நீங்கள் என்றைய தினம் பிறையைப் பார்த்தீர்களோ அது அன்றைய தினத்தின் பிறையே” எனக் கூறி சச்சரவுக்கு முற்றுப்புள்ளி வைத்தது எமது கூற்றுக்குப் போதிய ஆதாரமாகும்.

Previous post:

Next post: